மைசூர் மகாராஜா
ஆசிரியர் : முகில்
பக்கங்கள்: 191
விலை: ரூ.100
ஒரு ராஜா - பக்கத்து நாட்டோட சண்டை - அவருக்கு வாரிசு இல்லை - தத்தெடுக்கிறார் - அடுத்த ராஜா - இன்னொரு சண்டை - NO வாரிசு - மறுபடி தத்து - அடுத்தவர் - மறுபடி சண்டை. பத்து இல்லே, இருபது இல்லே, 400 வருடங்களுக்கும் மேலே இதே கதை தொடர்ந்து நடந்தா - படிப்பதற்கு பொறுமை இருக்குமா? இதில் இன்னொரு twist. பல ராஜாக்களுக்கு ஒரே மாதிரியான பெயர். இதனால் மேலும் குழப்பங்கள். ஆனாலும், இந்த 191 பக்கப் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். என்ன காரணமா இருக்கும்?
முதல் காரணம் - வரலாறு. ராஜா ராணிக்கள் கதை படிக்கவே படு சுவாரசியமா இருக்கும். (பொன்னியின் செல்வன் effectஆ இருக்குமோ!!) அந்தக் காலத்து தொழில்நுட்பங்களை வைத்துக் கொண்டு அவர்கள் கட்டிய கோயில்கள், அணைகள், அவர்களது வீரம், விளையாட்டு ஆகியவற்றைப் படிக்கையில் ஆச்சரியமாக இருக்கும். இதற்கும் மேல் 400 ஆண்டு கால மைசூர் வரலாறு என்றால் அதில் பல பிரபலங்கள் வருவார்கள் என்று தெரியும். அவர்கள் யார் யார்னு பார்க்கலாமா?
ஹைதர் அலி,
திப்பு சுல்தான்,
கிருஷ்ண தேவராயர்,
நெப்போலியன் மற்றும்
விஸ்வேஸ்வரய்யா
இவர்களைத் தவிர பல வரலாற்றுச் சம்பவங்களில் மைசூர் எப்படி பங்கேற்றது என்றும் தெரிந்து கொள்ளலாம்னு நினைத்தேன். அதாவது,
சிப்பாய்க் கலகம் மற்றும்
முதல் உலகப் போர்
இதையும் தவிர, இன்றைக்கு மிகவும் பிரபலமாக உள்ள மைசூர் தசரா கொண்டாட்டங்கள் எப்படி / எதற்கு தொடங்கப்பட்டிருக்கும் என்று அறிய ஆவலாக இருந்தது. ஆகவே இந்தப் புத்தகம். (அப்பாடா! இனிமே அறிமுகத்துக்குள் போகலாம்!!).
1399ம் வருடம் ஆரம்பித்து இந்த வரலாறு 2006ம் ஆண்டு வரை நீள்கிறது. இவ்வளவு பெரிய கதையை 190 பக்கத்துக்குள் சொன்னால் எப்படி இருக்கும்? செம வேகம். முதல் பத்தியில் சொன்னதுதான் கதை. ஆமா, நடுநடுவுலே ‘தத்து’ன்னு வருதே? இதென்ன எல்லாருமேவா தத்து எடுத்தாங்க? ஏன்? ஏதாவது பிரச்னையா?
