ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்
ஆசிரியர் : சுஜாதா
பக்கங்கள் : 158
விலை : ரூ.80
கிழக்கு பதிப்பகம்.
***
தமிழ்ப் பற்று உள்ளவரா? ஆழ்வார்கள் தமிழை எப்படி கையாண்டுள்ளார்கள் என்று படிக்க வேண்டுமா?
அல்லது
பக்தியில் ஈடுபாடு உண்டா? ஆழ்வார்கள் இறைவனை, திருமாலை எப்படியெல்லாம் வர்ணித்து, அவனை புகழ்ந்து பாடி, போற்றி துதித்தார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
அல்லது
சங்க காலத்தில் சைவ மற்றும் இதர சமயங்கள் எப்படி இருந்தன? வைணவ ஆழ்வார்கள் யாரெல்லாம் மற்ற சமயத்தாரோடு எப்படியெல்லாம் வாதாடி வென்றார்கள் என்ற விவரங்கள் வேண்டுமா?
இதெல்லாம் தெரிந்து கொள்வதற்கு, ஆழ்வார்கள் பற்றி, அவர்களின் பாடல்களை படிக்க வேண்டும். ‘ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்’ என்று அழைக்கப்படும் மொத்தம் நாலாயிரம் பாடல்கள்.
ஆஹா, நாலாயிரம் பாடல்களா? அவ்ளோல்லாம் படிக்க முடியாது. ஏதாவது ட்ரெய்லர் மாதிரி படிக்க முடியுமா? முக்கியமான பாடல்கள் என்று எதை சொல்வீங்க? என்று கேட்டால், அதற்கான பதில்தான் இந்தப் புத்தகம்.
ஆழ்வார்கள் என்றால், பகவானின் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்கள் என்று சொல்கிறார்கள். இவர்கள் பத்து பேர்.
1. பொய்கை ஆழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசை ஆழ்வார்
5. திருமங்கை ஆழ்வார்
6. தொண்டரடிப்பொடி ஆழ்வார்
7. திருப்பாண் ஆழ்வார்
8. குலசேகர ஆழ்வார்
9. பெரியாழ்வார்
10. நம்மாழ்வார்
இவர்களுடன் விஷ்ணுவை நேரடியாகப் பாடாமல் நம்மாழ்வாரைப் பற்றிப் பதினோரு பாடல்களைப் பாடிய மதுரகவி ஆழ்வாரையும், திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவற்றைப் பாடிய பெண் புலவரான ஆண்டாளையும் சேர்த்து ஆழ்வார்கள் பன்னிருவர் என்று சொல்வதும் உண்டு.
இவர்கள் அனைவரும் ஒரே காலத்தவர்கள் இல்லை. சிலர் ஏழாம் நூற்றாண்டு, சிலர் எட்டாம் நூற்றாண்டு. ஒரே குலத்தவரும் இல்லை. பெரியாழ்வார் வேயர் குல அந்தணர்; குலசேகர ஆழ்வாரோ சேர நாட்டு அரசகுலம்; நம்மாழ்வாரோ வெள்ளாள சிற்றரசர். இப்படி பல குலங்களிலும் ஆழ்வார்கள் இருந்திருக்கிறார்கள்.
தமிழ்ச்சுவை, பக்தி ஆகிய கோணங்களுடன் ஆழ்வார்கள் பாசுரத்தில் சுஜாதா பார்க்கும் இன்னொரு கோணம் - இயற்பியல் காஸ்மாலஜி. பிரபஞ்சம் எப்படி தொடங்கியது என்பதை அறிவியல் கண்டு பிடிக்கலாம்; ஆனால் அது ஏன் இருக்க முனைகிறது என்பதை விளக்கமுடியாது. அதற்கு ஆதிகாரணனாக ஒரு கடவுள் தேவைப்படுகிறார் என்று சொல்லும் ஸ்டீபன் ஹாக்கிங்’ன் வாதத்தை நம்மாழ்வாரின் ஒரு பாசுரத்தோடு ஒப்பிடுகிறார்.
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா அன்று
நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் (3330).
மேலே பார்த்த பன்னிரு ஆழ்வார்களைப் பற்றி் தனித்தனி அத்தியாயங்கள் உள்ளன. அவர்களின் காலம், வாழ்க்கை வரலாறு, அவர்கள் இயற்றிய முக்கியமான பாசுரங்கள், அதன் பொருள் ஆகியவையும் உள்ளன. கூடவே அங்கங்கே திருக்குறள், சித்தர் பாடல்கள் ஆகியவற்றிலிருந்தும் மேற்கோள் காட்டி, ஒரே கருத்தை பலரும் எப்படி பாடியிருக்கின்றனர் என்பதையும் விளக்குகிறார் சுஜாதா.
ஆழ்வார்களைப் பற்றிய விவரங்களும், அவர்கள் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை சுஜாதா சொல்லும் விதமே படு சுவாரசியம். உதாரணத்திற்கு சிலவற்றை இங்கே பார்ப்போம்.
அன்பு, பாசம், பரிவு, கவிதைத் திறன் ஆகிய அனைத்தையும் கொண்டு கண்ணனின் குழந்தைப் பருவத்தை பெரியாழ்வார் போல் பாடியவர் வேறு யாரும் இல்லை என்கிறார். இவரே ‘பிள்ளைத் தமிழ்’ என்னும் இலக்கிய வகையை முதலில் உருவாக்கியவர் ஆவார்.
