பட்டினத்தார் - ஒரு பார்வை
ஆசிரியர் : பழ.கருப்பையா
பக்கங்கள் : 102
விலை : ரூ.75
கிழக்கு பதிப்பகம்
ஆசிரியர் : பழ.கருப்பையா
பக்கங்கள் : 102
விலை : ரூ.75
கிழக்கு பதிப்பகம்
***
பட்டினத்தார். இயற்பெயர் சுவேதாரண்யன். திருவெண்காடர் என்றும் அழைக்கப்பட்டார். பெரிய செல்வந்தராகப் பிறந்தவர், தக்க வயது வந்ததும் வாணிபம் செய்வதற்காக கடல் கடந்து அனுப்பப்பட்டார். திரும்பி வந்தவர், தன் சொந்தம் பந்தம் சொத்துக்கள் அனைத்தையும் துறந்து துறவி ஆனவர். பட்டினத்தார் பற்றி முதலில் படித்தது ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ புத்தகத்தில்தான். ஒரு தனி அத்தியாயம் முழுக்க இவரைப் பற்றியே எழுதி அதில் அவரது திருமண வாழ்க்கை, தொழில், பின் துறவு மற்றும் அவர் பாடிய பாடல்கள் என அனைத்தைப் பற்றியும் விளக்கியிருப்பார் கவியரசர். அதைத் தொடர்ந்து மேலும் பட்டினத்தாரைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமென்று வாங்கியதே இந்தப் புத்தகம். ஆனால், படிக்கும்போதே தெரிந்தது, இது பட்டினத்தாருடைய வாழ்க்கை வரலாறு கிடையாது என்பது. பின் வேறென்ன இருக்கிறது இந்தப் புத்தகத்தில்? இது பட்டினத்தாரைப் பற்றி ஆசிரியர் செய்த ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு.
புத்தக அறிமுகத்தில் கூறியிருப்பதைப் போல் - பட்டினத்தாரின் பன்முக ஆளுமையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அதிகம் அறியப்படாத பட்டினத்தாரின் அரிய சிந்தனைகளை ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். பட்டினத்தார் சித்தரா, நகரத்தாரா, அவர் பெண்களை சாடிய பின்னணி என்ன?, உடலை சாடிய பின்னணி என்ன? என்பது போன்ற தலைப்புகளில் மொத்தம் ஒன்பது கட்டுரைகள். தன் வாதங்களுக்கு ஏற்ப, பட்டினத்தாரின் பாடல்களை சான்றாகவும் எடுத்துக் காட்டி நமக்கு புரியவைக்கிறார்.
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
இந்தப் பாடலில் துவங்கி பட்டினத்தார் பாடிய பத்து பாடல்கள் மிகவும் பிரசித்தம்.
பட்டினத்தார் சித்தரா?
சித்தர்களின் காலம் கிபி. 14, 15ம் நூற்றாண்டுகள். இவர்கள் சாதி எதிர்ப்புணர்ச்சி உடையவர்கள்; குறிப்பாக பார்ப்பன எதிர்ப்புணர்வாளர்கள். நிறுவன வழிபட்ட சமயத்தையும் சடங்குகளையும் மரபுகளையும் கடுமையாகச் சாடும் இயல்புடையவர்கள் என்று கூறிவிட்டு, பட்டினத்தாரின் பாடல்களை அலசி ஆராய்ந்துள்ள ஆசிரியர், இவர் சித்தர் கிடையாது என்று கூறுகிறார். ‘வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ?’ ‘தாவாரம் இல்லை, தனக்கொரு வீடில்லை, தேவாரம் ஏதுக்கடி குதம்பாய்?’ என்றெல்லாம் பாடிய சித்தர்களை 'கலகக்காரார்கள்’ (rebels) என்று அழைக்கும் இவர், பட்டினத்தார் மரபுசார்ந்தே நிற்கிறாரே தவிர அவரது பாடல்களில், எந்தவித கலகக்குரலும் இல்லை என்கிறார்.
