இந்த சதுப்பு நிலக் காடுகளில் அழகழகான பறவை வகைகள் சிலவற்றை நாம் காணலாம். இவை உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கே வருபவைகளாம்.
பள்ளிக்கரணைக்கு வரும் சில பறவைகள் (நன்றி: http://aarbalaji.blogspot.in)
இவற்றுக்கு நாம் செய்து வரும் கொடுமைகளைக் கொஞ்சம் பட்டியலிட்டுப் பார்க்கலாமா?
1) சுற்றுவட்டாரம் முழுமையும் ஏரியாக (அல்லது ஏரிகளாக) இருந்த பகுதிகளை அழித்தொழித்து குடியிருப்புகளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம்.
2) Perungudi Dump Yard என்று கூகுளாரிடம் கேட்டுப் பாருங்கள். உங்கள் கண்களில் ரத்தம் வடியச் செய்யும் உண்மைகளைக் கக்குவார். சென்னை மொத்தத்தின் கழிவுகளை இந்தச் சதுப்புநிலக் காட்டின் அருகிலேயே கொட்டித் தீர்க்கிறோம்.
3) சதுப்புநிலக் காட்டினிடையே அமைந்த (நான் தினந்தோறும் பயணிக்கும்) சாலையில் புயல் வேகத்தில் விரையும் வாகனங்களின் இரைச்சல் வழியாகவும், அவை எழுப்பும் விதவித ஹார்ன் ஒலி வழியாகவும் நிச்சயம் அமைதி விரும்பி இங்கே வந்தமரும் பறவைகளுக்கு பெரும் இடையூறைத் தருகிறோம்.
பறவை / விலங்கு ஆர்வலர்கள் இந்தப் பகுதியைக் காப்பாற்ற இயன்ற வரையில் போராடி வருகிறார்கள். அரசு இயந்திரமும் ஒருபக்கம் ஆக்கிரமிப்பிற்கு மறைமுகத் துணை நின்றாலும் மறுபக்கம் இந்தக் காட்டைக் காக்க உதவி வருகிறது. எனினும் இன்னமும் எத்தனை வருடங்களுக்கு இந்த சதுப்புநிலக் காடுகள் என்னும் அடையாளம் பள்ளிக்கரணைக்கு இருக்கும் என்பதை நாமறியோம்.
இப்படி நம் கண்ணெதிரிலேயே பறவைகளின் இருப்பிடம் ஒன்று நம் ஆக்கிரமிப்பிற்கு ஆளாகி அழிந்தொழிவதைக் காண்கையில் “வேடந்தாங்கல்” போன்று பேணப்படும் இடத்தின் அவசியத்தை நாம் உணர்கிறோம்.
நவநாகரிக மனிதனின் சுரண்டல் மனோபாவப் பிறப்புக்கு முன்னமே ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன் பிரிட்டிஷார் காலத்தில் வேடந்தாங்கல் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு இன்றுவரை பேணப்படுவது நிச்சயம் மகிழ்ச்சிக்கு உரிய விஷயம். அந்த ஊரைப் பற்றிய, அங்கே வரும் பறவைகள் பற்றிய நூலே “இலக்கிய வீதி” இனியவனின் “வேடந்தாங்கல்”.
நாராயணப் பறவை, நத்தைக் கொத்தி நாரை, மத்தாளிக் கொக்கு, அரிவாள் மூக்கன், பாம்புத் தாரா, துடுப்பு நாரை வண்ண நாரை, வெண் கொக்கு, நீர்க் காக்கை, நீர்வாத்து, நொள்ளை மடையான், வக்கா, உண்ணிக் கொக்கு, கிளுவை, முக்குளிப்பான், கானாங்கோழி, மரத்தாரா, குள்ளத்தாரா, ஊசிவால் பறவை, நீர்ப்புறா, ஜம்புக் கோழி, நாமக் கோழி, உப்புக் குருவி, உள்ளான்.
இவையெல்லாம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு விருந்தினர்கள்.
