பதிவர்: ரவி நடராஜன்
சில
வருடங்கள் முன் படித்த இப்புத்தகத்தின் சில பகுதிகள் இன்னும் ஏன் நினைவில்
இருக்கின்றன என்பதை யோசித்தேன். நான்கு முக்கிய விஷயங்கள் காரணம் என்று
தோன்றுகிறது.
எழுத்தாளர்
இந்த விஞ்ஞானி ஏன் ஒரு ஜீனியஸ் என்பதற்கு சில அத்தியாயங்கள் ஒதுக்கி, மிக
அழகாக விளக்கியுள்ளார் என்பது ஒன்று. அடுத்தபடியாக, இந்த விஞ்ஞானியின்
பொழுதுபோக்கு மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றிய மிக அழகிய விஷயங்களை
சுவாரசியமாகத் தொகுத்து வழங்கியுள்ளார். மூன்றாவதாக, இவரது சாதனைகள் என்ன,
அவற்றை எப்படி சாதித்தார், அதில் போட்டிகளை எப்படி சமாளித்தார் என்பதையும்
விளக்கியுள்ளார். தன் துறை ஆராய்ச்சி தவிர இந்த விஞ்ஞானியின் மற்ற
பங்களிப்புகளையும் அழகாக விவரித்துள்ளார்.
நாம் இன்று விமர்சிக்கப் போகும் புத்தகம் James Gleick எழுதிய Genius: The Life and Science of Richard Feynman
ரிச்சர்ட் ஃபைன்மேன் 20 –ஆம் நூற்றாண்டின், மிகவும் மதிக்கப்பட்ட ஒரு அமெரிக்க பெளதிக ஜீனியஸ். இந்த புத்தகத்தில் என் நினைவில் பளிச்சென்று பதிந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டால் திருப்தியளிக்கும் என்று தோன்றுகிறது.
இந்தியாவில்
எங்கு பெளதிகம் சொல்லிக் கொடுத்தாலும், என் கருத்தில் ஃபைன்மேனின் இந்த
மேற்கோள் அங்கு பொறிக்கப்பட வேண்டும் - “ஒரு விஷயத்தின் பெயரைத் தெரிந்து
கொள்வதற்கும், ஒரு விஷயத்தை தெரிந்து (புரிந்து) கொள்வதற்கும் நிறைய
வித்தியாசம் உள்ளது” (there is a big difference between knowing the name
of something and knowing something). அவருடைய முதல் பெளதிக புரிதல் இது.
அவருடைய தந்தை பலவற்றையும் சொல்லிக் கொடுத்தாலும், எதுவும் ஏன் அவ்வாறு
நடக்கிறது என்ற கேள்விக்கு அவர் பதிலே சொல்லாதது ரிச்சர்டின் மனதில் ஆழமான
தேடலாக மாறி அவரது ஆராய்ச்சிக்கு வழி காட்டியது. மேல்வாரியாக இணையத்தில்
மேயும் இன்றைய இளைஞர்களுக்கு மிக அருமையான எடுத்துக்காட்டு, ஃபைன்மேனின்
வாழ்க்கை வரலாறு.
பல
பல்கலைகழகங்கள் கெளரவ டாக்ட்ரேட் பட்டம் தரத் துடித்தாலும், ஃபைன்மேன்
அவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்தார். ”ஆராய்ச்சி செய்து தெரிய வரும் புதிய
கண்டுபிடிப்பைவிட, எந்த பட்டமும் பெரிய கெளரவம் இல்லை. என்னுடைய
ஆராய்ச்சியை, அதன் விளைவை, மற்ற விஞ்ஞானிகள் பயன்படுத்துகிறார்கள். இதை
விட பெரிய கெளரவம் எதுவுமில்லை,” என்றார் அவர். இவர் National Academy of
Sciences என்ற மிகப் பெரிய விஞ்ஞான அமைப்பிலிருந்து சர்வ சாதாரணமாக
விலகினார். அங்குள்ள அரசியல் இவருக்கு பிடிக்கவில்லை.
