சிறப்புப் பதிவர்: தோட்டா ஜெகன்
199
முறை
புத்தகங்களை சுமந்து வாசகர்களின் வாசல் வரை வந்து விட்டு சென்ற ஆம்னிபஸ்ஸின்
பொங்கல் சிறப்பு பேருந்தில் எனக்கும் ஒரு டிக்கெட்டை கையிலே திணித்து பஸ்
ஏற்றி டாட்டா காட்டி அனுப்பிவைத்த அண்ணன் கிரி அவர்களுக்கு நன்றிகளுடன்
தொடங்குகிறேன்.
விமர்சனங்கள் மீது எனக்கு நம்பிக்கையில்லை. ஏனெனில் பல சமயங்களில் அவை படைப்பை விடுத்து படைப்பாளியின் மீது
தெறிக்கப்படும் அம்பாய் முடிந்து விடுகின்றன என்பது முதல் காரணமாய் இருந்தாலும், முக்கியமான
காரணம், எனக்கு(ம்)
விமர்சனம் எழுத வராது. அசோகமித்திரனின் 'அழிவற்றது' என்ற சிறுகதை தொகுப்பை ஆம்னிபஸ்
வாசகர்களுக்கு ஒரு நூல் அறிமுகமாகவும் அதில் இருக்கும் சிறுகதைகளின் அறிமுகமாகவும், பேப்பர்க்கார
சிறுவன் தினசரியை அவசரகதியில் வீசிவிட்டுச் செல்வதைப் போல சொல்லவிழைகிறேன்.
எனது சிறு வாசிப்பின்படி என் நம்பிக்கை என்னவென்றால், தமிழ் ( நவீன )
சிறுகதை உலகை இந்திய கிரிக்கெட் அணி என எடுத்துக்கொண்டால், அதில்
புதுமைப்பித்தன் தான் அணியின் பேட்டிங் கோச், மௌனி பவுலிங் கோச், அணியின் கேப்டன்
சு.ரா, துணை கேப்டன்
அசோகமித்திரன். தி.ஜானகிராமன், நாஞ்சில் நாடான், அ.முத்துலிங்கம் போன்ற டாப் ஆர்டர்
பேட்ஸ்மேன்களும், கு.அழகிரிசாமி, வண்ணதாசன் போன்ற மிடில் ஆர்டர்
பேட்ஸ்மேன்களும், சுஜாதா என்னும் ஆல்ரவுண்டரையும் கொண்ட பலமான பேட்டிங்
வரிசை.ஜெயமோகன் தான் அணியின் சச்சின். மாமல்லனும், எஸ்ராவும் அணிக்கு கிடைத்த இரு பெரும் சுழல்
பந்து வீச்சாளர்கள். ஜெயகாந்தனும், கி.ராவும் தான் அணியின் வேகபந்து வீச்சாளர்கள்.
அணியின் துணை கேப்டன் அசோகமித்திரன் எழுத வந்து
கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் ஆகின்றன. அவர் எழுத வந்த முப்பது வருடம் கழித்தே
பிறந்த என்னை போன்றவர்கள் அவர் நூலை தேடிப் பிடித்து
படிக்கும் தொல்லை இன்றி எங்கள் ஊரின் எல்லா புத்தககடைகளிலும் நீக்கமற
நிறைந்திருக்கிறார் தலைவர். என்னளவில் அசோகமித்திரனின் எழுத்துநடை என்பது, அது நாவல்களோ, சிறுகதையோ, கட்டுரையோ, வாக்கியங்கள்
என்பது அவர் பேனாவை திறந்தவுடன் தாளில் வந்து படுத்துக்கொள்கிறது. அவர் ஒரு போதும்
அதில் வார்த்தைகளை சேர்ப்பதில்லை, மாறாக தேவையற்ற வார்த்தைகளை நீக்குகிறார் அவ்வளவே.
