ஏனெனத் தெரியாமல் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கிறேன்.. யாராவது என்னைத் துரத்தி வந்து காரணம் சொல்லிவிட்டுப்போங்களேன்! - ரைட்டர் நாயோன்
லோகேஷுக்கு இரண்டு மகன்கள். ஒருநாள் மாலை அரக்கப்பரக்க அலுவலகத்திலிருந்து புறப்பட்டார்.
“என்னா சார்?”
“வைஃப் வீட்ல இல்லை சார். பசங்களை டியூஷன்ல கொண்டு விடணும்”
“எதுக்கு சார் டியூஷன் எல்லாம். வீட்லயே படிக்க சொல்லுங்க”
“அட நீங்க வேற, சிலபஸ் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு சார். நம்மால சமாளிக்க முடியாது”
“என்ன படிக்கறாங்க?”
“பெரியவன் யூகேஜி, சின்னவன் எல்கேஜி”
அடப்பாவிகளா என்று வாயில் வரும் இந்த சம்பாஷனையை நான் முன்னமே ஸஸரிரி.காம்’ல் பதிவு செய்திருந்தேன்.
லோகேஷின் பிள்ளைகள் படிக்கும் பள்ளியின் முதல்வர் ரொம்பவும் கெடுபிடி பார்ட்டி. அவரைப் பற்றி கேள்விப்பட்டவைகளைப் பார்த்தால் அந்த மனிதர் நிச்சயம் ஒரு சைக்கோ மனிதராகத்தான் இருக்கக்கூடும். ஒரு பள்ளி முதல்வரை நோக்கி இத்தனை கடுமையான வார்த்தைகளை உபயோகிப்பது சரியா என்று கேட்கிறீர்களா? ஒரேயொரு உதாரணத்தைப் பாருங்கள்
”டிசிப்ளின்தான் எனக்கு முக்கியம்”, என்று இதற்குப் பின்னணியில் காரணம் சொல்லப்பட்டாலும், பிள்ளைகளையும் பெற்றவர்களையும் இப்படிப் படுத்தும் மனிதரை என்ன சொல்ல?
சென்னையின் இன்னொரு பிரபல பள்ளி உண்டு. சமீபத்தில் ஒலிம்பிக் பாக்ஸிங் போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் வென்று வந்த ”மேரி கோம்” அவர்களை சென்னைக்கு அழைத்து கௌரவப்படுத்தியது. அடடே! நல்ல விஷயம்தானே? ஆனால் அந்த பெருமைமிகு விழாவில் கலந்துகொள்ள பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களை அனுமதிக்கவில்லை.
காரணம்? அந்த இரண்டு வகுப்பினரும் பொதுத் தேர்வு எழுதுபவர்களாம். நாசமாய்ப் போகுமடா உங்கள் பள்ளிகள் என்று சாபம் தரத்தான் தோன்றுகிறது. தன் பள்ளியின் பெயரை ரிசல்ட் பட்டியலில் ஓங்குதாங்காக மேலே நிறுத்திக்காட்ட ஆட்டுமந்தையாக அந்த மாணவ மாணவியரைப் பயன்படுத்தும் இதுபோன்றவர்களுக்கு என்ன தண்டனை தர, சொல்லுங்கள்?
இன்றைய கல்விமுறையின் கொடூரங்களைப் பற்றி நான் ஒன்றும் புதிதாய்ப் பட்டியலிடும் அவசியம் இல்லை. நம்மில் ஒவ்வொருவரிடமும் இதுபற்றி ஒரு முப்பது நிமிடங்கள் பேசினால் முன்னூறு குறைபாடுகளையும் தங்கள் சொந்த மனக்குமுறல்களினின்று ஒன்றரை டஜன் உதாரணக் கொடுமைகளையும் கொட்டிவிடுமளவுக்கு விஷயங்களை ஒவ்வொருவரும் சுமந்தே திரிகிறோம்.
இருந்தும் “பிரசவ வைராக்யம், ஸ்மஸான வைராக்யம்”, என்பார்களே அதுபோல அவையெல்லாம் வெறும் பேச்சினோடே புலம்பித் தீர்க்க மட்டுமே. 2014’ஆம் வருடத்தில் தன் பிள்ளையைப் பள்ளியில் சேர்க்க 2011’ஆம் ஆண்டே பிரபல பள்ளியில் அட்வான்ஸ் தந்துவிட்டு வருவதுவும், கடைசி நேரத்தில் ரெகமெண்டேஷன், எக்ஸ்ட்ரா ஃபீஸ் என்று கட்டித் தீர்க்கத் தயாராக இருப்பதுவும் அதே புலம்பல் பார்ட்டிகளான நாமாகத்தான் இருப்போம்.
