குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்த வாரம் ஆம்னிபஸ் தளம் குழந்தைகள் இலக்கியத்தைக் கொண்டாடுகிறது. சிறார் இலக்கியத்தை பற்றிய எனது அடிப்படை புரிதல்களைப் பகிர்ந்துக்கொண்டு முன்செல்வதே சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஓரளவு கோர்வையாக வாசிக்கத் தெரிந்த நாள் முதல் தினமலர் இதழின் சிறுவர் இணைப்பாக வெள்ளிதோறும் வரும் சிறுவர் மலரை வாசித்தது நினைவில் நிற்கிறது. இதழின் கடைசி பக்கத்தில் வரும் பலமுக மன்னன் ஜோ, பேய்ப் பள்ளி, சோனிப் பையன், எக்ஸ்- ரே கண், சிண்டன் போன்ற படக்கதை பாத்திரங்களின் உருவங்களைத் தெளிவாகவே நினைவுக்கூர முடிகிறது. பின்னர் கோகுலம், சந்தாமாமா, டின்கில் என்று சென்ற வாசிப்பு பதின்ம பருவத்தில் ஹாரி பாட்டருக்குத் தாவியது. ஏறத்தாழ அதே சமயத்தில் தமிழில் கல்கியும், தேவனும் எனக்கு அறிமுகமானார்கள்.
நண்பர் ஒருவர் சொன்னார், "குழந்தைகளுக்கான திரைப்படம், புத்தகம் என்று முன்னிறுத்தப்படுபவை பெரும்பாலும் குழந்தைகளைக் காட்டிலும் பெரியவர்களையே கவருகின்றன. காரணம் மனித மனம் அந்த அனுபவத்தின் வாயிலாக தன்னுடைய பால்யகால நினைவுகளைத் திரட்டி தற்காலிகமாகவேணும் காலயந்திரத்தில் பின்னோக்கிப் பயணிக்கிறது. முற்றுபெறாத ஏக்கங்களின், கனவுகளின் கதவுகளை அவை தட்டித் திறக்க முயல்கின்றன. கொண்டாடப்படும் அனைத்து சிறுவர் இலக்கியங்களும், படைப்புகளும் பெரியவர்களுக்கானதே. வளர்ந்த பெரியவர்களின் வாழ்வியல் வேட்கைகளில் சிக்கி ஒளிந்து நின்று குறுகுறுப்புடன் காத்திருக்கும் நமக்குள்ளிருக்கும் அந்தக் குழந்தையின் ஏக்கத்தை தீர்ப்பதே தேர்ந்த சிறார் இலக்கியம்," என்றார் அவர். "பெரியவர்கள் மீண்டும் குழந்தை பருவத்து பொருந்தாத ஆடைக்குள் நுழைய முனைவது போல குழந்தைகள் ஒவ்வொரு நாளும் தங்களை பெரியவர்களாகவே பாவித்து, விரைவில் வளர்ந்து ‘பெரிய ஆளாக’ வேண்டும் என்றே முனைகிறார்கள்," என்றார். யோசித்துப் பார்த்தால் இதில் ஓரளவு உண்மை இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது.
சிறுவர் இலக்கியத்திற்கான வரையறை என்ன என்பதே ஒரு முக்கியமான கேள்வி. தேர்ந்த சிறுவர் இலக்கியம் நமக்கு எவற்றை அளிக்கிறது? எனது வாசிப்பின் எல்லையில் நின்றுகொண்டு சிறார் கதைகளில் தென்படும் சில வகைமாதிரிகளை சுட்டிக்காட்ட முனைகிறேன்.
பெரும்பாலும் கதையின் மைய பாத்திரம் ஒரு சிறுவன் அல்லது சிறுமி அல்லது ஒரு அதிநாயகன்
உடன்வரும் உற்ற தோழர் குழாமில் ஒரு வளர்ப்புப் பிராணி
கதை நாயகனுக்கு ஏதோ ஒரு அதீத திறன் வாய்த்திருக்கும்.
வீர வழிபாடு என்பதே பெரும்பாலான சிறார் கதைகளின் மைய இழை என சொல்லலாம்.