1965
–ல் ஃபைன்மேனுக்கு அவருடைய முக்கியமான குவாண்டம் (Quantum
Electrodynamics) மின்காந்தக் கோட்பாடு பற்றிய ஆராய்ச்சிக்கு பெளதிக நோபல்
பரிசு வழங்கப் பட்டது. ஸ்வீடன் அரசின் இந்த பரிசுச் சடங்குகள் இவருக்கு
வேடிக்கையாக இருந்தன - அவை எதுவும் இவருக்குப் பிடிக்கவில்லை. எப்படி
நடந்து சென்று பரிசு பெற வேண்டும் என்று சடங்குகளைக் கிண்டலடித்து, அதற்காகவும் கண்டிக்கப்பட்டார்.
நோபல்
பரிசு வாங்கிய கையோடு ஜெனிவாவில் உள்ள CERN ஆராய்ச்சிகூடத்திற்கு
உரையாற்றச் சென்றிருக்கிறார். CERN தலைவர் இவரிடம், “இனி என்ன டிக்,
அடுத்த பத்து ஆண்டுகள், சில மேஜை வேலைகளை செய்து காலம் தள்ளத்தான்
போகிறீர்கள். என்ன பந்தயம்?”, என்று கேட்டிருக்கிறார். 1975 –ல் மீண்டும்
CERN சென்றபோது, தான் மேஜை வேலை எதுவும் செய்யாமல், உருப்படியான விஞ்ஞான
ஆராய்ச்சி செய்வதைச் சுட்டிக்காட்டி, பந்தய பணம் 11 டாலரை வசூலித்து
விட்டார்!
MIT
– யில் தொடங்கிய பொறியியல் வாழ்க்கை, Princeton –க்கு மாறி, அங்கு பெளதிக
ஜாம்பவான்கள் – Einstein, Bohr மற்றும் Dirac -க்குடன் பெளதிக கல்வி.
ஃபைன்மேன் வெகு சீக்கிரத்தில் கணிதம் மற்றும் பெளதிக வல்லுனர் என்று
ஒப்புக் கொள்ளப்பட்டார்.
அப்போது
பிரின்ஸ்டனில் வேலை செய்து கொண்டிருந்த ஆப்பன்ஹைமர், ( Robert
Oppenheimer) அமெரிக்க அணுகுண்டு பிராஜக்டான மென்ஹாட்டன் பிராஜக்டுக்கு
இயக்குனராக அரசால் நியமிக்கப்பட்டார். பெளதிகம் மற்றும் கணித புலியான
ஃபைன்மேனின் திறமையை பிரின்ஸ்டனில் ஆப்பன்ஹைமர் அறிந்திருந்தார்.
மென்ஹாட்டன் பிராஜக்டில் சேரச்சொல்லி லாஸ் அலமாஸ் என்ற தண்ணியில்லாத
காட்டிற்கு (ந்யூ மெக்சிகோ) கையோடு அழைத்துச் சென்று விட்டார்.
செக்யூரிட்டி
ஆசாமிகளையும் லாஸ் அல்மாஸில் கதி கலங்க வைத்தார் ஃபைன்மேன். பூட்டுக்களை
விளையாட்டுக்காக திறப்பது ஃபைன்மேனின் பொழுதுபோக்கு. அதன் சேர்வுகளைக்
(combinations) கண்டுபிடிப்பது டிக்கிற்கு (ரிச்சர்டை, டிக் என்றுதான்
அழைத்தார்கள்) ஒரு சவாலாக இருந்தது. திறந்த பூட்டுக்களைக் கண்ட
செக்யூரிட்டி ஆசாமிகள் ஏதோ ரஷ்ய உளவு ஊடுறுவிவிட்டது என்று கவலைப்படத்
தொடங்கி விட்டார்கள்.
