தமிழ் புனைவுலத்தில் மிகவும் அழுத்தமாகப் பதியப்பட்ட சுவடு சிறுகதை வகையைச் சாரும் என்பது விமர்சகர்களின் நம்பிக்கை. தமிழ் இலக்கியத்தில் இதுவரை வெளியான சிறுகதைகளை பார்க்கும்போது இக்கூற்று மிகையில்லை எனத் தோன்றுகிறது. வ.சு.ஐயர் எழுதிய `குளந்தங்கரை அரசமரம்`எனும் முதல் சிறுகதை நூறு வருடங்களுக்கு முன்னர் தான் தோன்றியுள்ளது. ஆங்கில இலக்கியம் இருநூறு ஆண்டுகளாகப் போராடிப் நிலைபெற்ற இடத்தை நாம் சிறுகதையில் இதற்குள்ளாகவே அடைந்துவிட்டோம் எனத் தோன்றுகிறது.
பேய், திகில், சமூகம், விஞ்ஞானம், வரலாறு எனப் பல பிரிவுகளில் தமிழ் சிறுகதைகள் பரிமளித்துள்ளன. உலக சிறுகதைத் தளத்தில் நிகழ்த்தப்படும் எந்த ஒரு புதுமைக்கும் குறைவிலாது, சமயங்களில் அவற்றை விஞ்சக்கூடிய தரத்தில் கதைகள் வெளியாகின்றன. பண்பாட்டு தளத்திலும், தத்துவங்களிலும் நாம் முன்வைத்த சுவடுகள் தனித்தன்மைவாய்ந்தவை என விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். இதனாலேயே வேற்று மொழிக்கு செல்வதிலும் பல சங்கடங்கள் உள்ளன என்றாலும் சங்க இலக்கியங்களின் மொழி வளத்தைப் போல் தமிழ் வாழ்வு சிறுகதைகளில் செழிப்பாக வெளியாகியுள்ளது.
சுதந்திரப் போராட்டத்தின் குரலாக பாரதியார், வ.வே.சு.ஐயர், நவயுக இந்தியாவின் குரலாக புதுமைப்பித்தன், க.நா.சு, செல்லப்பா போன்றோரும், பண்பாட்டு தளத்தில் தி.ஜானகிராமன், நாஞ்சில் நாடன், போன்றோரும், வரலாறு/தத்துவ தளத்தில் ஜெயமோகன், பிரபஞ்சன் போன்றோரும், தமிழரின் அயல் வாழ்வு பற்றி அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி போன்றோரும் மிக வளமான சிறுகதைகளை உருவாக்கியுள்ளனர்.
சுந்தர ராமசாமியை தமிழ் புனைவில் நவீனத்துவத்தை உருவாக்கியவர் என கா.நா.சு, வெங்கட் சாமிநாதன் போன்ற விமர்சகர்கள் கருதுகிறார்கள். அதுவரை சமூக தளத்திலும், தேசியவாத எழுத்துகளையும் முன்னிட்டு பலரும் எழுதினாலும் புதுமைப்பித்தன், கு.ப.ரா போன்றோரின் வழியைத் திட்டவட்டமாகப் பின்பற்றியவர் சுந்தர ராமசாமி.
அவரது முதல் தொகுப்பான `பிரசாதம்` எனக்குப் பலவகையில் அவரது உச்சகட்ட எழுத்தாகத் தோன்றும். வெளிவந்த காலகட்டத்தை முன்வைத்து பார்க்கும்போது சிறுகதையில் ஒரு புது பாய்ச்சலாக இத்தொகுப்பு தெரிகிறது.
ஒன்பது கதைகள் மட்டுமே கொண்ட இந்த தொகுப்பு இன்ன வகையென்று அறுதியிட்டு சொல்ல முடியாது. மேலோட்டமாகப் பார்க்கையில் சுராவைச் சுற்றியுள்ள சமூகம் சார்ந்த நிகழ்வுகள் தொகுப்பில் கதைகளாக மாறியுள்ளன எனக் கூறலாம். ஆனாலும், சமூகத்தில் நிகழும் நுண்ணிய கோணங்களை இக்கதைகள் வெளிப்படுத்துவதால், மிகப் பெரிய அகச் சிக்கல்களைப் பற்றிப் பேசாதது போன்ற தோற்றத்தை உண்டு பண்ணுகிறது.
சிறுகதைகள் என்றாலே முடிவில் திருப்பம் இருக்கவேண்டும் என நாம் நம்புகிறோமோ இல்லையோ, சிறுகதைகள் ஏதேனும் மாற்றத்தை தன்னகப்படுத்தி இருக்க வேண்டும் என நம்புகிறேன். அது ஒரு பாத்திரத்தின் குணவார்ப்பில் உள்ள மாறுதலாக இருக்கலாம், வாசகனை ஏமாற்றும் கண்கட்டு வித்தை போன்ற பார்வை மாற்றமாக இருக்கலாம் அல்லது இவ்வளவுதான்பா வாழ்க்கை எனும் சிறுதுளிக்குள் வாழ்வின் அகண்டாகாரத்தைக் காட்டும் வித்தையாக இருக்கலாம். மேற்சொன்ன எதுவும் இல்லாமல் முதலில் சீறிவிட்டு திரி அணைந்த பட்டாசாகவும் இருக்கலாம் - ஆனால் ஏதேனும் ஒரு மாற்றம் கட்டாயம் இருந்தாக வேண்டும்.
