அசோகமித்திரன் கதைகள்-2
அருந்ததி நிலையம்
சிறுகதைகள்
அசோகமித்திரன்
எழுதிய ஒன்றிரண்டு சிறுகதைகளை அவ்வப்போது படித்திருந்தாலும், அவர் எழுதிய
சிறுகதை தொகுப்போ, நாவலோ இதுவரை படித்ததில்லை. ஏனோ சென்ற வாரம் திடீரென
அசோகமித்திரன் எழுத்தை வாசிக்க வேண்டும் என்றொரு உந்துதல்.
அடுத்த என்ன
படிக்கலாம் என்று கொஞ்சம் தீவிரமாக யோசித்தபோது அசோகமித்திரனும் இந்திரா
பார்த்தசாரதியும்தான் என் நினைவுக்கு வந்தார்கள். இந்த வாரம் நூலகம்
சென்றபோது அதைச் செயல்படுத்தி விட்டேன். நான் தேடிய, எனக்கு
பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால்
அசோகமித்திரன் எழுதிய குறுநாவல் தொகுப்பு ஒன்றும், சிறுகதை தொகுப்பு
ஒன்றும் கிடைத்தன. அருந்ததி நிலையம் வெளியிட்டுள்ள இந்தப் பதிப்பில் 1982
முதல் அ.மி. எழுதிய சிறுகதைகள் வரிசைக்கிரமமாகத் தொகுக்கப்பட்டுள்ளன,
எனக்குக் கிடைத்தது இரண்டாம் தொகுதி. இதில் மொத்தம் 36 சிறுகதைகள் உள்ளன.
அ.மி கதை
சொல்லும் பாணி நேரடியானது. தேவையில்லாத வார்த்தைகள் இல்லை, கத்தரிக்கப்பட்ட
வாக்கியங்கள். முக்கியமாக உரையாடல்களால் கதை சொல்லப்படுவதால், ஒரு விதமான
வேகத்தை பெரும்பாலான கதைகளில் உணரமுடிகிறது.
நம்
வாழ்க்கையில் எத்தனையோ சம்பவங்கள் நம்மைக் கடந்து போயிருக்கும், எவ்வளவோ
சம்பவங்களைக் கேள்விப்பட்டிருப்போம், பார்த்திருப்போம். அதில் சிலது மனதைத்
தொடுவதாக இருக்கும் - அது நம்மை அப்படியே புரட்டி போடுவதாக இருக்காதுதான்.
ஆனால் அந்த சம்பவத்தை அறியும்போது மனம் ஒரு நிமிடம் சம்பந்தப்பட்ட
நபருக்காக சில வினாடிகள் வருத்தப்படும், அல்லது ஒரு விதமான கலவையான
உணர்வுகள் ஏற்படலாம். மொத்தமாக இந்தக் கதைகளைப் படித்து முடித்த பிறகு
எனக்கு இந்த மாதிரியான சொல்லத் தெரியாத ஒரு சங்கடமான உணர்வுதான் தோன்றியது.
அ.மி.
படைத்துள்ள இந்தச் சிறுகதைகளிலும், இவற்றின் கதைமாந்தரிலும் நம்மோடு
பழகும்/ பழகிய மனிதர்களை மிக மிக சுலபமாக அடையாளம் காணலாம். இங்கே அவரது
சிறுகதைகள் குறித்து ஒரு குறிப்பு வரைவது, அல்லது, இந்த தொகுதியில்
எனக்குப் பிடித்த சிறுகதைகள் பற்றி எழுதுவது, ஏனோ மனதுக்கு சரியாகப்
படவில்லை. அப்படி என்றால் எல்லாச் சிறுகதைகளும் பிடித்திருக்கிறது என்று
சொல்லமுடியாது. சில கதைகள் பிடித்தமாக இருந்தன, சில கதைகள் புரியவில்லை.
அசோகமித்திரனின் எழுத்தில் அவரது கதைகள் அல்ல, அவரது கதைமாந்தரும் அவர்களது
குணநலன்களுமே முக்கியத்துவம் பெறுகின்றன.
நம்மில் சில
பேர் அடுத்தவர்களிடம் ஐந்து - பத்து கடன் வாங்கி பழக்கப்பட்டு இருப்போம் -
'பழக்கம்’ சிறுகதையில் வரும் பாலு போல் நம்மிலும் உண்டு. கடன் கொடுக்கும்
நண்பர் அலுவலகத்திலிருந்து பிரிந்து சென்றாலும், அந்த நண்பரை தாம் வேலை
செய்யும் இடத்துக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல வந்துவிடுவார்கள். அதே
மாதிரி நமக்குள் வரும் சிறு ‘சந்தேகம்’ எப்படி நம்மை வலிமையாக
ஆட்கொள்கிறது என்பதை தம் நண்பரை தாம் காண செல்லும்போதெல்லாம், அவரோடு
இருக்கும் பெண்ணின் மீது சந்தேகம் கொண்டு, அவள் சென்றபின் அவளை பற்றி
விசாரிக்கும் கதையில் பார்க்கலாம். ’பைசா’ சிறுகதையில் வருவது போல, நல்லவன்
என நினைத்துக் கொண்டிருக்கும் நெருங்கிய நண்பர் இறந்து அவரைப் பற்றிய
பிம்பம் உடைந்து என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அனுபவம் உண்டு.
