THE SHARP EDGE OF A RAZOR IS DIFFICULT TO PASS OVER; THUS THE WISE SAY PATH TO SALVATION IS HARD.
KATHA-UPANISHAD
Name : The Razor’s Edge
Author : W. Somerset Maugham
ட்விட்டர்ல நிறைய பேர் “என்ன வாழக்கைடா இது “ அப்படின்னு ட்வீட் பண்ணிகிட்டே இருப்பாங்க. அதை நிறைய பேர் ரீட்வீட் பண்ணுவாங்க. ஆனா இவங்க யாருமே, இப்ப வாழ்ந்துக்கிட்டு இருக்கிற வாழக்கையை விட்டுட்டு, வாழ்க்கைன்னா என்ன நாம எப்படிப்பட்டவங்க அப்படின்னு தெரிஞ்சுக்கப் பாக்கறது இல்லை. எனக்குக்கூட சில சமயம் இது தோணும், வாழ்க்கையே பயங்கர வலியா இருக்கே, எல்லாத்தையும் விட்டுட்டு, பரதேசியா போயிடலாம், ஊர் ஊரா சுத்திட்டு இருக்கலாம்னு. ஆனா அடுத்த நொடியே எதாவது ஒரு கடமை வந்திடும், வேலைய பார்க்க போயிடுவேன். வாழ்க்கை ஒரு விதமான காதல்-வெறுப்பு மனநிலையிலேயே போகிறது.
என்னுடைய இளநிலை பட்டபடிப்பில், மாம் (Maugham) எழுதிய இரண்டு சிறுகதைகள் படித்திருக்கிறேன். இளநிலை முடித்த இரண்டு வருடங்கள் கழித்து அந்த சிறுகதைகளை மறுபடி வாசித்தபோது, அவர் உருவாக்கின கதை மாந்தர் மனதை விட்டு அகலவே இல்லை. அதைத் தொடர்ந்து, நிறைய இடங்களில் இந்த புத்தகத்தைப் பற்றி பலரும் பேசியிருக்கவே, இந்த முறை எப்படியோ வாசித்து விட்டேன்.
மாம் (Maugham) பற்றி இணையத்தில் வாசித்தபோது அவர் மீதிருக்கும் மிக பெரிய குற்றச்சாட்டு, அவரின் சொல்வளம் குறைவு என்பதாகத் தெரிகிறது. அதாவது ரொம்ப எளிமையான மொழி நடை, அதிகம் உருவகம் இல்லாத எழுத்து நடை. இந்த குற்றச்சாட்டுகளையும் தாண்டி மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளராக இருக்கிறார் மாம்.
இந்த நாவலில் மாம் தன்னையும் ஒரு கதாபாத்திரமாகச் செய்துக் கொண்டு தன் வழியே நாவலை சொல்லிக் கொண்டு போகிறார். நாவலில் வரும் கதைமாந்தர் எண்ணிக்கை ரொம்ப ரொம்ப குறைவு. மொத்தமாக பத்து பேர் கூட இருக்கமாட்டார்கள். எலியட்(Elliot), அவரின் தங்கை மகள் –இசபெல்(Isabel), லேரி (Larry), சோஃபி(Sophie), கிரே(Gray), சுசானே(Suzzane) இவர்கள் வாழ்வில் ஏற்படும் ஒரு மிக பெரிய மாற்றமும், அதை ஒவ்வொருவும் எப்படி புரிந்து கொண்டு, அதைப் பற்றி மேலும் தேட செல்கிறார்களா இல்லை இதுதான் தனக்கு அமைந்த வாழ்வு என்று அதே பாதையில் செல்கிறார்களா என்ற கேள்வியே நாவலின் அடிநாதம்.
லேரி- இசபெல் இருவரும் காதலர்கள். லேரி விமானப்படையில் விமானியாக இருந்துவன். மாம் எலியட்டின் மூலமாக இவர்களை சந்திக்கிறார். லேரியின் போர் வாழக்கையின் நடந்த மிக கடுமையான சம்பவம் ஒன்று அவனைக் கடுமையாக சிந்திக்க வைக்கிறது. எல்லோரும் வாழ்வது போல் வேலைக்குச் செல்லாமல் தேசாந்திரியாக மாறி நாடுநாடாகச் செல்கிறான். இசபெல் திருமணம் செய்துகொள்ள மறுக்கிறான். போர் முனையில் தன் நண்பன் உயிரைக் கொடுத்து லேரியை காப்பாற்றியதே, அவன் இப்படி முடிவு செய்ய காரணம் ஆகிறது.
