நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கோல் என வேண்டா
நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்
-ஔவையார்
நன்றி: யுவகிருஷ்ணா
இப்போதைய எங்கள் வீட்டின் பக்கத்து மனையில் வளர்ந்திருந்த ஆறு தென்னை மரங்கள் சென்ற மாதம் வேரோடு சாய்க்கப்பட்டன. புதிதாக அங்கே வீடு முளைக்கிறது. தென்னையின் இன்மை எங்கள் வீட்டிற்குக் கூடுதலாக வெளிச்சத்தையும், வெப்பத்தையும் கொண்டு சேர்த்திருக்கிறது. எங்கள் வீட்டு பால்கனியும், சுவர்களும் சித்திரை வெயிலை கனஜோராக வாங்கிக் கொள்கின்றன.
பக்கத்து வீட்டில் ஐம்பது பேருக்கு கனஜோராய் விருந்து தயாராகிக் கொண்டிருந்தது.
காரணம்? கடைசியில் சொல்கிறேனே!
2010’ல் எங்கள் அபார்ட்மெண்ட் கட்டத் துவங்கியபோது அக்கம்பக்கத்தினரைக் கொஞ்சம் கடுப்பேற்றி விட்டுத்தான் கட்டிட வேலைகளை ஆரம்பித்தோம். தனி வீடுகள் மட்டுமே நிறைந்த பகுதியான இங்கே முதல் அபார்ட்மெண்ட் எங்களுடையது. அபார்ட்மெண்ட் கல்ச்சர் என்பது தங்கள் பகுதியில் புகுவதை அவர்கள் விரும்பவில்லையோ என்னவோ? நாங்கள் கட்டத் துவங்கிய பின் கடந்த இரண்டு வருடகாலத்தில் மேலும் ஒருடசன் அபார்ட்மெண்ட்டுகள் எங்கள் பகுதியில் முளைத்துவிட்டது தனி விஷயம்.
“தென்னை மரத்தை விட ஒசரமா வீடு கட்டறேன் பேர்வழின்னு நம்ம வீட்டு தென்னைமரத்துத் தலையையெல்லாம் நறுக்குவாங்க”, பின்பக்க பக்கவாட்டுத் தனிவீடர்கள் எங்களை எதிர்த்ததற்கான தனிக்காரணம் இல்லாமல் இல்லை. அவர்கள் எதிர்பார்ப்பைப் பொய்யாக்காமல் எங்கள் முதல்/இரண்டாம் மாடிகளைப் பதம் பார்த்த தென்னந்தலைகளை நறுக்கத் தலைப்பட்டது.
சாலையோர இளநீர்க் கடைகளில் ஸ்ட்ராவை ‘சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ என உறிந்தவாறே, “என்னண்ணே! பொள்ளாச்சியா? பாண்டியா?” என்ற கேள்வி கேட்கும் எல்லாந்தெரிந்த ஏகாம்பரம் நாம்.
“தென்னையப் பெத்தா இளநீரு! பிள்ளையப் பெத்தா கண்ணீரு” என்று அர்த்தம் புரியாத ஒரு வயதில் சிறுதிருட்டு செய்து மாட்டிக் கொண்ட ஒரு பிள்ளையைப் பெற்ற தகப்பன் ஒருத்தருக்குச் சமாதானம் சொன்னதோடு சரி. மற்றபடி, தென்னையின் மகத்துவம் நமக்குப் பெரிசாய் ஒன்றும் தெரியாது. இத்தனைக்கும் மாதவரத்தில் வசித்தபோது ஓங்கி வளர்ந்த அரைடஜன் தென்னை மரங்கள் கொண்ட ஒரு வீட்டில் ஒரு ஐந்து வருடம் குடியிருந்ததும் உண்டு.
பக்கத்து வீட்டில் தென்னை மரங்களை வெட்டிய அசுபயோக அசுப மாதத்தில் நம் புத்தகக் கூடையில் வழக்கம்போல் தூங்கிக்கிடந்த ”தென்னை வளர்ப்பு” குறித்த இந்தப் புத்தகம் கண்ணில் பட்டது.
முனைவர் அரு.சோலையப்பன் இயற்கை விவசாயத் துறையில் வல்லுனர். விவசாயம் குறித்து நிறைய புத்தகங்கள் படைத்துள்ளார். இவரது “விவசாயக் களஞ்சியம்” எனும் நூல் 1984’ஆம் வருடத்தின் ”தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு” பெற்றது. இவர் செங்கை நகரில் வசிப்பவர். ’கரிம விவசாயக் கட்டமைப்பு” நிறுவனத்தின் தலைவர். இயற்கை விவசாயம் குறித்த மாதாந்திரக் கூட்டங்களை செங்கல்பட்டு நகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் மாதந்தோறும் நடத்தி வருகிறார்.
