கன்னட- ஆங்கில சிந்தனையாளர் / எழுத்தாளர் டி.ஆர் நாகராஜ் “தகிக்கும் பாதங்கள்” (flaming feet) எனும் மிக முக்கியமான நூல் ஒன்றை எழுதியுள்ளார். தலித் இயக்கங்களை, தலித் செயல்பாடுகளை சார்புகளற்று மதிப்பிடும் மிக முக்கியமான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு அது. அந்தத் தொகுப்பின் முதல் கட்டுரையை நான் இதுவரை இருபது முறைக்கு மேல் வாசித்திருப்பேன். அது ஒரு கிளாசிக். அம்பேத்கரும் காந்தியும் ஒரே பிரச்சனையை எவ்வாறு மாற்று கோணங்களில் அணுகி தத்தமது வழியில் பரஸ்பர கொடுக்கல் வாங்கல்கள் மூலம் தீர்வை நோக்கி முன்நகர்ந்தனர் என்பதை அழகாகச் சொல்லும் கட்டுரை. அதில் காந்தியையும் அம்பேத்கரையும் குறிப்பிடும்போது நாகராஜ் பயன்படுத்தும் சொற்கள், “creatively impatient”. மில்லி போலக் காந்தியைப் பற்றி எழுதிய இந்த சின்னஞ்சிறிய நினைவு குறிப்பு நூலை வாசிக்கும்போது இந்தப் பதம்தான் என் மனதில் நிழலாடியது. இவர்களின் படைப்பூக்கமும் பொறுமையின்மையும் வரலாற்றுடன் மோதி இவர்களைக் கலைத்து மீண்டும் கட்டி எழுப்புகிறது.
![]() |
மில்லி கிரகாம் போலக் |
மில்லி கிரகாம் போலக் லண்டனில் பிறந்து வளர்ந்தவர். ஹென்றி போலக்கை திருமணம் செய்துகொண்டபின் தென்னாப்பிரிக்கா வந்தவர். கோபாலகிருஷ்ண காந்தி ஒரு கட்டுரையில் இவர் எழுதிய புத்தகத்தைத் தன் மனதிற்கு மிக நெருக்கமான நூல் என்று குறிப்பிட்டிருந்தார். சி.எஃப். ஆண்ட்ரூஸ் தொகுத்த 118 பக்கங்கள் கொண்ட இந்த சிறு மின்நூலை வாசித்து முடிக்கும்போது கோபாலகிருஷ்ண காந்தி சொன்னது மிக சரி என்று உணர்ந்தேன். நான் வாசித்த காந்தி சரிதைகளில் மிக முக்கியமானதும், நெருக்கமானதுமாக இதுவே இருக்கக்கூடும்.
காந்தி தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஹென்றி போலக். காந்தியுடன் பல ஆண்டுகள் ஒரே வீட்டில் வசித்தவர். தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர்களுக்காக காந்தி போராடினார் என்றால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் போலக் மற்றும் பல ஐரோப்பியர்கள் ஏன் காந்தியுடன் இணைந்து பணியாற்றி இப்போராட்டத்தில் சிறை சென்றனர் என்பது இன்று வாசிக்கும்போது வியப்பாகத்தான் இருக்கிறது. காந்தியைச் சுற்றி எத்தகைய மகத்தான லட்சியவாதிகள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று எண்ணும்போதெல்லாம் எதையோ இழந்துவிட்ட பெருமூச்சே எஞ்சுகிறது.