துறவு:
பட்டினத்தாரின் வாழ்வில் துறவு ஒரு முக்கியமான கட்டமாகும். தாய், மனைவி ஆகியோரின் பார்வையிலிருந்து இவரது துறவு பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர். இந்தக் கட்டுரையில் பல்வேறு பாடல்களிலிருந்து மேற்கோள்கள், பட்டினத்தாரின் தாயார் இறந்தபோது பெண்கள் வைக்கும் ஒப்பாரியிலிருந்து சில வரிகள் என்று பலவற்றை குறிப்பிட்டு எழுதியுள்ளார்.
பல்லக்கும் ஆள் அம்பு சேனையுமாக வாழ்ந்தவர். காதல் மனையாளின் முயக்கத்தால் உயிர் தளிர்க்கப் பெற்றவர். பாசத்தாயின் அன்பில் நனைந்தவர். துறவு மேற்கொள்ள என்ன காரணம்? இதைத் தூண்டியவர் யார்? இந்த நாடகத்தை நடத்த அந்த சிவனே வந்தானாம். ஒரு அந்தணர் உருவில் பட்டினத்தார் வீட்டிற்கு வந்து, பட்டுத்துணியால் சுற்றிய ஒரு பொருளை ஓர் அழகிய பெட்டியில் வைத்துத் தாய் கையில் கொடுத்து மறைந்தான். பட்டினத்தார், அது ஒரு விலையுயர்ந்த பொருளாக இருக்கக்கூடும் என்றெண்ணி திறந்து பார்க்க, அதில் ‘காதறுந்த ஊசியைக்’ காண்கிறார்.
திருவிடைமருதூரான் கேட்கிறார் - ஒரு நாள் திடுமென மூச்சு நின்றுவிடும், நீ அறிவாயா? அந்த சமயத்தில் உன்னுடைய திரண்ட செல்வம் உதவுமா? காதறுந்த ஊசியாயினும் உன்னுடம் வருமா? இவை எதற்கும் பட்டினத்தாரிடம் பதில் இல்லை.
சூதுற்ற கொங்கையும் மானார் கலவியும் சூழ்பொருளும்
போதுற்ற பூசலுக்கு என் செய்ய ஆம்? செய்த புண்ணியத்தால்
தீதற்ற மன்னவன் சிந்தையில் நின்று தெளிவதற்கோ
காதற்ற ஊசியைத் தந்து விட்டான் என்றன் கைதனிலே!
போதுற்ற பூசலுக்கு என் செய்ய ஆம்? செய்த புண்ணியத்தால்
தீதற்ற மன்னவன் சிந்தையில் நின்று தெளிவதற்கோ
காதற்ற ஊசியைத் தந்து விட்டான் என்றன் கைதனிலே!
ஒரு சிறிய காதற்ற ஊசி, மொத்த வாழ்க்கையையும் புரட்டிப் போட்டு விடுகிறது. பட்டினத்தார் துறவு மேற்கொண்டு விடுகிறார்.
பட்டினத்தாரின் சொத்து:
ஒரு துறவிக்கு என்ன சொத்து இருக்க முடியும்? பட்டினத்தார் தன்னிடம் ஏகப்பட்ட செல்வம் இருப்பதாக சொல்கிறாராம். அவை என்னென்ன?
கறை அற்ற பல்லும் கரித்துணி ஆடையும் கள்ளம் இன்றிப்
பொறையுற்ற நெஞ்சமும் பொல்லாத ஊனும் புறந்திண்ணையும்
தரையிற் கிடப்பும் இரந்துண்ணும் ஓடும் சகமறியக்
குறைவற்ற செல்வம் என்றே கோலமாமறை கூப்படுமே!