ஃபைன்மேனுக்கு
பாங்கோஸ் வாசிக்க மிகவும் பிடிக்கும். தான் ஒரு பெரிய விஞ்ஞானி என்று
பாங்கோஸ் வாசிக்கும்போது காட்டிக் கொள்ளவே மாட்டார். இதற்காக, பிரேஸில்
நாட்டிற்கு (சாம்பா தாள முறை இவருக்கு அத்துப்படி) சில முறை பயணங்களும்
மேற்கொண்டுள்ளார்.
இவர்
பிரேஸில் நாட்டில் சில வருடங்கள் பல்கலைக்கழகம் ஒன்றில் பெளதிகம் சொல்லிக்
கொடுத்தார். அவருடைய அனுபவம் ஒவ்வொன்றும் இந்திய கல்வி முறையை
ஞாபகப்படுத்தும். அவருடைய குறிப்புகளை அப்படியே எழுதி மனப்பாடம் செய்வதில்
அம்மாணவர்கள் வல்லவர்களாக இருந்தனர். மாணவர்கள் இவரை எதிர் கேள்விகள்
கேட்காதது டிக்கிற்கு சலிப்பூட்டியது. வெறுத்து போய் மீண்டும் கலிஃபோர்னியா
திரும்பி விட்டார்!
ஜூலியன்
ஷ்விங்கர் (Julian Schwinger) ஃபைன்மேனைப் போல யூத குடும்பத்தில் பிறந்த
மிகவும் திறமையான பெளதிக ஆராய்ச்சியாளர். இருவரும் ஒருவரையொருவர்
மதித்தாலும், கடுமையாக போட்டியிட்டார்கள். ஷ்விங்கருக்கு ஃபைன்மேனைப்
பிடிக்காது. 1965 –ல் இருவருக்கும் குவாண்டம் மின் இயக்கவியல்
ஆராய்ச்சிக்கு பெளதிக நோபல் பரிசு ஒரே ஆண்டில் வழங்கப்பட்டது வினோதமான
விஷயம். ஷ்விங்கருக்கு ஃபைன்மேன் படங்கள் (Feynman diagrams) அறவே
பிடிக்காது. ஜனரஞ்சக கணிணிகள் போல ஃபைன்மேன் படங்கள் குவாண்டம்
ஆராய்ச்சியாளர்களை சோம்பேறியாக்கிவிட்டது என்று கிண்டலடித்தார்.
ஃபைன்மேனின்
பங்கீடுகளைச் சுருக்கமாகச சொல்வது மிகக் கடினம். குவாண்டம் மின்
இயக்கவியலில் பல புதிய அணுகுமுறைகளைக் கொண்டு வந்தார். மென்ஹாட்டன்
அணுகுண்டு பிராஜக்டில் இவரது பங்கு ராணுவ சடங்குபடி ரகசியமானதென்று
வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவர் பெளதிக ஆராய்ச்சியில் தொடாத துறை இல்லை.
திடீரென்று வெப்ப இயக்கவியலுக்குத் தாவி அதிலும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை
எழுதி விடுவார்.
இவர்
தன்னுடைய ஃபைன்மேன் படங்களை (Feynman diagrams) வேனில் வரைந்து எங்கும்
எடுத்துச் செல்வாராம். பெளதிகம் தெரிந்தவர்கள் (அதுவும் சமீபத்து
பெளதிகம்), இவரை அடையாளம் தெரிந்து கொள்ள இது உதவினாலும், பெரும்பாலும்
அமெரிக்கர்கள் ஏதோ கலைப் பிரியர் போலும் என்று விட்டு விடுவதை
ரசிப்பாராம்.
இவருடைய
இன்னொரு முக்கிய மேற்கோள், “நான் உருவாக்காததை நான் அறியேன்!” (What I
cannot create, I do not understand). இது விஞ்ஞானத்தில் சாதாரண விஷயம்
அல்ல. இன்று விஞ்ஞானம் ஒரு கூட்டு முயற்சியாகிவிட்டது. ஃபைன்மேனின்
ஜீனியஸ், இவருடைய இந்த முக்கிய கொள்கைதான் என்கிறார் எழுத்தாளர் கிளீக்.
