சிறப்புப் பதிவர் R.கோபி.
ஏதோ விக்ரமன் பட டைட்டில் மாதிரி இல்லை?! நமக்கு விக்ரமன் டைப் படங்கள் பிடிப்பதில்லை. இணையத்தில் எப்போதாவது கொஞ்சம் உணர்ச்சிவயப்பட்டு ஒருவரைப் பற்றிக் கொஞ்சம் நன்றாக எழுதிவிட்டாலும் போதும். சம்பந்தப்பட்டவரே வந்து ‘போதும் மாப்ள, நெஞ்சை நக்கிட்ட’ என்றோ மற்றவர்கள் ‘லாலா லாலா லாலா’ என்றோ கருத்தூட்டம் இடுகிறார்கள். நானும் இட்டிருக்கிறேன்:-)
அட, கொஞ்ச நேரம் கூட நல்லதை மட்டுமே நாம் பார்ப்பதில் எவருக்கும் விருப்பமில்லை. நாமும் அடுத்தவரை அவ்வாறு இருக்க விடுவதில்லை. இது நம் பிரச்சனையே அன்றி விக்ரமன் போல உள்ளவர்கள் பிரச்சனை இல்லை.
‘எல்லா நாளும் கார்த்திகை’ என்பதற்கு என்ன பொருள் கொள்வது? தீபாவளி அன்று அதன் பெயருக்கேற்பத் தமிழகத்தில் தீபங்கள் ஏற்றப்படுவதில்லை என்பது ஒரு நகைமுரண். அதிரடியான ஐப்பசி. தொடர்ந்தாற்போல அகல்விளக்கின் சாந்தம் கார்த்திகையில். கார்த்திகைக்கும் வெடி வெடிக்கும் ஆசாமிகள் உண்டு:-) ஐப்பசி ஒருவிதமான கொண்டாட்டம் என்றால் கார்த்திகை வேறொரு விதத்தில்.
தீபத்திற்கும் எனக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. கோழி முட்டைக் கண்ணாடி விளக்கு, பித்தளைத் தட்டு விளக்கு, மஞ்சள் கலர் குண்டு பல்பு, அகல் விளக்கு ஆகியவற்றுக்கும் எனக்கும் உள்ள தொடர்பை எழுதாமல் என் சுயசரிதையை எழுத முடியாது. பதிப்பாளர் யாரேனும் கிடைத்தால் நாளைக்கே வேலையை ஆரம்பித்துவிடலாம்:-) இன்னைக்கு முடியாது. இன்று இந்தக் கட்டுரையை முடித்துத் தருவதாக ஆம்னிபஸ் அன்பர்களுக்கு வாக்குக் கொடுத்துவிட்டேன்:-)
நிற்க, எல்லா நாளும் கார்த்திகை தொகுப்பை எழுதியவர் திருவண்ணாமலை வாசி. எங்கோ திருவண்ணாமலையில் இருந்து நூற்று எண்பது கிலோ மீட்டர் தொலைவில் பிறந்து வளர்ந்த எனக்கு தீபம் இவ்வளவு முக்கியமான விஷயம் என்றால் எல்லா தீபங்களுக்கும் சிகரமான தீபத்தைப் பார்க்கும் பேற்றினைப் பெற்றவருக்குச் சொல்ல நிறைய இருக்கும். அந்தத் தீபம் எத்தனையோ அதிர்வுகளையும் படிமங்களையும் அவருக்குத் தந்திருக்கும்.
“ஒவ்வொரு தீபத்தன்றும், எங்கள் கம்பீர மலையின் உச்சியையே பார்த்துக்கொண்டிருக்கும், அத்தருணம் அதற்குமுன் உணராததது. சக மனிதர்களின் அவசரங்களைப் போல் அதை ஆன்மீக உணர்வு என வகைப்படுத்திவிட முடியவில்லை. அதற்கும் மேலே, வீட்டிற்கு வரும் ஒவ்வொரு புது மனிதனை நான் சந்திக்கும்போதும் இவ்வுணர்வை அடைகிறேன் அல்லது அடைகிறோம்”- முன்னுரையில் ஆசிரியர்.
தொகுப்பைப் படித்து முடித்ததும் நம்முள் ஒரு பெரிய கேள்வி எழுகிறது. இந்த அளவிற்கு நாம் நண்பர்களையும் முக்கியமானவர்களையும் கொண்டாடுகிறோமா என்று (“நண்பர்களை மதிக்கவும், கௌரவப்படுத்தவும், கொண்டாடவும் பவாவிடமிருந்தே கற்றுக் கொண்டிருக்கிறேன்” – எஸ். ராமகிருஷ்ணன்). ராஜவேலின், கோணங்கியின் மீதான கட்டுரைகளின் பாதிப்பு படித்து முடித்துச் சில மணி நேரங்களுக்கு இருந்தது. இந்தத் தொகுப்பை வாங்கக் கோணங்கியின் மீதான கட்டுரையை முன்பே இணையத்தில் வாசித்திருந்ததும் ஒரு காரணம்.
இன்னொரு பெரிய கேள்வியும் உண்டு. எல்லாவற்றிலும் நல்லதையே பார்க்க முடியுமா? (“எங்கும் எதிலும் நல்லதை மட்டும் பார்க்கக்கூடியவர். எந்தக் கரன்சியை விடவும் நல்லியல்புக்கு செலாவணி அதிகமென பவாவைக் கொண்டே நான் நம்பி வருகிறேன்” - ஜெயமோகன்).