பொறையுற்ற நெஞ்சமும் பொல்லாத ஊனும் புறந்திண்ணையும்
தரையிற் கிடப்பும் இரந்துண்ணும் ஓடும் சகமறியக்
குறைவற்ற செல்வம் என்றே கோலமாமறை கூப்படுமே!
1. வெற்றிலை பாக்கு மெல்லாததால் பெற்ற கறையற்ற பல்
2. கரித்துணி (ஆடை)
3. கள்ளம் இல்லாத பொறுமையான நெஞ்சம்
4. பிறர் வேண்டாமென்று கருதி வெறுத்துத் தந்த பழஞ்சோறு (பொல்லா ஊண்)
5. தரையில் கிடப்பு
6. இரந்துண்ணும் ஓடு
2. கரித்துணி (ஆடை)
3. கள்ளம் இல்லாத பொறுமையான நெஞ்சம்
4. பிறர் வேண்டாமென்று கருதி வெறுத்துத் தந்த பழஞ்சோறு (பொல்லா ஊண்)
5. தரையில் கிடப்பு
6. இரந்துண்ணும் ஓடு
இவையெல்லாம் விளக்கிவிட்டு ஆசிரியர் தற்கால துறவிகளையும் ஒருமுறை ஒப்பிட்டு, இவர்கள் பட்டினத்தாரிடமிருந்து கற்க வேண்டியது நிறைய உள்ளது என்றும் ஆதங்கப்பட்டு எழுதியுள்ளார்.
பெண் சாடற் பின்னணி:
பட்டினத்தார் பெண்களை ஏன் சாடுகிறார் என்பதற்கு ஒரு தனி கட்டுரை. வழக்கம்போல் பல பாடல்களிலிருந்து உதாரணங்கள்.
மாதரை மகிழ்ந்து காதல் கொண்டாடும்
மானிடர்க்கெல்லாம் யார் எடுத்துரைப்பேன்
விழிவெளிமாக்கள் தெளிவுறக் கேண்மின்
மானிடர்க்கெல்லாம் யார் எடுத்துரைப்பேன்
விழிவெளிமாக்கள் தெளிவுறக் கேண்மின்
என்று ஆரம்பித்து பெண்ணை தலை முதல் கால் வரை பாடும் பாடல்களில் ஒவ்வொரு வரியும் சவுக்கடி. ஆனால், அந்த சவுக்கடிகள் பெண்ணுக்குக் கொடுக்கப்பட்டவை அல்ல; அவளுடைய ஒவ்வொரு உறுப்புக்கும் உவமை கண்டு மயங்கிய ஆணுக்குக் கொடுக்கப்பட்டவை.
ஒரு சிறு நெருடலாக எனக்குப்பட்டது என்னவென்றால், சில இடங்களில் லியாண்டர் பயஸ், பில் கேட்ஸ், டயானா இவர்களைப் பற்றி பேசும்போது, ஆசிரியர் அவர்களை ஒருமையில் வந்தான், போனான் என குறிப்பிட்டுள்ளதே. நாம் இராமன், கிருஷ்ணன் என்று கடவுளர்களை அழைப்பதுபோல் குறிப்பிட்டுள்ளாரோ என்று நினைத்து அடுத்த பக்கத்திற்கு நகர்ந்தேன்.
பட்டினத்தாருடைய தத்துவங்களை புத்த மதம், தாவோசியம் ஆகியவற்றோடு ஒப்பிட்டு ஒரு கட்டுரை. இதிலும் பல வாதங்கள். திருக்குறளிலிருந்து பல மேற்கோள்கள் என பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.
மொத்தத்தில், பட்டினத்தாருடைய பாடல்களைப் பற்றிய ஆசிரியரின் புரிதல் மற்றும் ஆராய்ச்சி முடிவுகள் நம்மை வியக்க வைக்கின்றன.
***
மிக அருமையான, படிக்க வேண்டிய புத்தகம்...
ReplyDeleteபகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...