தந்திர பூமி
இந்திரா பார்த்தசாரதி
நாவல்
Photo courtesy/To Buy: Amazon
இந்திரா பார்த்தசாரதி நாவல்களில் நான்
படிக்கும் மூன்றாவது நாவல் இது. ஐந்தாறு வருடங்கள் முன்பு ‘குருதிப்புனல்’
வாசித்திருக்கிறேன். இன்னொரு நாவல் பெயர் மறந்து விட்டது, கம்யுனிசம் அந்த
நாவலின் கதாபாத்திரங்கள் மூலம் நிறைய விவாதிக்கப்படும். அவ்வளவுதான் ஞாபகம்
இருக்கிறது. அங்கங்கே சில தீபாவளி மலர்கள், சிறப்பு மலர்களில் அவர்
சிறுகதைகள் வாசித்து இருக்கிறேன். தீவிரமான வாசிப்பு ஆர்வம் வந்தபின் நான்
வாசிக்கும் நாவல் இது.
தந்திர பூமி
பற்றி சொல்ல வேண்டும் என்றால், இந்தக் கதை படிக்கும்போது ஆதவனின் “காகித
மலர்கள்” நாவல் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இரண்டு
நாவல்களுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு, ஆனால் நிறைய வித்தியாசமும் உண்டு.
கதை நடைபெறும் இடம் டில்லி. இரு நாவல்களிலும் உயர் நடுத்தர மக்களின்
வாழ்க்கை பிரச்சினைகள் அலசப்பட்டிருக்கும். ஆதவனின் நாவலில் மனிதனின்
மனசாட்சிக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனும்
தான் பழகும் ஒவ்வொருத்தர் மனதிலும் உருவாக்கும் பிம்பமும், அதன் கசப்பும்
அதிகம் இருக்கும். இந்த நாவலிலும் கதைநாயகன் தான் யார் என்பதை அறிந்து
கொள்கிறான். ஆனால் நிறைய இடங்களில் ஆசிரியர் வாசகனின் எண்ண ஓட்டத்திற்கு
விஷயங்களை விட்டு விடுக்கிறார். இது இந்திரா பார்த்தசாரதியின் பலம்.
தந்திர
பூமியான டில்லி நகருக்கு பெரிய கனவுகளோடு வந்து சேரும் கஸ்தூரியின்
வெற்றியும், அவனது சிற்சில தோல்விகளும், மீரா மீது ஏற்படும் காதலும், அந்த
கவர்ச்சியை ஏற்றுக் கொள்ளாததும், கடைசியில் அவனது உணர்சிகளுக்கு இடம்
கொடுத்து, தான் யார் தன் இயல்பு என்ன என்பதை அறிவதும்தான் கதை.
பாட்டர்சன்
கம்பெனியில் லயசன் ஆபிசர் ஆகச் சேரும் கஸ்தூரி, சீக்கிரமாகவே கம்[பெனியில்
நல்ல பெயர் பெறுகிறான். அதே சமயம் கம்பெனியின் வேலை செய்யும் மீராவிடம்
காதல் கொள்கிறான், முதல் நாளே அவனின் உடல் தேவைகளை மீராவின் மூலம் பூர்த்தி
செய்து கொள்கிறான். ஆனாலும்கூட அவளிடம் ஒரு வேற்று மனிதன் போலவே நடந்துக்
கொள்கிறான்.
நாவல்
முழுவதும் கஸ்தூரியைப் பற்றி இருந்தாலும், அதிகார மையமாக இருக்கும்
தில்லியையும், அதில் வேலை செய்யும் மக்களையும் ஈவு இரக்கமின்றி
விமரிசிக்கிறார். அவர்களின் எண்ண ஓட்டங்களை வெளிப்படையாக விவரிக்கிறார்.
மாப்பிள்ளைக்கு லைட்டர் வாங்கிக் கொடுக்கும் செக்ரட்டரி முதல் நிறைய ஊழல்
செய்யும் அதிகாரி வரை யாரையும் விட்டு வைப்பதில்லை. மனிதனின் உண்மையான
இயல்பை எந்த விதமானன பாசாங்கும் இல்லாமல் எழுதுகிறார்.
