கோவையில் இருந்த நாட்கள் பறவைகளின் கூச்சலோடுதான் புலரும். வீட்டுக்கு வெளியே இருந்த ஒன்றிரண்டு வேப்ப மரங்கள், தென்னை மரங்கள் மற்றும் அவரைக் கொடியோ எதுவோ, அதில் குருவிகளும் இன்னபிற பறவைகளும் இருந்திருக்கலாம். நகரத்திலேயே பிறந்து வளர்ந்த எனக்கு காக்காய், குருவி, கோழி, வாத்து, மயில், கழுகு, புறா, கிளி என்று ஒரு பத்து பதினைந்து பறவைகள் பரிச்சயமாக இருந்திருந்தால் அதிகம். ஆனால் நானறியாத அந்தப் பறவைகள் எனக்கு எவ்வளவு முக்கியமாக இருந்திருக்கின்றன என்பதைச் சென்னையின் மேன்ஷன் ஒன்றின் ஃபேனின்கீழ் படுத்திருந்த நாட்களில்தான் உணர்ந்தேன் - ஹோம் சிக்னஸ் காதில் விழாத அந்தப் பறவைகளின் கலவரக் குரல்களாக உருவம் பெற்றது. கோவையின் பறவை குரல்களுக்கு அறையின் இருளில் அழுதுமிருக்கிறேன்.
புதிதாய் வந்த ஊரில், புதிதாய்ச் சேர்ந்த பணியில், புதிய பொறுப்புகளும் கடமைகளும் அழுத்தம் கொடுத்த துயர தினங்களின் விடியலுக்கு நான் இழந்திருந்த பறவைகளின் ஓசைகள்தான் முகம் கொடுத்தன. இதோ, இப்போது வேறு இடத்தில் இருக்கும் என்னைச் சுற்றி மரங்கள் - எப்போதும் எங்கோ ஓரிடத்தில் ஏதோ ஒரு பறவை சத்தமிட்டுக்கொண்டே இருக்கிறது. மூடிய அறைகளுக்குள், முகம் பார்த்துப் பழகிய மனிதர்களுடன், கணினியின் திரையும் தொலைகாட்சிப் பெட்டியுமே உலகின் சன்னல்களாக மாறிவிட்ட இந்தக் குறுகிய உலகிலிருந்து என்னை மீட்டுச் செல்லும் குரல்கள். இவை வெளியிலும் இல்லை, உள்ளிலும் இல்லை - இரண்டுக்கும் பொதுவான ஒரு தளத்தில் இருக்கின்றன.
பழகிய விஷயங்களில் தொலைந்த எனக்கு வாழ்க்கையின் அழகையும் இனிமையையும் ஓயாத புத்துயிர்ப்பையும் கொண்டு வந்து கொடுக்கும் கூவல்கள் இவை. இந்தக் குரல்கள் என் எண்ணங்களின் மயக்கத்தைக் கலைத்து, பரந்து விரிந்த, சலனங்கள் நிறைந்த உலகில்தான் என் இருப்பு என்பதை நினைவூட்டுகின்றன. நான் மதிக்காத, லட்சியம் செய்யாத, காது கொடுத்தும் கேட்காத பின்னணிக் குரல்கள்தான். ஆனால் கூவியடங்கும் இந்தக் குரல்கள் ஒலிகளும் வண்ணங்களும் தொலைதூரங்களும் எதிர்பாராத ஆழங்களும் நிறைந்த ஓர் உலகில் என்னை இருத்தி வைக்கின்றன. இப்போது நான் இதன் அருமையைப் பாராட்டாதவனாக இருக்கலாம், ஆனால் இந்த இடத்தைவிட்டுச் செல்லும்போது, எப்போதும் என் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்கும் இந்தக் குரல்களின் இழப்புக்கு நிச்சயம் வருந்துவேன்.
கானுயிர் பதிவுகள் செய்யலாம் என்று ஆம்னிபஸ் நண்பர்கள் முடிவு செய்ததும் நான் தேர்ந்தெடுத்த முதல் புத்தகம், Michael McCarthyன் "Say Goodbye to the Cuckoo". ஏற்கனவே நான் பலமுறை வாசித்து ரசித்திருந்த இந்தப் புத்தகத்தில் மக்கார்த்தி, ஆப்பிரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு வரும் பன்னிரெண்டு பறவைகளின் சாரத்தை, essence, கண்டடைய முயற்சிக்கிறார். அற்புதமான வர்ணனைகளும் தரிசனங்களுமான இந்தப் புத்தகம் ஒவ்வொரு பறவையையும் அதனதன் சூழலில், நிலத்துடனும் மனிதர்களுடனுமான பண்பாட்டுப் பின்புலத்தில் அடையாளப்படுத்தி, பறவைகளின் இழப்பு மனிதனுக்குத் தன் அக அனுபவத்தின் நிரந்தர இழப்பாக இருக்கும் என்பதைச் சுட்டுகிறது. வாசிக்கும்போது அதை எளிதில் உள்வாங்கிக் கொள்ள முடிந்தாலும், தமிழில் எழுதும்போதுதான் ஆங்கிலத்துக்கும் இங்கிலாந்துக்கும் வெளியே அதைப் பேசுவது எவ்வளவு கடினம் என்பது புரிந்தது. சில பத்திகளை மட்டும் மேற்கோள் காட்ட இருக்கிறேன்.
