இமாலய சாதனை எனப் பலரும் பல விஷயங்களைச் சொல்கிறார்கள். இந்தியாவின் முதல் ஓட்டெடுப்பை நேரு இமாலய சாதனை என்றார். ஒத்துழையாமை இயக்கத்தை நாடளவில் செயல்படுத்தி சில உயிரிழப்புகளை சந்தித்த போது, காந்தி தனது முடிவை இமாலயத் தவறு எனச் சொன்னார். இப்படி இமாலய சாதனைகளும், தவறுகளும் மண்டிக்கிடக்க, நமக்கெல்லாம் தினமும் ஒரு புத்தகத்தைப் பற்றி ஆம்னிபஸ்ஸில் எழுதிவிட்டாலே இமாலய சாதனை தான். இன்றைக்கு எழுதப்போகும் புத்தகம் நிஜமான இமாலய சாதனை குறித்தது.
எனக்கு ரொம்ப நாட்களாகவே ஒரு ஆசை. மலை ஏறுவதல்ல. அதெல்லாம் சக்திமானால் மட்டுமே முடியும் காரியம். நமக்கு நெஞ்சிலும் உரமில்லை என்பதால் ரிஸ்க் எடுப்பதில்லை. ஆனால் அதற்கு மாறாக, மலை ஏறியவர்களின் அனுபவத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என ஆசை இருக்கிறது. அதற்காகவே இந்த புத்தகத்தை வாங்கினேன்.
எவரெஸ்ட் மலை சிகரங்களை புகைப்படங்களில் பார்க்காதவர்கள் இருக்க முடியாது. எரியும் மலை போல முகட்டிலிருந்து புகை வந்துகொண்டிருக்கும். நானும் சிறு வயதில் பார்த்திருக்கிறேன். ஆனா ல், இத்தனை உயரத்தில் சூரியனுக்கு அருகே போனால் சுட்டுப் பொசுக்கத்தானே வேண்டும்? ஏன் இப்படி உறைந்து கிடக்கிறது எனும் சந்தேகம் எப்போதும் இருந்தது. கருப்புத் தங்கம் போல, முக்கோண கடப்பாக்கல்லு போலிருக்கும் எவரெஸ்டுகளையும் நீங்கள் பார்த்திருக்கக்கூடும். தொலைக்காட்சியில்/புகைப்படத்தி ல் பார்க்கும்போது மற்றமலைகளுக்கு சமமான உயரத்தில் இருப்பது போலத் தோன்றும். சுற்றியிருக்கும் குட்டைப் பயல்களும் அதனுடன் போட்டி போடுவது போன்ற தோற்றம் ஆச்சர்யமளிக்கும்.
இரு நிலப்பகுதிகள் ஒன்றோடு ஒன்று மோதுவதால் மலைகள் உருவாகின்றன எனும் கோட்பாடு எந்தளவு உண்மை என எனக்குத் தெரியாது. ஆனால், செத்துப்போன ராட்சஸர்கள் தான் மலைகளாக மாறுகிறார்கள் என எனது பாட்டி சொன்ன அரிய உண்மையோடு ஒத்துப்போகிறேன். எத்தனை மலைகளில் மூக்கையும், வாயையும், கண்ணையும் பார்த்திருக்கிறோம்! தொந்திகள் கூட அவற்றுக்கு உண்டு. இப்படியான விசாரத்தில் நாம் மட்டும் இருப்பதாக நினைத்து வெட்கப்பட வேண்டாம், இப்புத்தகத்தை எழுதிய எட்மண்ட் ஹில்லாரியும் அப்படித்தான் எண்ணியிருக்கிறார். மூக்கு விடைப்பாக இருக்கும் கிழக்கு பகுதி வழியாக உச்சிக்கு ஏற முடியாது, சங்கு கழுத்து நிதானமாக ஏறுகிற வழியில் செல்லலாம் என பல திட்டங்கள் இந்த புத்தகத்தில் உள்ளன.
