மென்கலைகள்
என்.சொக்கன்
பக்கங்கள்: 134
விலை: ரூ.90
மதி நிலையம்
Communication Skills அல்லது personality development என்பது போன்ற தலைப்புகளில் ஒவ்வொரு நூலகங்களிலும் பற்பல புத்தகங்கள் இருக்கும். அது சரி, இதையெல்லாம் எவன் படிப்பான்? செம போர் என்ற நண்பரிடம் நான் கேட்ட கேள்வி - அப்படின்னா இதெல்லாம் உங்களுக்கு நல்லா தெரியும்னு அர்த்தம். உங்க தகவல் தொடர்பு மிகவும் அருமையா இருக்குன்னு பொருள். வீட்டிலும், அலுவலகத்திலும் உங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லே? உங்க வேலைகளை நீங்க சரியான நேரத்தில் முடித்து, உங்க imageஐ நல்லபடியா வைத்திருக்கிறீர்களா? என்று வரிசையா பல கேள்விகளைக் கேட்டதும், ஆள் அவுட். அப்படி இல்லே, அங்கங்கே சில இடைவெளிகள் இருக்கத்தான் செய்யுது என்றவரிடம், அதுக்குத்தான் இன்னும் இதே போல் புத்தகங்கள் வந்துகொண்டே இருக்கின்றன என்றேன்.
சரி, நீ இதையெல்லாம் படிக்கிறேன் என்கிறாயே, அப்படியென்றால் உன் தகவல் தொடர்பு நல்லாயிருக்கா என்று கேட்டால், பிரச்னைகளை, என்னிடத்தில் உள்ள குறைகளை, நான் படிக்கும் ஒவ்வொரு புத்தகமும் சிறிதளவேனும் குறைக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு என்று சொல்வேன்.
ஆனால் நண்பர் சொன்ன ஒரு விஷயம் உண்மையாக இருக்கலாம். போர். இப்படிப்பட்ட திறன்களை வளர்க்கும் புத்தகங்களில் பெரும்பாலும் ஒரே விஷயங்களை திரும்பத் திரும்ப சொல்லி நம்மை போரடிக்கலாம். ஆகவே, புதிய விஷயங்கள், புத்தம்புதிய உதாரணங்கள் உள்ள புத்தகங்களைத் தேடிப் படிக்க வேண்டியிருக்கும்.
அப்படி சமீபத்தில் படித்த புத்தகம், மென்கலைகள். மொத்தம் 24 கட்டுரைகள். 134 பக்கங்களே உள்ள இப்புத்தகத்தின் உதாரணங்கள் படு சுவாரசியம். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்கலாம். எளிய, சுலபமான வழிமுறைகளால் நம் ‘மென்கலைகளை’ எப்படி வளர்த்துக் கொள்வது என்று விளக்குகிறார் ஆசிரியர்.
***
சேர்ந்தே இருப்பது? ஆபீசும் தகராறும். குழுவில் எந்த வேலை செய்தாலும், அதில் பிரச்னைதான். நாம் சொல்வதை மற்றவர் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். மற்றவர் சொல்வது நமக்கு ஒத்து வராது. இதற்குத் தேவை நல்ல negotiation skills. அதன் மூலம் நாம் வேண்டுவது win-win situation. அதாவது கண்டுபிடிக்கப்பட்ட தீர்வில், இரு தரப்பினரும் தங்களுக்குத்தான் அதிக நன்மை என்று நினைக்க வேண்டும். மிகக் கச்சிதமான தீர்வுக்காகக் காத்திருக்காமல், இரு தரப்பினருக்கும் பிடித்த, ஓரளவு நல்ல யோசனைகளைச் செயல்படுத்த ஒப்புக் கொள்ளுங்கள். பிறகு அங்கிருந்து படிப்படியாக முன்னேறலாம் - என்று சொல்லும் ஒரு கட்டுரை.
அடுத்து, 5S என்னும் செயல்முறையுடன் ஒப்பிடக்கூடியதாக ஒரு கட்டுரை. வீட்டில் / அலுவலகத்தில் சிக்கல்களைக் குறைத்து, எளிமையாக வாழ்வது எப்படி என்று சொல்லும் ‘நூறு போதும்’ என்னும் கட்டுரை. ஒரு வீட்டிலிருந்து காலி செய்து மற்றொரு வீட்டிற்குப் போகும்போதே தெரியும் - நாம் எவ்வளவு தேவையற்ற பொருட்களை சேகரித்து வைத்துள்ளோம் என்று. அப்படிப்பட்ட பொருட்களைக் கண்டுபிடித்து, அவற்றை விலக்கி, நமக்குத் தேவையான ‘வெறும் நூறு’ பொருட்களுடன் மட்டுமே வாழவேண்டும் என்ற குறிக்கோளுடன் இருப்பதே இந்த கட்டுரையின் சாரம்.
எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு விஷயம் - Scarcity thinking. அதாவது ஒரு பொருளின் இன்மையை உணரும்போதுதான் அதன் மதிப்பை அறியமுடியும். இந்தக் கருத்தை அலுவலகத்தில், பொது இடங்களில் நன்றாக பயன்படுத்தலாம். அதாவது நாம் ஒருவரிடம் நல்ல பெயர் எடுக்க விரும்பினால், எந்நேரமும் அவர்கள் மேல் பாய்ந்து பிராண்டிக் கொண்டிருக்காமல், ஒன்றிரண்டு முறை நம் கருத்தை வலியுறுத்திவிட்டு, விலகிக் கொள்ளப் பழக வேண்டும். தேவையில்லாமல் அனைத்து இடங்களிலும் காட்சி தந்து கொண்டிருப்பவர்கள்மேல், மற்றவர்களுக்கு மரியாதை இருக்காது என்பதே இதன் பொருள். இதற்காக சொல்லப்பட்டிருக்கும் மைக்கேல் ஜாக்சன், ஆப்பிள் ஐபோன் உதாரணங்கள் மிகவும் பொருத்தம் + அருமை.
அலுவலகங்களில் தங்கள் வேலையை சரிவர செய்யாமல் / முடிக்காமல் இருப்பவர்களுக்காக சில மேலாண்மைக் கட்டுரைகள் - வேலைகளின் முக்கியத்துவத்தை & அவசரத்தைப் பொறுத்து அவைகளை தரவரிசைப் படுத்தி செய்து முடித்தல் (prioritization), செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலை தயாரித்துக் கொண்டு அதன்படி நடத்தல் (checklist), பல தீர்வுகள் இருக்கையில் சரியான தீர்வினை எடுத்தல் (decison making) - என இவற்றினை விளக்கும் கட்டுரைகளைப் படித்து, அதில் சொல்லியபடி பின்பற்றினால், உருப்படுவதற்கு வழியுண்டு.
இவற்றைத் தவிர, குழந்தைகளை கையாளும்போது கடைப்பிடிப்பதற்காக சில குறிப்புகள், வாழ்க்கைத் துணையிடம் வரக்கூடிய பிரச்னைகளைப் போக்க சில யோசனைகள் என பலவித முன்னேற்றக் கருத்துகளைக் கலந்துகட்டிக் கொடுக்கும் சுவையான பஞ்சாமிர்தம், இந்தப் புத்தகம்.
***
No comments:
Post a Comment