பெயர் : காகித மலர்கள்
ஆசிரியர்: ஆதவன்
Photo Courtesy/பதிப்பகம்/ To buy:உயிர்மை
முதலில் சில சம்பவங்கள் :
1.தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாடி ஆபீஸில் கணினி மேல் பலூன் கட்டி இருந்தாங்க, எனக்கு ஏனோ அது பிடிக்கவில்லை, என்னுடைய மற்ற குழு நபர்கள் அதை ரொம்ப ரசிச்சாங்க. கொஞ்ச நேரம் கழித்து ஒரு பெண், பலூன் + நாங்கள் வேலை செய்வதை படம் பிடிக்க வந்தாங்க. யாராவது என்னை கேட்காம புகைப்படம் எடுத்தா எனக்கு கோவம் வந்துரும் - இப்ப இல்லை சில வருடங்கள் முன்பு வரை. அப்படியே பல்லை கடிச்சுகிட்டு உக்காந்து இருந்தேன். சில வருடங்கள் முன்புன்னா, ஒண்ணு, என்னை கேட்காம ஏன் புகைப்படம் எடுத்தீங்கன்னு கோபப்பட்டு இருப்பேன், இல்லைன்னா டக்குன்னு வெளியே எழுந்து போயிருப்பேன். அங்கேயே உட்கார்ந்து இருந்ததால், நானும் எல்லோரையும் போலத்தான் அப்படின்னு ஒரு பிம்பம் எனக்கே உருவாகியாச்சு.
2.என்னோட ரொம்ப நெருங்கிய நண்பர், நான் இந்த வேலையில் சேர்ந்தவுடன், நீயே இந்த வேலைக்கு வந்துட்டியா!, உன்னோட கல்யாணகுணங்களுக்கு இந்த வேலை ஒத்துப் போகாதே, அப்படின்னு ரொம்ப நேரம் லெக்சர் குடுத்துக்கிட்டு இருந்தாரு. நானும் இப்போ உஜாலாவுக்கு மாறிட்டேன் அப்படின்னு சொல்லி பேச்சைத் துண்டித்தேன். இப்போ என்னோட நெருங்கிய நண்பரிடம், எனக்கு ரெண்டு விதமான பிம்பம்.
3. ஆபீஸில் மேலாளர் + மற்றவர்கள், நீ ஏன் அதிகம் ஆங்கில படம் பார்க்கிறாய்ன்னு கேள்வி, நீ ஏன் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது இல்லைன்னு கேள்வி, இவன் பட்டாசு வெடிக்காத, ஆங்கில படம் பார்ப்பவன் அப்படின்னு ஒரு பிம்பம்.
4. இன்னொரு நண்பர், எப்ப கல்யாணம், எப்ப கல்யாணம்னு ஒரே கேள்வி. எவ்ளோ தூரம் என்னோட கருத்தை எடுத்துச் சொல்லியும், கடைசியில் விவாதத்தை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு, சரி பார்ப்போம், அப்படின்னு சொல்லி விவாதத்தை முடிச்சேன். இப்போ இந்த நண்பரிடம் ஒரு பிம்பம், இதே மாதிரி வீட்டில் என்னை பற்றி ஒரு பிம்பம், ட்விட்டர் மற்றும் ஆம்னிஸ்பஸில் வேற ஒரு பிம்பம்.
அப்போ நான் யார்? என்னைப் பற்றி 99.99% என்னுடைய கருத்துக்களை, நான் நினைத்தை நினைத்த மாதிரிதான் கூறி வந்திருக்கிறேன். ஆனாலும் நான் ஒரு பொய்யான வேடத்தை அணிந்துகொண்டு இருக்கிறேனோ என்று ஒரு பயம். இந்த பொய்யான வேடம் கலைந்து விடக்கூடாதுன்னு இனிமே முயற்சி பண்ணிகிட்டே இருப்பேனோ? அப்படி என்னோட இந்த வேடம் கலைந்து விட்டால் மற்றவர்கள் என்னைப் பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பம் உடைந்து வேறொரு பிம்பம் உருவாகிவிடும் - அதற்குதான் நான் முயற்சி பண்றேனா, அதுவும் தெரியாது.
“சொற்களை, எண்ணங்களை வெளிப்படுத்தும் சாதனங்களாக அல்ல, எண்ணங்களை மறைக்கும் போர்வைகளாகப் பயன்படுத்தும் கலை”.