இணையத்தில் கிடைக்கும் சில கட்டுரைகள் அபூர்வமாய் இருப்பதால் மட்டுமல்லாமல் வேறு வகைகளிலும் முக்கியமானவை. இவையும் மூன்று வெவ்வேறு பறவைகளின் சாரத்தைப் பேசுகின்றன.
இருவாட்சி பற்றி ஏப்ரல் 6 முதல் மே 1 வரையான எம் டி முத்துக்குமாரசாமியின் நிறைவடையாத ஐந்து கட்டுரைகள் அருணாசல பிரதேசச் சூழலில் பறவைகளைப் பேசுகின்றன, ஆனால் இவை நமக்கு அன்னியமாயில்லை. இருவாட்சியின் சாரத்தை நாம் ஒருவாறாக புரிந்தும் புரியாமலும் அனுமானிக்க முடிகிறது.
"ஆனால் குருகு என்னும் போது கதையே வேறு. அது கண்ணில் படுவதற்கு மிகமிக அபூர்வமான பறவை. அது மட்டுமே சாட்சி என்பதில் உள்ள துயரம் பல மடங்கு கனமானது. அந்த அபூர்வமான சாட்சியை எங்கே போய் பிடிப்பது? குருகு புதருக்குள் வெகுநேரம் அமைதியாக பதுங்கியிருக்கும். அந்த உறவின் அதி ரகசியத் தன்மைக்கு அதை விட நல்ல குறிப்பு வேறு இல்லை," என்று குறுந்தொகையின் பின்புலத்தில் சங்க காலம்தொட்டு பறவைகள் நம் உணர்வுகளைப் பேசியதை குருகைக் கொண்டு உணர்த்தும் ஜெயமோகனின் "குருகு" என்ற கட்டுரை.
"இந்தக் கரிச்சான் குருவி இலக்கியத்திற்கு ஒரு புது விருந்தாளி. பட்டுக்கருப்பு. நல்ல அழகு. சுறுசுறுப்பே வடிவம். நிமிஷத்தில் நூறு முறை கழுத்தைத் திருப்பி அது எட்டுத்திக்கும் பார்ப்பதிலேயே ரொம்ப சூட்டிகையான பிரகிருதி என்று தெரிந்துவிடும். சன்னமான சாரீரம். சங்கீதத்தில் தேட்டையான ஞானம். சம்பிரதாயத்தையும் இலக்கணத்தையும் உண்டு பிழைத்துக் கொண்டிருந்த கவிமகாசயர்களுக்குக் குயிலோடு சங்கீதம் அற்றுப் போய்விட்டதுபோல் தோன்றிற்றோ என்னவோ? " என்று துவங்கி, "கரிச்சானைக் கேட்கும்போதெல்லாம் கு.ப.ரா சொல்வார், “நல்ல இருட்டில் வெளிச்சத்தினாலே கோடு எழுதுகிறாற்போல மின்னல் மாதிரி. என்ன சன்னமான சாரீரம் பார்த்தேளா?”" என்று செல்லும் தி ஜானகிராமனின் கு.ப.ரா அஞ்சலி குறிப்பு. கு.ப.ராவை கரிச்சான்குஞ்சாகவே தி.ஜா உருவகிக்கிறார். இந்தப் படிமத்தின் பின்னுள்ள பண்பாட்டுச் சூழலை எவ்வளவு எளிதாக வெளிப்படுத்திவிடுகிறார் தி ஜானகிராமன்.
மேற்சொன்ன கட்டுரைகளை வாசித்தவர்களால் ஒரு சிறு தாவலில் மைக்கேல் மக்கார்த்தி பறவைகளின் சாரமாய்ச் சொல்வதை ஆங்கிலத்துக்கும் இங்கிலாந்துக்கும் அப்பாலும் புரிந்து கொண்டுவிட முடியும்.
Nightingale (வானம்பாடி என்று நினைக்கிறேன்) பாடுவதை அதன் இயற்கைச் சூழலில் கேட்க தன் பதினோரு வயது மகனுடன் இரவு நேரத்தில் காட்டுப்பகுதி செல்கிறார் மக்கார்த்தி:
"தொலைதூரத்தில் பாடிய வானம்பாடியின் கானத்தை நாங்கள் இப்போது கேட்டுக் கொண்டிருந்தோம், அதன் நிழலுக்கே வந்துவிட்டோம். உரத்த குரலில் தொடர்ந்து இசைத்தது அந்த வானம்பாடி, அதன் கானம் இந்த உலகையே நிறைத்தது போலிருந்தது. திறந்திருந்த என் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை, என் செவியில் வேறெந்த ஒலியும் இல்லை - இங்கு இந்த சங்கீதத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. அப்போதுதான் வானம்பாடி மௌனத்தொடு டூயட் பாடிக் கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டேன். அதன் கானத்தின் பின்புலமாய் மௌனமே இருந்தது, அதன் கானத்தை மௌனமே பிசைந்து கொடுத்தது, தான் இந்த உலகை நிறைத்திருப்பதுபோல் மௌனமே வானம்பாடியின் கானத்துக்கு பூரணத்துவம் தந்தது. ஏதோ ஒரு காரணத்தால் நள்ளிரவு ஆயிற்றா என்று சந்தேகித்து டார்ச்சின் வெளிச்சத்தில் என் கைகடிகாரத்தைப் பார்த்தேன். ஒளிக்கீற்றின் விளிம்பில் இருந்த என் மகன் செப்பைக் கண்டேன். அவன் அசையாமல் அந்த வானம்பாடியின் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தான். மிகத் தெளிவாக அவன் முகத்தில் தென்பட்ட அந்த அதிசய உணர்வைக் கண்டதும் நான் மூச்சற்று நின்றேன்.
"நம்மில் எந்தப் பகுதியை அது தொடுகிறது என்பது யாருக்குத் தெரியும்? ஆனால் தொட்டு விடுகிறது. வேண்டிய அளவு நாம் விளக்கங்களைத் தேடலாம். ஆனால் முழுமையான விளக்கம் என்று எதுவும் நமக்குக் கிடைக்காது. தர்க்கமும் அறிவியலும் தோற்று விடுகின்றன. இந்த ஒலி, இது நம்மை எப்படி தொடுகிறது என்பதை அறிவைக் கொண்டு புரிந்து கொள்ள முடியாது. இதயத்தைக் கொண்டு மட்டுமே இதை உணர முடியும், ஆகவே அது பிறருக்குச் சொல்ல முடியாத புரிதலாகவும் ஆகிறது. ஆனால் இந்த கானம் நம்மைச் சரியாகத் தொடும்போது நாம் நமக்கு முன் சென்ற கவிஞர்களுடன் ஒன்றாகிறோம்: அந்தக் கவிதையை எழுதியே ஆகவேண்டும் என்ற பித்து நிலை கீட்ஸை காரணமில்லாமல் ஆட்கொள்ளவில்லை என்று புரிந்து கொள்கிறோம்"
Sedge Warbler (கதிர்க்குருவிகளில் ஒன்று) பற்றி இப்படி எழுதுகிறார் மக்கார்த்தி:
"இப்போதுதான் பார்த்தேன், உடனே எல்லாம் புரிந்தது. ஒவ்வொரு பறவையின் பாடலும் தனித்தில்லை. வேறேதோ ஒன்றின் பகுதியாய் அவை அனைத்தும் கூடிவந்தன. இருப்பின் வேறொரு முழு பரப்பு இது. இத்தனை நாட்களாய் நான் இதை அறியாதிருந்திருக்கிறேன். நாம் நம் மண்ணைக் கண்களால்தான் அறிகிறோம், ஆனால் செவிக்கும் புலப்படக்கூடியது இது... மொட்டவிழும் உலகை நிறைத்திருக்கும் பறவைகள், இனவிருத்தியிலும் இனவிருத்திக்காகப் பாடுவதிலும் தம் ஆற்றலைச் செலவழிக்கும் வேனிற் பருவத்தில் மகத்தான ஒரு இயக்கம் நடைபெறுகிறது, இதை உணர கண்கள் மட்டும் போதாது.
"ஒரு கதவு திறந்து வேறொரு பரிணாமத்தில் நுழைந்தது போன்ற அனுபவமாக இந்த கானம் இருந்தது. நீ இத்தனை நாட்கள் அறிந்திருந்ததைத் தாண்டி இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன என்ற உணர்த்தலின் அகந்தை அழிவு. உன்னை லட்சியம் செய்யாமலே இது அத்தனையும் நடைபெற்று வருகிறது. தன்னை உனக்குத் தெரிந்திருக்கிறதா இல்லையா என்றும்கூட அவை பொருட்படுத்துவதில்லை - எனக்குத் தெரியாதவை இன்னும் எவ்வளவு உண்டு என்று நீ வியக்கிறாய் - ஆனால் எல்லாம் இங்கேயே இருக்கிறது. ஒலிசூழ் உலகம். Soundscape."
Wood Warbler பற்றி இது:
"பறவைகளை நேசிப்பவர்களுக்கு இதைச் சொல்லத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் இதுவே அவர்களுடைய உணர்வாக இருக்கிறது என்று நான் நினைத்துக் கொண்டேன். இந்தப் பறவை இருக்கும் இடத்தில், அந்த இடத்துக்கே உரியதாக, அந்த இடத்தின் சாரமாகவே இது இருக்கிறது என்பதை அவர்கள் இயல்பாகவே உணர்ந்திருக்கிறார்கள். இந்தப் பறவைதான் அந்த இடத்தின் இதயமாக இருக்கிறது. மேற்கு மலைகாடுகளின் மணிமகுடம், இந்தப் பறவையை அடைய நீ வெகு தூரம் பயணப்பட வேண்டும். ஆனால் இங்கு வந்து சேரும்போது நீ ஈடு இணையற்ற அழகு பொருந்திய ஒரு இயற்கைச் சூழலைப் பொருந்துகிறாய். இங்கேதான் அந்த இடத்தின் அத்தனை அழகையும் மறக்க முடியாத வகையில் வெளிப்படுத்தும், அந்த அத்தனை அழகுக்கும் சிகரமாய் இருக்கும், ஒரு பறவையைப் பார்க்கிறாய்."
குறைந்து வரும் பறவைகளின் எண்ணிக்கை, அவற்றுக்கான காரணங்கள், அவற்றைக் காக்க எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் இவற்றைப் பேசும் புத்தகம். ஏறத்தாழ ஐயாயிரம் மைல்களுக்கும் மேல் பயணப்பட்டு ஆப்பிரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு வரும் பறவைகளின் அசாத்திய சாதனையை அடிப்படையாக எடுத்துக் கொண்டு அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் புத்தகம். இதெல்லாம் எளிதாகப் புரிந்து கொள்ளப்படக் கூடியவை.
ஆனால், எம் டி முத்துக்குமாரசாமியின் அருணாசல பிரதேசத்தில் இருவாட்சிப் பறவை மனித வாழ்வின் மையத்தில் இருகிறது, ஜெயமோகனின் குறுந்தொகைப் பாடலின் சங்கத் தமிழ் சூழலின் மையத்தில் குருகு இருக்கிறது, தி ஜானகிராமனின் கு பா ரா நினைவுகளின் மையத்தில் கரிச்சான்குஞ்சு இருக்கிறது - இப்படிப்பட்ட நேசத்தை நாம் இழந்து வருகிறோம். இந்த இழப்பு நம் மொழியின் இழப்பு, நம் உணர்வுகளின் இழப்பு. பறவைகளின் இழப்பு நம் பண்பாட்டின் இழப்பு மட்டுமல்ல, நம் புலன்களின் இழப்பாகவும் நம் இருப்பின் இழப்பாகவுமே முடிந்து விடுகிறது.
Very good review Baskar.
ReplyDelete-Giri
குறைகளை எடுத்துச் சொல்லலாமே? திருத்திக் கொள்ள உதவும், இல்லையா?
Deleteநன்றி கிரி.
நட்பாஸ் ஸார்,
ReplyDeleteநீங்க யார் என்னன்னு தெரியாது; Mask of Zorro மாதிரி முகம் தெரியாதவர் நீங்க(!)
ஆனால் இந்தக் கட்டுரை...amazing...இவ்வளவு வார்த்தைகளே வேண்டாம், இணைத்துள்ள துண்டு ஒலி/ஒளி படங்கள் போதும்...கிறக்கமாக இருக்கிறது.
அதுவும் முதல் படம் - காட்டில் கொண்டு போய் நிறுத்தி விட்டது...
நன்றி மறுபடியும்.
நன்றி சிவா ஸார்...
Deleteநானும் நீங்க நினைச்சதைதான் நினைச்சேன், ஆனா கிரிதான் வீடியோ மட்டும் போட்டா போதாது, கூட நாலு வார்த்தை எழுதி ஆகணும்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டார் :)
தங்கள் தொடர்ந்த ஊக்குவிப்புக்கு நன்றி