இந்திய வரலாறு சுவாரசியமானது. அது பற்றி நமக்குத் தெரிந்த விஷயங்களைவிட அது எதுவும் தெரியாமல் போனது எப்படி என்ற கேள்வி சுவாரசியமானது. ஆம்னிபஸ் தளத்தின் முன்நூறாவது பதிவாக, "இந்தியன் ஆவது எப்படி?" என்ற நூலை ஆம்னிபஸ் தளத்தில் நமக்கு அறிமுகப்படுத்தி கௌரவித்தார் திரு பத்ரி சேஷாத்ரி அவர்கள். அதைப் படித்துவிட்டு அ.கா. பெருமாள் எழுதியுள்ள "பறக்கை மதுசூதன பெருமாள் கோயில்" என்ற சிறு நூலை வாசிக்கும்போது எது நம் வரலாறு ஏன் அது மறக்கப்பட்டது என்றெல்லாம் கேள்விகள் தோன்றுகின்றன. எதற்கும் விடையில்லை.
பவன் கே வர்மாவின் புத்தகத்துக்கு பத்ரி சேஷாத்ரி தன் தளத்திலும் ஒரு அறிமுகம் செய்திருக்கிறார் - இந்தியன் ஆவது எப்படி? அதில் உள்ள ஒரு முக்கியமான பத்தியை அடுத்து வருவது இது -
பவன் கே வர்மாவின் புத்தகத்துக்கு பத்ரி சேஷாத்ரி தன் தளத்திலும் ஒரு அறிமுகம் செய்திருக்கிறார் - இந்தியன் ஆவது எப்படி? அதில் உள்ள ஒரு முக்கியமான பத்தியை அடுத்து வருவது இது -
ராஜராஜன் என்ற அரசன் இருந்து தஞ்சை பெரிய கோவில் என்ற மாபெரும் படைப்பை உருவாக்கியதையும், அசோகர் என்ற பேரரசர் தன் பரந்து விரிந்திருந்த சாம்ராஜ்ஜியத்தின் ஒரு கோடி முதல் மறு கோடி வரை எண்ணற்ற தூண்களைக் கட்டித் தன் கட்டளைகளைப் பிறப்பித்திருந்ததையும், பல்லவர்கள் மாமல்லபுரம் என்ற மாபெரும் சிற்ப நகரை நிர்மாணித்திருந்ததையும், உலகப் புகழ்பெற்ற இந்திய ஓவியங்கள் அடங்கிய அஜந்தா குகைகளையும் மீள்கண்டெடுத்து நமக்குத் தந்தது பிரிட்டிஷாரே.
இவ்வளவையும் பிரிட்டிஷ்காரர்கள் கண்டுபிடித்துக் கொடுத்தது ஒரு பெரிய விஷயம்தான் என்றாலும், இதை எல்லாம் எப்படி நம்மால் தொலைக்க முடிந்தது என்ற யோசித்தால் அது அதைவிடப் பெரிய விஷயமாக இருக்கிறது. வடிவேலுவின் கிணறு களவு போன கம்ப்ளெயிண்ட்டைவிட சிக்கலான பிரச்சினை இது. பிரிட்டிஷ்காரர்கள், முகலாயர்கள், ஆரியர்கள் என்று ஏறத்தாழ நினைவு தெரிந்த காலம்தொட்டு காலனியாதிக்கத்தில் இருக்கும் இந்திய துணைக்கண்டத்தின் சாபக்கேடு இது என்று திட்டலாம், ஆனால் அதில் ஒவ்வொரு தரப்புக்கும் சில அசௌகரியங்கள் இருக்கின்றன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைத் திட்டுபவர்கள் முகலாய ஆட்சியை காலனிய ஆட்சி என்று சொல்ல மாட்டார்கள். முகலாயர்களைத் திட்டுபவர்கள் ஆரிய வந்தேறிகளைக் கண்டுகொள்ள மாட்டார்கள். ஒரு சமயம் இந்த மாதிரி கலவையான வரலாறு இருப்பதால்தான் நமக்கு எதுவுமே முக்கியமாக இல்லாமல் எல்லாவற்றையும் நாளது தேதி வரை தொலைத்துக் கொண்டிருக்கிறோமோ என்னவோ.
இல்லாவிட்டால் இந்த இருபத்து ஒன்றாவது நூற்றாண்டில்கூட இப்படியெல்லாமும் வேறெங்காவது நடக்குமா?
கத்தி இன்றி சுத்தி இன்றி ஒரு ஆலயத்தை எப்படி வீழ்த்துவது!
குப்பையில் எறியப்பட்ட பேரூர் கோயில் தூண்கள்
என்ன கொடுமை இது ?
