குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஆம்னிபஸ் குழந்தைகள் வாரம் கொண்டாடுகிறது.
'குழந்தைத்தன்மையுடன் இருப்பது குழந்தைகளின் உரிமை. அந்த உரிமையை மதிக்க வேண்டியது நமது கடமை'
*
சிறுகதை, குறுநாவல் எனும் எந்த வகைமைக்குள்ளும் அடங்காத ஒரு வடிவில் நிகழ்வுகளின் தொகுப்பாக ஆயிஷா உள்ளது. ஒரு படைப்பு எனப் பகுக்கும்போது 'ஆயிஷா'வின் பலம் சொல்லப்பட்ட கருத்தில் மட்டுமே உள்ளது. புனைவு சொல்லும் கருத்துகள் இலக்கிய ஆக்கங்களுக்குத் தேவையில்லை. ஒரு கருத்தோ, செய்தியோ எந்த வகையிலும் இலக்கியம் ஆவதில்லை. கற்பனை கலவாது, வாசகனை செய்தி வாசிப்பிலிருந்து விலக்கி புனைவு உலகத்துள் இழுத்து வராதவை கதைகள் கூட ஆகாது. செய்தி ஊடகங்கள் போல, நிகழ்வுகளின் தொகுப்பாக அமையும் எந்த பிரதியும் புனைவுக்கு உறுதுணையாக மட்டுமே இருக்க முடியும். புனைவாக முடியாது.
மேற்சொன்ன அனைத்தும் இலக்கிய விமர்சகர்களால் காலங்காலமாகச் சொல்லப்பட்டவை. விமர்சனம் என்பது பகுத்துத் தொகுக்கும் துறை என்பதினால் மேற்சொன்ன அனைத்தும் சட்டங்களாக இருக்கின்றன. ஆனால், பல சமயங்களில் இந்த விதிகளை மீறி ஆக்கங்கள் வெளிப்படும்போது விமர்சகன் தனது பார்வையை மாற்றிக்கொள்ள நேர்கிறது. படைப்பு என்பது எந்தவித எல்லைகளைக்குள்ளும் அடைபட்டதல்ல எனும் அடிப்படை அளவுகோளின்படி தனது முடிவுகளை மாற்றிக்கொள்ள விமர்சகர் தயாராகிறார்.
இரா.நடராசன் எழுதியுள்ள ஆயிஷா எனும் கதை 'ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை' எனும் தலைப்பில் இருந்தாலும் அடிப்படையில் ஒரு சிறுமியின் கதை. நிகழ்வுகளின் தொகுப்பு கதையாகாது என இயல்புவாதிகளுக்கு எதிராக எழும்பும் கூச்சல்களை மீறி ஆயிஷா போன்ற படைப்புகளை நாம் கதைகளாக கருத வேண்டியுள்ளது. அவ்வப்போது இப்படி வெளியாகும் படைப்புகள் அவை முன்வைக்கும் கருத்துகளுக்காகவே கரைகளை உடைத்து படைப்பெனும் தகுதியைப் பெற்றுவிடுகின்றன.