பாரதிக்கு யதுகிரி அம்மாள் எப்படியோ அப்படி காந்திக்கு மில்லி போலக். ஒரு மகத்தான மனிதரின் அண்மையில் வாழ்ந்த எளிய இல்லத்தரசியாக, குடும்பப் பெண்ணாக, ஒரு லட்சியவாதியின் நிழலில் வாழ்ந்த நடைமுறைவாதியின் நேர்மையான குரலாக ஒலிக்கிறது மில்லியின் குரல். தன் நினைவில் பதிந்த சிறுசிறு நினைவுத் துண்டங்களை, தங்களுக்குள் நிகழ்ந்த உரையாடல்களை பதிவு செய்திருக்கிறார் மில்லி. அவர் தேர்ந்த ஒரு புனைவாசிரியர் அல்ல, ஆனால் இந்த புத்தகத்தில் புனைவுக்குரிய தருணங்கள் நிரம்பி வழிகின்றன. காந்தியின் விமர்சகராக மில்லியின் ஆளுமையும் இந்த நூலில் தனித்து தொனிக்கிறது. காந்தி வாழ்ந்த காலத்தில், உலகமெங்கும் உப்பு சத்தியாகிரக போராட்டம் பெரும் கவனத்தை ஈர்த்த காலகட்டத்தில், 1931 ஆம் ஆண்டு இந்த நூல் வெளிவந்துள்ளது.
ஃபோனிக்ஸ் ஆசிரமத்தில் எதிர்கொள்ள நேர்ந்த சில சிக்கல்களைப் பேசுகிறார் மில்லி. மழைகாலங்களில் விழும் நீரை வீட்டின் கூரையிலிருந்து பெரும் குண்டாக்களில் சேகரித்து அதையே வருடம் முழுவதும் பயன்படுத்தியிருக்கிறார்கள். கடும் நீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் நீரை மிக சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய நிலை. ஆசிரமவாசிகளுக்கே நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருந்த சூழலில், அருகாமையில் உள்ள ஜுலு குடியிருப்பில் வாழும் மக்கள் ஓரிரு கோப்பை சுத்தமான குடிநீர் கேட்கும்போது மறுக்க முடிவதில்லை. ஆனால் பத்து பதினைந்து கோப்பைகள் இப்படி ஒவ்வொரு நாளும் கொடுக்க நேரும்போது நீர் சேகரிப்பு குறைய தொடங்குகிறது. நீரை மறுப்பதா இல்லை கொடுப்பதா என்ற கேள்வி எழுகிறது. ஆசிரமவாசிகள் குளிக்கவும் துவைக்கவும் பயன்படுத்தும் நீரோடையில் கொடிய விஷம் கக்கும் மாம்பா பாம்பு ஒன்று தென்படுகிறது. ஒவ்வொரு உயிரும் முக்கியம், கொல்லாமை தவறு, ஆனால் சிறார்கள் வாழும் இடத்தில் கொடிய விஷ பாம்பு. உயிர் பயமா, உயிர் சமத்துவமா?
லட்சியவாதம் வெறும் எண்ணங்களாக, வாய்பேச்சாக இருக்கும்வரை அது போதையளிக்கும் இன்பக் கனாதான். பாவனைகளில், மதர்ப்பில் தரையில் கால்படாமல் அந்தரத்தில் மிதக்கலாம். ஆனால் அவையே வாழ்க்கை விழுமியங்களாக, நடைமுறை நெறிகளாக உருமாற்றம் கொள்ளும்பொழுது எழும் நெருக்கடிகளை ஒவ்வொரு நொடியும் நேர்கொண்டு சந்தித்தாக வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறான் லட்சியவாதி. காந்தி தன் லட்சிய கனவுகளை வாழ்க்கை விழுமியங்களாக வளர்த்தெடுக்க முயன்றபோது அவர் எதிர்கொண்ட உள/புற நெருக்கடிகளைதான் மில்லி தொடர்ந்து வெளிச்சமிடுகிறார்.
