சில மாதங்களுக்கு முன் ஸ்டீபன் கிங் எழுதிய Different Seasons புத்தகத்தைப் படித்தேன். கல்லூரி நாட்களில் சில நண்பர்கள் ஸ்டீபன் கிங் பற்றி சொல்லியிருந்தும் நான் படிக்கவில்லை. பின்னர் ஏதோ ஒரு சிறுகதை தொகுப்பில் அவரது கதை ஒன்றைப் படிக்க நேர்ந்தது. அது ஒரு பேய் கதை போலவோ ஒரு மீயியல்புவாதக் (paranormal) கதையாகத் தெரிந்தது. அப்புறம் அவரது சில கதைகளை அவ்வப்போது படித்து வந்திருந்தாலும் ஸ்டீபன் கிங் எனத் தேடிப் பார்த்துபடித்ததில்லை.
சில வருடங்களுக்கு முன் The Shining படம் பார்த்துவிட்டு நாவலைப் படித்தபின் ஸ்டீபன் கிங் எனும் சுவாரஸ்யமானக் கதை சொல்லியிடம் சிக்கிக்கொண்டேன்.
அமெரிக்காவில் நியூயார்க் நகரி ல் Maine எனும் ஊரில் வாழும் ஸ்டீபன் கிங் எந்திரம் போல எழுதித்தள்ளுகிறார். இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட புனைவு நூல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்ப காலத்தில் பேய், மீயியல்புவாதக் கதைகள் நிறைய எழுதியிருந்தாலும் பின்னர் பல த்ரில்லர்களை எழுதத் தொடங்கினார். பெரும்பாலான அவரது கதைகளில் ஏதேனும் ஒரு மாய மந்திரம் இருக்கும்.
அவரது கதைகள் திரைப்படங்களாகவும் வந்துள்ளன பெரும்பாலான படங்கள் கிளாசிக்ஸ் ஆக மாறி மேலதிகப்படங்களை பாதித்துள்ளன. அவற்றில் சில:
Carrie
Dolores Claiborne
Misery
Shawshank Redemption
Stand by me
Shining
இவை ஒவ்வொன்றும் ஸ்டீபனின் நாவல்கள்/குறுநாவல்கள். இதைப் போல எண்ணற்ற படங்கள். மறக்க முடியாத பாத்திரங்களும், நிகழ்வுகளையும் உருவாக்கியவர். சுவாரஸ்யமாகக் கதை சொல்லத் தெரிந்தவர். நேரடியான வர்ணணை, க்ளீஷேக்கள் இல்லாத பிரயோகங்கள், எளிமையான நடை, ரொம்பவும் க்ரியேட்டிவான திருப்பங்கள் கொண்ட கதைகள் பலவற்றை எழுதியுள்ளார்.
இந்த பதிவுக்கு நான் எடுத்துக்கொண்டிருப்பது Different Seasons எனும் குறுநாவல் தொகுப்பு. மொத்தம் நான்கு குறுநாவல்களைக் கொண்ட தொகுப்பு 3 படங்களுக்கு திரைக்கதை வழங்கியுள்ளது. எனக்குப் பிடித்த வரிசையிலிருந்து இந்த கதைகளைப் பற்றிப் பார்ப்போம்.
1. The Breathing Method.
இதுவரை திரைப்படமாகாத குறுநாவல். ஆனால், இந்த கதை கொடுக்கும் பாதிப்பு மிக தத்ரூபமானது. 1920களின் நியூயார்க்கில் நடக்கும் கதை. ஒரு வக்கீல் தன்னுடன் வேலை பார்க்கும் சீனியரின் அழைப்புக்கு ஏற்ப ஒரு சோசியல் க்ளப்பில் சேர்கிறார். அதிக விளம்பரங்கள் இல்லாத க்ளப். ஆனால் அங்குள்ளவர்கள் மிகவும் அன்பாகப் பழகுகிறார்கள். பெரிய நூலகம் உள்ளது. அதில் தடித்தடியாக இருக்கும் புத்தகங்களை எழுதியவர்களின் பெயரில் எந்த எழுத்தாளரும் இல்லை. மாதத்துக்கு ஒரு முறை சந்திக்கும்போது சுழற்சி முறையில் ஒருவர் கதை சொல்லுவதும் நடக்கிறது.