அபார கற்பனை வீச்சு கொண்ட தர்க்க அதீத நிகழ்வுகளால் நிறைந்த ஃபேண்டஸி உலகம்.
கதை ஏதோ ஒருவகையில் அற மேன்மையை வலியுறுத்தும்.
இத்தனை வகைமாதிரிகளிலும் சிறுவர் இலக்கியத்தில் வீரவழிபாடு எனும் கதைக் களத்தை தாண்டி வேறோர் தளத்தைப் பேசும் கதைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். நீதிக்கதைகள், வீரவழிபாட்டுக் கதைகள் ஆகிய இவ்விரண்டின் பின்புலத்தில் நோக்கினால், தமிழின் மிக முக்கியமான சிறார் இலக்கிய ஆக்கமாக பனி மனிதனை குறிப்பிட முடியும்.
ஈசாப் நீதிக்கதைகள், விக்கிரமாதித்தியனும் வேதாளமும், பஞ்ச தந்திரகதைகள் - இவற்றில் சிறார்களுக்கான அற்புதமான கதைக் களன் உள்ளது என்றே குறிப்பிட வேண்டும். ஆனால் இவ்வகை நீதிக்கதைகளில் உள்ள சிக்கல், இவை பெரிய அளவிலான கற்பனைகளுக்கு இடம் கொடுப்பதில்லை. முல்லா நசுருதீன் கதைகளும், தெனாலி ராமன் கதைகளும், பீர்பால் கதைகளும் சாதுர்யமான நகைச்சுவையை களமாகக் கொண்ட கதைகள். அதிலுள்ள ஒருவித மிஸ்டிக் தன்மை காரணமாக முல்லா கதைகள் மீது எனக்கு சற்று கூடுதலான ஈர்ப்பு உண்டு.
குழந்தைகளின் வாழ்வில் கதை எப்போது உள்நுழைகிறது? தாத்தாக்களும் பாட்டிகளும் வாய்மொழியாக சில கதைகளை உருவாக்கி நமக்களிக்கின்றனர். முடிவற்ற சாத்தியக்கூறுகள் உள்ளடங்கிய கதைகள். நேரத்திற்கு ஏற்ப, கதை கேட்பவருக்கு ஏற்ப உருமாறும் கதைகள். அதன்பின்னர் படக்கதைகள் காமிக்சுகள். பெரும்பாலான காமிக்ஸ் கதைகள் மேற்குலக தாக்கத்தில் உருவாகி இங்கு சந்தைப்படுத்தப்படுகிறது என்றே தோன்றுகிறது. இதற்கு ஒரு விதிவிலக்கு அமர் சித்திர கதா.
பொதுவாக, வாய்வழி கதையாடல்- படக்கதை – நீதிக்கதை- நாவல் என்பதே இளமையிலிருந்து புனைவுலகை வந்தடையும் வாசகனின் பயணமாக இருக்கிறது. நீதிக்கதையிலிருந்து நாவலுக்கான தாவல் என்பது கொஞ்சம் அதிகமான தூரம்தான். அந்த இடைவெளியைக் குறைக்கும் விதமான இடைநிறுத்த படைப்புகள்தான் சிறார் இலக்கியம். நாவலின் அளவுக்கே வாழ்வின் விரிவையும் தரிசனத்தையும் சொல்லும் அவை அதே வேளையில் சிறார்களின் உலகத்திற்கு நெருக்கமாகவும் இருத்தல் வேண்டும், அத்தகைய படைப்புகளையே சரியான இடைநிறுத்தம் என்று கூறலாம். அவையே வாசிப்பின் திசையை முடிவு செய்யக்கூடியவை.
சுயம் உருவாகும் தருணத்தில் வாசிக்கக் கிடைப்பவை நம்முடைய ரசனையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இதை என் அனுபவம் சார்ந்தே புரிந்துகொள்கிறேன். பதின்ம வயதில் நான் வாசித்த ஜோனாதன் லிவிங்ஸ்டன் எனும் கடற்புள்ளு கதை, மற்றும் தாகூரின் காபுலிவாலா கதை, இவ்விரண்டும் என் வாசிப்பின் திசையை தீர்மானித்தன என்றே இன்று கருதுகிறேன்.