"அழிவற்றது" அவரது முழு சிறுகதைகளும் தொகுப்பாக வந்த பின்னர் எழுதியது.
காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. தொகுப்பில் உள்ள கதைகளின் எண்ணிக்கை 17.
அவரவர் தலையெழுத்து:
விதியை மதியால் வெல்ல முடியும் என்ற நூலில் அழகும்
வேடிக்கையும் கலந்து கோர்க்கப்பட்டிருக்கும் மிக சிறிய சிறுகதை இது.
பழங்கணக்கு:
இந்த தொகுப்பிலே இருக்கும் மிக சாதாரண, எளிதில்
அனுமானிக்கக்கூடிய மிக சின்ன சிறுகதை.
முக்தி:
பாவத்தை கழுவ பிராயச்சித்தம் சொல்லித் தந்தவனே பாவமூட்டையைத் தூக்கிச் சுமக்க
நேரிடும் கதை. துறவியே ஆனாலும் மனித தேகத்தில் சந்தேகம் துளியாவது மிச்சம்
இருக்கும் என எளிதில் புரிய வைக்கும் எளிமையான கதை.
திருநீலகண்டர்:
மனித மண்டை ஓட்டையும், யாசகர்களின் திருவோட்டையும் உள்வாங்கி ஓடும்
அழகிய சிறுகதை.
அப்பாவின் கோபம்:
வீம்பான அப்பாவுக்கும், வேலைக்கு போகும் சராசரி மகனுக்கும் இடையே
நிகழும் ஒரு நாள் மனபோராட்டமே இந்த கதை.
நகல்:
இந்த தொகுப்பில் உள்ள சிறந்த கதைகளில் ஒன்று. இஞ்சினியரிங், மெடிக்கல்
படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஒரு பிடிப்பு உண்டு, பாலிடெக்னிக்கும்
ஆர்ட்ஸும்,
கம்ப்யூட்டர்
டிப்ளமோவும் படிக்கும் மாணவர்கள் ஒரிஜினலின் ஜெராக்ஸ் பேப்பரைகளை போல மற்றும் ஒரு
தாள் தான் என விளிக்கும் அற்புதச் சிறுகதை. ஒன்’னுக்கு தான் மதிப்பு பத்தோட பதினொன்னுக்கு அல்ல எனவும்
கொள்ளலாம்.
கிணறு:
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் அல்ல நடப்பது நடந்தே தீரும்
என்ற சரத்தில் கட்டப்பட்ட வெடிகள் வெடிப்பதே இந்த கதை. இந்த சிறுகதையை படிக்கும்
போது எனக்கு
கிறிஸ்டோபர் நோலனின் பிரஸ்டீஜ் படமும், சிறுவர்கள் ஒரு கண்ணாடி பேழைக்குள் 4 பால்ரஸ்
குண்டுகளை அடைத்து விளையாடும் கருவியும் நியாபகத்திற்கு வந்தது, ஏனெனத் தெரியவில்லை.
ஒரு ஹீரோயின் ஒரு ஹீரோ:
திரையுலகில் வாய்ப்புக்கு காத்திருந்து ஏய்ப்புக்கு
உள்ளாகும் ஒருவனை சுற்றி நடக்கும் கதை.
பிச்சிகட்டி:
காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியில் கணவனும் மனைவியும்
வெவ்வேறு நேரங்களில் வேலைக்கு செல்கின்றனர். ஒரு வெறுமையான இரவில் மின்சாரம் போய் விடுகிறது. அப்போது அதனைச் சரிசெய்ய வரும் மின்சார வாரிய ஊழியர்கள்
பணியை கவனித்து,
உதவி தன் வெறுமையை அந்த இருட்டினுள் போக்கிக்கொண்டு
ஒரு இரவை கடக்கும் கதை நாயகன் பற்றிய கதை.
