Life of Pi
A Novel
Yann Martel
Photo Courtesy/To Buy:Flipkart
ஒரு எழுத்தாளர். இரண்டு நாவல்கள், சில சிறுகதைகள் எழுதியவர். அவருடைய கடைசி நாவல் படு தோல்வி. அவர் இந்தியாவுக்கு வருகிறார். வேறொரு நாவல் எழுத முயற்சி செய்கிறார். அதுவும் தோல்வியில் முடியவே, இந்தியாவில் கொஞ்சம் சுற்றுப்பயணம் செய்கிறார். திடீரென ஞானோதயம் வருகிறது, இந்த நாவலை எழுதி முடிக்கிறார். அது உலகம் முழுக்க புகழ் பெறுகிறது, திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு பெரும் வெற்றியடைந்து நான்கு ஆஸ்கர் பரிசுகளையும் பெறுகிறது. அவர்தான் யான் மர்டேல், இந்த நாவலின் ஆசிரியர்.
எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை. அது என்ன இந்த வெள்ளைகாரர்கள் எல்லாம் கடவுள் பற்றி புரிய வேண்டுமென்றால் இந்தியாவுக்கு வருகிறார்கள்? அவர்கள் மதம் புரியவில்லை, அதில் தேவைப்பட்ட விஷயம் இல்லை என்றால், ஹிந்து மதத்தில் மட்டும் கிடைத்து விடுமா? அதுவும் தீவிர தோல்வியில் இருக்கிற இந்த மாதிரி எழுத்தாளர்கள் வருகிறார்கள். இந்தியாவை வைத்து, இல்லை இந்தியாவில் ஒரு துளியை நாவலில் நுழைத்துக் கொண்டு நாவல் எழுதிவிட வேண்டியது, உடனே உலகில் இது புரியாது தவிக்கிற இலக்கிய விமர்சகர்கள் எல்லாம் இதை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு புகழ வேண்டியது. ஒகே, இந்த நாவல் அவ்வளவு மோசம் கிடையாது. உண்மையாக சொன்னால் நாவலின் இரண்டாம் பகுதி Pretty Brilliant.
நாவலில் மொத்தம் மூன்று பகுதிகள். சுருக்கமாகப் பார்த்தால் “பை படேல்” தனது பெற்றோருடன் புதுச்சேரியில் வாழ்கிறான், அவனது தந்தை ஒரு மிருககாட்சி சாலை வைத்திருக்கிறார். அதை விற்றுவிட்டு கனடா செல்லும்போது, அவன் பயணம் செய்யும் கப்பல் கவிழ்ந்து விடுகிறது. “பை படேல்” ஒரு பெங்கால் புலி, கழுதைப்புலி, வரிக்குதிரை, ஒராங்குடான், இவற்றுடன் ஒரூ படகில் தப்பிக்கிறார். வரிக்குதிரை மற்றும் ஒராங்குடானை கழுதைப்புலி கொன்று விடுகிறது. அதை பெங்கால் புலி கொன்று விடுகிறது. புலியுடன் 227 நாட்கள் அந்த படகில் வாழ்ந்து மெக்ஸிகோவில் கரை சேர்கிறார்.
இந்த நாவலுக்கு கூகுளில் தேடினால் ஏகப்பட்ட விமர்சனம் மற்றும் இதன் முடிவை பற்றி பலவித கருத்துகள் கிடைக்கும் என்பதால், எனக்கு இந்த நாவல் படிக்கும்போது தோன்றிய எண்ணங்களை மட்டும் இங்கே எழுத விரும்புகிறேன். அதாவது இந்த நாவலின் மறைபொருள் பற்றியோ, நாவலின் முடிவை பற்றியோ நான் எழுதப் போவதில்லை. இந்த நாவல் மொத்தமும் படித்த பிறகும் நிறைய புரியவில்லை. கொஞ்சம் கூகுள், கொஞ்சம் பைராகி குருவின் கருத்துகள் படித்தபின், புத்தகத்தின் சில பகுதிகளை மீண்டும் வாசித்தபோது கொஞ்சம் புரிதல் உண்டானது.