வேலைக்கு
செல்லாத தன் அக்காவைவிட தான் திருமணம் செய்துக் கொள்வதுதான் முக்கியம் என
நினைக்கும் பெண்ணை, ”இன்றொரு நாள் நிம்மதியாக தூங்க வேண்டும்” என்ற
சிறுகதையிலும், தன் குடும்பத்தை ஏமாற்றிய தன் ‘அப்பாவின் சிநேகிதர்” (ஐ)
பார்த்ததும் பொருமும் மகன், அவரைக் கண்டதும் துக்கத்தை வெளிப்படுத்தி அழும்
அம்மா போன்றவர்கள் எங்கும் உண்டு. சில சமயம் நாம் பணத்தைத் தொலைத்துவிட்டு
வருத்தப்பட்டுக் கொண்டு இருப்போம். அந்த வருத்தத்திலும், நன்மையை
நினைத்துக் கொண்டு, அந்த சோகத்தை மறக்கும் கதைமாந்தரை ‘18-A’ கதையில்
அறிமுகப்படுத்துகிறார். சிறுவயதில் ஏற்படும் அறியாத, மென்மையான, தூய்மையான
ஆண்-பெண் அன்பை விவரிக்கும் ’மயிலிறகு’ கதை படிக்கும்போது நம் வாழ்வில்
நடந்தவையோடு ஒற்றுமை இருக்கும் உணர்வு வருகிறது.
கதைச்
சுருக்கத்தை சொல்லாமல் கதை மாந்தரை ஒப்பிட்டு எழுத நினைத்தாலும், கதையை
பற்றி ஒரு வரியாவது எழுதும்படியாகி விட்டது, அதனால் பரவாயில்லை. பொதுவாகச்
சொன்னால், மனிதர்களின் இன்னொரு முகத்தை அதிக வார்த்தைகள் விவரணைகள்
இல்லாமல் சொல்லுவதும், மனித இயல்பை எந்தவிதமான பாசாங்கும் இல்லாமல்
உள்ளபடியே, நம் முன் கொண்டு வருவதிலும் அ.மி. தனித்து நிற்கிறார்.
ஒ.ஹென்றி கதைகள் போல் சில கதைகள் இருந்தாலும், எதிர்பாரா முடிவு தரும் ஒரு
அதிர்ச்சியை இந்த மனிதர்கள் நம் மனதில் எழுப்புவதில்லை. எப்போதும் மனித
உணர்ச்சிகளையே இந்தக் கதைகள் அப்பட்டமாகப் பிரதிபலிக்கின்றன.
//வேலைக்கு செல்லாத தன் அக்காவைவிட தான் திருமணம் செய்துக் கொள்வதுதான் முக்கியம் என நினைக்கும் பெண்ணை, ”இன்றொரு நாள் நிம்மதியாக தூங்க வேண்டும்” என்ற சிறுகதையிலும்//
ReplyDeleteகாதலனும் காதலியும் மாலை சந்தித்து அக்காவிற்கு திருமணம் ஆகவில்லை என்பதிற்கு இருவரையுமே நானே திருமணம் செய்துகொள்ளுகிறேன் என்று அசிங்கமாக சொல்வானே அந்தக்கதையா? பின் பஸ் வந்துவிட்டது என்று ஓடிப் போய் ஏறிக்கொள்வான்...வீட்டில் அக்கா தலைவலி என்று கண்ணாடி போட்டுவந்திருப்பாள்...இந்தியா டுடேயில் வந்தது என்று நினைவு...தவறாகவும் இருக்கலாம். ஆனால் தனது திருமணம்தான் முக்கியம் என்று அந்தப்பெண் நினைப்பதாக நான் புரிந்துகொள்ளவில்லை. மொத்த சூழ்நிலையே படிக்கும் எல்லாருக்குமே சோர்வு தரும், நம்பிக்கையே இருக்காது,தலைவலிக்கும்..!
சிவா கிருஷ்ணமூர்த்தி
Yes the same story, I felt after couple of readings(the end alone), she wanted to marry before her elder sister, or i may be misunderstood. thanks for your valuable comments
ReplyDeleteஇந்தக்கதை பத்திரிக்கையில் வந்தபோது படித்ததுடன் சரி. இவ்வளவு வருடங்களுக்கு பின்பும் மெகா மறதிகாரனான எனக்கே நினைவு இருக்கிறது என்றால் கதையின் தீவிரத்தை நினைத்துக்கொள்கிறேன்...இந்த கதையை நினைத்தாலே அந்த முன் மாலைதான் நினைவு வரும், தலை வலிக்கும்....தலைப்பைத் தேடிக்கொண்டிருந்தேன், கிடைத்ததற்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்! மேலும் நிறைய எழுதுங்கள், வாழ்த்துக்கள்!
ReplyDeleteசிவா கிருஷ்ணமூர்த்தி
Thanks :-)
ReplyDelete