பள்ளிச் சிறுமியான ஆயிஷாவின் கதை ஒரு தனிமனிதனின் கதையாகச் சொல்லப்பட்டாலும், நமது கல்வி முறை மீதும், குழந்தைகளை நடத்தும் சமூக முறை மீதும் பெரிய சாடலை முன்வைக்கிறது. வயதுக்கு வந்த மனிதர்களையும், சமூகச் சக்கரத்துக்கு நிதித்தேவைகளைப் பூர்த்தி செய்யும் மனிதர்களை மட்டுமே மதிக்கும் சமூகங்கள் அழிவை நோக்கி மட்டுமே செல்லும். சமுதாய அடுக்குகளில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை இருப்பதை ஏனோ நாம் மறந்துவிடுகிறோம். குழந்தை வளர்ப்பில் சமூகம் கொண்டிருக்க வேண்டிய பொறுப்பை தட்டிக்கழிப்பதே நமது வேலையாக இருக்கிறது. பள்ளிக்கூட ஆசிரியர்கள் பார்த்துக்கொள்வார்கள் என நாமும், வீட்டில் உள்ளவர்களின் வேலை என ஆசிரியர்களும் குழந்தைகளின் முக்கியத்துவத்தை பந்தாடுகிறோம். ஒவ்வொரு உயிரின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனதன் தேவைக்கு மதிப்பு கொடுக்கும் சமூகமே வளமையான எதிர்காலத்தை நோக்கி அடிபோடும் எனும் அடிப்படை உண்மையை நாம் நினைப்பதில்லை. கனிவும் கருணையும் சக உயிர் மதிப்பும் விலை மதிப்பற்ற சமூக சொத்து என பல நாடுகள் உணர்ந்திருக்கும் வேளையில், டுயல் சிம் செல்போனை இறக்குமதி செய்தால் மட்டும்போதாது, நம்மிடையே இருக்கும் சொத்துகளை மதிக்கும் சமூகமாக நாம் மாற வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஆயிஷா எனும் அநாதை சிறுமிக்கும் இந்த கதிதான் ஏற்படுகிறது. மிக மிக கெட்டிக்காரப் பெண்ணான ஆயிஷாவின் கேள்விகள் அனைத்தும் செவிடன் காதில் சங்கென இருப்பதோடு மட்டுமல்லாது ஆசிரியர்களின் கோபத்தையும் உண்டுபண்ணுகிறது. கற்றுக்கொள்ளும் ஆர்வமும், தன்னைச் சுற்றியுள்ள உலகின் மீதுள்ள அவளது ஆச்சரியமும் அடக்கிவைக்கப்படுகிறது.
வீட்டில் சித்தியின் கொடுமையாலும், கற்றுக்கொள்ள வேண்டும் எனும் தணியாத ஆர்வத்தை அடியோடு அழிக்கும் ஆசிரியர்களாலும் ஆயிஷாவின் வாழ்வு தினந்தோறும் மரணவேதனையுடன் கழிகிறது. அவளது ஆர்வத்தை புரிந்துகொள்ளும் பெளதிக ஆசிரியையால் மெல்ல அவளது இயல்பு வாழ்க்கை திரும்புகிறது என்றாலும், அடிப்படை அன்பும், பராமரிப்பும் இல்லாத சமூகச் சூழலில் அவள் தினம் அடிவாங்குகிறாள். உலகின் மீதுள்ள ஆச்சர்யத்தில் அவள் கேட்கும் கேள்விகள் ஆசிரியர்களை சங்கடப்படுத்துகிறது. அவர்களது பாதுகாப்பான வட்டத்திலிருந்து இப்படிப்பட்ட கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் வன்முறையில் இறங்குகிறார்கள். சிறிதளவு கூட அன்பையும் பாசத்தையும் குழந்தைகள் மீது காட்ட முடியாதவர்களாக மிருகங்களை விட கேவலத்தின் கேவலமாக வலம் வருகிறார்கள்.
தான் வாங்கும் ஒவ்வொரு அடியையும் தாங்கிக்கொள்ள முடியாது, மரத்துபோகும் அமிலத்தைக் குடித்து உயிர் துறக்கும் ஆயிஷாவை காப்பாற்றக் கூட யாரும் முனைவதில்லை. புத்தகத்தில் தவறாக இருக்கிறது எனத் தெரிந்தும் பரிட்சையில் அதே தவறை எழுதும்போதுதான் மதிப்பெண் கிடைக்கும் எனும் விஷயத்தை ஆயிஷாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவளுக்கு இருக்கும் இந்த சிறு பொறுப்பும், சுரணையும் கூட அவளைச் சுற்றி இருப்பவர்களிடம் இல்லை - கடைசிவரை.
