ஒருமுறை அறிஞர் அண்ணாவை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றுமாறு கல்லூரி ஒன்றிலிருந்து அழைத்திருந்தார்கள். அழைத்தவர் அந்த கல்லூரி நிர்வாகத்தின் தலைவர். அந்தத் தலைவர் அறிந்திராத விஷயம் என்னவென்றால், அவர் நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்க யாரிடம் பொறுப்பை ஒப்படைத்து இருந்தாரோ அந்தக் குழுவினர் அரசியல் அல்லது பிற காரணங்களுக்காய் அறிஞர் அண்ணாவின்பால் அளவற்ற வெறுப்பைக் கொண்டிருந்தவர்கள். அவர்களின் பின்னால் அந்தக் கல்லூரியில் பெரிய கூட்டமே இருந்தது.
அண்ணா பெரும்பாலும் எழுதி வைத்துக் கொண்டெல்லாம் பேசமாட்டாராம். மேடையேறி மைக்கைப் பிடித்தாரென்றால் மடைதிறந்த வெள்ளமெனத் தன்னால் வருமாம் பேச்சு.
அப்படிப்பட்ட அண்ணாவை அவமானம் செய்யவேண்டும் என்ற நோக்கில் அண்ணா பேசுவதற்கு மேடையேறியதும் அவரிடம் அழைத்த மக்கள் அவருக்குத் தந்த தலைப்பு, “செருப்பு”.
”நீ என்னதான் பேசுற பாப்போம்”, என்ற பார்வையோடு திரண்டிருந்த கூட்டத்திற்கு எதிரே ”செருப்பு” என்னும் தலைப்பில் பேசத்துவங்கிய அண்ணா பேசி முடித்தபோது மூன்று மணிநேரங்கள் முடிந்து போயிருந்ததாம். யாரெல்லாம் அண்ணாவை அவமானம் செய்ய நினைத்தார்களோ அவர்களெல்லாம் மந்திரம் போட்டுக் கட்டிப் போட்டாற்போல் அவர் பேச்சில் கட்டுண்டு கிடக்க மூன்று மணிநேரம் முடிந்ததும் அவர் போட்ட ஒற்றைச் சொடுக்கில்தான் நிகழ்காலத்திற்குத் திரும்பினார்களாம்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஸ்தாபகர் (அல்லது ஸ்தாபகர்களுள் ஒருவர்), கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என்று காலங்காலமாக “திராவிட” என்ற வார்த்தையைக் கொண்ட எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் “தலைவர்” என்பவையெல்லாவற்றுக்கும் முன்னால் அறிஞர் அண்ணாவின் ஒரு பெரிய அடையாளம் அவர் ஒரு தலைசிறந்த எழுத்தாளர், பேச்சாளர் என்பதுவே. சுதந்திரம் பெற்றுத் தந்த கட்சி என்னும் பெரிய அங்கீகாரத்தை மக்களிடையே கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியை வென்று ஆட்சிமேடையைப் பிடிக்க திமுக’விற்கு உதவியது அண்ணா, கருணாநிதி போன்றவர்களின் பேச்சு, எழுத்து வன்மையேயன்றி வேறில்லை.
அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் எதனையும் இதற்குமுன் நான் வாசித்ததில்லை. சமீபத்தில் ஒரு பழைய பேப்பர் கடையில் வழக்கம் போல புத்தகங்களுக்காய்ப் போட்டுக் கொண்டிருந்த சொளையத்தில் சிக்கியதே இந்த “வேலைக்காரி” புத்தகம். அண்ணாவின் ஓர் இரவு மற்றும் வேலைக்காரி இரண்டு புத்தகங்களும் இன்றளவும் பேசப்படும் மிகப்பிரபலமானவை என்பது அனைவரும் அறிந்த சேதி.
1947’ல் எழுதப்பட்ட, ஒரு நாடக வடிவில் கதாபாத்திரங்கள், காட்சி அமைப்புகள், வசனங்கள் என்று விவரிக்கும் ஒரு கதை. அந்தக் காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் முற்போக்கு சிந்தனை கொண்ட ஒரு ப்ளாட்.
பணக்கார முதலாளி. கடனுக்குப் பணம் தந்து ஊரைச் சுரண்டுபவர். அவர் வீட்டு வேலைக்காரி அமிர்தம். அவரிடம் பணம் வாங்கித் திருப்ப முடியாமல் தற்கொலை செய்து செத்துப் போனவரின் மகனான கதாநாயகன் ஆனந்தன் (எ) பரமானந்தன். அவன் அந்த பணக்கார முதலாளியைப் பழிவாங்கச் செய்யும் தந்திரோபாயங்கள். அதற்கு உதவி பண்ணும் மணி என்னும் சேட்டைக்கார நண்பன். அந்த வேலைக்காரி அமிர்தத்தைக் காதலிக்கும் பணக்கார முதலாளியின் மகன் மூர்த்தி. இரண்டு ரவுண்டு மாறுவேட நாடகங்கள் நடத்தி முதலாளிக்கு ஆனந்தன் கொடுக்கும் குடைச்சல்கள். பணக்கார முதலாளி க்ளைமாக்ஸில் திருந்திவிடுவதாக நிறையும் கதை.
ஒருபக்கம் பணம் படைத்தவர்களின் அதிகார ஆணவச் செயல்பாடுகள், மறுபுறம் ஜாதிரீதியான உயர்வு/தாழ்வு சார்ந்த செயற்பாடுகள். இரண்டையும் பிடிபிடியெனப் பிடிக்கிறார் அறிஞர் அண்ணா. சேட்டைக்கார மணி வழியே ஆத்திகர்களின் இடுப்பிலும் இடிக்கிறார்.