நடைமுறை பலவீனங்கள் காந்தியை எவ்வாறு அசைத்து பார்க்கின்றன, காந்தி அவற்றை எவ்வாறு களைந்தார் என்பதை அறிந்துகொள்ள அவருடைய வாழ்வின் பிற்பகுதிகளில் அதற்கான விடையை நாம் தேடிக்காண முடியும். குழந்தைகளை ஒருபோதும் அடித்து வளர்க்கக் கூடாது என்பது காந்தியின் கொள்கை. தொடர்ந்து அவர்களுடன் உரையாடி அவர்களுக்குச் சரியானதை அன்பைக் கொண்டு உணர்த்த முடியும் என்று அவர் நம்பினார். எதற்கும் அடங்காத பிடிவாதக்கார சிறுவன் ஒருவன் காந்தியின் பராமரிப்பில் வளர நேர்ந்தது. பிற குழந்தைகளை துன்புறுத்துவதில் இன்பம் காணும் மனோபாவம் கொண்டவன் அவன். காந்தியின் தொடர் முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஹென்றி போலக் மற்றும் பலர் அவனுடைய நடத்தையில் மிகவும் எரிச்சல் அடைந்தாலும், அவனை வேறு மாதிரி கண்டிக்க வேண்டும், அதுதான் அவனை வழிக்கு கொண்டுவரும் என்று கருதினார்கள். ஆனால் காந்தி அதற்கு ஒப்புக்கொள்ளவே இல்லை. ஒருமுறை அந்தச் சிறுவன் மற்றுமொரு சிறுவனின் தலையை நோக்கி கிரிக்கெட் மட்டையை வீசி எறிந்தான். இதைப் பார்த்த காந்தி, ஹென்றியிடம் சொல்லி அவனைக் கண்டிக்கும் வண்ணம் இரண்டு அடி கொடுக்க சொன்னார். அதன் பிறகு அவனுடைய நடவடிக்கையில் பெரிய மாறுதலை கவனித்ததாக மில்லி குறிப்பிடுகிறார்.
மில்லிக்கும் காந்திக்குமிடையில் நடக்கும் விவாதங்கள் ஒவ்வொன்றும் அற்புதமானவை. அவர்கள் விவாதிக்காத விஷயமே இல்லை என தோன்றுகிறது. சில நேரங்களில் காந்தியைக் காட்டிலும் மில்லியின் எண்ண ஓட்டங்களில் நம் மனம் லயிப்பதை உணர முடிகிறது. பிள்ளை பேறு, பாலியல் கல்வி, மனிதன் vs மிருகம், மதமாற்றம், மேற்கிலும் கிழக்கிலும் பெண்களின் நிலை, ஆன்மிகம் என அனேக விஷயங்களைப் பற்றி விவாதம் நீள்கிறது. இந்து தர்மத்தின்படி வாழ்வின் நான்கு ஆசிரமங்களை உயர்வாக காந்தி பேசும்போது இடைமறித்து சன்யாசம் போன்றவை ஏன் பெண்களுக்கு இல்லை, அவர்களுக்கு ஆன்மீக வாழ்வு என்று ஏதுமில்லையா என்று மில்லி கேட்கிறார். இந்தியாவில் பெண்களை கடவுளாக வணங்கும் அதே வேளையில் நடைமுறையில் அடக்குமுறைக்கு உள்ளாகிறாள் என்கிறார் மில்லி.
இயற்கையுடன் இணக்கமாக வாழ வேண்டும் என்று சொல்கிறார் காந்தி, அதற்கு தேவையான நுண்ணறிவை நமக்கு இயற்கை அருளியிருக்கிறது. இன்றைய சிக்கல்களுக்கு முக்கிய காரணம் மனிதன் தன் அறிவைப் பயன்படுத்தி தன்னை இயற்கையிடமிருந்து துண்டித்துக் கொண்டதுதான் என்கிறார் காந்தி. மனித மனமும் இயற்கை தன்னை வெளிபடுத்தும் ஒரு கருவிதான், எனவே மனிதர்களின் கண்டுபிடிப்புகளை புறக்கணிக்க மாட்டேன் - அவையும் உள்ளுணர்வில் விளைந்ததுதான் என்று வாதிடுகிறார் மில்லி.