எந்த
ஒரு பிரச்னைக்கும் ஆரம்பம் துவங்கி முடிவு வரை தொடர்ந்து அதைத் தீர்த்து
வைக்க வேண்டும் என்ற உந்துதல் ஃபைன்மேனுக்கு இருந்தது. வேறு யாராவது
ஆரம்பித்துவைத்த ஆராய்ச்சியை இவர் தொட மாட்டார். இவரால் இதுபோல்தான் இயங்க
முடிந்தது. அவருக்குப் பின் இப்படி யாரும் இயங்கியதாகச் செய்தியில்லை.
ஒரு
புறம் இது இவரது ஜீனியஸை வெளிச்சம் போட்டுக் காட்டினாலும், இன்னொரு புறம்,
பல இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு சவாலாக அமைந்தது. பல வருடங்கள் ஆராய்ச்சி
செய்துவிட்டு இவர்கள் ஃபைன்மேனின் கருத்திற்காக காத்திருப்பார்கள்.
ஃபைன்மேன் இவர்களை முழுவதும் அவர்களது ஆராய்ச்சியை விளக்க விட மாட்டார்.
பிரச்னை என்ன என்று புரியும்வரை கேட்பார். அவர்களது வருடக்கணக்கான
ஆராய்ச்சியை குப்பையில் போட்டுவிட்டு, தானே அந்த பிரச்னைக்கு விடை
காண்பார். அவரது தீர்வு இளம் ஆராய்ச்சியாளரின் தீர்வைவிட உயர்ந்ததாக
இருக்கும் என்பது பெரிய விஷயமல்ல. ஆனால் இதனால் பல இளம் ஆராய்ச்சியாளர்கள்
மிகவும் சோர்ந்து விடுவார்கள். மூன்று வருட உழைப்பை, இவர் 1 வாரத்தில்
சாதாரணமாக தீர்வு கண்டு விடுகிறாரே! அதைவிட மோசம் என்னவென்றால், பல
வருடங்கள் முன்பே இந்த பிரச்னைக்கு எப்படி தீர்வு கண்டு பிடித்தேன் என்றும்
சொல்லி விடுவார். தன்னுடைய பல தீர்வுகளை அவர் வெளியிடாமலே அடுத்த
ஆராய்ச்சிக்கு போய்விட்டதே காரணம்.
முதலில்,
யாரை சமூகம் ஜீனியஸ் என்று அழைக்கிறது? ஏதாவது புதிய பொருளை
உருவாக்கியவரையே ஜீனியஸ் என்று சமூகம் கருதுகிறது. அமெரிக்காவில் எடிசன்
(Edison) மற்றும் கேட்ஸ் (Gates) ஜீனியஸ் என்று சாதாரண மனிதர்களால்
கருதப்படுகின்றனர். மின் பல்பும், விண்டோஸும் சாதாரண மனிதர்களால் பெரிதும்
மதிக்கப்படுகிறது. அதாவது inventors –ஐயே ஜீனியஸ் என்று கருதும் சமூகம்
நமது. எழுத்தாளர் கிளீக், ஃபைன்மேனின் ஜீனியஸைப் பற்றி விளக்குகையில், இரு
வகை ஜீனியஸ் இருப்பதாக வகைப்படுத்துகிறார். முதல் வகை, புத்திசாலித்தனமான
ஜீனியஸ் (clever genius). இவ்வகை ஜீனியஸ்கள் தங்களுடைய சிந்தனையை
விளக்கினால், மற்ற புத்திசாலிகள் புரிந்து கொண்டு அவர்களது உருவாக்கத்தை
புரிந்து கொள்ள முடியும். இரண்டாவது வகை, மாயாஜால ஜீனியஸ் (magical genius)
. இவ்வகை ஜீனியஸ்கள் தங்களுடைய சிந்தனையை விளக்கினாலும், மற்ற
புத்திசாலிகளுக்கு இவர்களது அறிவு எப்படி இயங்குகிறது என்று புரியாது.
ஃபைன்மேன் மற்றும் ஐன்ஸ்டீன் இவ்வகை.
