அலுவலக நண்பர் நந்தகுமார் மேஜையில் இந்தப் புத்தகத்தைப் பார்த்ததும் தொண்ணூறுகளின் மத்தியில் நான் படித்த பாலகுமாரன் நாவல்கள் சிலவற்றின் நினைவு வந்தது. பாலாவின் சில நாவல்களினிடையே வந்த சிற்சில பகுதிகளில், பாலாவின் விவரணைகளில், பார்வையில் ஒப்புதல் இல்லாமல் இருபது வயதைத் தொடாத அந்த காலகட்டத்திலேயே புரிந்தோ புரியாமலோ பாலாவை வாசிப்பதை நிறுத்தியவன் நான்.
திருப்பூந்துருத்தி - இந்தப் புத்தகத் தலைப்பின் சுவாரசியத்தில் நந்தாவிடம் புத்தகத்தைக் கடன் வாங்கி வந்தேன். இருந்தும் புத்தகத்தைக் கையிலெடுத்த பாடில்லை. சமீபத்தில் விடுமுறைக்கு வந்திருந்த என் அக்கா சென்றமுறை இரவல் பெற்றுச் சென்ற புத்தகங்களைத் திருப்பி என் அலமாரியில் அடுக்கிவிட்டு, இந்தமுறை புதிதாக என்ன புத்தகங்கள் சேர்ந்திருக்கின்றன என்று புத்தகங்களைப் பிரித்து மேய்ந்து கொண்டிருந்தாள்.
இந்தமுறை தான் அள்ளிக் கொண்டு போக வேண்டிய புத்தகமூட்டையில் திருப்பூந்துருத்தியை வைத்தவாறே, “நீ எப்போ பாலகுமாரன்’ல்லாம் வாசிக்க ஆரம்பிச்ச”, என்றவளிடம் நந்தகுமார கதையைச் சொன்னேன்.
”எங்கள் ஆம்னிபஸ்சுக்கு இந்தப் புத்தகம் குறித்த உன் விமரிசனமும் வேண்டும்”, என்ற கண்டிஷனுடன் ஊருக்குப் போகுமுன் வாசித்துவிட்டுப் புத்தகத்தை வைத்துவிட்டுப் போகச் சொன்னேன். அப்படி அவள் வாசித்துவிட்டு எழுதிய ஒரு சின்ன விமரிசனம் இங்கே..... (- கிரி)
திருப்பூந்துருத்தி - பாலகுமாரன்
சிறப்புப் பதிவர் - ஆர்.அனுராதா
ஒரு புத்தகத்திற்கு விமரிசனம் எழுதுவதற்கான தகுதி அதை முழுவதும் படித்திருப்பது மட்டுமே என்று ஒத்துக் கொள்பவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும், நன்றி.
நான் விமரிசனம் எழுதுமுன் என் வாசிப்பு முறையின் விசித்திரத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். புத்தகத்தைக் கையில் எடுத்ததும் இடம், காலம் நிலை மறந்து புத்தகத்தில் மூழ்கிவிடுவேன். இந்த உலகம் தன் பாட்டுக்கு இயங்க, ”உன்னோடு வாழாத வாழ்வென்ன” பாடலின் அஜீத் - ஷாலினி போல் நானும் என் புத்தகமும் தனி ரூட்டில். கதையின் தாக்கத்தைப் பொறுத்து நாள் அல்லது வாரக் கணக்கில் மனம் புத்தகத்தை அசை போட்டபடி இருக்கும்.
திருப்பூந்துருத்தி - பெயர் விளக்கத்தை கதையின் இறுதியில் பாலாவே கூறியுள்ளார். அதிக தெய்வ நம்பிக்கை இல்லாவிட்டாலும் சக மனிதர்களை நேசிக்கும் ஒரு 26 வயது இளைஞனின் (மணி) ஆன்மாதான் சூப்பர் ஹீரோ. ஒரு விபத்து, கணவனை விலக்கி மகனுடன் தனித்து வழும் ஒரு பெண்ணுடன் உறவு, மரணம் ஆகிய நிகழ்வுகளுக்குப் பின் தன்னை (தன் ஆன்மாவை) அறிந்து, தன்னுடலில் மீண்டும் நுழைந்து செயற்கரிய செயல்களைச் செய்கிறான் மணி. செயல்கள் தொடருமென்று கதையை முடிக்கிறார் பாலா.
மணி, தன் உடலில் இருந்து புல்லாய், கன்றாய், கிழவனாய், கர்ப்பவதியாய் என்று ஆட்டோவிலிருந்து பஸ், பஸ்சிலிருந்து ரயில் என்று ஏறி மாறுவதுபோல் கூடு விட்டுக் கூடு பாய்கிறான். கெட்ட காற்றைச் சாந்தப் படுத்தி கல்தூணில் நட்டு தேவதையாக்குகிறான். க்ளைமாக்ஸுக்கு முன் குத்துப் பாட்டுபோல் ஒரு புதுமாப்பிள்ளையின் உடலுலும் புகுந்து புதுப்பெண்ணைக் கர்ப்பவதியாக்குகிறான்.
கண்டவரெல்லாம் கண்டதும் மணியை மதிக்கிறார்கள். கண்டக்டர் ஒருத்தர் மணியை டிக்கெட் வாங்கச் சொல்வதில்லை. இறந்தவர்கள் ஆன்மாவை திரும்ப உடலில் புகுத்தி 7 வருடம், 20 வருடம் என வாழ்நாள் நீட்டிப்பு செய்கிறான்.
பாலகுமாரன் எழுத்துக்கு என பிரத்யேகமான பரந்த ரசிகர் வட்டமுண்டு. அவர்களைத் திருப்திப்படுத்தும் அதே விதமாய் இந்தக் கதை உள்ளது. ஆனாலும், ப்ளஸ், மைனஸ் இரண்டையும் கலந்த சாமானியக் கதாபாத்திரங்களை நெஞ்சில் நிற்கும் அழுத்தமான பாத்திரங்களாக்கிய காரணத்தினாலோ என்னவோ, ஆரம்ப காலகட்டத்தில் அவர் எழுதிய நாவல்களை அசை போடத் துவங்குகிறது என் மனது.
திருப்பூந்துருத்தி - பாலகுமாரன்
திருமகள் நிலையம்
பக்கங்கள் 299 / விலை ரூ. 152/-
இணையம் மூலம் வாங்க: கிழக்கு
பி.கு: நந்தகுமாரிடம், “ஐயா புத்தகம் கொண்டு போன பர்ப்பஸ் முடிஞ்சிடுச்சி. இந்தாங்கோ உங்க புக்கு”, என்று திருப்பித் தந்தவனிடம், “எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இந்தப் புத்தகத்தை வாசித்தபின் திருப்பினால் போதும்”, என்று விட்டார்.
No comments:
Post a Comment