1610வரை ஸ்ரீரங்கப்பட்டினத்தை ஆண்டு வந்தார் இரண்டாம் திருமலா. அவருக்கு இரண்டு மனைவிகள். அதில் ஒருவர் அலமேலு அம்மாள். ஆட்சியை இழந்தபிறகு திருமலா, அருகிலிருந்த மலிங்கி என்ற கிராமத்திற்கு வந்தார். ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இருந்தவரை ரங்கநாதர், ரங்கநாயகியை கண்குளிர தரிசித்து வந்த அலமேலு அம்மாள், பிறகு அவர்களது தரிசனம் கிடைக்காமல் வருந்தினார். அம்மனுடைய நகைகளை இவர்தான் வைத்துக் கொண்டிருந்தார். வாராவாரம் கோயிலுக்குக் கொண்டு போய், கொடுத்து பின்னர் வாங்கியும் வந்து கொண்டிருந்தார். ஸ்ரீரங்கப்பட்டினத்தை அப்போது ஆண்ட ராஜ உடையாருக்கு இந்த ஏற்பாடு பிடிக்கவில்லை. கோயில் நமது. நகைகளும் நமதே. போய் வாங்கி வாருங்கள் என்று தன் படையை அனுப்பினார். ஆனால், நகைகளை கொடுக்க விரும்பாத அலமேலு அம்மாள், அவற்றை ஒரு மூட்டையாக கட்டிக்கொண்டு, காவிரியை நோக்கிப் போனார். அக்கரைக்குப் போய் தப்பித்து விடலாமென்றால், காவிரியில் வெள்ளம். தற்கொலையைத் தவிர வேறு வழியில்லை. அப்போது விட்டார் பாருங்க ஒரு சாபம்.
தலக்காடு மண்ணுள் புதைந்து போகட்டும்; மலிங்கி நீரால் மூழ்கிப் போகட்டும்; மைசூர் பரம்பரையில் இனி ராஜாக்களுக்கு வாரிசே இல்லாமல் போகட்டும்.
அஷ்டே. இதனால் பின்னர் வந்த எந்த ராஜாவுக்கும் ஆண் வாரிசென்பதே இல்லாமல் போய்விட்டதாம். அப்படியே பிறந்தாலும், அவர்கள் சிறு வயதிலேயே இறந்து விடுவார்களாம். ஆகவே, பல முறை, தத்தெடுத்தே மைசூரை ஆண்டுவந்தனர் ராஜ பரம்பரையினர்.
திவான். தலைமை அமைச்சர் போன்ற பதவி. ’உடையார்’ (Wodeyar) ராஜ பரம்பரையைப் போலவே, இந்த திவான் பதவியையும் ஒரு பரம்பரையினர் தொடர்ந்து வகித்து வந்துள்ளனர். அவ்வப்போது இந்த பரம்பரையிலிருந்தே உடையார் பரம்பரைக்கான வாரிசை தத்து எடுத்துள்ளனர். பல சமயங்களில் மகாராஜா சிறுவனாக இருக்கும் பட்சத்தில், அவர் சார்பில் திவானே ஆட்சி நடத்தியிருக்கிறார். மைசூர், ஸ்ரீரங்கப்பட்டினம் ஆகிய நகரங்களைக் காப்பாற்றுவதற்கு நம் உடையார் வம்சத்து ராஜாக்கள் மேற்கொண்ட போர்களைப் பற்றிய பல விவரங்களை இதிலிருந்து தெரிந்து கொள்கிறோம்.
ராக்கெட்
திப்பு சுல்தானின் காலத்தில் மைசூரைப் பிடிக்க பிரிட்டிஷ்காரர்கள் நடத்திய போரில், முதல்முதலாய் திப்பு, தானே வடிவமைத்து ராக்கெட் இயக்கி போரில் வெற்றிபெற்றாராம். இன்றும் லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் இந்த ராக்கெட், இரண்டரை கிமீ தூரம் வரை சென்று இலக்கை அழிக்கும் வல்லமை பெற்றதாம்.
தமிழர்-கன்னடர்கள்
இந்தக் காலத்தில் அவ்வப்போது எழும் தமிழர்-கன்னடர்கள் பிரச்னை எப்போது துவங்கியிருக்கும்? சந்தேகமே வேண்டாம். நூறு வருடங்களுக்கு முன்னர் திவானாக சேஷாத்ரி ஐயர் மற்றும் மகாராஜாவின் அந்தரங்க ஆலோசகராக தாத்தையாவும் இருந்தார். ஐயர் தன் வேலையை மிகவும் சிறப்புற செய்துவந்தாலும், பெரும்பாலும் முக்கியப் பதவிகளில் மதராஸிகளையே நியமிக்கிறார் என்று தாத்தையா மகாராஜாவிடம் போட்டுக் கொடுத்தாராம். 1901ம் ஆண்டு இப்பிரச்னை பெரிதாக வெடித்தது. திவான் என்ன செய்தாலும் அதை எதிராக குரல்கள் எழுந்தன. இதனால் கவலையுற்று வேலையையே ராஜினாமா செய்துவிட்டாராம், சேஷாத்ரி ஐயர்.