”வேடந்தாங்கல்” புத்தகத்தின் ஆசிரியர் “இலக்கியவீதி” இனியவன் கம்பன் கழகத்தின் செயலாளர். இந்தப் புத்தகத்தை எழுத அவருக்கான முழுமுதல் தகுதி அவர் வேடந்தாங்கலைச் சேர்ந்தவர் என்பதுவே. அடுத்த மிகப் பெரும் தகுதி இந்தப் புத்தகத்தை நீங்கள் வாசித்தால் உங்களுக்குப் புரியும். எண்பதே பக்கங்கள் கொண்ட புத்தகம். அதனையும் மிக சுவாரசியமாக, தகவல்களின் திரட்டாக, நறுக்கென்ற மொழியில் தந்திருக்கிறார் இனியவன். கம்பன் வழி வந்தவர் கரங்களில் உருவான நூலை வாசிப்பதே ஒரு அலாதியான அனுபவம்.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உருவான கதை, இடையில் இந்தச் சரணாலயம் எதிர்க்கொண்ட சிக்கல்கள், மீண்டும் புத்துயிர்ப் பெற்று சரணாலயம் மீண்டும் உருவான கதை என்று முதலில் சுருக்கமாக வரலாற்றைச் சொல்கிறார் ஆசிரியர்.
தாங்கள் வசிக்கும் பகுதியின் சீதோஷ்ண நிலை பனிசூழ்ந்ததாக மாறும் காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் சில அரிய வகைப் பறவைகள் வாரக்கணக்கில் பயணம் செய்து ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து வந்து வேடந்தாங்கலை வருடம் தவறாமல் அடைவது எத்தனை பெரிய ஆச்சர்யம் பாருங்கள்.
அவை உள்ளூர்ப் பறவைகள் இல்லையா? அவை வெளிநாடுகளில் இருந்துதான் வருகின்றன என்பதற்கு என்ன ஆதாரம்? அதைப் பற்றியும் புத்தகத்தில் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.
வேடந்தாங்கலின் சிறப்பு, பயணம் செய்து அடையும் வழி, பேருந்து வசதி குறித்த தகவல், வேடந்தாங்கலுக்கு வர ஏற்ற நேரம், அங்கே நமக்குத் தங்கும் வசதி, உணவு வசதிகள், பறவைகளைப் பார்க்க அங்கே இருக்கும் ஏற்பாடுகள் என நமக்குத் தேவையான எல்லாத் தகவல்களும் புத்தகத்தில் உண்டு.
நன்றி: கூகுள்
கடைசியாக நூலாசிரியர் தரும் சில டிப்ஸ்கள் மிக முக்கியமானவை:
அனைத்துப் பறவைகளையும் முழுமையாய்க் கண்டு களிக்க, குறைந்த பட்சம் இரண்டு மூன்று நாட்களாவது வேடந்தாங்கலில் தங்கியிருக்க வேண்டும். இல்லை என்றால், இயலும் போது - சில முறையாவது இங்கே வந்து - ஓய்வாகவும், நுணுக்கமாகவும், ஆர்வமாகவும் பார்க்க வேண்டும்.
விவர நூலும், பைனாகுலரும், தக்கவர் துணையும் கிடைத்தால் - பறவைகளை ஓர் ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தோடு காணவும், அவற்றின் சுவாரசியமான பழக்க வழக்கங்கள் அல்லது வாழ்க்கைமுறைகளை நிறைவாக உணர்ந்து உவகை கொள்ளவும் வசதியாக இருக்கும்.
எந்த ஊராக இருக்கட்டும், ”அந்த ஊருக்குப் போனேன்யா! என்னாத்த சொல்லு. அங்கன அப்படி ஒண்ணும் இல்ல பாத்துக்க”, என்று மேம்போக்காக எதையேனும் பார்க்காமல் மேய்ந்துவிட்டு வந்து தம் கருத்தைப் பகிர்பவர்கள் அவசியம் மனதில் பதிக்க வேண்டிய கருத்து இது.
வேடந்தாங்கல் - “இலக்கியவீதி” இனியவன்
தண்ணீர்ப் பறவைகள் பற்றிய விவரம்
வாசுகி பதிப்பகம், வேடந்தாங்கல்
விலை.ரூ.30/- (முதல் பதிப்பு டிச.2005)
(புத்தகம் இணையத்தில் இல்லை. புத்தகப் பிரதி வேண்டுவோர் பின்னூட்டத்தில் குறிப்பிடவும். நேரம் கிடைக்கையில் வாங்கி அனுப்புகிறோம்)
எங்கே கிடைக்கிறது இந்தப் புத்தகம்?
ReplyDelete