இல்லாவிட்டால் இந்த இருபத்து ஒன்றாவது நூற்றாண்டில்கூட இப்படியெல்லாமும் வேறெங்காவது நடக்குமா?
கத்தி இன்றி சுத்தி இன்றி ஒரு ஆலயத்தை எப்படி வீழ்த்துவது!
குப்பையில் எறியப்பட்ட பேரூர் கோயில் தூண்கள்
என்ன கொடுமை இது ?
ஆட்சி செய்ய வந்த வெள்ளைக்காரர்கள் நம் வரலாற்றைக் கண்டுபிடித்துக் கொடுத்ததாக பெருமையடித்துக் கொள்கிறார்கள் என்றால், சுதந்திர இந்தியா அதை அழித்து ப்ளாட் போட்டு விற்றுக்கொண்டிருக்கிறது.
அ. கா. பெருமாள் எழுதிய, "பறக்கை மதுசூதன பெருமாள் கோயில்" என்ற நூலில் உள்ள பகுதி இது (கல்வெட்டைப் படியெடுத்த காலத்தையும் அது தொலைந்து போன காலத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்):
மதுசூதனர் விண்ணகரம் தொடர்பான பெரிய கல்வெட்டு ஒன்று வடக்குதெரு மகாதேவர் கோவிலில் உள்ளது. கி.பி. 1558 ஆம் ஆண்டில் உள்ள இக்கல்வெட்டு 115 வரிகளைக் கொண்டது. மகாதேவர் கோவிலின் முன்பகுதிச் சாலையை ஒட்டிய இடத்தில் இக்கல்வெட்டு இருந்தது. 25 மீ உயரமும் 90 செ.மீ. அகலமும் கொண்ட ஒரு கல்லிலும், வேறு ஒரு கல்லிலும் கல்வெட்டின் பகுதிகள் பொறிக்கப்பட்டிருந்தன.
1920 அளவில் திருவிதாங்கூர் தொல்லியலார் இதை பிரதி செய்திருக்கின்றனர். கேரள வரலாற்றில் வீரகேரள சிறைவாய் மூத்த மன்னனின் வரலாற்றை உறுதிப்படுத்த கேரள வரலாற்றாசிரியர்களுக்குப் பெரிதும் உதவிய இந்த அபூர்வ கல்வெட்டு இப்போது காணப்படவில்லை. தமிழகத்துத் தொல்லியலார் 1967ல் இதை மறுபடியும் படியெடுத்தபோது இது இங்கே இருந்திருக்கிறது. இதை வீட்டுக் கட்டுமானத்துக்காக யாரோ எடுத்துச் சென்றுவிட்டனர். (பக்கம் 56).
இந்த மாதிரி படியெடுத்த பின்னும் தொலைந்து போன கல்வெட்டுகள் மூன்றையாவது இந்நூலில் குறிப்பிடுகிறார் அ.கா. பெருமாள். ஒன்று தெரிகிறது - காடுகள், மலைகள், ஆறுகள், குளங்கள், விளைநிலங்கள் என்று எல்லாவற்றையும் கொள்ளை கொள்ளும் வீட்டுக் கட்டுமானம் நம் வரலாற்றையும் கொண்டு செல்கிறது. களப்பிரர்களைக்கூட நல்லவர்கள் என்று சொல்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள், எஞ்சியிருக்கும் செல்வங்களையும் அழித்துக் கொண்டிருக்கும் நமக்கு ஆதரவாய் இனி யாரும் பேசப் போவதில்லை.
சரி, இந்தப் புலம்பலை விட்டுவிட்டு பறக்கை மதுசூதன பெருமாள் கோவில் சம்பந்தமாக அ.கா. பெருமாள் போன்றவர்கள் எழுதுவது மட்டுமாவது வரலாற்றுப் பதிவாகப் பிழைத்திருக்கிறதே என்றுதான் நாம் சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டும் (ஆனால் இன்னும் இருபது ஆண்டுகளில் இதெல்லாமும் "அச்சில் இல்லை" என்று காணாமல் போய் மறக்கப்பட்டு விடும் என்பது உறுதி).
நாஞ்சில் நாட்டில் உள்ள பறக்கையின் வரலாறு ஏறத்தாழ 1200 ஆண்டுகள் பழமையானது என்கிறார் பெருமாள். கிபி 10ஆம் நூற்றாண்டில் இது பிராமணர்களுக்கு தானமாக விடப்பட்டாலும் அதற்கு முந்தைய நூற்றாண்டிலேயே பிரம்மதேயக் கூறுகள் கொண்டதாக இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறார் அவர் (பக்கம் 21). பத்தாம் நூற்றாண்டு முதல் பதினேழாம் நூற்றாண்டு வரை கிழார்மங்கலம் என்றுதான் அதிகாரபூர்வமாக கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது - பறக்கை என்ற பெயர் பேச்சுப் புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும்.