சில கதைகளில் இந்த மாற்றம் வெளிப்படையாகத் தெரியும்படி சுரா எழுதியிருப்பார். பல கதைகளில் மாற்றங்களை நாம் எளிதில் புரிந்துகொண்டுவிட முடியாது. முடிவடையாத ஒரு சிக்கலைக் கூட முடிவாகக் கொடுக்கும் அசாத்திய மாஸ்டர்களால் நிறைந்தது தமிழ் புனைவுலகு. அப்படி ஒரு மாஸ்டர் சுந்தர ராமசாமி என்பது இத்தொகுதியில் வெளிப்படுகிறது.
சுந்தர ராமசாமியின் கதைகள் எதையும் வெளிப்படையாகச் சொல்வதில்லை. அதே சமயம் கி.ரா போல போகிறபோக்கில் பேசிச் செல்லும் திண்ணைப் பேச்சும் அல்ல. எதற்காக குறிப்பிட்ட இடத்தில் ஒரு வார்த்தை உட்காந்திருக்கிறது என்பது ஐந்தாண்டு திட்டம் போலத் தீட்டப்பட்டதாகத் தோன்றுகிறது. ஒவ்வொரு வாக்கியத்தைத் தொடரும் வாக்கியங்களை அத்தனை சுலபமாக இடம் மாற்றிவிட முடியாது.
பிரசாதம் எனும் கதை, ஒரு இரவுக்குள் ஐந்து ரூபாய் சம்பாதிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு எனும் கான்ஸ்டபிளின் கதை. கையில் கிடைக்கும் கேஸாக கோவில் அர்ச்சகரை முடிந்தவரை மிரட்டிப் பணம் புரட்டப் பார்க்கிறார். ஏனோ ஸ்டேஷன் வரைக்கும் பயமுறுத்தி கூட்டிச் சென்றாலும் அர்ச்சகர் ஒன்றும் கொடுப்பது போலத் தெரியவில்லை. ஆனாலும் முடிவில் கான்ஸ்டபிள் மகள் பிறந்தநாளுக்கு அர்ச்சகர் ஐந்து ரூபாய் தந்துவிடுகீறார். மிகப் பிரமாதமானக் கதை. வெறும் முடிவுக்காக மட்டுமல்லாது மனிதனின் எண்ண ஓட்டங்கள் எப்படியெல்லாம் கணக்கு போடுகிறது என்பதை மிக அழகாகச் செதுக்கியதில் இக்கதை வென்றிருக்கிறது.
லவ்வு எனும் நகைச்சுவைக் கதை எக்காலத்திலும் நகைச்சுவையாகத் தான் இருக்கும். ஜெயமோகன் இக்கதையை மிகச் சிறந்த நகைச்சுவைக் கதை எனச் சொல்லியுள்ளார். குறிப்பாக முடிவில் எருமை கன்னு போடும் ரகசியம் வெளிப்படும் இடம் மிக ரசமானது.
இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை, `ஸ்டாம்ப் ஆல்பம்`. ஒரு வகையில், சுந்தர ராமசாமியின் எழுத்து சிறுவர்களது உலகை விவரிக்கத் தோதானது கிடையாது. மிகவும் கறாரானக் கூறுமுறை, முற்றிலும் நெகிழ்ச்சி அடையாதப் பாத்திரங்கள் என சொல்முறையில் கட்டுப்பாடு அதிகம் இருக்கும். ஒவ்வொரு வரியிலும் புத்திசாலித்தனமும், கட்டுக்கோப்பும் அதிகமாக இருக்கும். ஆனாலும், சிறுவர்களது ஸ்டாம்ப் ஆல்பம் சேகரிப்பைக் கொண்டு செய்துள்ள கதை மிக அற்புதமானது. நாம் அனைவரும் ஒரு கட்டத்தில் ஸ்டாம்ப் சேகரித்திருப்போம். பத்து ஸ்டாம்ப் கொடுத்து ஒரு முக்கோண வடிவ (ஆப்ரிக்க நாடுகள்) ஸ்டாம்ப் சேகரித்த என் பள்ளி நாட்கள் நன்றாக நினைவுள்ளது. ஸ்டாம்ப் பரிமாற்ற சிடுக்கான நுணுக்கங்கள், சொத்துக்களை கணக்கிடுவது போல ஸ்டாம்புகளின் நிறுத்தவிலை பற்றிய சண்டைகள் என ஒரு போருக்கான அத்தனை சாணக்கிய நுணுக்கங்களும் செய்திருப்போம். அது அத்தனையும் அச்சு அசலாக சுரா படம் பிடித்துள்ளார். ஒரு ஸ்டாம்ப் ஆல்பத்தினால் சிறுவர்களுக்குள் நடக்கும் மோதல், ஆல்பத்தை அழிக்குமளவுக்கு வரும் பொறாமை உணர்வு என ஒவ்வொரு கணத்தையும் அற்புதமாகக் காட்டி தான் ஒரு மாஸ்டர் என நிரூபித்துள்ளார் சுரா. எனது பால்ய வயது நினைவுகள் அனைத்தையும் கிளறிவிட்டக் கதை ( என்னுடன் நாலாவது படித்த அர்ஜுன் ஆம்னிபஸ் வாசகராக இருந்து இப்பதிவைப் படிக்க நேர்ந்தால் அவருக்கு ஒரு செய்தி - நாலு கனடா நாட்டு டாலர்கள் இந்த காலத்தில் கூட பத்து டான்சானியா ஸ்டாம்புக்கு ஈடாகாது!)