எந்த
ஒரு பெரிய பெளதிக விஞ்ஞானியும் செய்யாத செயல் ஒன்றை ஃபைன்மேன் செய்தார்.
பெளதிகம் சரியாக சொல்லிக் கொடுக்கப்படவில்லை என்ற குறை ஃபைன்மேனுக்கும்
உண்டு. குறைபட்டுக் கொள்வதோடு நிற்காமல், ஃபைன்மேன் இதற்கு ஒரு முடிவும்
கட்டினார். இந்த ஒரு செயலுக்காக அவரைப் பலரும் இன்றுவரை பாராட்டி
வருகின்றனர். பெளதிக துறையில் இன்று இது சரித்திரமாகிவிட்டது.
பெளதிகத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு, கலிஃபோர்னியா
தொழில்நுட்ப கழகத்தில் (Caltech) ஆரம்பத்திலிருந்து நியூட்டன் இயக்கவியல்
(Newtonian mechanics), மரபார்ந்த இயக்கவியல் (classical mechanics), வெப்ப
இயக்கவியல் (thermodynamics), மின் மற்றும் காந்தவியல் (electricity and
magnetism), ஒளியியல் (optics), குவாண்டம் இயக்கவியல் (quantum mechanics)
என்று எதையும் விட்டு வைக்காமல் பாடம் எடுத்தார். இந்த வகுப்புகளில் பயின்ற
மாணவர்கள் தங்கள் வாழ்நாளில் மிக முக்கிய நாட்களாக இவற்றைக்
கருதுகின்றனர். விடுமுறை நாட்களில்கூட ஃபைன்மேன் விரிவுரை என்றால்,
மாணவர்கள் அலை மோதினர். இந்த விரிவுரையில் பங்கு கொண்ட மாணவர்கள் சிலர்,
இவற்றை டேப் செய்தனர். தங்களுடைய குறிப்புகளை புத்தகமாகவும்
வெளியிட்டுள்ளனர். எல்லோருக்கும் ஃபைன்மேன் விரிவுரை கிடைக்குமா? அவர்கள்
பெற்ற இன்பத்தை உலகுடன் பங்கு கொள்ள ஒரு பெரிய கூட்டமே இயங்க ஆரம்பித்தது.
Feynman lectures என்று கூகிளில் தேடிப் பாருங்கள்!
இந்த அருமையான இணைய தளத்தையும் பாருங்கள் : Watch a series of seven brilliant lectures by Richard Feynman
இன்று வேகமாக வளர்ந்து வரும் நானோடெக்னாலஜியின் (Nano technology) முன்னோடி ஃபைன்மேன். மூலக்கூறு (molecule) அளவில் உள்ள இயக்கங்களையும் மனிதனால் தன்னுடைய பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்திக் கொள்ள முடியும் என்று முதலில் புரிய வைத்தவர் இவர். இத்தனைக்கும் கணினி சில்லைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத காலம் அது. இந்த விரிவுரை இன்று எல்லோரும் வியந்து பாராட்டும், “There is plenty of room at the bottom”. இதன் விடியோ இங்கே..
ஃபைன்மேன்
புற்றுநோயால் தாக்கப்பட்டவர் என்று மருத்துவர்கள் சொன்னபோதும், அப்போது
அவர் வெளிப்படுத்திய அணுகுமுறை, இவரை உலகம் புரிந்து கொள்ள உதவும். எதுவுமே
நடக்காதது போல, இரவு பகலாய் ஆராய்ச்சியைத் தொடர்ந்தது சக ஊழியர்களுக்கு
கடினமாக இருந்தாலும், அது இவருக்கு பெரிதாகப் படவில்லையாம். 1988-ல்
இறப்பதற்கு முந்தினம் வரை பெளதிக ஆராய்ச்சியில் கடுமையாக ஈடுபட்டு வந்தார்.