அதில் ஒரு டாக்டர் தனக்கு நடந்ததாக ஒரு கதையை சொல்கிறார் - அதுதான் கதையின் தலைப்பு. அக்காலகட்டத்தில் திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு சமூகத்தில் நல்ல பெயர் கிடையாது. மேலும் ஆண்மையச் சமூகமாக இருந்த அமெரிக்காவில் அப்படிப்பட்ட பெண்களை வேலைக்குக் கூட வைத்துக்கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒருவர் கதைசொல்லியிடம் வருகிறார். அந்த காலத்தில் lamaze எனும் மூச்சுப் பயிற்சி முறை பிரசவ வார்ட்டுகளில் பழக்கத்தில் இல்லை. கதை சொல்லி மூச்சுப் பயிற்சிகளை அந்தப் பெண்ணுக்குச் சொல்லிக்கொ டுக்கிறார். திட மனதுக்காரியான அவளும் பயிற்சியை ஒழுங்காகக் கத்துக்கொள்கிறார். ஆனால் அந்த பெண்ணுக்கு ஆக்சிடன்ட் ஆவது போல டாக்டருக்கு ஒரு கனவு வருகிறது. அதே போல பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு வரும்போது விபத்துக்குள்ளாகிறது டாக்சி. டாக்டர் அந்த வழியாக நடந்துவரும்போது இதைப் பார்த்து தெருவில் பிரசவம் பார்க்கிறார். சாகும் தருணத்திலும் அவள் மூச்சுப் பயிற்சி செய்துகொண்டே இருக்கிறாள். ஆண் குழ்ந்தை நல்லபடியாகப் பிறக்கிறது. குழந்தைப் பிறந்ததும் அவள் இறந்துவிடுகிறாள். ஆனால் அவள் பல நிமிடங்களுக்கு முன்னரே இறந்துவிட்டதாக சுற்றி இருந்தவர்கள் கூறுகிறார்கள்.
மகத்தானக் கதை இது. மிக மிக மெல்லிய காதல் எட்டிப்பார்க்கும் தருணங்கள் நிறைந்த கதை. அதே சமயம், அந்த பெண்ணுக்கு இருக்கும் துணிச்சலைப் பார்க்கும்போது ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறோம். ஒவ்வொரு வரியிலும் நம்மை ஒரு அபாரமான பயணத்துக்குத் தயார் செய்கிறார் ஸ்டீபன்.
2. Rita Hayworth and Shawshank Redemption
நமக்கெல்லாம் நன்றாகத் தெரிந்த கதை. திரைப்படமாக வெளியாக சக்கை போடு போட்டு ஓடிய படம். இன்றும் கச்சிதமான திரைக்கதையால் பல சிறை உடைப்பு படங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது. இதற்கு ரெண்டு முக்கிய காரணங்கள் - அதி அற்புதமான கதை மற்றும் ரெட் (மார்கன் ப்ரீமேன்) கதாபாத்திரம்.
சினிமாவுக்கும் நாவலுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. இந்த கதையைப் படித்ததும் படத்தை மீண்டும் பார்த்தேன். சொல்லப்போனால், பல உரையாடல்கள் நேரடியாக படத்தில் எடுத்தாளப்பட்டுள்ளன. ஆனால் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கும் மார்கன் ப்ரீமேனின் நடிப்பு ரெட் எனும் கதாபாத்திரத்தோடு பல படிகள் மேலிருக்கு. இது ஒரு முரண். கதையில் ரெட் பாத்திரத்தின் பாதிப்பு அவ்வளவாகக் கிடையாது. கதை சொல்வது அவர்தான் என்றாலும் , திரைப்படத்தில் மிகக் கச்சிதமாக மார்கன் ப்ரீமேன் பொருந்திப்போயுள்ளது தெரிகிறது.
ஒவ்வொரு வரியும் கத்தியில் கூர்தீட்டியது போல எழுதுவது ஸ்டீபனின் பலம். சிறை உடைத்துத் தப்பிப் போகும் இடத்தை சொல்லும்போது, காப்பிக்கோப்பை, தட்டு, சமையல் அடுப்பு என ஒவ்வொரு ஐந்து வரு டங்களுக்கு ஒரு முறை அந்த ஓட்டை பெரிதாகியதுன் னு எழுதுகிறார். இதைப் போல பல உருவகங்கள் மிக இயல்பாக அமைந்துள்ளன. அபாரமான கதை.
3. The Body
தொகுப்பில் கொஞ்சம் மெதுவாகப் போகும் கதை இதுதான். ஆனால் சுவார்ஸ்யத்துக்குக் குறைவில்லை. ஒரு குழந்தைத்தனமான தேடலாகக் காணாமல் போன சிறுவனைக் கண்டுபிடிக்க நான்கு நண்பர்கள் கிளம்புகிறார்கள். சிற்றூராக இருந்தாலும், வாழ்வின் கொடூரங்கள் மலிந்து கிடக்கும் ஊர் அது. சிறுவர்கள் ஒவ்வொருவரும் எதிர்பாராத சிக்கலில் தங்கள் ஊரைப் புரிந்துகொள்கிறார்கள். பதின்ம வயதினராக இருந்தாலும், மெல்ல மெல்ல உலகத்தின் கொடூரம் புரிபட, திரும்ப முடியாத கட்டத்துக்கு சென்று சேர்கிறார்கள்.