இந்த நாவலின் முக்கியமான பகுதிதான் ஆசிரியருக்கு முதலில் தோன்றியிருக்க வேண்டும். அதற்கு கொஞ்சம் பூ வைச்சு, பொட்டு வைச்சு, பாண்ட், சட்டை எல்லாம் இந்த ஒன்றாம் பகுதியில் செய்திருக்கிறார். அது ரொம்ப அமெச்சூர்தனமாக இருக்கிறது. அதாவது முதல் பகுதியும் இரண்டாம் பகுதியும் கொஞ்சம்கூட ஒட்டவில்லை. இதையெல்லாம்விட திடீரென ஆசிரியர் இந்திய சாதிய அமைப்பை நக்கல் செய்கிறார். பை படேலின் தந்தை ஜூவை விற்று விட முடிவு செய்ய, திருவனந்தபுரத்தில் இருக்கும் ஜூ ஒன்று பிராமண பசு இருந்தால் எங்களுக்கு கொடுங்கள் என்று பை படேலின் தந்தையிடம் கேட்கிற மாதிரி ஒரு வரி. இந்தியாவைப் பற்றி நிறைய படிப்பதாலும், இங்கே சில காலம் வாழ்வதாலும், இந்தியாவைப் பற்றி தங்களுக்கு நல்ல புரிதல் உண்டு என்று நினைக்கும் இந்த மாதிரி எழுத்தாளர்களைக் கண்டிக்காமல் வெளிநாட்டுக்காரர்கள் அவார்ட் கொடுத்துவிட்ட காரணத்தாலேயே இதிலுள்ள இது போன்ற சொதப்பல்களைச் சுட்டிக் காட்டாத நம்மூர் இலக்கியவாதிகளுக்குக் கடும் கண்டனங்கள்.
இந்த நாவலின் முக்கிய பகுதியான இரண்டாவது பகுதியையும், மிக சின்ன பகுதியான மூன்றாவது பகுதியையும் ஒன்றாகப் பார்த்தால் புரிதல் கொஞ்சம் எளிதாக இருக்கிறது. மூன்றாவது பகுதியில் பை படேல் மெக்ஸிகோவில் கரை சேர்ந்தவுடன் அவனை ஜப்பானிய நாட்டு ஆயுள் காப்பீட்டு கழகத்தினர் இருவர் பேட்டி காண்கிறார்கள், அவர்களிடம் இந்த கதையைச் சொல்லும்போது அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். அதன்பின் இந்தகதையில் மிருகங்களுக்கு பதில் மனிதரகளை வைத்துச் சொல்கிறான். இந்த நாவலை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ளலாம். அது அவரவர் நம்பிக்கை மற்றும் படிக்கும்போது ஏற்படும் உணர்வுகளைப் பொருத்தது.
இரண்டாம் பகுதியில் நிறைய விஷயங்களை, அதாவது கடல், மிருகம் இவற்றை வார்த்தைகளால் வர்ணித்திருக்கிறார். அது ஓரளவுக்கு மேல் என்னுடைய கற்பனையை வற்றச் செய்துவிட்டது. எ-கா அந்த ரோஜா பூ சிகப்பு நிறத்தில் உள்ளது என்று நான் சொல்கிறேன். உங்கள் மனதில் இப்போது இது பற்றி எத்தனை விதமான ரோஜா பூக்கள் இருக்கும். நான் சிந்தித்த மாதிரி யாருமே சிந்தித்து இருக்க மாட்டீர்கள். நான் சொல்ல விரும்புவது இதுதான் - மிகைப்படுத்தப்பட்ட அளவுக்கு காட்சிபூர்வமாக நாவல் இருக்கிறது, அது நாவலின் வலிமை என்று நீங்கள் வாதிட்டால், அது உங்களின் விருப்பம், என்னை அது பொறுமை இழக்கவே செய்கிறது. காட்சிபூர்வமாக விவரிக்க சினிமா உள்ளது.
மொத்தமாகப் பார்க்கும்போது, சில இடங்களில் மிக அழகாக இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது, இதை மறுக்கவே முடியாது. ஆனால் அதைத் தாண்டி முன்னால் சொன்ன விஷயங்கள் நாவலை வலிமை இழக்க செய்கின்றன.
No comments:
Post a Comment