கடைசி மூச்சு வரை விஞ்ஞானத்தை மிக அழகாக விளக்கவும் இவரைப் போல எந்த
விஞ்ஞானிக்கும் முடிந்ததில்லை. மின்சாரத்தைப் பற்றி இப்படி யாராவது
சிந்திக்க முடியுமா என்று வியக்க வைக்கும் விடியோ இங்கே:
அமெரிக்க விண்வெளி
ஆராய்ச்சியில் 1986 –ல் ஷட்டில் ராக்கெட் வெடித்து அரசாங்கம் ஒரு விசாரணை
குழு அமைத்து அதில் ஃபைன்மேனையும் ஒரு அங்கத்தினராக நியமித்தது.
ஃபைன்மேனுக்கு அரசியல் என்றாலே அலர்ஜி. நாசா (NASA) – அமெரிக்க விண்வெளி
கழகம், ‘எப்படியோ விபத்து நடந்து விட்டது. நாங்கள் எல்லா ஏற்பாடுகளையும்,
செயல்முறைகளையும் ஒழுங்காகத்தான் செய்தோம்’, என்று சொல்லி வந்தது. அரசாங்க
நிதி உதவி நின்று விடுமோ என்ற கவலை நாசாவுக்கு, விசாரணை குழுவில் யாராலும்
ஃபைன்மேனை தங்கள் கருத்துகளால் சாய வைக்க முடியவில்லை. இன்றும் அவரது மிக
எளிமையான, விபத்துக்கான விளக்கம் எல்லா அரசியலையும் தாண்டி நிற்கிறது.
நாசாவைத் தன்னுடைய கட்டமைப்பை மாற்ற வைத்ததும் இந்த விஞ்ஞான அணுகுமுறையே.
இந்த புத்தகத்தில் இல்லாதது. ஆனால், பத்து நிமிடங்களில் அழகாக ஃபைன்மேனின் வாழ்க்கை வரலாறு இங்கே:
Genius: The Life and Science of Richard Feynman | James Gleick | Pages 560 | Rs. ~800 | இணையத்தில் வாங்க
இது வரை எனக்கு இவரின் வாழ்க்கை வரலாறு தெரியாது. இன்று உங்களால் தெரிந்து கொண்டேன். புத்தக மதிப்புரை என்றாலும், பைன்மேன் பற்றி மிக விரிவாக அலசியுள்ளீர்கள். இவ்வாறான மதிப்புரைகள் புத்தகத்தை வாசிக்க தூண்டும் ஆவலை அதிகப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. புத்தகம் கிடைப்பெறாமல் போனாலும், கூகுள் செய்தாவது இவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதலை பலருக்கு இம்மதிப்புரை ஏற்படுத்தும். Video Link Streaming மிக மெதுவாக உள்ளது அதனால் Videoகளை முழுமையாக பார்க்கவில்லை. பார்த்த பின் இவரின் மேதமையை இன்னும் நன்றாக என்னால் புரிந்துகொள்ள முடியும் என நம்புகிறேன். 2010ல் நீங்கள் என்னிடம் பௌதிகம் பாடம் நன்றாக மாணவர்களுக்கு சென்றடைய பைன்மேன் அவர்களை மேற்கோள் காட்டியது இன்னும் நினைவிருக்கிறது.
ReplyDelete//இவர் பிரேஸில் நாட்டில் சில வருடங்கள் பல்கலைக்கழகம் ஒன்றில் பெளதிகம் சொல்லிக் கொடுத்தார். அவருடைய அனுபவம் ஒவ்வொன்றும் இந்திய கல்வி முறையை ஞாபகப்படுத்தும். அவருடைய குறிப்புகளை அப்படியே எழுதி மனப்பாடம் செய்வதில் அம்மாணவர்கள் வல்லவர்களாக இருந்தனர். மாணவர்கள் இவரை எதிர் கேள்விகள் கேட்காதது டிக்கிற்கு சலிப்பூட்டியது// அருமையான வரிகள்.
எளிமையான நடை, மொழி ஆளுமை, எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கம் ஆகிய அனைத்தும் இக்கட்டுரையில் உள்ளது. நன்றாக உள்ளது, மேலும் எழுதுங்கள்.