நேரடியான நிகழ்வாகச் சொல்லப்பட்ட சிறு கதைதான் என்றாலும், பலவகையான கேள்விகளை நம்முன் வைக்கிறது. எதனால் நாம் குழந்தைகளின் சிறு ஆர்வங்களைக் கூட மதிக்காத கூட்டமாக மாறிக்கொண்டிருக்கிறோம்? வயதானவர்களை நாம் எப்படி நடத்துகிறோம் எனச் சொல்லத்தேவையில்லை. ஒன்றை வைத்தே மற்றொன்றை கணித்துவிடலாம். குழந்தைதானே எனும் அலட்சியமும், தேவையில்லாமல் கேள்வி கேட்கிறது எனும் எரிச்சலும் நம்மைச் சுற்றி என்றும் இருந்துகொண்டே இருக்கிறது. இதே கருத்தைக் கொண்டு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் 'புர்ரா' எனும் கதையை எழுதியுள்ளார். இதே கருத்தில் வெளியான 'தாரே ஜமீன் பர்' போன்ற திரைப்படங்களில் வெளிப்படும் எதார்த்தம் ஒவ்வொரு இந்திய குழந்தையின் சோக சித்திரம்.
குழந்தைகளின் உலகம் மிக அருமையானது, அழகானது. குரங்கு கையில் பூமாலை போல, மிக உயிர்ப்பான அவர்களை நம் சமூகத்திடையே புழங்க விடுகிறோம். நமது வளர்ப்பைப் பார்த்து வளரும் அவர்களும், அடுத்த பூமாலையைப் பிய்த்து எறிய தயாராகிவிடுகிறார்கள். அலட்சியமும், குடும்ப வன்முறையும் குழந்தைகளை மெல்ல சாகடித்துக்கொண்டிருக்கிறது. களிமண்ணை செதுக்குவது போல மெல்ல மென்மையான மனிதனை உருவாக்க வேண்டிய வயதில் இறுக்கமான போலி பாவனைகளும், நிராகரிப்புகளும் அவர்களது குழந்தைப் பருவத்தை அழிக்கிறது. பட்டாம்பூச்சியின் வண்ணங்களையும், மலைகளின் மெளன பிரம்மாண்டங்களையும் பார்த்து ஆச்சர்யப்பட வேண்டிய வயதில், சூப்பர் சிங்கராக மாற்றவேண்டி அவர்களின் குழந்தை உள்ளங்களை அசிங்கப்படுத்துகிறோம். இது அவர்கள் மேல் திணிக்கப்படும் வெட்கப் படவேண்டிய சமூக வன்முறை. உணர்ச்சியற்ற பிண்டங்களாகவும், பெருவயது மனிதர்களின் பாவனை கலைஞர்களாகவும், குழந்தைத்தனத்தை இழந்து நிற்கும் பொறுப்பற்ற குழந்தைகளாகவும் அவர்களை நாம் உருவாக்குகிறோம்.
எழுத்தாளர் - இரா.நடராசன்
இணையத்தில் படிக்க - ஆயிஷா
பட்டாம்பூச்சியின் வண்ணங்களையும், மலைகளின் மெளன பிரம்மாண்டங்களையும் பார்த்து ஆச்சர்யப்பட வேண்டிய வயதில், சூப்பர் சிங்கராக மாற்றவேண்டி அவர்களின் குழந்தை உள்ளங்களை அசிங்கப்படுத்துகிறோம். இது அவர்கள் மேல் திணிக்கப்படும் வெட்கப் படவேண்டிய சமூக வன்முறை. உணர்ச்சியற்ற பிண்டங்களாகவும், பெருவயது மனிதர்களின் பாவனை கலைஞர்களாகவும், குழந்தைத்தனத்தை இழந்து நிற்கும் பொறுப்பற்ற குழந்தைகளாகவும் அவர்களை நாம் உருவாக்குகிறோம்.
ReplyDelete- உண்மையான வரிகள்.