ஆதவன் எழுதிய புத்தகங்களில், நான் படிப்பது இது முதலாவது. சொல்வனத்தில் மாயக்கூத்தன் ஆதவன் பற்றி எழுதியதைக்கூட இன்னும் முழுதாக படிக்கவில்லை. அழியாசுடர்களில், ஆதவன் எழுதிய ஒரு சிறுகதை படிப்பதை பாதியில் நிறுத்திவிட்டேன். இது மாதிரி இருந்த நான் ஏன் இந்த நாவலை தேர்ந்தெடுத்தேன்? இப்ப வரைக்கும் புரியவில்லை. ஆனா இவரை பற்றி எல்லோரும் பேசறாங்க, அப்படி என்னதான் இவரு எழுதி இருக்காருன்னு படிப்போம்ங்கறது முக்கியமான காரணம். இந்த நாவலுக்கு இது சரியான விமர்சனம் கிடையாது. ரெண்டு பத்தியில் மனுஷ்யபுத்திரன் எழுதி இருக்கிற பதிப்புரையுடன் ஒப்பிட்டால்கூட இது ஒண்ணுமே கிடையாது.
இந்த நாவலில் பிரமாதமான கதைன்னு எதுவும் கிடையாது. தில்லியில் வாழும் மேல்தட்டு மத்தியதர குடும்பமும் அவர்களைச் சுற்றியுள்ள மனிதர்களும், அவர்களுடைய ஒவ்வொரு நிகழ்வின்போதான அவர்களது எண்ணங்களும். உண்மையான மனசாட்சியுடன் அவர்கள் பேசிக்கொள்வதே நாவலை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்கிறது.
நிறைய நாள் ஏன் இவ்ளோ வேகமா இந்த உலகம் மாறுதுன்னு பயமா இருக்கும். இந்த மாற்றத்திற்கு மனம் உடன்பட்டாலும், உடம்பு உடன்பட மாட்டேங்குதுன்னு யோச்சிச்சு இருக்கேன். அந்த மாதிரி சமயங்கள் மனசு ரொம்ப சோம்பேறித்தனமா ஆயிடும், எதுவுமே பிடிக்காம போயிடும். அப்படியே கொஞ்சம் நேரம் மாடியில் காத்து வாங்கப் போவேன். சாயந்திரம் எங்க வீட்டுலேருந்து, கோயில் கோபுரம் தெரியும், பறவைகள் நிறைய கூடு திரும்பும், ரொம்ப அழகா இருக்கும். அப்படியே அந்த கணம், அந்த நொடியுடன் வாழ்க்கை நின்று விடக்கூடாதான்னு தோணிக்கிட்டே இருக்கும். இல்லாட்டி இந்த மாற்றம் நிகழும் நேரங்களின் காலசுழற்சியில் நான் மட்டும் தனித்து விடப்பட்டது போல் தோன்றும். இதே மாதிரியான எண்ணங்களை, இந்த நாவலின் கதாபாத்திரங்களும் உணர்கிறார்கள். அடுத்த நொடியே நிகழ்காலம் அவர்களை இழுத்து செல்கிறது.
காட்டில் வாழ்ந்த மிருகங்கங்களை, மிருகக்காட்சி சாலையில் குடிவைக்கும் அக்கறைகூட மனிதனை நகரத்தில் குடிவைக்கும்போது யாரும் எடுத்துக்கொள்வது இல்லை என ரெனி டு போ என்னும் பிரெஞ்சு அறிஞர் சொல்வதை விசுவம் மூலம் ஆதவன் சுட்டிக்காட்டுகிறார். மிருகங்களை மனிதன் குடிவைக்கிறான், சரிதான். ஆனால் நாம் அவற்றை அடக்கி ஆள்கிறோம். மனிதனை மனிதனே இன்னொரு இடத்தில் குடிவைக்கும்போது அந்த மாற்றத்தை அவனே விரும்பி ஏற்றுக் கொள்வதும் உண்டு. மனிதனுக்கு பல்வேறு பூர்வீகம், மதகலாசாரம் இருக்கிறது. நகரத்தில் ஒரே மாதிரி பள்ளியில்/ வேளைகளில் திணிக்கப்படும்போது மனிதனின் இயல்பு அழிகிறது என்கிறான் விசுவம்.
ஆமாம் உண்மைதான். ஆனால் ஒரு குழு பள்ளி/ வேலைகளை உருவாக்கியது. இன்னொரு குழு மனிதர்களும் அதை நாடி செல்கின்றனர், அந்த குழுவோடு ஐக்கியம் ஆகின்றனர். இதில் உள்ள குறை தெரியும்போது, அதை விடுத்து வேறொரு குழு உருவாகிறது, எப்படி இருப்பினும், மனிதர்கள் இயற்கையை அழித்து, தம்மை அழித்துக் கொண்டு, தம் இயல்பிலிருந்து மாறுகின்றனர் என ஆதவன் கூறுவதை ஏற்கலாம்.