என்னைப் போன்ற சாமானியனுக்குத் தெரிந்த தென்னை வளர்ப்பு என்பது சந்தையில் சென்று தென்னை நாற்று ஒன்றை வாங்கி வந்து, குழி தோண்டி, அதிலே அதைப் புதைத்து, எருவிட்டு, நீர்விட்டு, வளர்த்து, அவ்வப்போது பூச்சிக்கொல்லிகளை உபயோகித்து, மரம் வளர்ந்ததும் தேங்காய்களைப் பறித்துக் கொள்வது.
வீட்டிற்கு வேடிக்கையாய் வளர்த்துக் கொள்ளும் தென்னைக்கு இது சரிதான். வீட்டுக்கு நிழலாச்சு, சட்னிக்கு தேங்காயுமாச்சு, வீட்டுல தேங்காய் முளைக்கல்லியா, கடையில வாங்கிக்கிட்டாப் போச்சு என்று சமாதானமடையும் கோஷ்டி நாம்.
“தென்னை வளர்ப்பு” என்ற இந்தப் புத்தகம் தென்னை வளர்ப்பினை ஒரு விவசாய நோக்குடன் செய்பவர்களுக்கு முக்கிய வழிகாட்டி. சரி, அது எதுக்கு சென்னை போன்ற நகரத்தில் வசிக்கும் நமக்கெல்லாம் தேவை?
தென்னை வளர்ப்பை யார் வேண்டுமானாலும் ஒரு வணிக நோக்கில் தொடங்கலாம் என்பதுதான் பதில். என்ன, அதன் பலன் கிடைக்க வருடங்கள் பலவாகும். எனினும் ஒரு நீண்டகால வைப்புநிதி போல இதனை முயற்சி செய்யலாம் என்றே தோன்றுகிறது. வைப்பு நிதி போல போட்டுவிட்டு மறந்துவிடுதல் அல்ல. ஆரம்பத்தில் நல்ல உழைப்பும் தேவை.
நம் நாட்டில் தென்னிந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், மகாராஷ்டிரத்திலும் தென்னை வளர்க்கின்றோம் நாம். இருந்தும் தென்னைப் பொருட்களைப் பொருத்தவரையில் நம் தேவைக்கு வெளிநாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யும் நிலைமையே இன்னமும் இருக்கின்றதாம். ஆக, தென்னை வளர்ப்பினில் தேவையற்ற பண்டத்தினை நாம் உற்பத்தி செய்யப்போவதில்லை.
சரி, புத்தகத்திலிருந்து சில சுவாரசிய பத்திகள்:
தென்னையின் ஒரு இலை என்பது அதன் ஒற்றை ஓலை அல்ல. ஓலையுடன் சேர்ந்த ஒட்டுமொத்த மட்டையுமேதான்.
பன்னாடை என்ற சொல் தென்னையிலிருந்தே வந்திருக்கிறது. மட்டையையும் தென்னையின் தண்டினையும் இணைக்கும் “கோணித் துணி நெசவு செய்தாற்போல்” தோற்றத்தில் இருக்கும் பகுதியே பன்னாடை. ஆனால், இந்தச் சொல்லை ஏன் திட்டுவதற்குப் பயன்படுத்துகிறோம்? <உபயம்: பிரகாஷ்ராஜ் - கல்கி திரைப்படம் >
செந்தில் கவுண்டமணியிடம், “அண்ணே! இது என்ன?”, “தேங்கா”, “இதுக்கு முன்ன?” “அங்ங்ங்ங்ங்”, என்பார் கவுண்டமணி. அந்த நகைச்சுவையின் லாஜிக்கே தப்பு என்பது நம் எல்லோருக்கும் புரியும். தேங்காய்க்கு முன் இளநீர் என்பது சிம்பிளான பதில் இல்லையா?
தேங்காய் என்பது காய் அல்ல பழமாம். இளநீரே தென்னையின் காய். தேங்காய் என்று நாம் அழைப்பதை தென்னம்பழம் என்றே அழைக்க வேண்டுமாம். என்ன, பழத்தை நாம் தின்பதில்லை அதன் கொட்டையைத் தின்கிறோம்.
பொதுவாக தென்னைக்குக் கிளைகள் கிடையாது எனினும், சிலவகை அபூர்வத் தென்னை வகைகளில் கிளை உண்டாம்.