தினமணி நாளிதழின் சிறுவர் சிறப்பு இணைப்பிதழாக வெளிவரும் சிறுவர்மணியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடராக வந்த கதைதான் ஜெயமோகன் எழுதிய பனிமனிதன். முன்னுரையில் இது சிறுவர்களுக்கான கதை எனினும் சிறுவர்களுக்கானது மட்டுமல்ல, வாழ்க்கை பற்றிய சில அடிப்படை கேள்விகளை எழுப்புகிறது என்பதால் பெரியவர்களும் வாசிக்கக் கூடிய கதை என்று எழுதுகிறார் ஜெ. உண்மைதான், ஒருவனது சுயமறியும் பயணம் இங்கிருந்து தொடங்கக் கூடும். அதற்கு அவன் அறிவியலையோ அல்லது ஆன்மீகத்தையோ தனக்கு துணையாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக்கூடும்.
கதையில் மூன்று பாத்திரங்கள் காத்திரமான மூவகை போக்குகளின் குறியீடுகளாக எனக்கு புலப்பட்டனர். ராணுவ அதிகாரி பாண்டியன், டாக்டர் மற்றும் கிம். இதில் கிம்மும் டாக்டரும் தங்களது பாதையை தெளிவாக ஆன்மீகத்திலும் அறிவியலிலும் கண்டுகொண்டவர்கள். இவ்விரண்டு போக்குகளின் மீதும் ஐயம் கொண்டு அலைகழியும் பாண்டியன் மூன்றாவது வகை.
பனிமலையில் பதியும் பிரம்மாண்டமான கால் தடம் பற்றி ஆராய அனுப்பப்படுகிறான் ராணுவ அதிகாரி பாண்டியன். அவனுடைய ஆய்வுக்கு உதவ முன்வருகிறார் ஆய்வாளர் டாக்டர் திவாகர். பனிமனிதன் தூக்கிச் சென்று காப்பாற்றி மீண்டும் விட்டுச் சென்ற சிறுவன் கிம்மை அழைத்துக் கொண்டு அவர்கள் பனிமனிதனை தேடி புறப்படுகிறார்கள். இக்கட்டான பயணங்களைக் கடந்து யதிகள் வாழும் அற்புத உலகை அடைகிறார்கள். மனிதனின் மகத்தான மூதாதையர்களைக் கண்டு கொள்கிறார்கள். மகிழ்ச்சியும் அமைதியும் மட்டுமே நிலவும் தர்மஸ்தலம் அது. அங்கிருந்து வெளியேறி. ஞானமடைந்த கிம் திபெத்திய மடாலயத்தின் மகாலாமாவகிறான்.
கிம் மகா லாமாவாகத் தேர்வடைந்த பிறகு டாக்டரால் அவனை வணங்க முடிகிறது, பாண்டியன் தயங்குகிறான். வைரக் கற்கள் அவனை முழுவதுமாக ஈர்க்கின்றன. டாக்டரும் கிம்மும் அவனை மீட்டு மேல் செல்கிறார்கள். குவியாடி போல் செயல்படும் பனிமூடிய மலைச் சரிவுகளில் தனது பிரம்மாண்ட பேருருவைக் கண்டு திகைத்து நின்று விடுகிறான் பாண்டியன். மனிதர்களுக்கு தங்கள் பிம்பங்கள் மீதான காதல் அபாயகரமான எல்லைகளில் கூட விட்டுப்போவதில்லை போலும். தனது பிம்பத்தைப் போல் ருசியளிப்பது அவனுக்கு வேறெதுவும் இல்லை, பிம்பங்கள் ஒருநாளும் அவனுக்கு சலிப்பு ஏற்படுத்துவதில்லை.