விஸ்வேஸ்வரய்யா
தலைமைப் பொறியாளாராக இருந்தபோது நாட்டின் பல முன்னேற்றத் திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். பின்னர் மகாராஜா நால்வடி கிருஷ்ணராஜ உடையாரின் விருப்பத்தால் மைசூரின் திவான் பதவியை ஏற்றார். விருப்பமில்லாமல் இந்தப் பதவியை ஏற்றாலும், கல்வி, தொழில் ஆகியவற்றில் பெரிய முன்னேற்றத்தைக் கொண்டுவந்தார். மகளிர் கல்லூரிகள், மைசூர் பல்கலைக்கழகம், மைசூர் சந்தன எண்ணெய் ஆலை, பத்ராவதியின் இரும்புத் தொழிற்சாலை ஆகியவை இவர் திவானாக இருந்தபோது உருவாகியதே.
இந்த நீண்ட நெடிய மைசூர் வரலாற்றில் வரும் மற்றொரு பிரபலம் - சுவாமி விவேகானந்தர். 1892வில் சிகாகோ மாநாட்டிற்குச் செல்லும் முன்பு சுவாமி, திவான் சேஷாத்ரி ஐயரின் வேண்டுகோளுக்கிணங்க மைசூருக்கு வந்துள்ளார். அப்போதைய மகாராஜா - சாமராஜேந்திர உடையார். மகாராஜாவின் அறிவு, ஆற்றல் மற்றும் அவரது பல்நோக்கு திறமைகளை வியந்துள்ள சுவாமி விவேகானந்தர், அந்த மகாராஜா 1894ல் இறந்தபோது - ’The Maharaja of Mysore is dead - one of our greatest hopes' என்றாராம்.
இப்படியாக, 1399ல் யாதுரயா தோற்றுவித்த மைசூர் ராஜாவின் ஆட்சியின் தற்போதைய வாரிசு - கண்டதத்தா நரசிம்மராஜர். 2004ல் காங்கிரஸ் சார்பாக தேர்தலில் நின்ற இவர் பிஜேபி வேட்பாளரிடம் தோற்றுப் போனார். இவர் காட்டிய சொத்து மதிப்பு ரூ.1523 கோடி. தசரா நாட்களில் மட்டும் மகாராஜா கெட்டப்பில் வலம் வருகிறார்.
புத்தகத்தின் துவக்கத்தில் 1399 முதல் இன்றுவரை உள்ள மகாராஜாவின் பட்டியல் ஒரு வரைபடமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதை அவ்வப்போது பார்த்து புரிந்து கொள்ளாவிடில், குழப்பமே ஏற்படக்கூடிய வரலாறு. அனைத்துக் கதாபாத்திரங்களின் கதையும் சிற்சில பக்கங்களே இருப்பதால், மேலும் விரிவாக படிக்க அவர்களைப் பற்றிய தனித்தனி புத்தகங்கள் வாங்கத் தூண்டுவதாக அமைந்துள்ள புத்தகம் இது. அதைதான் நான் செய்யப் போகிறேன். அப்போ நீங்க?
***
லண்டனில் இருக்கும் பிரிட்டிஷ் மியுசியத்தில் திப்புவின் விதவிதமான கத்திகள் (கைப்பிடியில் புலி), துப்பாக்கிகள் என்று பெரிய திப்புவின் கலெக்ஷனே இருக்கிறது...ஆனால் திப்புவை ஒரு வில்லன் மாதிரிதான் விளக்கங்கள் இருந்ததாக நினைவு. ஆச்சரியம் இல்லை, இல்லையா - அவர்கள் கண்ணோட்டத்தில் பார்த்தால்
ReplyDeleteசிவா கிருஷ்ணமூர்த்தி
Nice book review.
ReplyDelete