சிறுவயதில் மலையைப் பார்க்கு ஆர்வம் பெரிதாக இருந்ததில்லை என இந்த நியூசிலாந்துகாரர் கூறுகிறார். இத்தனைக்கும் நியூசிலாந்து முழுவதும் அழகான ஃபியார்டுகள் நிரம்பிய நிலம். கன்னி நிலம். நாட்கணக்கில் பயணம் செய்தாலும் மலைகளைத் தவிர வேறெதையும் பார்க்க முடியாத நிலம். அப்படிப்பட்ட நிலத்தில் பிறந்த வளர்ந்தாலும் எட்மண்ட் ஹில்லாரி தனது இருபதாவது வயதில் தான் முதல் மலையில் ஏறியிருக்கிறார். அதுவும், விடுமுறைக்கு மலை அடிவாரத்துக்குப் போயிருந்தபோது ஒரு தேனீர் இடைவெளியில் திடுமென ஏறத்தொடங்கி பாதி வழியில் திரும்பி நின்று நிலத்தைப் பார்த்து ஆச்சர்யமடைந்து உச்சி வரை நடந்து திரும்பியிருக்கிறார். பெரிய சாதனை செய்தது போல உணர்ந்திருக்கிறார். அன்றிரவு முழுவதும் அவருக்கு இதே சிந்தனை. அடுத்த நாள் கேம்பில் உட்கார்ந்திருந்த போது நியூசிலாந்தில் உயரமான மலையை ஏறிவிட்டு திரும்பியிருந்த குழுவைப் பார்த்தார். அவர்களுக்கு இருந்த வரவேற்பை கண்டு வியந்ததினால் மலை ஏறவேண்டும் எனும் ஆர்வம் உண்டானதாக எழுதியிருக்கிறார்.
அதற்குப் பிறகு எந்தவித பயிற்சியும் இல்லாமல் உள்ளூர் குழுக்களோடு பல மலைகளை ஏறத் தொடங்கியுள்ளார். எல்லாம் சிறு மலைகள். மேலும், பனிக்காலத்தில் ஏறும் தைரியம் அவருக்கு வரவில்லை. முறையான பயிற்சிக்காக காத்திருந்தார். பனியில் நடப்பது மிகவும் கடினமானது. படிக்கெட்டுகளை உருவாக்க காலால் உடைத்து உடைத்து பனியின் திடத்தன்மையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது பெரும் சோதனை எனச் சொல்கிறார்.
மலை ஏறும் பயிற்சியை டான் எனும் பயிற்சியாளரிடம் கற்றுக்கொண்டார். மலை ஏறுவது என்பது உண்மையில் மலையைத் தெரிந்துகொள்வதுதான். அதுவும் முழுமையாக அல்ல. உயரமான மலைகள் பலவகை நிலங்களை தனக்குள் அடக்கிவைத்திருப்பவை. அடிவாரத்தில் நிலத்தின் தன்மையோடு பொருந்தி இருந்தாலும், மேலே ஏறும் போது பலவகையான நிலப்பரப்புகளைக் கொண்டிருக்குமாம். நீர் வளங்களும், நில வளங்களும், தாவர செழிப்புகளும் ஒவ்வொரு அடிக்கும் மாறிபடி இருக்கும். பனி என்பது இறுகிய நீர் மட்டுமே என நினைத்தால் மலை ஏறவே முடியாது. ஒவ்வொரு பனிப்பாளமும் ஒவ்வொரு அடர்வில் இருக்கும் என்பதால் தொட்டுப்பார்த்து உணரும்போதுதான் அதன் தன்மை புரியும் என்கிறார் ஹில்லாரி.
எவரெஸ்ட் ஏறுவதற்கான வாய்ப்பு அவருக்குத் தற்செயலாகக் கிடைக்கிறது. எரிக் ஷிப்டன் எனும் அனுபவஸ்தர் எவரெஸ்ட் மலை ஏறுவதற்கான குழுவை திரட்டிக் கொண்டிருக்கிறார் எனத் தெரிந்ததும் ஹில்லாரி விண்ணப்பித்திருந்தார். ஆனால் கடைசி வரை அவருக்கு அழைப்பு வரவில்லை. யாரோ ஒரு நபருக்கு உடல்நிலை பாதித்தபோது ஹில்லாரிக்கு அடித்தது பரிசு!