போதை
கொள்ளும் அளவுக்கு வெற்றி அடையும் கஸ்தூரி, அவனை விலக்கி விட்டுச் செல்லும்
மீரா, அதனால் ஆத்திரமடைந்து, தன்னிலை மறந்து, வேலையை உதறும் கஸ்தூரி
மற்றவனுக்கு அடிமையாகி, அதிலிருந்து மீண்டு, மீண்டும் மீராவுடன்
சேர்வதுடன், அவனுடைய உண்மையான மிருக எண்ணங்களுடன் வாழ்வை துவக்குகிறான்
என்று போகிறது கதை. இந்த குறைந்தபட்ச விவரங்கள்கூட இல்லாமல் இந்திரா
பார்த்தசாரதி யாரையும் விட்டு வைக்காமல் ஈவு இரக்கமின்றி விமரிசிக்கிறார்
என்று சொல்வதை நியாயப்படுத்த முடியாது. இந்தக் கதைச் சுருக்கமே இபா தன்
பாத்திரங்களை விமரிசனப் பார்வையில்தான் பார்க்கிறார் என்பதைச்
சொல்லிவிடுகிறது. அவர்களுடைய சாகசங்கள் சாதனைகள் என்று எதையும்
போற்றுவதில்லை. தனக்குப் பிடிக்காத, அதிகாரத்தின் பின்னால் அலையும்
வாழ்க்கை முறையைக் கூறு போட்டுக் காட்டவே இந்த நாவலை எழுதியிருக்கிறார்
என்று தோன்றுகிறது.
1969ல்
எழுதப்பட்ட நாவல் இது. அந்த காலத்திலேயே பெண்கள் ஆண்களுடன் சுலபமாக இரவைக்
கழிக்கிறார்கள். அப்போதைய தில்லி நடைமுறை வாழக்கை, தமிழர்கள் செயல்பாடு,
போன்றவைகள் ஆதவனின் காகித மலர்கள் போன்றே உள்ளது. இது ஒரு ஒப்பீடுதான்.
அவர் இவரைப் பார்த்து காப்பி அடித்தார் என்று சொல்ல வரவில்லை. காகித
மலர்கள் இந்த நாவல் வெளிவந்தபின் எழுதப்பட்டிருக்கலாம் என்று சொல்வது ஒரு
தகவல் பதிவுதான். நான் முதலில் படித்தது என்னவோ “காகித மலர்கள்” நாவல்தான்.
தந்திர பூமி
நாவலின் இறுதி பகுதிகளில் கஸ்தூரி தான் ஏற்படுத்துகிற பிம்பத்தை
ஆராய்கிறான். அதைத் தொடர்ந்து அவனது எண்ணங்களும் மாறுபடுகிறது, ஹிப்பிகள்
உடனான ஒரு சைக்கிடெலிக் அனுபவத்தில், அவனது சுய இயல்பை மீட்டு எடுக்கிறான்.
எந்த இடத்திலும் தன்னுடைய சுபாவத்தை இழக்காத மீரா ஒரு சமயத்தில்
கஸ்தூரிக்காக ஏங்குபவள் ஆகிறாள். அவன் அவளை விட்டு விலகும்போது, அவளும்
அவனை விலகி, தன் வழிக்கு இழுத்துக் கொள்கிறாள். இருவரும் ஒருவரை ஒருவர்
புரிந்துகொண்ட பின்பும், தங்களுடைய ஆணவத்தின் காரணமாக பேசாமல் இருப்பது
சிறப்பாக எழுதப்பட்டு உள்ளது. மொத்தத்தில் மனிதனின் உண்மையான குணங்களே அவனை
வெல்லும் என்று சொல்லும் இன்னொரு நாவல், அவ்ளோதான்.
P.S: இந்த
நாவலின் முன்னுரையில் கையாளப்பட்டிருக்கும் தமிழ் கொஞ்சம் நெருடலாக
இருக்கவே, “யாரு இவ்ளோ தூய தமிழ்ல எழுதி இருக்காங்கன்னு” பார்த்தால்,
சுஜாதா! ஹூம். #எகொசஇ
No comments:
Post a Comment