லேரி தன்னை திருமணம் செய்துகொள்ள மறுக்கவே தன்னுடைய குடும்ப நண்பர் ஒருவரின் மகனை(Gray) திருமணம் செய்துக் கொள்கிறாள். இவர்கள் இருவர் மூலமாக இரு வேறு மனநிலைகளை உணர முடிகிறது. லேரியைப் பொறுத்தவரை பணம் இல்லாமல் பரதேசியாக வாழ முடியும் என நம்புகிறான். ஆனால் இசபெல் நல்ல உடை, விழாக்கள், நல்ல உணவு இவையே வாழ்க்கை என எண்ணுகிறாள். எலியட் லண்டன்- பாரிஸ் நகரங்களில், மிக பெரிய பணக்காரர்களிடம் உள்ள கலைப்பொருட்களை ஒரு பிரதிநிதியாக இருந்துகொண்டு விற்பதற்கும்- வாங்குவதற்கும் உதவி செய்பவர். அதனால் அந்த வட்டத்தில் மிக முக்கியத்துவம் வாயந்தவர். அவர்களின் அங்கீகாரத்துக்கு ஏங்குபவர்.
1929ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட பங்குச் சரிவு கிரேயை ஏழை ஆக்குகிறது. எலியட்டிடம் இருக்கும் செல்வமும் கணிசமாகக் குறைகிறது. ஆனால் இதன் பாதிப்பு அவர்கள் வாழ்வில் எந்த ஒரு தேடலையும் உருவாக்குவதில்லை. எலியட் இவர்கள் இருவரையும் தன்னுடன் பாரிஸ் அழைத்து செல்கிறார்.
சோஃபி, இசபெல்-லேரி-கிரே ஆகியோரின் சிறுவயது நண்பர்(நண்பி). மக்டொனல்ட் என்பவனை திருமணம் செய்து கொள்கிறாள். குழந்தையும் பிறக்கிறது, வாழ்க்கை மகிழ்ச்சியாக போகிறது. ஆனால் ஒரு விபத்தில் கணவனும் –குழந்தை உயிர் இழக்கவே, மதுவுக்கு அடிமையாகிறாள், விலைமாது ஆகிறாள். எவ்ளோ உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்த சோஃபி இவ்ளோ கீழ்த்தரமான வாழ்க்கை வாழ்வது அதிர்ச்சியாக இருந்தாலும், மனித மனதின் அந்தரங்க எண்ணங்களை புரிந்துகொள்ள முடிவதே இல்லை.
நாவலின் கடைசி நூறு பக்கங்கள், மாம் தன்னை பற்றி எழுதுவதாகவே தோன்றுகிறது. மாம் சில காலம் ரமண மகரிஷியுடன் இருந்தவர். லேரியின் தேடல் இந்தியாவிருக்கு அவனை அழைத்துச் செல்வது போலவும், இந்திய கடவுள்கள்- ஆன்மிகம் பற்றி லேரி கற்க, அதைப் பற்றி இருவரும் விவாதம் செய்கின்றனர். முக்கியமாக மாம் நாவலின் மூலமாக சொல்லவருவது இந்திய வழி வாழ்வு மனிதனை வாழ்க்கையின் மேல் நம்பிக்கை ஏற்படச் செய்கிறது, தீமையும்-நன்மையும், நமது முற்பிறவி செயல்கள் என்று நம்புவதன் மூலம் வாழ்வின் மேல் பற்று ஏற்பட்டு, சலனம் இல்லாமல் வாழலாம் என்பதுதான்.
நாவலின் முடிவில் சோஃபி கொலை செய்யப்படுகிறாள், எலியட் சமூக அங்கீகாரத்துடன் இறக்கிறார். இசபெல்- எலியட்டின் சொத்துக்களுக்கு வாரிசு ஆகிறாள். லேரி தான் கற்ற இந்திய ஆன்மிகத்தை, அமெரிக்காவில் பரப்பச் செல்வதுடன் நாவல் முடிவடைகிறது.
நாவலின் பலம் கடைசி நூறு பக்கங்களில் இந்தியாவின் கடவுள்- ஆன்மிகம்- மத நம்பிக்கை-பற்றி மாம் எழுதி இருப்பது. பலவீனம், உருவகம் இல்லாத எழுத்து நடை, இவை எல்லாவற்றையும் தாண்டி கதை மாந்தர் உருவாக்கம்-அவர்களின் மனநிலை, அவர்களின் நம்பிக்கை - இவை இன்னும் சில காலம் என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும் என்று நம்புகிறேன்
No comments:
Post a Comment