“பெரும்பாலான இலக்கியங்கள் வாசகனுக்கு மனச் சிதைவையே தருகின்றன”
- நடராசன் கணேசன்
நிம்மதி என்கிற விஷயம் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. அதுபோலத்தான்
மகிழ்ச்சியும் துக்கமும் இன்னபிற உணர்வுகளும். ஆனால் எல்லா உணர்வுகளும்
நிம்மதியோடு தொடர்புடையவையாகத்தான் இருக்கிறது. மகிழ்ச்சி என்ற உணர்வே மனதின்
நிம்மதியின் வெளிப்பாடுதான். போலவே, நிம்மதியற்றுக் கிடக்கும் இதயம் துக்கத்தில்
அல்லாடுகிறது. ஒவ்வொருவரும் இதுதான் தங்களுக்கு மகிழ்ச்சி என அவர்களாகவே முடிவு
செய்து வைத்திருக்கின்றனர். பெரும்பாலும் நிரந்தரமான ஒன்றை அடைவது இவர்களுக்கு
மகிழ்ச்சி தரவல்லதாகிறது. ஒரு பொருளின், ஒருவரின் நிரந்தரப் பிரிவு சோகத்தைக்
கொடுக்கிறது. இவை தாண்டியும் சந்தோஷப்படவும் துக்கப்படவும் பல காரணங்கள்
இருக்கத்தான் செய்கின்றன ஒவ்வொருவருக்கும்.
நாகரிக மாற்றத்தினால் வேகம் என்பது குரல்வளையை நெரித்துக்
கொண்டிருக்கும் நகர வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு எல்லா உணர்வுகளும் ஏறக்குறைய
ஒன்றுதான், காரணம் நேரமின்மை. ஆனால் கிராமத்தில் வாழும் மக்கள் அப்படி அல்ல. மாடு
கன்றை ஈன்றால் மகிழ்ச்சி. கிராமமே கொண்டாடும். ஆனால், வீட்டில் வளர்க்கும் நாய்
இறந்து போனால் ஒருவரும் சாப்பிடாமல் அழுது கொண்டிருப்பார்கள். இப்படியாக கிராம
மக்களின் உணர்வுகளைப் பார்த்தவர், உணர்வுகளினிடையே வாழ்ந்தவர், அந்த உணர்வுகளை
உள்வாங்கிக் கொண்டவர் அதை சரியாக பிரயோகித்திருப்பதே இந்தப் புத்தகம்.
பெரும்பாலும் விளிம்பு நிலை மக்களின் சோகம் பற்றி பேசுகிறது இப்புத்தகம்.
வெகு இயல்பான கதைகள். பெரும்பாலும் அப்படி ஒரு நிலையை நாம் கடந்து
வந்திருக்கக் கூடும் அல்லது பார்த்திருக்கக் கூடும். இருந்தாலும் இவர் கதை
சொல்லும்போது அந்த சோகம் நம்மையும் ஆட்கொள்கிறது. உயிர்ச்சுனை என்ற கதை
அப்படியான ஒன்றுதான். கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்களுக்கு நீர் ஆதாரம் மிக
அவசியமானது. வறட்சியான காலத்தில் மிதமிஞ்சிய உறிஞ்சுதலின் காரணம் கிணறுகள் வற்றி
விட போர் போட்டுக் கொள்ளலாம் என முடிவெடுக்கிறார் ஒரு பெரியவர். அவருக்கு இரு
மகள்கள். மூத்தவள், பள்ளி ஆசிரியை. அவளுக்கு திருமணமாகி நிதின் என்றொரு மகன். இளையவளுக்கு
திருமண செய்ய வேண்டித்தான் போர் போட முடிவெடுக்கிறார் பெரியவர். மூத்தவளிடம் காசு
வாங்கி போர் போடுகிறார். காசும் வீணாகி, தண்ணீரும் வராமல் வீட்டிற்கு பெருங்கஷ்டம்
ஏற்படுகிறது. அந்த சோகம் நம்மையும் தாக்குகிறது.