சிறார் இலக்கியத்தின் மிக முக்கியமான அம்சம், அதன் கற்பனையும் கனவு அம்சமும் தான். குழந்தைகளின் பார்வையில் வாழ்வின் ஒவ்வொரு அசைவும் மகத்தான ஆச்சரியமாக, ஒரு அறிதலாக பரிணமிக்கும். இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு செயல்விதியும்ம் அதுவரை அது அறிந்தவற்றிலிருந்து வேறொன்றை அறிமுகப்படுத்தி ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் பண்டோரா பெட்டி. பொதுவாகவே ஜெயமோகனின் படைப்புகளில் மெய் நிகர் புலனனுபவங்கள் முக்கிய பங்களிப்பாற்றும். குறிப்பாக காட்சிப்படுத்துதல் அவருடைய மிகப்பெரிய பலம். இந்த கதையிலும் அவர் அதை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
யதிகள் வாழும் காட்டுப்பகுதியும், அதில் வாழும் உயிரினங்களின் விவரணையும் அபார கற்பனை எழுச்சியில் உருவானவை என்பதை உணர முடிகிறது. கற்பனை என்பதைக் காட்டிலும் தன்னுடைய கனவுக்கு மொழி வடிவம் அளித்துள்ளார் என்றே தோன்றுகிறது. பெருச்சாளி அளவுக்கு இருந்துகொண்டு பிளிறும் யானைகள், கால்கள் கொண்டு மரம் மீது ஏறும் மீன்கள், நீருக்குள் மூழ்கி மேலெழும்பும் சீன ட்ராகன்கள், குரங்குக் கால்கள் கொண்ட பசுக்கள், எருமைகள் என ஒவ்வொரு சித்தரிப்பும் அபாரமான காட்சி அனுபவத்தை அளிக்கிறது. யாழி, ட்ராகன் என தொன்மங்களில் இருந்து சில உருவங்களை வடித்தாலும், பெரும்பாலும் கற்பனையில் உதித்தவைதான் அவைகள். பனி மலை மீது உறைந்திருக்கும் பாற்கடல், உறைகடலுக்கு அடியில் ஒரு அசைவில் உறைந்திருக்கும் அறிய கடலினங்கள், குழி ஆடியைப் போல் செயல்படும் பனி மலைச்சரிவுகள் என கதை முழுவதுமே காட்சிகளால் நிறைந்திருக்கிறது.
பிரபஞ்சத்தின் ஒவ்வொரு உயிரும் மற்றவைகளுடன் உறவு கொண்டுள்ளது எனும் நம்பிக்கையை அற்புதமாக அவதார் திரைப்படத்தில் சித்தரித்திருப்பார் காமரூன். இக்ரானை கட்டுப்படுத்தி, அதைப் பழக்கிய பிறகு அது வார்த்தைகளில் அடைபடாத மொழியில் அவனுடைய எண்ணத்தைப் புரிந்துக்கொண்டு இலக்கைச் சென்றடையும். பனிமனிதனில் வரும் வவ்வால் பயணம் ஏறத்தாழ இதே அனுபவத்தை நமக்களிக்கிறது.
ஒன்றையொன்று அழித்து வாழாத, சார்ந்து வாழும் உயிரினங்கள் நிரம்பியதுதான் தர்மஸ்தலம். பேராசைகளும் நுகர்வு வெறியும் இறுக்கிப் பிசையும் சமூகத்தில் யதிகள் ஒரு கனவு. மீட்சிக்கான விதை. மனிதனுக்குள் ‘இன்னும் இன்னும்’ என்று எரியும் த்ருஷ்னை எனும் தீ அவனுடைய இனத்தையே கூண்டோடு அழித்துவிடும். ஊழிக்குப் பின்னர் மீண்டும் வேளாண்மை தொடங்க ஏதுவாக உயர்ந்த கோபுர கலசத்தின் உச்சியில் தானிய விதைகளைச் சேகரித்து வைப்பதுப் போல் தர்மஸ்தலத்தின் பனிமனிதன் வெளியுலக பார்வை படாமல் வாழ்ந்து வருகிறான் என்பதே லாமாக்களின் நம்பிக்கை.