`
ஒன்றும் புரியவில்லை`, எனும் கதையும் சிறுவனின் பார்வையிலிருந்து அவனது அக்காவின் புதுமண வாழ்வைப் படம் பிடிக்கிறது. திருமணமாகி புதுவீட்டுக்கு வரும் அக்காவுடன் சில நாட்கள் தங்கியிருக்கச் செல்கிறான் தம்பி. அங்கு நடப்பவை எதுவும் அவனுக்குப் புரிவதில்லை. அக்கா மாமியாரின் அதட்டல், அக்காவின் அழுகை, பிறந்த வீட்டுக்கு லீவுக்குத் வந்திருக்கும்போது அவளது அழுகை, தன் வீட்டுக்கே போய்விடுகிறேன் என கணவன் வீட்டுக்குச் சென்றுவிடல் என எதுவும் சிறுவனுக்குப் புரிவதில்லை.
`
வாழ்வும் வசந்தமும்` எனும் கதைதான் தனக்கு மிகவும் திருப்திகொடுத்த படைப்பு என சுரா முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். எத்தனை முறை படித்தும் எனக்குப் பெரியதாகப் பிடி கிடைக்காத கதை. ஏனோ எண்பதுகளின் பெல் பாட்டம் பேண்ட் போட்ட இளைஞர்களின் கலர் கனவு போன்ற கதை - முடிவு சரியாகப் புரியவில்லை. ஆம்னிபஸ் வாசகர்கள் தங்களது புரிதல்களை பின்னூட்டம் மூலம் தெரிவித்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்.
க.நா.சு தனது மதிப்புரையில்
சுந்தர ராமசாமியின் சிறுகதைகளில் உருவ அமைதியுடன் கருத்தமைதியும் கலந்து வந்துவிடுகிறது என்பது அவருடைய தனிச்சிறப்பாகும்.
ஜானகிராமனின் கிண்டல், கசப்புடன், சுந்தர ராமசாமி தனது என ஒரு ஆழத்தையும் கனத்தையும் சேர்த்துகொண்டுவிடுகிறார்.
`சன்னல்`, `சீதைமார்க் சீயக்காய்த்தூள்` போன்ற கதைகள் மிகவும் கலாபூர்வமான சிறுகதைக்கு உதாரணமாக உள்ளன. குறிப்பாக சன்னல் கதை சுந்தர ராமசாமியின் நோய்வாய்ப்பட்ட சிறுவயது சித்திரமாக உள்ளது.
`மெய் + பொய் = மெய்` எனும் கதை அத்தனை அற்புதம் எனச் சொல்லமுடியாவிட்டாலும் ஒரு தனித்தன்மை கொண்டிருக்கிறது. குறிப்பாக பொய் சொல்லி தந்திரங்களைக் கையாண்டு மீண்டும் உண்மையை நிரூபித்துவிடமுடியும் என நம்பும் போலிஸ் சொல்லும் விவரணைகள் நன்றாக உள்ளது.
புத்தகங்களின் முன்னுரை கூட கதை போலவோ, கவித்துவமாகவோ அமைவது சுந்தர ராமசாமி, வண்ணதாசன், ஜானகிராமன் போன்ற ஒருசிலரிடம் தான். முன்னுரையே ஒரு கதை போலவோ, கவித்துவ வர்ணணை போலவோ இவர்களால் மாற்றிவிட முடிகிறது. அதே போல, இத்தொகுப்பின் முன்னுரையின் சுரா மெய்+பொய் = மெய் என்பது இலக்கியத்திலும் உண்மைதான். கொஞ்சம் பொய்யோடு மெய் கலந்து வெளிவரும் கலைப்படைப்புகள் உண்மையை சுட்டி நிற்கின்றன. அந்த கட்சிதான் நானும் என முடிக்கிறார்.
தலைப்பு - பிரசாதம்
உள்ளடக்கம் - சிறுகதைகள்
எழுத்தாளர் - சுந்தர ராம்சாமி
பதிப்பகம் - காலச்சுவடு
விலை - ரூ 80
இணையத்தில் வாங்க - நூலகம்.காம் - http://www.noolulagam.com/product/?pid=6284
No comments:
Post a Comment