டெல்லியில் டெபுடி செகரட்டரியாக இருக்கும் பசுபதிக்கு ஆபீஸில் ஒரு பிம்பம், வீட்டில் ஒரு பிம்பம். பசுபதியின் மனைவி வீட்டில் எல்லோரையும் கட்டுப்படுத்தி வைப்பதன் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்பவள் என்ற பிம்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறாள்.வெளியில் பார்ட்டி + நாடக உலகில் வேறு ஒரு பிம்பம். அவர்களுடைய மகன்கள் விசுவம், செல்லப்பா, பத்ரி மூவருக்கும் ஒவ்வொரு பிம்பம். விசுவத்தின் மனைவி பத்மினி, விசுவத்தை கட்டுபடுத்துவதன் மூலம் ஏற்படும் நிறைவை தன்னுடைய வேடமாக உணர்கிறாள். இந்த ஆண் மாந்தர்கள் பெண்களுடன் ஏற்படும் உறவில் வேறு வேடம் போட்டுக் கொள்வதும், பெண்களும் அதே மாதிரி ஆண்களுடன் இருக்கும்போது தங்களுடைய வேறு மாதிரியான பொய்யான பிம்பத்தை பிரிதிபலிப்பதும், ஆண்- பெண்ணிடம் அடிமைப்பட முயற்சித்து அதில் தன்னுடைய உண்மையைத் தேடி, அதைக் காணாமல் தோல்வி அடைவதும், அதே சமயம் பெண் ஆணை அடிமையாக்குவதன் மூலம் மகிழ்ச்சி அடைவதும், அவன் விலகி போகும்போது உடையும் தன் பிம்பத்துக்காக கவலைப்படுவதுமாக பிம்பங்கள் மையத் திரியாக நாவல் முழுவதும் தொடர்கிறது.
ஒருவரிடம் உருவாகிவிட்ட பிம்பத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு கதை மாந்தர் அதற்கு முயற்சி செய்வதும், அவர்கள் மூலம் கிடைத்தது அன்பு/ ஆதிக்கம்/ உதவி பூர்த்தி அடையும்போது வேறு பெண்/ஆணை மனம் தேடுவதும், இந்த தேடலில், மனம் மீண்டும் மீண்டும் குழம்புவதும், தன்னுடைய உண்மையான தேடலை நோக்கி செல்ல முனைவதும் பிரமாதமான அவதானிப்புகள். கடைசியில் தாராவிடம் அடிமைப்படுதல்தான் தனக்குச் சிறந்தது என்று முடிவு செய்யும் செல்லப்பா ஆகட்டும், தன்னுடைய நண்பரின் மனைவி மேல் லேசாக மையம் கொள்ளும் விசுவம் ஆகட்டும் ஒவ்வொன்றாய் சொல்லிக் கொண்டே போகலாம். தான் நினைத்ததைச் செய்யும் பத்ரி மட்டும்தான் இந்த நாவலில் ஒரு விதிவிலக்கு. ஆனால் அவனும் கடைசியில் தெருவோரம் தூங்கும் மக்கள் இருவரை பஸ் ஏற்றிக் கொல்வதும், அதைப் பற்றி குற்றணர்ச்சி இல்லாமல் இருப்பதும் விசேஷமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்.
எழுபதுகளில் வந்த இந்த நாவல், இயற்கையை அழித்து அதன் மூலம் தன் தேவைகளை, மனிதன் பூர்த்தி செய்து கொள்வதையும், அதன் மூலம் ஏற்படும் நஷ்டங்களை கணக்கில் கொள்ளாமல் இருப்பதையும், இன்று முக்கியமாக இருக்கும் சுற்றுச் சூழல் கவலைகளை வெகு காலம் முன்னமேயே பேசிவிட்ட ஒரு முன்னோடி நாவல்.
முதலில் சொன்ன மாதிரி, எனக்கென ஒரு பிம்பம் உருவாகிவிட்டது, இதை நான் நினைத்தாலும் அழிக்க முடியாது, அப்படி அழித்தாலும் வேறொரு வேடம் பூண வேண்டிவரும். என்னுடைய உண்மையான எண்ணங்களோ/கருத்துகளோ அதில் இடம் பெற்று இருந்தாலும், தேவைப்படாதவற்றை மட்டும் அழிந்து பொய்யான ஒரு வேடத்தைதான் எப்போதும் நான் அணிகிறேன். மனிதர்கள் ஒவ்வொரு தொழிலுக்கு ஏற்ப பூணும் வேடம், அதன் மூலம் தன்னுடைய உண்மையான பிம்பத்தை அழிப்பதை பற்றியும் பேசும் இந்த நாவல், தனி மனித சுதந்திரம் என்பதே ஒரு பொய் வேடம், அதற்கான சுதந்திர வேட்கையும் ஒரு நாடகம் என்று நிரூபிக்கிறது.
சம்பவங்கள் ஆவலைத் தூண்டுகிறது...
ReplyDeleteநன்றி...
பாலாஜி, அருமையான பதிவு. இதுமாதிரி நீங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும்.
ReplyDeleteThanks natarajan :-)
ReplyDeleteThanks Dhanpalan sir
ReplyDelete