"Winning is Everything" என்னும் முரட்டுக் கலாசாரத்தைத்தான் நம் பள்ளிகள் கடைபிடிக்கின்றன. பெற்றோரான நாமும் அதனையே விரும்புகிறோம். நம் பெயரை நம் பிள்ளைகள் நம் சொந்த பந்தங்களிடையே காப்பாற்ற வேண்டும் என்று நாம் அவர்களை வீட்டினில் சாட்டை கொண்டு விரட்டுகிறோம். கல்வித்துறையில் தம் பள்ளியின் பெயரை நிலைநிறுத்த அதே சாட்டையைக் கொண்டு நம் பிள்ளைகளை இன்னொரு பக்கம் நின்றுபள்ளிகள் விரட்டுகின்றன. இந்த இரண்டு சாட்டைச் சொடுக்கல்களுக்கு இடையே நம் பிள்ளைகள் தவிப்பது பற்றிய லட்சியம் நம் இருவருக்குமே இல்லை.
இப்படியே பேசிக் கொண்டே போனால்? இவற்றுக்கெல்லாம் என்னதான் விமோசனம்? இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டு ஒரு மாற்று சிந்தனையை மாற்று வடிவக் கல்விமுறையைக் கொண்டு வர என்ன செய்ய வேண்டும்?
அவற்றைப் பற்றியெல்லாம்தான் பேசுகிறது “லதா ரஜினி” 1997’ஆம் வருடம் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய “அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்”. தலைப்பே புத்தகம் பற்றிப் பேசிவிடுகிறது. சமூகத்தில் நாம் அவர்களுக்குத் தரமறுக்கும் அந்தஸ்தைப் பற்றி சொல்லிவிடுகிறது.
ஆம்னிபஸ்சில் குழந்தைகள் தினத்தை ஒட்டி “சிறுவர் இலக்கிய வாரம்” கொண்டாட முடிவெடுத்த போது நான் முதலில் தேர்ந்தெடுத்த நூல் இதுவே. காரணம் இது குழந்தைகள் வாசிக்க வேண்டிய நூல் அன்று. குழந்தைகளைக் குழந்தைகளாக வாழவிடாமல் செய்ய பெற்றோர்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பேசும் புத்தகம் இது. அந்தக் குழந்தைகள் இவ்வுலகில் குழந்தைகளாகவே உலவ நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பேசுகிறது புத்தகம்.
இன்றைய கார்ப்பரேட் கம்பெனிகள் தம் ஊழியர்களை வேலைப்பளு தந்த முறுக்கல்களினின்று ரிலாக்ஸேஷன் செய்து கொள்ள மால்கள், சாப்பாடு, தீம் பார்க், தண்ணி பார்ட்டி என்று விதவிதமாக ஏற்பாடுகள் செய்கின்றன. இவர்களில் எத்தனை கார்ப்பரேட் கம்பெனிகள் அந்த ரிலாக்ஸேஷன்கள் எல்லாம் அந்த ஊழியர்கள் தத்தமது குழந்தைகளுடன் செலவிடும் உன்னத நேரத்தில்தான் இருக்கிறது என்பதை அறிந்து வைத்திருக்கின்றன? Work-Life balance என்பதெல்லாம் எழுத்து வடிவில்தான் இருக்கின்றன இன்றைய காலகட்டத்தில்.
இவற்றை அந்தப் பெற்றவர்களும் காலத்தின் போக்கில் மறந்து தொலைத்து “நாம் முன்னமே குறிப்பிட்ட”, எதிர்த்திசையில் ஓடிக்கொண்டே இருப்பதுதான் அந்தக் குழந்தைகளுக்குப் பிரச்னையாகிறது. Being with the kid எத்தனை அவசியம் என்று குழந்தையுடன் நான்கு நாட்கள் இருந்து பார்த்தால்தானே தெரியும் என்கிறார் லதா.
”என் பையன் போன வருஷம்....ம்ம்ம்ம் ரெண்டாவது படிச்சான். வெய்ட் வெய்ட்... இல்லை இந்த வருஷம் ஹீ ஈஸ் டூயிங் செகண்ட்” என்று சொல்லும் தந்தைமார்கள் எல்லாம் கற்பனைக் கதாபாத்திரங்கள் அல்லர். இதுபோன்ற பெற்றவர்கள் உருவாக்கும் பிள்ளைகளுடனான இடைவெளி ஒருபக்கம். இந்த இடைவெளியைத் தவிர்த்தல் மிக எளிது. தினமும் ஒரு அரைமணிநேரம் உங்கள் குழந்தைகளுடன் என்றால் குழந்தைகளுடன் உங்கள் நேரத்தைச் செலவிட்டால் போதும்.
மற்றொரு பக்கம் குழந்தைகளைக் கையாளும் முறையின் வாயிலாக பெற்றவர்கள் கொண்டு வரும் இடைவெளி. கனிவாகத் திருத்த வேண்டிய குழந்தைகளைக் கடுமையாகத் திருத்த முற்பட்டு வளைக்கச் சென்றது உடைந்த கதையாய் குழந்தைகளுக்கும் பெற்றவர்களுக்கும் இடையே நேரும் இடைவெளி. இந்த இடைவெளியைக் குறைத்தல் கனிவான அணுகுமுறை மட்டுமே.
