அணு
என்.ராமதுரை
பக்கங்கள்: 164
விலை: ரூ.115
கிழக்கு பதிப்பகம்.
சில வருடங்களாக தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படும் ஒரு தலைப்பு - கூடங்குளம். அணு மின்சாரம் உற்பத்தி செய்வதற்காகக் கட்டப்படும் இந்த உலையின் நன்மைகளை விளக்கி பட்டியலிடும் ஒரு சாரார் இருக்கையில், இத்தகைய உலையினால் ஏற்படும் செலவுகள், உலகில் ஏற்பட்ட விபத்துகள் மற்றும் விளையக்கூடிய தீமைகள் ஆகியவற்றை விளக்கும் ஒரு சாராரும் இருக்கின்றனர். அப்படி இருக்கையில் அணு’வைப் பற்றிய இந்தப் புத்தகம் சொல்வது என்ன? அணுமின்சாரம் நல்லதா? கெட்டதா? என்பதில் ஆசிரியர் எந்தப்பக்கத்தின் சார்பாக பேசுகிறார்? இதெல்லாம் விட அணு என்றால் என்ன? இதற்கெல்லாம் விடை இந்தப் புத்தகத்தில் உள்ளது.
தினமணி சிறுவர்மணியில் தொடராக வந்த கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாக்கியிருக்கின்றனர். பள்ளியில் அறிவியல் வகுப்பில் படித்த ப்ரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் ஆகியவற்றோடு ரேடியம், ப்ளூட்டோனியம் ஆகியவை எப்படி கண்டுபிடிக்கப்பட்டன, அவற்றைக் கண்டுபிடித்தவர் யார் என்ற கதையை வெகு சுவாரசியமாக சொல்லிக் கொடுக்கிறார்.
பின்னர் மெதுவாக அணு'விற்கு வருகிறது கதை. அணுகுண்டு என்றால் நாம் தீபாவளிக்கு வெடிக்கும் ஆட்டோபாம் மாதிரியா? இல்லை. இரண்டிற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன. அணுகுண்டு ஒன்றை நீங்கள் தைரியமாகக் காலால் எட்டி உதைக்கலாம். சம்மட்டியால் ஓங்கி அடிக்கலாம். நெருப்பில் போடலாம். உயரே இருந்து கீழே வீசி எறியலாம். எதுவும் ஆகாது.
பின்னர் ஒரு அணுகுண்டு எப்படி வெடிக்கும்?
அடிப்படையில் அணுகுண்டு என்பது வெறும் உலோகப் பொடியால் ஆன ஓர் உருண்டை. யானைக்கு வைக்கிற சோற்று உருண்டையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிய உருண்டையாக மாற்றுவதைப்போல அந்த உலோகப் பொடி உருண்டையை குறிப்பிட்ட அளவுக்குக் கொண்டுவந்தால் போதும், அது தானாகவே வெடித்துவிடும். அப்படி வெடித்து விடக்கூடாது என்பதாலேயே, ஒருபோதும் அதை முழு உருண்டையாகத் தயாரிப்பது கிடையாது.
***
எந்தவொரு உலக வரலாற்றுப் புத்தகத்தைப் படித்தாலும், அதில் தவறாமல் வரும் கேரக்டர் - ஹிட்லர். இந்த அணு புத்தகத்திலும் வருகிறார். ஆஸ்திரியாவில் அணு ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் ஹாலந்து, டென்மார்க், ஸ்வீடன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு தப்பி ஓடி அங்கே தங்கள் பணியினைத் தொடர்ந்தனர் என்று வருகிறது. மேலும், ஜெர்மனியில் ஹிட்லர் அணுகுண்டு தயாரித்து இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்துவார் என்கிற வதந்தி எங்கும் பரவியிருந்ததாம். அப்படி ஆகிவிட்டால் அது உலகிற்கே ஆபத்து என்று அமெரிக்காவில் இருந்த விஞ்ஞானிகள் அனைவரும் சேர்ந்து அமெரிக்க அதிபருக்குக் கடிதம் எழுதலாம் என்றும், அதை ஐன்ஸ்டைன் மூலமாக கொடுத்தனுப்பலாம் என்றும் முடிவெடுக்கிறார்கள். ஆனால், ஹிட்லர் அணுகுண்டுகளைப் பயன்படுத்தவில்லை. மாறாக, ஆகஸ்ட் 1945ல் அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மேல் மூன்று நாட்கள் இடைவெளியில் அணுகுண்டுகளை வீசியது என்ற வரலாறு அனைவரும் அறிந்ததே.
***
அணு உலைகளை எதிர்ப்பவர்கள் சொல்லும் முக்கியமான வாதம் - அணுக்கழிவுகள். இவற்றை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அவற்றிலிருந்து கதிர்வீச்சு குறைய பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும் என்றெல்லாம் சொல்வார்கள். சரி, அணுவைப் பற்றி முழுமையாக விவாதிக்கும் இந்தப் புத்தகத்தில் இந்தக் கழிவுகளைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று தேடினால், கிடைப்பது ஒன்றுமில்லை. அதைப் பற்றி ஆசிரியர் பேசவேயில்லை.
அடுத்த கேள்வி விபத்துகள். அணு உலை விபத்துகள் என்றவுடன் உடனடியாக நினைவுக்கு வருவன : செர்னோபில், அமெரிக்காவில் ஒரு தீவில் நடந்தது மற்றும் சமீபத்திய ஜப்பான் விபத்து. இந்தப் புத்தகம் ஜப்பான் விபத்திற்கு முன்னரே வந்துவிட்டதால் முந்தைய இரு விபத்துகளைப் பற்றி ஆசிரியர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.
"செர்னோபில் விபத்தில் உடனடியாக 2 பேர் இறந்தார்கள். பின்னர் கதிரியக்கம் தாக்கியதால் 15 பேர் உயிரிழந்தார்கள். அமெரிக்க விபத்தில் யாரும் சாகவில்லை. இந்த இரண்டு விபத்துகளும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செவ்வனே உள்ளனவா என்று சோதித்துக் கொண்டிருக்கும்போது நடந்தவையே. உலகில் உள்ள 400+ அணு உலைகளில் இவ்வாறு அசாதாரண நிலையில் நடந்த அபூர்வமான விபத்து என்றே இவற்றை சொல்ல வேண்டும். இதனால் அணுசக்தியை ஆபத்து என்று அடியோடு ஒதுக்கித் தள்ளுவது சரியாகாது".
இதைத் தவிர அணுவினை எப்படிப் பயன்படுத்தலாம், அதன் நன்மைகள் என்ன என்று ஒரு தனி கட்டுரையே இருக்கிறது. இப்போது அணு உலைகளைக் குறித்த ஆசிரியரின் நிலை என்னவென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
***
அறிவியல், அறிவியலாளர்கள், உலக வரலாறு, நோபல் பரிசு, அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு ஆகிய பல விஷயங்களை கட்டிக் கலந்து சுவையான வடிவில் அணுவைப் பற்றிய மிகவும் அடிப்படையான பல விஷயங்களைப் பற்றிப் படிக்க நல்லதொரு புத்தகம்.
***
No comments:
Post a Comment