ஆவணங்களின் வரலாறே சரித்திரம். அ.கா. பெருமாளும்கூட, ஆவணங்களின் அடிப்படையில் "பல்வகைச் சாதியினரின் குடியேற்றம்" என்று எழுதும்போது பத்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர்கள் யார் என்ன என்று எதுவும் எழுத முடியாமல், "பறக்கை ஊர் பிரம்மதேயமான பின்னர் (கி.பி. 10ஆம் நூற்றாண்டு) பிராமணர்கள் குடியேறி இருக்கலாம்," என்றுதான் துவங்குகிறார். சுசீந்திரம் கோவில் கல்வெட்டு ஆதாரத்தில் நாஞ்சில் நாட்டு வேளாளரும் இதே காலகட்டத்தில் இங்கு குடியேற ஆரம்பித்திருக்கலாம் என்கிறார். அதன்பின், 1464 ஆண்டு கல்வெட்டு உவச்சர் சாதியினருடன் தொடர்புடைய வலிகொலி என்ற பெண் தெய்வத்தைக் குறிப்பிடுவதால், அவர்கள் அந்த காலத்தில் அங்கிருந்தது உறுதிப்படுகிறது. 1509ஆம் ஆண்டுக்கான கல்வெட்டு செழியன்கோன் என்ற வணிக செட்டியைக் குறிப்பிடுகிறது என்ற ஆதாரத்தில் "15ஆம் நூற்றாண்டளவில் வணிகச் செட்டி சமூகத்தினர் பறக்கையில் குடியேறினர் என்று கொள்ளலாம்," என்று முடிவு செய்கிறார்.
இது போன்ற கிடைத்த ஆதாரங்களைக் கொண்டுதான் வரலாறாக நாம் அறியப்படும் விஷயம் தொகுக்கப்படுகிறது. இதில் விட்டுப்போனவர்கள் விட்டுப்போனதுதான். இதனால்தான் நாம் இன்னமும் வரலாறு குறித்த உணர்வு கொஞ்சம்கூட இல்லாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது. பறக்கை கோயில் கருவறையைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் உள்ள 12ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று, "பசுமங்களம் சிங்கள அரசன் என்பான் புரவசேரி கோவிலுக்கு விட்ட நிபந்த நிலத்திற்கு வரிவிலக்கு அளிக்க இப்பாண்டியன் வேண்டியதாகக் கூறுகிறது," என்று குறிப்பிடுகிறார் அ.கா. பெருமாள் (பக்கம் 65). பசுமங்களம் சிங்கள அரசன் வரலாற்றில் இடம் பிடித்துவிட்டானா இல்லையா?
பறக்கை ஊர், அதன் சிறப்பு, தலபுராணம், வாய்மொழிக் கதைகள், கோவிலின் அமைப்பு, முக்கிய தெய்வங்கள், பரிவார தெய்வங்கள், சிற்பங்கள், விமானம், வாகனங்களின் பட்டியல், தேரில் உள்ள சிற்பங்கள், கல்வெட்டுச் செய்திகள், பறக்கையில் உள்ள பிற கோயில்கள் என்றும் இன்னும் பிறவற்றையும் விளக்கமாக ஆய்வு செய்து தொகுத்திருக்கிறார் அ.கா. பெருமாள். ஆனால், இது வரலாற்று பார்வையுடன்தான் எழுதப்பட்டிருக்கிறது என்பதாலும் "போயும் போயும் பிரிட்டிஷ்காரன் வந்து நம் வரலாற்றைக் கண்டுபிடித்துச் சொல்லும்படி ஆகிவிட்டதே," என்ற கவலை இருந்ததாலும் வரலாறு - கல்வெட்டு - ஆதாரம் என்று எழுதும்படி ஆகிவிட்டது. இது எதிலும் ஆர்வம் இல்லாதவர்கள் காடராசன் கதை, மதுசூதனனை கருடன் பூசித்த சருக்கம் போன்றவற்றுக்காக இந்நூலை தைரியமாகப் படிக்கலாம் - "கத்துரு வினதை என்ற இரண்டு பெண்களில் மூத்தாள் ஆமையரவெல்லாம் பெற்றாள். வினதை அருணன் கருடனைப் பெற்றாள். இவ்விரு தாரத்து மக்களுஞ் சத்துருவாய்ப் பகைஞரானார்கள்..." என்று போகிறது இக்கதை.
பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், அ.கா. பெருமாள், 2003,
ரோகிணி ஏஜன்ஸீஸ்,
நாகர்கோயில் - 2
விலை ரூ 35
No comments:
Post a Comment