இந்த கதை முன்னும் பின்னுமாக பல காலகட்டங்களில் நடக்கிறது. கதைசொல்லி நாற்பது வயதுக்காரர். அந்த நால்வரில் ஒருவராக இருந்தவர். அந்த நாலு சிறுவர்களும் காணாமல் போனவரை சந்திக்க செய்யும் வேலைகள் எப்படி இக்கட்டில் விடுகிறது என ஒவ்வொரு முடிச்சையும் அழகாகச் சொல்லியுள்ளார். காலப் பயணங்கள் இத்தனை இருந்தா லும் குழப்பமில்லாத கதை. பதின்ம வயது சிறுவர்களின் உணர் வுகளை மிக அழகாகப் படம் பிடித்துக்காட்டியுள்ளார். அந்த சம்பவத்துக்குப் பிறகு தங் கள் அப்பாவித்தனத்தை முழுவதும் இழந்துவிடுகிறார்கள் - point of no return. இந்த படமும் Stand By Me எனத் திரைப்படமாக வந்து மிகவும் பிரபலமானது. இந்த படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை.
4. Apt Pupil
நாஜி படையில் யூதர்களை அழித்தவன் என்பதால் ஆர்தர் எனும் கிழவனை டாட் எனபவன் சந்திக்கிறான். தான் ஒரூ நாஜி அல்ல என தப்பிக்கப்பார்த்தாலும் கடைசியில் ஆர்தர் ஒத்துக்கொள்கிறான். நாஜிக்கொடுமைகளைப் பற்றிய கதைகள் சொல்லாவிட்டால் போலீஸிடம் மாட்டிவிடுவேன் என மிரட்டும் டாடுக்கு ஆர்தர் பல கதைகள் சொல்கிறார். ஆனால், இந்த கதைகள் மெல்ல அவரை உக்கிரமானவனாக ஆக்குகிறது.அதனால் ஊரில் இருக்கும் வீடில்லாதவர்களைக் கொலை செய்து தனது வெறியைத் தணித்துக்கொள்கிறார். ஒரு கட்டத்தில் தூக்கம் வராமல் போகவே, பல கொலைகள் செய்யத் தொடங்குகிறார் டாட்டுக்குக் கதை சொல்வதில் பல கற்பனைக் கதைகளையும் சேர் த்துவிடுகிறார். அவரது அடையாளம் மாறிவிடுகிறதா? எதனால் தனது பழைய நினைவுகளை புதைக்கப் பார்க்கிறார் என்பதே மீதிக் கதை.
ஸ்டீபன் கிங்கின் பேய் கதைகளையும், அமானுஷக் கதைகளையும் தொடர்ந்து படிப்பவர்களுக்கு ஒன்று தெரிந்திருக்கும். அவர் கதைகளின் நாயகன். ஒரு வரியில் ஒரு கதை சொல்லுவார். ஒரு பத்தியில் திடீரென சம்பந்தமில்லாத நிகழ்வைக் குறிப்பிடுவது போல சொல்லுவார். ஆனால், எங்காவது அதைத் தொடர்புப் படுத்திவிடுவார். ஷஷாங் ரிடம்ஷனில் ஜெயிலில் நடக்கும் சிஸ்டர்ஸ்களின் கற்பழிப்பு பற்றி ஒரே பக்கத்தில் கொடூரமானக் காட்சியைக் காட்டிவிடுவார். அவரது மொழி கதைக்கு ஏற்றவாறு மிகக் கச்சிதமாகப் பொருந்திவிடும்.
ஷைனிங் கதையில் வரும் எழுத்தாளர், டோலோரஸ் க்ளைபோர்ன் கதையில் வரும் கிழவி, கேரி படத்தில் வரும் சிறுமி என எந்த பாத்திரத்தையும் அவர் நம் கண் முன் நிறுத்தாமல் விடுவதில்லை. சுவாரஸ்யம் மட்டும் போதுமா? ஆழமானக் கதைகளை எழுத வேண்டாமா எனும் வாதத்தை இவர் மீது போட்டுப் பார்த்து நாம் சந்தோஷம் அடையலாம். மொழியில் ஜல்லியடிப்பவர் என புறந்தள்ளிவிட்டுப் போகலாம். இவரைப் போல கீழே வைக்க முடியாதளவு கதை சொல்லும் திறன் படைத்தவர்கள் மிக்க குறைவு.
கதை சொல்லுதல் எனும் சுவாரஸ்யமான கலையை இவரது கதைகள் எப்போதும் நிறைவு செய்கின்றன. சோடை போகும்படியான கதைகளையோ, க்ளீஷேக்களான வர்ணனைகளையோ இவர் பயன்படுத்துவதே இல்லை. அதே சமயம் மேலோட்டமான விளையாட்டுத்தனத்தை மட்டும் இவர் நம்புவதில்லை. எத் தனை முறை திரும்பத் திரும்பப் படித்தாலும் மிகவும் ரசிக்ககூடி ய வகையில் இவரது கதைகள் இருக்கி ன்றன.
கதை சொல்லலின் கிராண்ட் மாஸ்டர் இவர்.
.
தலைப்பு - Different Seasons
எழுதியவர் - ஸ்டீபன் கிங்.
இணையத்தில் வாங்க - Different Seasons
சுவாரஸ்யமான விமர்சனம்... நன்றி...
ReplyDelete