பஞ்சவர்ணக் கிளியைப் பிடித்துக் கொஞ்சி விளையாடலாம் என்று எண்ணிப் பனைமரம் ஏறும்போது பறந்தோடிவிட்டது, ஜாதிபேதமென்கிற கூண்டுக்கு; தரித்திரக் கம்பிகள் வேறு; என்ன உலகம் இது?
இப்படி அங்கங்கே வளையவரும் அடுக்குத்தொடர் வசனங்கள்.
காளியைப் பார்த்துக் கோபத்தில் கதாநாயகன் கொக்கரிக்கின்றான்
மாலை! உனக்கு மலர்மாலை! பாதகன் அளித்த பலவகையான பழங்கள்! அக்கிரமக்காரன் அளித்த பரிசு, வகைவகையான படைப்பு, வஞ்சகன் கொடுத்த நெருப்பு, என்னைப் போன்ற ஏழைகள் உன் பக்கத்தில் வருவதைத் தடுக்கும் பரம சத்ருக்கள். இதோ பார்! ஏழை அழுத கண்ணீர்! எளியோர்களின் துயர்! ஏமாந்தவர்களின் ரத்தம். பக்தா! நீயா இப்படிப் பேசுகிறாய் என்றா கேட்கிறாய் நீ? கேள், தைரியமிருந்தால்! இருதய சுத்தியுடன் பதில் கூறுகிறேன் கேள்.......
இப்படி உணர்ச்சிக் கொந்தளிக்கும் வசனங்கள். அந்தக் காலகட்டத்தில் நாடகத்திற்காய் எழுதப்பட்ட இந்தக் கதையானது பின்னர் திரைப்படமானதில் வியப்பொன்றுமில்லை.
முதற்பாதி கொஞ்சம் ரொம்பவே நாடகத்தனமாகத்தான் இருக்கிறது (அட, நாடகம்தானே இது?). இரண்டாம் பாதி ஆள்மாறாட்டம், கதாநாயகன் முதலாளியை வறுத்தெடுப்பது என்று சுவாரசியம் நிரம்பிச் செல்கிறது.
முதலாளியின் மகன் மூர்த்தியைக் கதாநாயகன் பரமானந்தன் வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கிறான்.
(இருவரும் சண்டை போடுகின்றனர். மூர்த்தி பரமானந்தனை உருட்டிவிட்டுப் போய் விடுகிறான்)
பரமானந்தன்: உருட்டிவிட்டானப்பா........
மணி (காமெடி நண்பன்): மீசையில் மண் ஒட்டவில்லையே?
இப்படி அங்கங்கே தூவிவிட்ட அந்தக் காலகட்டத்துக் காமெடி வசனங்களும் உண்டு.
கதை எப்படிப் பயணிக்கிறது என்பதை நாம் எளிதாக யூகிக்க முடிந்தாலும் அண்ணாவின் எழுத்துநடையில் படிப்பதற்கு மிகவும் சுவாரசியமாகவே இருக்கிறது புத்தகம். இந்தக் காலகட்டத்திற்கு இந்தக் கதை கொஞ்சம் (நிறையவே) வேடிக்கையாகத் தோன்றினாலும் இந்தக் கதையானது தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்தது எனலாம்.
1947’ல் எழுதப்பட்ட இந்த நாடகத்தின்பால் பேரார்வம் கொண்ட ஜூபிடர் பிக்சர்ஸார் இந்த நாடகத்தைத் திரைப்படமாக எடுக்க விருப்பப்பட்டு அண்ணாவை அணுகினார்களாம். ஒன்றிரண்டு ரவுண்டுகள் விவாதத்திற்குப் பின்னர் திரைப்படத்திற்கு அண்ணாவே சிலப்பல மாற்றங்களை அங்கங்கே வைத்து திரைக்கதை எழுதித் தந்தார். சமுதாய ஏற்றத்தாழ்வு, சாதிமத பேதம் ஆகியவற்றுக்கு எதிராக சாட்டையடி தந்த இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி ஓடியிருக்கிறது.
இந்தத் திரைப்படத்தின் வெற்றியின் வாயிலாக, இந்தத் திரைப்படத்திற்கு மக்கள் தந்த ஆதரவின் வழியாக... சினிமாவைத்
தங்கள் அரசியல் வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியும் என்றும் தங்கள் மதிப்பினை
உயர்த்திக் கொள்ளும் உபகரணமாக சினிமாவைப் பயன்படுத்தமுடியும் என்றும் அண்ணாவும் அவரது
தொண்டர்களும் முழுக்க நம்பினார்கள் என்று குறிப்பிடுகிறார் ராண்டார் கய்
அப்படி நம்பினது நம்பினபடிக்கு நடந்தது. அதன் பிறகு நடந்தவை கடந்தவை எல்லாவற்றையும்தான் இந்த உலகம் அறியுமே!
வேலைக்காரி - அறிஞர் அண்ணா
நாடகம் / சீதை பதிப்பகம்
தொண்ணூறு பக்கங்கள். விலை ரூ. 25/-
இணையம் மூலம் வாங்க: நூல் உலகம்
சுவையான விமர்சனம்...
ReplyDeleteசிறந்த நூல் அறிமுகத்திற்கு நன்றி...