கூட்டு நனவிலி பற்றிய பகுதிகளும், ஆழ்மனம் மேல்மனம் அடிமனம் ஆகியவற்றைப் பற்றிய விவாதங்களும் இந்தக் கதையின் மிக முக்கிய பகுதிகளாகும். உயிர்களின் ஆழ்மனம் பூமிக்கடியில் ஓடும் நெருப்பாறு போல் ஒட்டுமொத்தமாக இணைந்து ஒற்றை சரடில் ஓடிக் கொண்டிருக்கிறது. மேல்மனம் எரிமலையின் முகவாயாக ஆங்காங்கு தோன்றுகிறது. தனி மனங்கள் மறைந்து பூச்சிகளின் ஒற்றை பெருமனத்தில் இணைகிறது என்று விரிகின்றன இந்த விவாதங்கள். இங்கு, மேல்மனம் அற்ற ஆழ்மனம் மட்டுமே கொண்ட யதிகளே வரம் பெற்றவர்கள்.
பரிணாமவியல், உளவியல் சார்ந்த பல ஆழமான கேள்விகளை இப்படைப்பு எழுப்புகிறது. டார்வினை இளைஞர்களுக்கு கச்சிதமாக அறிமுகம் செய்கிறார் ஜெ. டீன் பறவைகள் ஏன் ஓநாயை மனிதர்களுக்கு காட்டிக் கொடுக்க வேண்டும் எனும் கேள்விக்கான விடை உயிரினங்களின் சார்புத்தன்மைக்கான ஆகச்சிறந்த விளக்கம்.
மனிதனின் பரிணாமத்தில் கரங்கள், குறிப்பாக கட்டைவிரல் ஏற்படுத்திய பங்களிப்பு ஆழமான சிந்தனைக்குரியது. யோசித்துப் பார்த்தால் நமது அத்தனை மகத்தான அறிவியல் பாய்ச்சல்களும் நமது கரங்களின் அமைப்பினால் மட்டுமே சாத்தியமானவை. சக்கரம், சிக்கி முக்கி கல் உரசி தீ உண்டாக்கியது முதல் விண்ணை முட்டும் கட்டிடங்கள் எழுப்பியதுவரை அனைத்துமே நம் கரங்களின் வல்லமையில் உருவானவைதான். பிற உயிரினங்களின் மீதான மேலாதிக்கம் தொடங்கியதும் அதிலிருந்துதான். கற்காலத்திற்குன் முற்கால மனிதன் மிருகங்களை நேரடியாக வேட்டையாடினான், அதன் பின்னர் கற்கால மனிதன் கவட்டை, கூரிய கல் ஆயுதங்களைக் கொண்டு வேட்டையாடினான்.
எத்தனை அநீதியான முறை! அம்புகளும், ஈட்டிகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும், அணுகுண்டுகளும்! மறைந்திருந்து தூரத்தில் இருந்து தாக்கும் வல்லமையை இவை அவனுக்கு அளித்தன. இன்று அவன் வீட்டில் அமர்ந்தப்படி கணினியின் தொடுதிரையில் எதையும் அழித்துவிட முடியும். தன்னை அழிப்பவன் யார் எனும் அறிதல்கூட இன்றி உயிர்கள் கொத்துகொத்தாக மரித்துக் கொண்டிருக்கின்றன. ஒருவேளை நம் கரங்கள் பனிமனிதனது போல் இருந்திருந்தால், இப்படி கொத்துகொத்தாக பிற உயிர்களை அழித்திருக்க மாட்டோம் என்று தோன்றியது. கரங்கள் மனிதனின் ஆக்க சக்தியின் குறியீடு, அதுவே அவனது அழிவுக்கும் வழிவகுத்துவிடும் போலிருக்கிறது.