காந்திமீது மில்லி வைக்கும் மிக முக்கியமான குற்றச்சாட்டு அவர் தன்னைச் சுற்றி இருப்பவர்களிடமிருந்து மிக அதிகமாக எதிர்பார்க்கிறார் என்பதே. அதன் காரணமாக சிலர் அவரை ஏமாற்ற முற்படுகிறார்கள். இப்படிப்பட்ட தருணங்களாய் ஃபோனிக்சில் நடந்த சில நிகழ்வுகளையும் அதனால் காந்தி அடைந்த ஏமாற்றத்தையும் பதிவு செய்திருக்கிறார் மில்லி. அதேபோல் முக்கியமான விஷயங்களில் அவரே தன்னிச்சையாக முடிவெடுக்காதது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு தான் விரும்பும் முடிவை நம்மிடமிருந்து பெறுவதில் தேர்ந்தவர் காந்தி என்று தன் அனுபவங்களை பகிர்கிறார்.
வாய்ப்பு அமைந்திருந்தால் காந்தி சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த ஹீலர்களில் ஒருவராக பெயர் பெற்றிருப்பார் என்கிறார் மில்லி. அறுவை சிகிச்சையின்றி அப்பெண்டிசைடிஸ் நோயை ஒருவருக்கு பூரணமாக குணப்படுத்துகிறார், பிழைப்பதற்கு மிகக் குறைந்த வாய்ப்புகள் மட்டுமே உள்ள பெர்னிஷியஸ் அநீமியாவால் பாதிக்கப்பட்டிருந்த கஸ்தூரிபாய் காந்தியை எலுமிச்சை சாறு கொடுத்து குணப்படுத்தியது ஒரு அற்புதமாகவே கருதப்படுகிறது.
நவீன மருத்துவத்தில் காந்தி நம்பிக்கை இழந்ததற்கு பின்புலமான ஒரு சம்பவத்தை நினைவு கூர்கிறார் மில்லி. நெருங்கிய நண்பர் ஒருவரின் மகனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவிருந்த சமயத்தில் அவர்கள் காந்தியை உடனிருக்க அழைத்திருந்தனர். அவர் உடனிருந்தால் அவன் நிச்சயம் உயிர் பிழைத்திடுவான் என்பது அவர்களுடைய நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அவன் அறுவை சிகிச்சையில் உயிரிழக்க நேரிட்டது. காந்தியை அது வெகு ஆழமாக பாதித்தது. தன்னுடைய தோல்வியாகவே அதை அவர் கண்டார் என்கிறார் மில்லி.
தன் நிலைப்பாடே சரி எனும் முன்முடிவை இறுகப் பற்றிக்கொண்ட பின்னரே மனிதன் அனைத்தையும் மதிப்பிடத் தொடங்குகிறான். தார்மீக சரி தவறுகளுக்கு அப்பாற்பட்டு அவன் எடுக்கும் ஒவ்வொரு நிலைப்பாடும் அவன் சமூகத்திற்குக் காட்ட தேர்ந்தெடுத்திருக்கும் அவனது முகத்தை, சமூக அடையாளத்தை, பேணுவதாக இருக்க வேண்டும் எனும் ஒற்றை எண்ணம் அதன் அடிசரடாக இருக்கும். காந்தி தன்னுடைய ஒவ்வொரு எண்ணத்தையும் மூர்க்கமான பிடிவாதத்துடன் முன்வைத்தார். ஆனால் விவாதத்திற்கான வாயிலை எப்போதும் திறந்து வைத்துக் காத்திருந்தார். அவரை அசைத்து பார்க்கும் தர்க்கங்களை ஏற்றுக்கொண்டு பிழை என்று உணர்ந்ததை அதே மூர்க்கத்துடன் கைவிட்டு முன்னகர்ந்தார்.
இந்த நூலில் எப்படியும் சுமார் இருபது சிறுகதைக்கான களம் உள்ள கட்டங்களை ஒரு தேர்ந்த வாசகனால் கண்டுகொள்ள முடியும். புனைகதைகளை காட்டிலும் அதிசுவாரசியமான வாழ்க்கை நிகழ்வுகளை கொண்டது இந்த நூல். மில்லியின் முதல் குழந்தை பிறந்த எட்டு மாதங்களில் உறக்கம் இன்றி தவித்துகொண்டிருந்த சூழலில், குழந்தைக்கு பால் குடியை நிறுத்தும் முயற்சியில் இருந்தார். ஆனால் குழந்தை தினமும் விடாமல் அழுதது. அப்போது காந்தி குழந்தையைத் தன் பக்கத்தில் பாய் போட்டு படுக்க வைத்து கவனித்துக் கொண்ட நிகழ்வை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறார் மில்லி. இனி மனிதர்கள் பிள்ளைகளே பெற்றுக்கொள்ளக் கூடாது என்று தீவிரமாக வாதிட்டவர், ஆசிரமத்துவாசியின் பிள்ளையை ஆசைதீர தூக்கிக் கொஞ்சுகிறார்.