இந்தக் கதையில் முக்கியமான அம்சமே பேரன் நிதினை முக்கியமான பாத்திரமாக
சித்தரிப்பது தான். குழந்தைகள் கஷ்டப்படுவது யாருக்கும் பிடிக்காத ஒரு விஷயம். கதையின்
இறுதியில் காரணம் தெரியாமல் நிதின் அழும்போது வாசிப்பவனின் மனநிலை நிதினோடு ஒன்றி
விடுகிறது. இயலாமை வந்து மனம் முழுவதும் அப்பிக் கொள்கிறது. பாத்திரங்கள், கரு,
சொல்லப்பட்ட விதம் இவையனைத்துமே வாசகனை வீழ்த்தி விடுகிறது.
வலி, பிரிவு, இயலாமை, ஆற்றாமை, தனிமை, மரணம் என
சோகத்தின் காரணிகள் அதிகமிங்கே. இக்காரணிகள் ஒவ்வொன்றையும் ஒரு சிறுகதையாக்கி
இருக்கிறார். கிராமத்தின் பின்னணியில் கதையைச் சுற்றி வரும் புனைவு கதைகளின்
தாக்கத்தை ஆழமாக்குகிறது. கதாபாத்திரங்களின் ஆக்கம் உண்மைத் தன்மையை
அதிகர்க்கிறது. இறுதியில் ஒருதுளி துயரம் எனுமொரு கதை மனித
உறவுகளைக் கொண்டாடி வாழ்வின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது. திருமண
ஆசையற்று இருக்கும் ஒரு கால் ஊனமான பெண். அவளை நேசித்து ஒருவன் மணக்கிறான்.
திருமணத்தில் வரும் மொய் பணத்தை நண்பன் ஒருவன் அபகரிக்கிறான். அவனுக்கு கொடுக்க
வேண்டிய பணம் தான் என்றாலும், திருமணத்திற்காக பலரிடம் கைமாற்றலாக வாங்கிய பணத்தை
திருப்பிக் கொடுக்க இயலாத படியால் அவன் தற்கொலை செய்து கொள்கிறான். கணவனை இழந்தவள்
அவன் நண்பனிடத்தே சென்று வாதிடுகிறாள். அவனோ இன்னும் பாக்கி இருபதாயிரம் எனக் கூறி
பேச்சை முடிக்கிறான். கணவனை இழந்தவள், அவன் இறப்புக்கு காரணமான நண்பனுக்கு
மீதியைத் தந்திருக்கத் தேவை இல்லைதான். இருந்தாலும் சில மாதங்களுக்குப் பிறகு
கணவனுக்கு அவப்பெயர் கூடாதென மீதியைத் தந்து வெளியேறுவதாய் கதை முடிகிறது.
புத்தகம் நெடுக சோகம்தான் என்றாலும், அதை ஒவ்வொருவரும் எப்படி ஏற்றுக்
கொள்கிறார்கள் என்பதையும் அம்மாதிரியான மக்களின் வாழ்வியலையும் உணர்த்துகிறது.
சிறுகதைத் தொகுப்பு | சு.வேணுகோபால் | ரூ. 60 | தமிழினி பதிப்பகம்
இணையத்தில் வாங்க : கிழக்கு
சுருக்கமான விமர்சனம் மூலம் புத்தகத்தின் மதிப்பு புரிகிறது... சோகம் என்றாலும் அனுபவம் மூலம் இருந்திருக்கலாம்...
ReplyDeleteநன்றி...
உயிர்ச்சுனை கதை நான் வாசித்திருக்கிறேன். சு.வேணுகோபாலின் வெண்ணிலை' சிறுகதைத்தொகுப்பு படித்திருக்கிறேன். ஒவ்வொரு கதையையும் இவர் சொல்லும் விதமே நம்மை கதைக்குள் இழுத்து செல்கிறது. பகிர்விற்கு நன்றி.
ReplyDelete