தென்னையில் நெட்டை, குட்டை என்று இருவகைகள் உண்டு. நெட்டை அறுபது அடிவரை வளரும். குட்டை இருபது அடிக்கு மேல் போவதில்லை. நெட்டை மரம் நட்ட பன்னிரண்டாம் வருடம்தான் காய்க்கத் துவங்கும். குட்டை நான்காம் வருடமே காய்க்கத் துவங்கிவிடும். குட்டையின் வாழ்க்கை முப்பது வருடகாலம். நெட்டை நூறுவருடங்கள் வாழும். நெட்டைக்கே விவசாயிகளிடையே மவுசு அதிகம். காரணம், நெட்டையின் தேங்காய்களும் கொப்பரைகளுமே தரத்தில் உயர்ந்தவை.
பன்னாடை
புத்தகத்தில் விதைக்காய் தேர்வு குறித்த பக்கங்களை தென்னை வளர்க்க விரும்புபவர்கள் எல்லோரும் அவசியம் வாசிக்க வேண்டும்:
தென்னை உற்பத்தியின் வெற்றிக்கான முக்கிய பங்கு அதன் விதைக்காய் தேர்வில்தான் இருக்கிறது.
நன்றாக முற்றிய தேங்காயை நெற்று என்பார்கள். இந்த நெற்றுகள்தான் நல்ல விதைகள் ஆக முடியும்.
அதிக வயதாகாத மரங்களிலிருந்து நெற்றுக்காய்கள் தேர்ந்தெடுக்கக்கூடாது.
நெற்று மரத்திலேயே முற்றுதல் நலம். ஆனால், முற்றிய நெற்று தானாக தரையில் வீழ்ந்ததாக இருக்கக்கூடாது.
“நாற்றங்கால்” - இந்த வார்த்தை நினைவிருக்கிறதா? வீடும் வயலும், வயலும் வாழ்வும் போன்ற ரேடியோ, டிவி நிகழ்ச்சிகளைக் கேட்ட, பார்த்தவர்களுக்கு இந்த வார்த்தை பரிச்சயமாயிருக்கலாம். நெற்றிலிருந்து செடியை முளைவிடச் செய்யும் வேலை இது எனலாம். இந்த ப்ராஸசுக்குப் பிறகே கன்று நடுதல்.
நாற்றங்கால் பொதுவாக முழுநேர விவசாயிகளுக்கும் தென்னங்கன்று விற்கும் நோக்குடன் இருப்பவர்களுக்காக. வீட்டில் தென்னை வளர்ப்பவர்கள் யாரும் இதை முயற்சிப்பார்கள் எனத் தோன்றவில்லை. சொல்வதற்கில்லை, தென்னைக்குப் பெயர் போன கேரள நாட்டில் இதுவும் நடக்கலாம்.
இதுவரை நான் சொன்னது புத்தகத்தின் முதற்பாதிதான். தென்னங்கன்றுகளை நடுதல் அடுத்த வேலை. நட்டதைப் பராமரித்தல், உரமிடுதல், நீர்பாய்ச்சி வளர்த்தல், பூச்சித் தாக்குதல்களிலிருந்து காத்தல், அறுவடை என புத்தகத்தின் மறுபாதி. அவற்றைச் சுருக்கமாக வாசிப்பதைவிட, தென்னை வளர்க்க விரும்புபவர்கள் அருணோதயம் பதிப்பகத்தில் இந்தப் புத்தகத்தை வாங்கி அவசியம் அந்த மறுபாதியை வாசித்துப் பயன்பெறுவீர்.
உச்சிமுதல் பாதம் வரை பயன்தரும் மரம் என வாழைமரத்தைக் கூறுவார்கள். தென்னையின் பயன்களைப் படித்தால் தென்னை என்பது பயன் விஷயத்தில் வாழைக்குப் பெரியப்பா எனத் தெரிகிறது. ஓலை, பதநீர், கள், இளநீர், தேங்காய், கொப்பரை, பன்னாடை, நார், மட்டை (இன்னமும் இன்னமும்) என தென்னையில் எல்லாமுமே பயன் தருவன.
வேறு மரக்கன்றுகளுக்கு இல்லாத பெருமை தென்னைக்கு உண்டு. தென்னங்கன்றினை தென்னம்பிள்ளை என்று அழைக்கிறோம். காரணம் தென்னை என்பது நம் பாரம்பரியத்தில் ஒரு குடும்ப அங்கமாகக் கருதப்படுகிறது.
பிள்ளைக்கு நிகரான தென்னையை அகற்ற நேர்ந்ததால்தான், அதற்குப் பரிகாரமாக ஐம்பது பேருக்குப் போஜனம் பரிமாறினர் எங்கள் பக்கத்து வீட்டில்.
தென்னை வளர்ப்பு - முனைவர் அரு.சோலையப்பன். பக்கங்கள்: 104, விலை ரூ. 25/- (2005 பதிப்பு), அருணோதயம் பதிப்பகம் ராயப்பேட்டை, சென்னை-14 (Ph: 044- 28132791)
No comments:
Post a Comment