கட்டுரைகளுக்கான தலைப்புகள் அபாரம். குறிப்பிட்டுச் சிலவற்றை இங்கே சொல்லலாம். தக்கையின் மீது பதியாத கண்கள் (சா. கந்தசாமி), சொடக்கில் கலைந்த மிகு கொண்டாட்டம் (ராஜவேல்), நதி நீரில் மிதக்கும் புல்லாங்குழல் (ச. தமிழ்ச்செல்வன்).
அய்யனார் விஸ்வநாத்தின் முன்னுரையில் இருந்து ஒரு பத்தியை எடுத்துக் கட்டுரையை முடிக்கிறேன்.
“பவாவின் எழுத்தை விமர்சகச் சட்டத்திற்குள் வைத்துக் கூறு போட்டு இது இந்தவகை என நிறுவுவதில் எனக்கு விருப்பமில்லை. தேசங்களற்ற நாடோடியின் பாடல் எந்த ராகத்தில் இருந்தால்தான் என்ன? என்ன மொழியில் இருந்தால்தான் என்ன? அந்தக் குரலின் வசீகரம் அல்லவா நம்மை அடித்துப் போடுகிறது! அந்தக் குரலின் எளிமையல்லவா நம்மை அசைத்துப் பார்க்கிறது! அடிவயிற்றிலிருந்து பீறிட்டெழும் அந்த சாரீரமல்லவா நம்மைக் கரைய வைக்கிறது! பவாவின் எழுத்து அத்தகையதுதான். பவாவின் எழுத்தை நாடோடியின் பாடலுக்கு நிகராகத்தான் பார்க்கிறேன்.”
எல்லா நாளும் கார்த்திகை - பவா செல்லத்துரை
கட்டுரைத் தொகுப்பு, வம்சி பதிப்பகம்
208 பக்கங்கள் / விலை 130 ரூபாய்
இணையம் மூலம் வாங்க: கிழக்கு
பவா நட்போம்பலில் ஒரு ஒளிவிளக்கு.
ReplyDeleteஎஸ்.ரா வெறும் பலூன்.
எல்லா நாளும் கார்த்திகை' தொடராக வந்த போதே விரும்பி வாசித்தேன். பவா செல்லத்துரையை பார்க்கும் போது பொறாமையாகயிருக்கிறது. அந்நூல் குறித்த தங்கள் அறிமுகம் அருமை.
ReplyDeleteஅன்பு R.கோபி அவர்களே, வணக்கம். இது போன்ற பகிர்தலின் போது கவர் யாரு டிசைன் செய்தது, யாருடைய புகைப்படம்? இது போன்ற விவரங்களும் அத்தியாவசியம்... புகைப்படக்கலை நமது தினசரி வாழ்க்கையின் அங்கமானதோடல்லாமல் யாரும் எப்போது வேண்டுமானாலும் புகைப்படம் எடுக்கலாம் எனும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. என்றபோதும், வரலாற்றின் கால் சுவடுகளை ஒரு நொடியில் நிரந்தர அனுபவமாக மாற்றும் ஆற்றல் பெற்ற இந்தக்கலைக்கு ஈடு இணையே இல்லை. ரசம் (mercury) போன்ற மிக ஆபத்தான ரசாயனங்களை கொண்டு செயல்புரியும் புகைப்பட விஞ்ஞானிகளையும் கலைஞர்களையும் 'ரச சித்தர்' என்றே பண்டைக்காலத்தில் அழைத்தனர். புகையினால் (mercury fumes) உருவாகும் படமானதால் தான் 'புகைப்படம்' என்ற பெயரே இக்கலைக்கு ஏற்பட்டது. அன்பு நண்பரே தங்களைப் போன்ற கலை ஆர்வாளர்கள் புகைப்படங்களை உபயோகப்படுத்தும்போது புகைப்படக்கலைஞர்களின் பங்களிப்பை உணர்ந்து அதற்கான சரியான அந்தஸ்தை வழங்குவது நன்றாகும். நமது திருவண்ணாமலையில் புகைப்படக்கலையினை மேம்படுத்தும் நோக்கத்துடனும் புகைப்படக்கலையினை பாதுகாக்க சமகால புகைப்பட பெட்டகம் நிறுவும் எண்ணத்துடனும் ஏகலோகம் அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது. எமது பெட்டகத்தில் ஒன்றான புகைப்படமே இந்த புத்தகத்தின் அட்டையில் உபயோகப்படுத்தியுள்ள படம். இந்த புகைப்படம் பிரபல புகைப்படக்கலைஞரான அபுல் கலாம் ஆசாத்தின் London night series ல் உள்ளடங்கியது. அது மட்டுமல்ல, இந்த புத்தகத்தின் அட்டைப்பட டிசைன் செய்ததும் ஆசாத் தான். இந்திய புகைப்படஉலகிற்கு அபுல் கலாம் ஆசாத் அவர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பு மிக அதிகம். இந்திய புகைப்பட வரலாற்றில் தனக்கென ஒரு பிரத்யேக அந்தஸ்தை பெற்றுள்ளார் என்பதும் தாங்கள் அறிந்ததே. நன்றி !!!
ReplyDelete