சிறப்புப் பதிவர்: பத்ரி சேஷாத்ரி (@bseshadri)
சமீப காலங்களின் என்னை மிகவும் பாதித்த புத்தகங்களில் இது ஒன்று.
பவன் வர்மாவின் கருத்துகள் அனைத்துடனும் நான் ஒத்துப்போகவில்லை.
ஆனால் அவருடனான உரையாடலைத் தொடர்ந்து நடத்திக்கொண்டே இருக்கிறேன்.
பிற நாடுகளால் அடிமையாக்கப்பட்டு, காலனியாக இருந்து, பின்னர் விடுதலை
அடையும் நாடுகள், ஒருவித உளவியல் சிக்கலுக்கு ஆளாகும். நம்மை
ஆண்டவர்கள் மீது பயம், அதே சமயம் அவர்கள் நம்மை நடத்திய விதம் காரணமாக
அவர்கள் மீது வெறுப்பு, அவர்களுடைய திறன் மீதான மரியாதை,அவர்களுடைய
கலாசாரத்தை உயர்ந்தது என்று நினைத்து அதன் மீதான ஆசை, நம்முடைய
கலாசாரம் தாழ்ந்தது என்ற எண்ணம், அதே நேரம் நம் கலாசாரத்தில்
தொன்மையான, மதிக்கத்தக்க அம்சம் ஏதேனும் இருந்ததா என்றதொரு தேடல்,
இப்படிப் பலப்பல எண்ணங்கள் நம்மை அலைக்கழித்துக் கொண்டே இருக்கும்.
காலனி ஆதிக்கத்தில் வாழ்ந்திராத பிற நாட்டவருக்கோ, இந்தச் சுமைகள்
ஏதும் இருக்கா.
அப்படிப்பட்ட காலனிய நாடுகளிலும்கூட இந்தியா வித்தியாசமானது. பல்வேறு
மொழிகளாலும் மதங்களாலும் சாதிகளாலும் பிரிந்திருப்பதால் ஒற்றுமைக்கான
காரணங்களைவிட வேற்றுமை பாராட்டவே காரணங்கள் அதிகமாக இருக்கின்றன.
அதன் காரணமாக, சுதந்தரம் அடைந்தபிறகும்கூட காலனி ஆதிக்க நாட்டின் பல
கூறுகளையே நாம் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம்.
உதாரணமாக, ஆங்கில மொழியை எடுத்துக்கொள்வோம். விடுதலைக்குப் பிறகு
ஆங்கிலத்தையே முக்கியமான மொழியாக நாம் எடுத்துக்கொண்டோம். இந்தியை
நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஆங்கிலேயர்கள் விட்டுச்
சென்ற சட்டங்கள், அவர்கள் மொழி, அவர்களுடைய கட்டடங்கள், அவர்கள்
உயர்வு என்று கருதியவை என அனைத்தையும் நாம் அப்படியே
ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அதே நேரம், நவீனம் என்பதை
ஆங்கிலேயர்களிடமிருந்து கற்ற நம் சிந்தனையாளர்கள் நம் கலாசாரத்தின்
பல கூறுகளை ஒட்டுமொத்தமாகத் தூக்கி எறிந்தனர். அதே பாணியை நாம்
இன்றும் பின்பற்றுகிறோம்.
இவ்வாறு ஆங்கிலேயர்களின் அரசியல் அடக்குமுறையிலிருந்து நாம்
விடுதலையை அடைந்தாலும் அவர்கள் நம்மீது செலுத்திய கலாசார
அடக்குமுறையிலிருந்து நாம் இன்றுவரை விடுதலை பெறவில்லை. அதன் காரணமாக
நம்முடைய அடையாளம் பெரும் குழப்பத்தில் இருக்கிறது. இதிலிருந்து நாம்
விடுதலை பெறவேண்டும். அப்போதுதான் நாம் உண்மையான இந்தியனாக ஆக
முடியும். இதுதான் பவன் வர்மா சொல்ல வருவது.
ஆனால் இது அவ்வளவு எளிதான ஒரு விஷயமல்ல. பவன் வர்மாவுக்கும் ஓர்
அரசியல் இருக்கிறது. இந்தியாவின் கலாசாரமாக அவர் சமஸ்கிருத, உருது,
ஹிந்துஸ்தானி கலாசாரத்தை முன்வைக்கிறார். இன்று மார்க்கண்டேய
கட்ஜுவும் அதையே முன்வைக்கிறார். தென்னிந்திய தமிழ், கன்னட,
தெலுங்கு, மலையாள அடையாளங்கள் பற்றி அவர்கள் அதிகம்
கவலைப்படுவதில்லை. இந்து - முஸ்லிம் ஒற்றுமையை உள்ளூர வலிந்தாவது
வலியுறுத்தவேண்டும் என்பதாக பவன் வர்மா எழுதும்போது பல இடங்களில் அது
துருத்திக்கொண்டு நிற்கிறது. வட இந்தியாவில் இந்து-முஸ்லிம் உறவு
அப்படியொன்றும் சுமுகமாக இருந்துவிடவில்லை. அரபு, பாரசீக கலாசாரங்கள்
தம்மை இந்துக் கலாசாரத்தின்மீது வலியத்தான் புகுத்திக்கொண்டன.