கல்விமுறை என்பது பள்ளிகளும் கல்லூரிகளும் உருவாக்கி வைத்தவை என்ற நம் மனதில் தேங்கிவிட்ட மனப்பான்மைதான் எல்லாத் தவறுகளுக்கும் அடிப்படை என்கிறார் லதா. தம் தாத்தாக்கள் வாழ்ந்த வாழ்க்கையின் வழியாகவும், தம் ஊர்ப்பெரியம்மாக்கள் வாழ்க்கையின் வாயிலாகவும் கற்றதனை விடவும் பெரிய கல்வியை நம் முன்னோர்கள் கற்றுவிடவில்லை. அந்த மாதிரியான வாழ்க்கை வாயிலான கல்வியை இந்தத் தலைமுறை ஒட்டுமொத்தமாக இழந்ததன் காரணம் என்னவென்று யோசித்தால் ஒன்றுதான் தோன்றுகிறது. தாம் பணத்தைச் சம்பாதிக்க ஒருபக்கம் கண்மண் தெரியாமல் ஓட்டமாக ஓடிக்கொண்டு தன் அடுத்த தலைமுறையை இன்னொருபுறம், “படி படி படி..... படிச்சாச்சா.... ம்ம்ம்ம் படிச்சதை வாந்தியெடு வாந்தியெடு வாந்தியெடு” என்று விரட்டும் பெற்றோர்தானே?
தார் ரோடு போடுவது போல் போட்டுவிட்டு அவை சிதிலமடையும்போது ரிப்பேர் வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருத்தல்தான் இன்றைய கல்விமுறையாக இருக்கிறது. பண்பு, பண்பாடு, ஒழுக்கக் கல்வி ஆகியவையே கல்வியின் அடிப்படையாக இருக்க முடியும். இவற்றைச் செய்ய தார் ரோடு எதற்கு? மக்கள் நடந்து சென்ற ஒற்றையடிப் பாதை போதுமே? அவை ஜனங்கள் வாழ்ந்து காட்டிய பாதைகளாக இருந்து நம்மை இலக்கிற்கு அழைத்துச் செல்கின்றன என்பது என்ன ஒரு அழகான வாதம்?
இந்தப் பிரச்னை குறித்துப் பேசுவது எழுதுவதும் போதனைகள் சொல்வதுவும் எத்தனை எளிமையான விஷயம் இல்லையா? அதைத்தானே லதா ரஜினி செய்திருக்கிறார் என்றால் அதுதான் இல்லை.
நம் குழந்தைகளின் தேவைகளுக்கு ஏற்றவாறு கல்வி வளைந்து கொடுத்து குழந்தையைத் தலைநிமிர்ந்து நிற்கச் செய்வது ஒரு சமுதாயத்தின் கடமை என்பதை வலியுறுத்துகிறார் லதா. அதுசரி, என்ன செய்தார்?
ஒரு மாற்றுக் கல்விமுறையைக் கொண்டுவர தன்னால் இயன்றவகையில் ஆஷ்ரம் என்ற பள்ளியைக் கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக நடத்தி வருகிறார். அந்தப் பள்ளியில் குழந்தைகள் “சின்னஞ்சிறு மனிதர்களாக” மதிக்கப்படுகிறார்கள். படித்ததை வாந்தியெடுக்கும் கலாசாரம் இல்லை. லீவ் அடிக்கப் போராடத் தேவையில்லை. பரிட்சைப் பிசாசு தரும் பயங்கள் இல்லை. குழந்தைகள் தங்கள் பருவத்தில் என்ன செய்ய வேண்டுமோ அவற்றை மட்டுமே செய்கிறார்கள்.
கடைசியாக ஒன்று, ஆஷ்ரம் பள்ளியைப் பற்றி, இரண்டாம் வகுப்பில் படிக்கும் குழந்தைக்கு எம்.எஸ்.சி. ஸ்டாடிஸ்டிக்ஸ் சிலபஸ் தரப்படுவதில்லை.
ஆஷ்ரம் பள்ளியின் வருகை நிச்சயம் தொடர்ச்சியாக அதுபோன்ற சில பள்ளிகளை நம்மிடையே உருவாக்கி இருக்கின்றது. இருந்தும் இன்னமும் நம் அடிதடிக் கலாசாரக் கல்விமுறையின் கைதான் இன்றும் ஓங்கியிருக்கிறது. இவை ஒட்டுமொத்தமாக மாற பெற்றோரின் பக்கமிருந்தும் ஒத்துழைப்பு நிச்சயம் தேவைப்படும்.
இந்தப் புத்தகத்தை ஒருமுறை வாசித்தால் ஒருவேளை அந்த ஒத்துழைப்பை நல்கும் மனப்பக்குவம் பெற்றோர்களுக்கு வருமோ என்னவோ?
அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள் -லதா ரஜினி
பூம்புகார் பதிப்பகம், 63,. பிரகாசம் சாலை, சென்னை - 108
கன்னிமாரா நூலகத்தில் இந்தப் புத்தகம் கிடைக்கிறது - இங்கே
இணையம் மூலம் இந்தப் புத்தகம் கிடைக்குமா என்ற தகவல் நம்மிடம் இல்லை.
No comments:
Post a Comment