வாலண்டைன் தினத்தை, ஆண்டாள் தினமாக மாற்றலாம் என்று யோசனை சொல்கிறார். அந்த அளவிற்கு காதல் தெய்வமான மன்மதன் பண்டிக்கைக்கான விவரங்கள் சொல்லி, இவை எல்லாம் செய்கிறேன், திருமாலை மட்டும் எனக்கு கட்டி வை என்று ஆண்டாள் சொல்லும்போது அந்தப் பாடல்களில் உள்ள காமம், காதலாகி, பக்தியும் ஆவதை, பல பாடல்கள்/பொருளோடு விளக்கி நமக்கு புரிய வைக்கிறார் சுஜாதா.
ஆழ்வார்களிலேயே மிகவும் அலைந்து திரிந்தவர், திருமங்கை ஆழ்வார்தானாம். அவர் சென்ற கோயில்கள், அந்த ஊர் மற்றும் அவற்றின் சிறப்புகளைப் பற்றி அழகாக பாடியிருக்கிறார். அவரால் பாடப்படவில்லை என்றால், அந்தக் கோயில் அவரது காலத்தில் இல்லை என்று தைரியமாகச் சொல்லி விடலாம். ஆனால், அவர் பாடிய பல கோயில்களின் இன்றைய நிலைமையை பார்த்தால், வருத்தம்தான் வரும் என்று தன் ஆதங்கத்தை சேர்க்கிறார் சுஜாதா.
ஆழ்வார்களைப் பற்றி தெரியாதவர்களுக்கு, அவர்கள் மேல் ஈடுபாடு ஏற்பட வைப்பதே என் நோக்கம் என்று சொல்லி அனைவரின் கதையை மிகச்சுவைபட விளக்கியிருக்கும் சுஜாதா, திருவாய்மொழியின் கடைசிப் பாடலுடன் இப்புத்தகத்தை முடிக்கிறார்.
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில்பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பரநன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர்ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே (3999)
அகலம், ஆழம், உயரம் இவற்றின் முடிவில்லாத பெருவெளி, அதைவிடப் பெரிய சோதி, அதைவிடப் பெரிய ஞானம், அதனைவிடப் பெரிய என் ஆசை, அதை நீக்கி என்னை சூழ்ந்து கொண்டாயே!
***
அருமையான புத்தகம்... அனைவரும் அறிய பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...
ReplyDeleteஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா ‘ஆழ்வார்கள் – ஓர் எளிய அறிமுகம்.’ தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும், ஆழ்வார்கள் குறித்தும் தெரிந்து கொள்ள விரும்பும் எளியவர்களுக்கு மாத்திரம் அல்லாமல் வைணவத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களும் ரசிக்கக்-கூடிய புத்தகம் இது. சுஜாதாவுக்கே உரித்தான பாணியில் மிக எளிமையாக, மிக மிக சுவாரஸ்யமாக.
ReplyDelete“ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்“ என்ற இந்நூலில் பிரபல எழுத்தாளரும், வைணவருமான சுஜாதா எல்லா ஆழ்வார்களையும், ஆண்டாளையும் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
ReplyDeleteகிபி 650 முதல் 950 வரையிலான காலத்தைத் தமிழில் பக்தி இலக்கிய காலம் என்பர். இதில் வைணவத்தைச் சார்ந்த பாடல்கள் “நாலாயிர திவ்யப் பிரபந்தம்” என்று நாதமுனிகளால் தொகுக்கப்பட்டன.
இவைகளை இயற்றிய ஆழ்வார்கள் பக்தி நெறிகளையே குறிக்கோளாகக் கொண்டவர்கள். திருமாலை எப்போதும் மறக்காதவர்கள். திருமால் ஒருவனே பரம்பொருள் என்று நிரூபித்தவர்கள். மனித நேயத்தை வளர்த்தவர்கள். தமிழுக்கு மேன்மையளித்தவர்கள். இவர்கள் அனைவரும் பகவானின் அம்சங்கள் என்று கருதப்படுகிறார்கள்.
ஆழ்வார்களை எளிய தமிழில் அவர்கள் காலம் ,வாழ்க்கை பற்றிய சரித்திரக் குறிப்புகளுடன் அறிமுகப்படுத்தி பல பாடல்களின் நேரடியான பொருளைச் சொல்லும் இந்நூலின் முதல் நோக்கம் ஆழ்வார்களைப் பற்றியே பற்றியே அறியாதவர்களுக்கு அதன் மேல் ஈடுபாடு ஏற்படுத்துவதே. மேற்கொண்டு அவர்கள் மேல் ஈடுபாடு ஏற்படுத்துவதே.
மேற்கொண்டு அவர்கள் பாடல்களின் உள்ளர்த்தங்களையும் ஸ்வாபதேசங்களையும் அறிய விரும்பினால் அவைகளை விரிவாக பல வைணவ நூல்களில் காணலாம்.
வைணவம் என்னும் மகா சாகரத்தின் கரையில் இருந்து கொண்டு அதை வியப்பாகப் பார்த்து ஆழ்வார்கள் மேல் ஒரு பிரமிப்யையும் மரியாதையையும் வாசகர்களிடம் ஏற்படுத்துகிறார் சுஜாதா.
@திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteஉங்க தொடர் ஊக்கத்திற்கு கோடானுகோடி நன்றிகள் சார்
@ Balhanuman
ReplyDeleteஆஹா ஆஹா! இதுவல்லவோ பின்னூட்டம்.
ரொம்ப நன்றி ஜி! இதை என் ப்ளாகில் தனிப் பதிவாவே சேர்த்திடறேன். அதற்கும் அட்வான்ஸ் நன்றி