அப்படியானால் இந்துக் கலாசாரம் என்பது மட்டும் இந்தியாவின்
அடிப்படைக் கலாசாரம் என்று சொல்லிவிட முடியுமா? சமஸ்கிருதக் கலாசாரம்
எத்தனை நாட்டார் வழக்குகளை அழித்துள்ளதோ? எத்தனை இனக்குழு மக்களின்
அடையாளங்களை வேறோடு பிடுங்கி எறிந்துள்ளதோ?
நான் முன்னமேயே சொன்னதுபோல பவன் வர்மாவுடனான எனது உரையாடல் தொடரும்.
நான் இந்தப் புத்தகத்தை மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டே
இருப்பேன். புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தைப் பற்றியும் விரிவாகப்
பேச இங்கே இடம் கிடையாது. சில விஷயங்களைப் பற்றி மட்டும் சொல்கிறேன்.
ராஜா ராம் மோகன் ராய் பற்றி பவன் வர்மா ஒரு சிறிய படம் வரைகிறார்.
பொதுவாக ராம் மோகன் என்றால் சதிக்கு எதிராகப் போராடியவர், பிரம்ம ஞான
சபை என்ற அமைப்பைத் தோற்றுவித்து, வங்காளத்தில் மத, சமூக
சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியவர் என்பதாகவே நாம் பள்ளிக்கூடப்
பாடப் புத்தகத்தில் படித்திருப்போம். வர்மா, ராயின் முழுமையான
வாழ்க்கை வரலாற்றை எழுதுவதில்லை. மாறாக, அவர் சொல்லும் மிகச் சிறு
கதைக்குள்ளாகவே ராய் எப்படி ஆங்கிலேய கலாசாரப் புகுத்துதலுக்குப்
பயன்படுத்திக்கொள்ளப்படுகிறார் என்ற வர்ணனை வெளியாகும்.
அதேபோல மெக்காலே பற்றிய மிக விவரமான வர்ணனையும். இந்தியக் கல்வி
பற்றி ஆராய விரும்புவோர் அனைவரும் மெக்காலே பற்றித்
தெரிந்துகொள்ளவேண்டியது அவசியமாகும். வர்மாவின் புத்தகத்தில்
மெக்காலே பற்றிய மிக நல்லதொரு அறிமுகம் கிடைக்கிறது.
புது தில்லியை எட்வின் லுட்டியன்ஸ் என்பவர் கட்டினார் என்று அவரைப்
பற்றிப் பெருமையாகப் படித்திருப்போம். அவர் இந்தியர்களைப் பற்றியும்
இந்தியக் கட்டடக் கலையைப் பற்றியும் என்ன கருதினார் என்பதை வர்மா
சுட்டிக் காட்டுகிறார். ஆங்கிலேயர்கள் புகுத்திய கட்டடக் கலை
வடிவங்கள் இந்தியாவுக்குப் பொருத்தமற்றதாக இருந்தாலும் இன்றும் அவை
எவ்வாறு தொடர்கின்றன என்பதை வர்மா தொட்டுச் செல்கிறார்.
பவன் வர்மா சொல்லும் பலவற்றை வைத்து அவரை ஒற்றைப் பார்வை கொண்ட
வலதுசாரி இந்து தேசியவாதி என்றுகூட ஒருவர் முத்திரை குத்தலாம்.
ஆங்காங்கே முஸ்லிம் கலாசாரக் கூறுகளை அவர் சேர்த்துக்கொண்டு செல்வது மட்டுமே அந்த முத்திரை குத்துதலிலிருந்து அவரைக் காப்பாற்றுகிறது.
புத்தகம், இந்தியன் ஆவது எப்படி என்ற கேள்வியை முன்வைக்கிறது.
ஒருவிதத்தில் இந்தியன் ஆவது எப்படி என்பதற்கான வழிமுறைகளைத்தான்
இந்தப் புத்தகத்தின் பவன் வர்மா முன்வைக்கிறார். ஆனால் அவர் சொல்லும்
வழிமுறைகளை முழுமையாக என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஏனெனில்
இந்தியன் என்ற அடையாளம் பற்றிய ஒரு பெரும் குழப்பத்திலேயே நான்
இருக்கிறேன். இதற்குக் காரணம் காலனிய அடிமைத்தனம் என்மீது செலுத்திய
தாக்கமே என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தியா போன்ற ஒரு
நாட்டின் சிக்கலான தன்மை காரணமாக இந்திய தேசியம் என்பது எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்று என்னால் ஒரு முடிவான
கருத்துக்கு இப்போதைக்கு வர முடியவில்லை. அந்தக் குழப்பம்
நீடிக்கும்வரை என்னால் தெளிவான மாற்றங்களை முன்வைக்க முடியாது.
ஒருவேளை இனி வரும் நாள்களில் இந்தியன் ஆவது எப்படி என்ற கேள்விக்கான
விடை எனக்குத் தோன்றலாம். அந்த விடை தோன்றும்போது, கேள்வியை
முன்வைத்து, சில வழிமுறைகளையும் சொன்ன காரணத்தால் பவன் வர்மாவை
நினைக்காமல் இருக்க என்னால் முடியாது.
No comments:
Post a Comment