கேளிக்கை – கற்பனாவாத எழுத்துக்களுடன் நின்றிடாமல் அங்கிருந்து மேலெழும்பி ஒரு ஆன்மீக தளத்தை தொடுவதே பனி மனிதனின் மிக முக்கிய அம்சம். சூரிய ஒளிபட்டு வெண்பட்டாக மிளிரும் பனிமலை புத்தரின் மனம், தூய்மையின் தூல வடிவம். மனிதன் இயற்கையின் பிரமாண்டத்திற்கு முன் நிற்கும்போது அவனுக்கு உதிக்கும் முதல் சிந்தனை அவன் யார் என்பதைக் காட்டிவிடும். பிரம்மாண்டத்தை எண்ணி புளகாங்கிதம் அடைந்து தன் சுயத்தின் சிறுமைகளை எண்ணிக் குறுகும் மனிதன் ஒருவகை, அந்த பிரம்மாண்டத்தின் ஒரு பகுதியை தனதாக்கி அங்கு புகை கக்கும் தொழில் கூடங்களை அமைத்து வேலியிட்டு உரிமை கொண்டாட நினைக்கும் மனிதன் மற்றொரு வகை. இவை இரண்டுமாக அல்லாமல், தர்மஸ்தலத்தின் விதவிதமான உயிரினங்கள் அனைத்தும் புத்தர் வரைந்த ஓவியங்கள் என அறிகிறான் கிம். செவ்வொளி பரவும் அந்திச் சூரியன் புத்தரின் சிரிப்பு. அஸ்தமித்த சூரியன் ஒடுங்கி அணைவது புத்தரின் உறக்கம். யதிகளின் கூட்டிசையில் தன்னையிழக்கும் கிம், தன்னையே அனைத்துமாகக் காண்கிறான். அகங்காரமும், தன்னிருப்பும் கரைந்து ஒரு ஆன்மீக அனுபவம் அவனுக்கு சாத்தியமாகிறது. இறுதியில் பத்மபாணி எனும் மகாலாமவாகிறான்.
பேக்கர் பாணியிலான வீடுகள், கூட்டுறவுச் சமூகம் என காந்திய மாதிரியில் டாக்டர் திவாகர் வாழும் மலைகிராமத்தை உருவகித்துள்ளார் ஜெ. புத்தகம் முழுவதும் அறிவியலின் நடைமுறை பயன்பாடு பற்றி பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. பானை வடிவிலான வீடுகள், கால்தடங்களைக் கொண்டு ஆராய்தல், போன்றவை மிகச்சிறந்த உதாரணங்கள். மாயாஜால கதை என்ற அளவில் நின்றுவிடாமல், அறிவியல் விட்டுச் செல்லும் இடைவெளிகள் கற்பனையைக் கொண்டு நிரப்ப்பப்பட்டிருக்கின்றன. வாசித்து முடிக்கையில் யதிகளின் உலகம் உண்மையாக இருக்க வேண்டும் என்று மனம் விரும்புகிறது.
நேரடி பிரச்சாரம் போல் அலுப்பூட்டுவது ஏதுமில்லை. பெரும்பாலும் அவை கவனிக்கப்படுவதில்லை. ஆனால் நேர்மையாக எழுதப்பட்ட புனைவு பிரச்சார நூல்களைக் காட்டிலும் வலிமை வாய்ந்தது. அது அவனுக்கு வாழ்க்கையின் சித்திரத்தை அதன் தீவிரத்துடன் காட்டிச் செல்கிறது. வன்முறையும் சுரண்டலும் சர்வ சாதாரணமாக மனிதர்களின் இயங்குவிதியாக முன்வைக்கப்படும் காலகட்டத்தில் பனிமனிதன் நமக்கு மாற்றுப்பாதையை காட்டுகிறான். இயற்கையுடன் போரிடுவதை நிறுத்தி இயைந்து வாழத்தொடங்குவதே மீட்சிக்கான வழி. ஏனெனில், மனிதன் பிரபஞ்சத்தில் வாழும் எத்தனையோ உயிரினங்களில் ஒருவன். அவன் பொருட்டு இப்பிரபஞ்சம் உருவாகவில்லை. அவன் பொருட்டு இது இயங்கவும் இல்லை. இனியும் தான் தேர்ந்தெடுத்த தவறான வாழ்க்கை முறையைத் தொடர்ந்தால், அவனையும் கடந்து செல்லும் இப்பிரபஞ்சம்.
நம் வீட்டு பிள்ளைகள் தவறவிடக்கூடாத புத்தகம்..
பனி மனிதன்
ஜெயமோகன்
தமிழ்
சிறார் இலக்கியம்
கிழக்கு
-சுகி.
நண்பர் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் உண்மை...
ReplyDeleteநல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி...