ஆம்னிபஸில் குழும விவாதத்தின் போது
அவர்கள் படித்த புத்தகங்களில் மிகவும் விரும்பியவை குறித்து ஒரு பட்டியல்
வந்தது. அதில் ஒருவர் ஜார்ஜ் ஆர்வேல் பற்றிக் குறிப்பிட்டு இருந்தார். இந்த
தடவை வாடகை நூலகம் சென்று நிரம்ப நேரம் தேடிக்கொண்டிருந்தபோது, ஆர்வெல்
பற்றிய நினைவு வந்தது, ஆர்வெல் எழுதிய புத்தகம் ஏதாவது இருக்கிறதா, என்று
கேட்டபோது இந்தப் புத்தகத்தை நூலகர் எடுத்துத் தந்தார். ஆர்வெல் /
புத்தகத்தை பற்றிய எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் படிக்க ஆரம்பித்தேன்.
இந்த
கருத்துகள் தற்காலத்துக்கு எப்படி பொருந்துகிறது? எனக்கு புரிந்த வரையில்
ஒப்பிட்டு எழுத முற்படுகிறேன். நாவல் எழுதப்பட்ட காலம் 1948. நாவலில்
சொல்லப்படும் காலம்- Dystopian Future. 1950-60களில் ஏற்பட்ட உலகப் போரில்
உலகம் முழுவதும் மூன்று நாடுகளின் கட்டுப்பாட்டுக்கு வருகிறது. ஓஷியானியா
(Oceania) நாட்டின் பிடியில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, இங்கிலாந்து
வருகிறது. நாவல் முழுவதும் லண்டனில் வசிக்கும் வின்ஸ்டன் ஸ்மித்தைச் சுற்றி
சொல்லப்படுகிறது. ஒரு மூன்றாம் மனிதனின் பார்வையில் நாவல்
விவரிக்கப்படுகிறது.
நாட்டின்
தலைவராக “பிக் பிரதர்” இருக்கிறார். அவர்தான் இந்நாட்டை தோற்றுவித்ததாக
வரலாறு கூறுகிறது. இவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது யாருக்கும்
தெரியாது. அவரை பற்றி கேள்வி கேட்பதும் தவறாக நினைப்பதும் கடும்
தண்டனைக்குரிய குற்றங்கள். மக்கள் எப்போதும் “Telescreen”என்ற டிவி மற்றும்
உளவு பார்க்கும் கருவியோடு வாழ்கின்றனர். இங்க்சாக் (Ingsoc) என்பது
கட்சியின் பெயர். இந்த கட்சி எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில்
வைத்திருக்கிறது. மினிஸ்ட்ரி ஆப் ட்ரூத் (Truth) கீழ் செய்தி, கல்வி,
பொழுதுபோக்கு மற்றும் ஃபைன் ஆர்ட்ஸ். மினிஸ்ட்ரி ஆப் பீஸ் (Peace) போர்
(War) பற்றியும், மினிஸ்ட்ரி ஆப் லவ் (love) சட்டம் மற்றும் ஒழுங்கு
பற்றியும் மினிஸ்ட்ரி ஆப் ப்ளேன்டி (Plenty) நாட்டின் பொருளாதாரத்தை தத்தம்
கட்டுபாட்டில் வைத்திருக்கின்றன.
கட்சியில்
இருவகை உறுப்பினர்கள் Inner party மற்றும் outer party. முதல் வகையினர்
எல்லா விதமான வசதிகளுடனும் வாழ்பவர்கள், இரண்டாம் வகையினர் அரசு கொடுக்கும்
கலப்படமான உணவை உண்டு வாழ்பவர்கள். வின்ஸ்டன் ஸ்மித் இரண்டாம் வகையை
சேர்ந்தவர். அரசின் ஆவண (Records Dept) காப்பகத்தில் வேலை செய்வபவர்.
இவர்களுக்கு கீழே ப்ரோல்ஸ் (proles) என்ற அடித்தட்டு மக்கள். இவர்கள்
முக்கியமாக அரசாங்க வேலையற்றவர்கள், கட்சியிலும் எந்த ஒரு பதவியும்
கிடையாது. இவர்கள் இந்நாட்டின் மக்கள் தொகையில் 85% சதவிகிதம் ஆவர்.
இந்த
நாவலில் சொல்லப்படும் விஷயம் வரலாறு என்று ஒன்றே கிடையாது, வரலாறு என்பது
இங்கு அழித்து அழித்து எழுதப்படுகிறது. தவறான ஒரு நிகழ்வு நடந்தால், அதை
தான் இந்த அரசு முன்னரே கூறிய மாதிரி திருத்தி எழுதப்படுகிறது,
ஸ்மித்துக்கும் இந்த மாதிரி ஒரு வேலைதான். திருத்தி எழுதப்பட்டவுடன் பழைய
வரலாறு மொத்தமாக அழிக்கப்படும், அதை பற்றிய எந்த ஒரு குறிப்புக் கூட
இல்லாமல்.
இதை
அப்படியே தற்காலத்திற்கு பொருத்திப் பார்த்தால், ஆட்சி செய்யும் அரசின்
செய்தி வரும் தொலைக்காட்சியில் மொத்த நாடும் சுபிட்சமாக இருப்பது போலவும்,
எதிர்கட்சியின் செய்தியில் மொத்த நாடும் வறுமையில் வாடுவது போலவும்
இருக்கும். இப்போது இருவகையான செய்தியும் நம்மால் அறிய முடிகிறது.
ஓஷியானவில் ஒரே செய்தி தான் அரசு செய்யும் எல்லா காரியங்கள் மக்களின்
நன்மைக்கே செய்கிறது, மக்களுக்கு எப்போதும் குறையே இல்லை என்ற தோற்றம்
உருவாக்க படுகிறது.
இன்னொரு
முக்கியமான கரு “double think”: தனக்கு உண்மை என்றே தெரிந்த விஷயத்தை,
அப்படி நடக்கவே இல்லை என்று மனதை ஏற்றுக் கொள்ள செய்வது, முரண் ஆன கருத்து
மூளை யோசித்தாலும் அதை அடக்கி அரசு சொன்ன செய்தியை மட்டுமே நினைப்பது, இந்த
கருத்தை இந்த காலத்திற்கு பொருத்தலாம் - தெரிந்தாலும் லஞ்சம்
வாங்குகிறோம், ஊரையும் நாட்டையும் அசுத்தம் செய்கிறோம், தவறான மனிதருக்கு
ஒட்டு போடுகிறோம், பின்னர் அதை பற்றிய சிந்தனை தோன்றினாலும் அதை
மறைத்துவிட்டு அடுத்த வேலையை கவனிக்க செல்கிறோம்.
ஆர்வெல் இந்த நாவல் மூலம், மக்கள்
பிற்காலத்தில் சுய சிந்தனையற்ற, சுதந்திரமற்ற சமுதாயத்தில் வாழ்வார்கள்
என்று எதிர்பார்க்கிறார். அது அப்படியே நடக்கவில்லை, ஆனால் சினிமா
ஹீரோக்கள், அரசியல் தலைவர்களை வழிபாடும் செய்யும் கூட்டத்தை இப்போது
பார்க்க முடிகிறது.
இன்னொரு
முக்கியமான விஷயம் இந்த நாவலில், உடலுறவு என்பது ஒரு கீழ்த்தரமான செயலாக
சிறுவயதில் இருந்தே மக்களுக்கு போதிக்கப்படுகிறது. குழந்தை பெற்று
எடுப்பதே, கட்சிக்கு உறுப்பினர்கள் தேவை என்பதால்தான். கட்சியின்
கொள்கைப்படி உடலுறவு கொள்வதால் மனிதன் அடைவது சிந்திக்கும் சுதந்திரம்,
அவன் சிந்தனை போன்றவை, செயற்கையாக உடலுறவு கொள்ளும்போது தடை
செய்யபடுகிறது. இந்த காலகட்டத்தில் அப்படியே எதிர்மறை. பாலியல் சார்ந்த
விஷயங்கள், இடுப்பை ஆட்டிக் கொண்டு நடனமாடும் பெண்கள் அதில் மயங்கி
சுயசிந்தனை இழக்கும் மக்கள் அவ்வளவே.
இவை
ஒருபுறம் இருக்க, நாவல் படிக்கும்போது எனக்கு நிறைய சந்தேகம். இங்க்சாக்
கொள்க்கைபடி அறிவியல் முற்றும் தடைசெய்யப்பட்ட ஒன்று. போர் தந்திரங்களுக்கு
மட்டுமே அறிவியல் உபயோகப் படுத்தப்படுகிறது. அது எப்படி போர்
தந்திரங்களுக்காக மட்டும் அறிவியல் துணை வரும் ?. Eastasia மற்றும் Eurasia
(Oceania தவிர) இவை இரு நாடுகளுடன் எப்போதும் சண்டை. அவர்களது ஆயுத பலம்
அதிகம் ஆனால், ஓஷியானா அதற்கு ஆராய்ச்சி செய்துதானே ஆக வேண்டும்? .Inner
party உறுப்பனர்கள் இன்னும் நன்றாக வாழ, அவர்கள் வாழ்க்கை தரம் உயர,
அறிவியல் துணை இல்லாமல் எப்படி முடியும். Outer party உறுப்பினர்களுக்கு
வழங்கப்படும் கலப்படம் செய்த உணவு, மது, புகையிலை, அறிவியல் துணை இல்லாமல்
எப்படி வளர முடியும்?
“Thought Crime’ என்ற கரு இந்த
நாவல் முழுவதும் காண முடியும். அதாவது, “பிக் பிரதர்” என்ற ஒருவர் இல்லை,
இங்கு சுதந்திரம் இல்லை, ஓஷியானா என்பதே பொய், டெலிஸ்க்ரீனில்(Telescreen)
சொல்வது பொய் போன்ற எண்ணங்கள். அதாவது அரசு சொல்வதை நம்பாமல் முகம்
சுளித்தால்கூட குற்றமே. இந்த மாதிரி எண்ணங்கள் வந்தாலே, டெலிஸ்க்ரீன்
அவற்றை கண்டுபிடித்துவிடும், உடனே அவர்களை, அரசாங்கம் கைது செய்துவிடும்.
தூக்கத்தில் அரசை பற்றி உளறினால் கூட உடனே கைதுதான்.
இப்படிப்பட்ட
நிலையில், வின்ஸ்டன் எழுதும் டைரியை முன்னமே படித்திருந்தாலும், அதற்கு
பின் வின்ஸ்டன்- ஜூலியா இருவரும் உடலுறவு கொள்ளும்போதும், வின்ஸ்டன்,
ஓப்ரெய்னை சந்திக்கும்போதும் கைது செய்யாத அரசு, அதற்கு அப்புறம்தான்
வின்ஸ்டனை கைது செய்வது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதில் ஓ ப்ரெய்ன்தான்,
வின்ஸ்டனை நிறைய கைது செய்ய ஆணை இடுகிறார். எதற்கு வின்ஸ்டனுக்கு ஓ
ப்ரெய்ன் புத்தகம் கொடுக்க வேண்டும். பின்னர் அவரை கைது செய்ய வேண்டும்?
சிறைச்சாலையில் கடுமையான சித்ரவதைகள் மூலம் வின்ஸ்டனின் எண்ணங்கள்
மாற்றப்படுகின்றன “பிக் பிரதர்”, உண்மை, அரசு சொல்வது எல்லாம் உண்மை என்ற
எண்ணம் விதைக்கப்படுகிறது எப்படி இருப்பினும் இந்த அரசில் நடக்கும்
கைதுகளுக்கு யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை என்னும்போது, அவர்களை
சித்ரவதை செய்து கடைசியில் அவர்களின் எண்ணத்தை (மனபிழற்வு செய்து) மாற்றி
விட்டு கொல்வது ஏன் என்று புரியவில்லை.
ஆனால்
வின்ஸ்டனை கொடுமை செய்யும் பகுதி படிக்கும்போது தற்காலத்தில் அமெரிக்கா
Guantanamo Bayஇல் தீவிரவாதிகளை சித்தரவதை செய்வதோடு ஒப்பிட்டுக்
கொள்ளலாம். இந்த நாவல் படித்து முடிக்கும் சமயம் விக்கிபீடியாவில் இந்த
நாவலை பற்றி வாசித்தேன். அதில் இருந்து சில புரிதல் உண்டானது. அமெரிக்கா,
ஜப்பான் மேல் வீசிய அணுகுண்டு, மற்றும் இரண்டாம் உலகப் போர், ரஷ்யாவில்
ஏற்பட்ட கம்யுனிஸ்ட் ஆட்சி அதில் வரும் சம்பவங்களை, இந்த நாவலில் சில
இடங்களில் உபயோகபடுத்தி இருப்பதை அறிந்தேன்.
சில
சமயம் இந்த உலகில் நான்தான் மிக பெரிய Cynic என்றும், Misanthrope
என்றும் நினைத்துக் கொண்டு இருப்பேன். இந்த நாவலை படித்து முடித்தவுடன்
கொஞ்சம் திருப்தி, சில குறைபாடுகள் இருந்தாலும், நாவலை எழுதி இருக்கும்
விதமும், படிக்கும்போது அடுத்து என்ன நடக்கும் என்ற திகிலும், நாவலின்
பலம். கிட்டத்தட்ட நாவலில் சொல்லப்படும் விஷயங்கள் நடக்கக்கூடிய சூழ்நிலை
பிற்காலத்தில் வருமா என்று தெரியாது. ஆனால் வந்தாலும் அதிசயம் இல்லை.
அருமையான விமர்சனம், பாலாஜி.
ReplyDeleteதனது 'சொர்க்கத்தீவு' நாவலின் முன்னுரையில் சுஜாதா இந்த 1984 பற்றிக் குறிப்பிட்டிருப்பார்..
இந்தக் கதை தொடர்கதையாக வந்தபோது ‘ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘1984 ‘ போல இருக்கிறது என்று ஒருவர் எழுதியிருந்தார்.
மற்றொருவர் ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ‘பிரேவ் நியூ வேர்ல்ட்‘ என்றார். பிறிதொரு பெண்மணி ஐரா லெவினின் ‘திஸ் பெர்ஃபெக்ட் டே‘ என்றார். இவர்கள் எல்லாரும் சொல்கிறபடி நான் காப்பியடிக்க வேண்டுமென்றால் ஒரு லைப்ரரியையே அடித்திருக்க வேண்டும். பின் அவர்கள் சொன்ன குற்றச்சாட்டுகளில் அர்த்தமில்லையா ? பார்க்கலாம்.
நான் மேற்சொன்ன நாவல்களை எல்லாம் படிக்கவே இல்லை என்று சொல்வது சிறுபிள்ளைத்தனம். மேற்சொன்ன புத்தகங்கள் என்ன, நிறைய சயின்ஸ் ஃபிக் ஷன் புத்தகங்கள் படித்திருக்கிறேன். என் நண்பர்களுக்கு நான் சில ஆசிரியர்களைச் சிபாரிசு செய்கிறேன்.
Arthur Clarke, Ray Bradbury, Henry Slesar, Theodore Sturgeon, Anthony Burgess.
பெரும்பாலும் எல்லா சயின்ஸ் ஃபிக் ஷன் நாவல்களிலும் சில பொதுவான அம்சங்கள் இருக்கின்றன.அவை:
எதிர்காலத்தைப் பற்றி அவை சொல்லும்.
இன்றைய சமுதாய அமைப்புக்குப் பதிலாக, மாறுதலாக ஒரு புதிய அமைப்பை — ஒருவித Utopia அவைகளில் சொல்வார்கள்.
அந்தப் புதிய அமைப்புக்கு எதிராக ஒருவன் முயற்சி செய்வான்.
‘1984 ‘ என்கிற நாவல் மிக அதீதமான யுத்த பயத்தின் அடிப்படையில் பீடிக்கப்பட்ட ஜனங்கள் விழித்துக் கொண்டே வாழும் கெட்ட சொப்பனம் போன்ற வாழ்க்கையைப் பற்றியது. இதில் சரித்திரம் தினம் தினம் மாற்றி எழுதப்படுகிறது. உண்மை என்பது மணிக்கு மணி மாறுகிறது. இந்த அமைப்பை எதிர்த்த ஒருவனின் தோல்வியைப் பற்றியது இந்த நாவல்.
ஹக்ஸிலியின் ‘பிரேவ் நியூ வேர்ல்ட்’ விஞ்ஞான முறைப்படி டெஸ்ட் டியூப்களில் சுத்தமாக நிர்ணயிக்கப்படும் புதிய வர்ணாச்ரம தர்மத்தைப் பற்றியது. இதையும் ஒருத்தன் எதிர்க்கிறான்.
ஐரா லெவின்னின் ‘திஸ் பெர்ஃபெக்ட் டே‘ என்பதில் அகிலம் முழுவதையும் ஒரு ராட்சஸக் கம்ப்யூட்டர் ஆள்கிறது. ஒரே ஒரு பிரதேசத்தில் மட்டும் மக்கள் அகதிகளாகத் தப்பித்துக் கொண்டு பழைய வாழ்க்கை, அதன் சுக துக்கங்கள் சகிதம் கூட்டமாக, அழுக்காக, சந்தோஷமாக வாழ்கிறார்கள். கதாநாயகன் ஆள் திரட்டிக்கொண்டு கம்ப்யூட்டர் ஆட்சியை எதிர்க்கச் செல்கிறான். அவனுக்கு அங்கே ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. அவன் வாழ்ந்த அந்த சுதந்திரப் பிரதேசம்கூடக் கம்ப்யூட்டரின் ப்ரோக்ராம்களின் சாகசங்களில் ஒன்று. அவன் தப்பித்துத் திரும்ப வருவது எல்லாமே முன்பே நிர்ணயிக்கப்பட்ட விஷயம்.
இப்போது சொல்லுங்கள். Am I cleared ?
நன்றி பால்ஹனுமான்...
Deleteநீங்கள் இதைப் பார்த்திருப்பீர்களே?
http://relevancy22.blogspot.in/2011/05/1984-vs-brave-new-world-our-own.html
ஆர்வெல் சொன்னதைவிட ஹக்ஸ்லி சொன்னதுதான் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது என்பதை படம் போட்டு காட்டியிருக்கிறார்கள்...
பாலாஜி பிரேவ் ந்யூ வர்ல்ட் பற்றியும் நீங்கள் சொன்ன ஐரா லெவின் நாவல் குறித்தும் மதிப்பீடு செய்ய வேண்டும்.
பாலாஜியின் விமரிசனப் பார்வை நாளுக்கு நாள் கூர்மையாகவும் கறாராகவும் மாறிக்கொண்டிருப்பது பீதியைக் கிளப்புகிறது.
இந்த ஆர்வெலைப் படிக்கணும் போலையே! அதையும் செய்வோம்!
ReplyDelete
ReplyDeleteHi
Balhanuman, Thanks for your valuable comments and suggestions, going to add those authors into my reading list, thanks again and i am glad you liked the post.
@natbas sir Searched for the book "Brave new world", if i got hold of it next week, surely review it :-)
thanks natarajan, you will like the book