விவாகரத்தான பெண்மணி ஒருவர் அவரை விருந்துண்ண அழைக்கும்போது, அங்கு சென்றுவரத் தயங்குகிறார் காந்தி. ஆனால் முடிவில் அவரது இருக்கும் மானுட நேயம் வெல்கிறது. தயக்கமின்றி செல்கிறார். தன்னைக் கொல்ல பம்மி பயந்து வரும் ஒருவனின் அருகில் தானாகவே சென்று பேசுகிறார். உயிரைப் பறிக்க வந்தவன் கத்தியை அவரிடமே கொடுத்துவிட்டு திரும்புகிறான். அவனைப் பிடித்துகொடுக்க வேண்டும் என்று மில்லி சொல்லும்போது “தேவையில்லை அப்படி செய்திருந்தால் நான் அவனை எதிரி ஆக்கி இருப்பேன், இப்போது அவன் எனக்கு மற்றுமொரு நண்பன்” என்கிறார். இத்தகைய நெகிழ்ச்சியான நிகழ்வுகளுக்கு குறைவே இல்லை. புனித ஃப்ரான்சிஸின் சாயலை நாம் காந்தியிடம் காண முடியும் என்று முன்னுரையில் ஆண்ட்ரூஸ் எழுதுகிறார்.
மகத்தான மனிதர்களுக்கு என்று சில வரலாற்று கிறுக்குத்தனங்கள் உண்டு. காந்தியும் இதற்கு விதிவிலக்கல்ல. மில்லியின் வாதங்கள் நமக்கு உவப்பானதாக இருக்கும், காரணம் அது ஒரு சாமானியனின் குரல். மகத்தான மாற்றங்கள் மீது நம்பிக்கை இல்லாத, பெரும் கனவுகள் ஏதும் இல்லாத, அனைத்தையும் சந்தேகக் கண் கொண்டு நோக்கும் சாமானியனின் குரல். யோசித்து பார்த்தால் இந்தக் குரல்கள் உலகெங்கும் ஒலிக்கின்றன, மகத்தான கிறுக்குத்தனங்களின் மிகைகளையும் சிக்கல்களையும் அவை குத்திக் காட்டியவண்ணம் இருக்கின்றன. அதுவே அதன் வரலாற்று பங்களிப்பாகும்.
ஆனால் உண்மையில் உலக வரலாறு இந்த சாமானியர்களின் எதிர்வினைகளால் சுட்டிக்காட்டப்படும் மிகைகளைக் களைந்த ‘வரலாற்று கிறுக்குத்தனங்களால்’ நிறைந்தது. மகாத்மா , தேசபிதா போன்ற சிலுவைகள் ஏதுமில்லாமல் எளிய மனிதராகவே காந்தியை நாம் மிக நெருக்கமாக உணர முடிகிறது. எந்த உள்நோக்கமும் இல்லாமல் அவருடன் பழகிய மில்லி போன்ற தூய ஆன்மாவால் மட்டுமே இத்தகைய ஒரு எளிமையான, அதே சமயம் இதயத்தை ஊடுருவும் படைப்பை அளித்திருக்க முடியும் என்று நினைக்கிறேன். அதற்காக அவருக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
நான் திரும்ப திரும்ப வாசிக்க விரும்பும் வெகு சில நூல்களில் நிச்சயம் மில்லியின் இந்த புத்தகமும் உண்டு.
- சுகி
Another good book review. Thanks.
ReplyDelete