அதைப் பரிசு எனச் சொல்லிவிட முடியுமா? ஹில்லாரி ஏறிய காலகட்டங்களில் மலை ஏறிய குழுவினர் யாரும் ஆரோக்கியமாகக் கீழே வந்தது கிடையாது. சிகரத்தை எட்ட முடியாத தோல்வி ஒரு பக்கம். ஆனால், வெட்டப்பட்ட கால்கள்/கைகள், சரியான சாப்பாடு கிடைக்காமல் பாதிக்கப்பட்ட ஜீரண உறுப்புகள், கடும் குளிரில் உறைவதால் மனநிலை மாற்றங்கள், குறைந்த காற்றழுத்தம் காரணமாக தன்னிலை தவறுதல் என நாம் நினைக்க முடியாத அளவிற்கு சிக்கல்கள் நிறைந்த பயணம்.
1953 ஆம் ஆண்டு மே மாதம் பயணம் தொடங்குகிறது. பயண ஏற்பாட்டுக்காக நேபாளுக்குச் செல்கிறார்கள். அடுத்த ரெண்டு மாதங்களுக்குத் தேவையான சாப்பாட்டுப் பொருட்களை வாங்குவதிலிருந்து அவருக்குச் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக நம் பகுதியில் பதப்படுத்தப்பட்ட உணவை உண்ண மாட்டோம். பதப்படுத்தப்படுத்தும் டின் உணவுகள் வயிற்றுக்கு ஒற்றுக்கொள்ளாமல் போய்விடும் அபாயம் இருந்தது. அதனால், தேர்ந்தெடுத்த உணவுப்பொருட்களை மட்டுமே அவர்களால் வாங்க முடிந்திருக்கிறது. எடையும் ஒரு சிக்கல். நேபாளத்தில் ஷெர்பாக்களை துணைக் கு அழைத்துச் சென்றாலும் ஒரு எல்லைக்கு மேல் அவர்கள் உடன் வரமாட்டார்கள்.
இந்த இடத்தில், மலை ஏற்றத்தின் நிலைகளைச் சொல்லியாக வேண்டும். எனக்கு மிகவும் சுவாரஸ்யமானப் பகுதியாக இது இருந்தது. முதலில் ஆயிரம் மீட்டர் ஏறியவுடன் base camp எனும் ஒரு சமதளத்தை உருவாக்குகிறார்கள். கிடாக்களும், ஷெர்பாக்களும் இங்கு சாமான்களைத் தூக்கி வருவர். கிட்டத்தட்ட ஒரு வீடு போல பல கூடாரங்கள் அமைக்கப்படும். பின்னர் வானிலைக்கு ஏற்ப, அனுபவமுள்ள மலைஏறிகள் அடுத்த உயரமானப் பகுதிக்கு தினமும் முன்னேறுவார்கள். ஆனால், ஒவ்வொரு நாள் இரவும் கூடாரங்களுக்குத் திரும்பிவிட வேண்டும். அதனால ஹில்லாரியுடன் ஹோவ் (Howe) எனும் நண்பரும் தடிமனான ஏறுகயிறுகளையும், பிடிப்பான்களையும் எடுத்துச் செல்வர். peg எனச் சொல்லப்படும் பிடிப்பான்களைக் கொண்டு ஏறுகயிறுகளை மலையில் அடித்தபடி ஒவ்வொரு அடியாக ஏறுவார்கள். ஒரு நாளைக்கு ஐநூறு மீட்டர்கள் கூட ஏறமுடியாது. மாலை வருவதற்குள் கயிற்றைப் பிடித்திறங்கி கூடாரத்துக்குத் திரும்பிவிடுவர். அங்கு சூடான உணவும், கேளிக்கைகளும் உண்டு. அடுத்த திடமான கேம்ப்பை உயரமான சமதளப்பகுதியில் அமைக்கும் வரை இதுதான் வேலை. அப்புறம் இந்த கூடாரங்களையும், சிலரையும் விட்டுவிட்டு மற்றவர்கள் முதல் கேம்ப்புக்கு சென்றுவிடுவர். இப்படியாக மேலேற ஏற உச்சியை நோக்கி குறைவானவர்கள் மட்டுமே செல்வார்கள்.
ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமான சிக்கல்கள். உடல்நிலை பாதிக்கப்படுவது ஒரு புறம் என்றாலும், மனதை குதூகலமாக வைத்திருக்க வேண்டியது மிக மிக முக்கியம் என்கிறார் ஹில்லாரி. அத்தனை உயரத்திலும் குளிரிலும் தினமும் குடும்பத்துக்கு கடிதம் எழுதுவதும், ஏதாவது கதைகள் படித்தபடி, பாட்டு பாடியபடி மாலையைக் கழிக்க வேண்டும் எனக் கூறுகிறார். எல்லாருக்கும் உடம்பு சரியில்லை என்றாலும் உற்சாகத்தைக் கைவிட முடியாது என்கிறார்.
உயர ஏற ஏற மிக முக்கியமான சிக்கலாக மாறுவது நமது உடல் தான் என்கிறார். கஷ்டப்பட்டு மலை ஏறும்போது சிந்தும் வியர்வை உடனடியாக உறைந்துவிடுமாம். அதே போல மற்ற கழிவுகளும். காற்று பலமாக வீசினால் குண்டூசியால் குத்துவது போல சிறு பனித்துவாலைகள் முகத்தில் அறையும். குறைந்த காற்றழுத்தம் காரணமாக மூச்சு விடுவதில் பெரும் சிரமங்கள் ஏற்படும்.
வானிலை மோசமாகும் நாட்களை ஹில்லாரி மிகவும் எதிர்பார்த்திருப்பார். ஒரு பக்கம் பனிப்பாளங்கள் உருண்டு கூடாரங்களை மூடிவிடும் பயம் இருந்தாலும், தங்கள் பொந்துக்குள் படுத்தபடி சாக்லெட் சாப்பிட்டு காமிக்ஸ் படிப்பதை மிகவும் ரசித்திருக்கிறார். சுவை என்பதே மரத்துப்போன தட்பவெட்ப நிலையில், கிடைக்கும் கொஞ்ச நேர கதகதப்பிலும் ஒவ்வொரு சாக்லேட்டையும் மிகவும் ரசித்து சாப்பிட்டதாகக் கூறியுள்ளார்.
ஷெர்பாக்கள் காரியவாதிகள், தந் திரமாக தங்களுக்கு வேண்டியதை சாதித்துக்கொள்பவர்கள் எனச் சொல்கிறார். அவர்களுக்கு ஆர்வம் இல்லாதபோது இம்மிகூட நகராமல் புரட்சி செய்வார்கள் எனவும் சொல்கிறார். ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு அனுபவம் என்றாலும், பொதுவாக ஷெர்பாக்களைப் பற்றி அவ்வளவு நல்லவிதமாக இல்லை. கடும் உழைப்பாளிகள், எண்பது கிலோ உருளைக்கிழங்கு மூட்டையை தூக்கி மலையேறிய ஷெர்பா பெண்களைப் பார்த்து மிகவும் ஆச்சர்யப்பட்டதாக எழுதியுள்ளார்.
மிகவும் ருசிகரமான அனுபவங்கள். நம்மால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத இடங்களை புத்தகத்தின் வழியாக நமக்குக் கடத்தியுள்ளார். இயற்கையின் பிரம்மாண்டத்துக்கு ஒரு எல்லையே கிடையாதா? மலையை வெற்றிக்கொண்டதாகச் சொல்லக்கூடாது, மலை என்பதை மரியாதையோடு நடத்த வேண்டும் எனச் சொல்லும் ஹில்லாரியின் மலையேறும் சாகசங்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன.
தலைப்பு - High Adventure
No comments:
Post a Comment