வீட்டுமனை:
எல்லா நடுத்தர வர்க்க மனிதனுக்கும் ஒருக்கும் அதே கனவு தான், சாவதற்குள்
வீட்டு மனை வாங்குவது. அப்படி கனவுடன் வாழ்ந்து காசு சேர்க்கும் ஒருவனுக்கு
இடையில் பெரும் நோய்கள் வந்து சிறிதாய் மனம் பிறழ்ந்து, மீண்டு வந்து, அதை வெறும்
கனவாகவே மட்டும் மனதிலே பூட்டி வாழ பழகிக்கொள்ளும் சாமான்யனின் கதை. தொகுப்பில்
நல்ல கதைகளில் இதுவும் ஒன்று.
சிக்கனம்:
சீட்டு கம்பெனியில் பணம் சேமித்து ஏமாந்து போன மனிதனை
பற்றியும்,
அவ்வாறு
ஏமாந்தாலும் அதனை திரும்ப பெற்று விடலாம் என்ற நப்பாசையில் உழலும் இன்னொரு மனிதனை
பற்றியும் சுழலும் கதை. இயல்பான கதை.
சகோதரர்கள்:
சிறுவர்கள் விளையாட்டு அரசியல், வெறுமையான மன
நிலை கொண்ட சகோதரனுக்கு வறுமையில் அண்டி வந்த விதவை சகோதரியின் செலவுகள் தரும்
கோபம் என கலந்து கட்டி பரிமாறப்படும் கதை. தொகுப்பின் நல்ல கதைகளில் ஒன்று.
மணவாழ்க்கை:
இந்த தொகுப்பில் மிக அதிர்ச்சி தரும் சிறுகதை இது தான். ஒரு
பெண்ணுக்கு புகுந்த வீட்டில் நடக்கும் கொடுமைகளும், அத்தனை கொடுமைகளுக்கு பிறகும் அந்த பெண்
புகுந்த வீட்டுக்கே செல்ல விரும்பும் வித்தியாச மன நிலையையும் சொல்லும் கதை.
அழிவற்றது:
ஒற்றன் நாவலில் நிகழ்வுகள் நடக்கும் அயோவா சிட்டியில்
நடந்ததாக சொல்லப்படும் கதை. இந்த தொகுப்பில் என்னை கவர்ந்த கதைகளில் மற்றும்
ஒன்று. சிறு அதிர்வும் இந்த கதையில் நம் இதயத்தை மீட்டி போகும்.
முழு நேர வேலை:
கிராமத்து ஏரி ஓரம் விளைந்து படர் விட்ட ஒரு செடியை
பிடுங்கி ,
நகரத்து
சேரியில் நட்டு வைக்கும் அதிர்வுக் கதையை அழகாக
சொல்லி இருக்கிறார்.
இரு முடிவுகள் உடையது:
ரயில் பயணங்களில் மயில்களை பார்த்து மனதை தொலைப்பதாய் எண்ணி
பணத்தை தொலைக்கும் வழக்கமான கதை தான், ஆனால் சொல்லப்பட்ட விதம் அழகு. இன்னொரு
புதுமை 12B
படம் போல
இதற்கும் இரு முடிவுகள் உண்டு.
அடி
ஸ்டோர் குடித்தனக்காரர்களின்
வாழ்வாதார முறையையும், ஒற்றுமையையும், எளிதில் அஞ்சாத தைரியத்தையும், அப்பகுதி
பள்ளிக்கூடங்களில் வேலை செய்யும் பெரும்பாலான வாத்தியார்களின் செயல்பாடுகளையும்
இயல்பாய் தாங்கி ஓடும் அழகிய சிறுகதை இது.
இந்த புத்தகத்தை சிறந்த சிறுகதை தொகுப்பு என்று சொல்ல
முடியாவிட்டாலும், சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு என நம்பிச் சொல்லலாம்.
புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:
புத்தகத்தின் விலை:
ஒரு சினிமா டிக்கெட்டின் விலையை விட குறைவு தான்
No comments:
Post a Comment