A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

17 Jan 2013

கவனிக்கப்படாத சிகரங்கள் - ப. சிங்காரம் நாவல்கள்

 சிறப்பு பதிவர் : கண்ணன்

ப.சிங்காரம் இன்று தமிழின் பலதரப்பட்ட முன்னணி எழுத்தாளர்களாலும் விமர்சகர்களாலும் பெருமளவில் கொண்டாடப்படுகிற மிகச்சில எழுத்தாளர்களில் ஒருவர். ஆனாலும் ஒரு மிகக்குறுகிய இலக்கிய வட்டத்திற்கு வெளியில் பெயர் தெரியப்படாத பலப்பல எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். மிகுந்த எதிர்பார்ப்போடுதான் அவரது 'புயலிலே ஒரு தோணி' நாவலை படிக்கத் தொடங்கினேன். பின்னர் 'கடலுக்கு அப்பால்' நாவலையும் படித்தேன். இந்தப் படைப்புகளை அறியுமுன் சிங்காரத்தைப் பற்றிய சித்திரம் அவசியமாகவே உள்ளது. ந.முருகேசபாண்டியன் எழுதியுள்ள அறிமுகக் கட்டுரைகளிலிருந்து அத்தகைய ஒரு சித்திரம் கிடைக்கிறது.

ப.சிங்காரம் 1920ல் பிறந்தவர். 1938ல் இந்தோனேஷியாவின் மைடான் நகரில் ஒரு வட்டிக்கடையில் வேலை செய்வதற்காகச் சென்றார். உலகப்போர் நடந்த ஆண்டுகளை, ஜப்பானியர்களும், இந்திய தேசிய ராணுவமும் தாக்கம் செலுத்திய வரலாற்றுத் தருணங்களை, வெகு அருகிலிருந்து கண்டார். மனைவியையும் குழந்தையும் பிரசவத்தின்போது இழந்தார். 1946ல் இந்தியா திரும்பினார். தினத்தந்தியில் செய்திப்பிரிவில் வேலைக்குச் சேர்ந்தார். 1950ல் 'கடலுக்கு அப்பால்' நாவலை எழுதினார். எஞ்சிய வாழ்வின் பெரும்பகுதியை YMCA விடுதியில் தனியே கழித்தார்.

'கடலுக்கு அப்பால்' நாவலைப் பிரசுரிக்கப் பல காலம் போராடினார். ஆனந்த விகடன் போட்டியில் நிராகரிக்கப்பட்டது. ஆயினும் கலைமகள் போட்டியில் முதல் பரிசு பெற்றது. எழுதி 9 ஆண்டுகளுக்குப் பின் பிரசுரமானது. குறிப்பிடும்படியான வரவேற்பைப் பெற்றதாகத் தெரியவில்லை.

'புயலிலே ஒரு தோணி' நாவலை 1962ல் எழுதினார். மீண்டும் ஒரு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, 1972ல் பதிப்பித்தார். பதிப்பித்த காலத்தில், அடைப்புக்குறிகளின் பயன்பாடு பற்றி மட்டும் ஏதோ விமர்சனம் வந்திருக்கிறது. இவ்விரு நாவல்களுக்குப் பின்னும் அவர் ஏதேனும் எழுதியிருக்கக்கூடும். தினத்தந்தி நாளிதழின் செய்திகளாய் அவற்றை நாம் படித்திருக்கலாம்.

77 வயதில் தனிமையின் துணையில் இறந்தார்.


'புயலிலே ஒரு தோணி'தான் முதலில் படித்தேன். இணையத்தின் மூலம் வாங்கிய தமிழினி பதிப்பில் 'கடலுக்கு அப்பால்' நாவலும் இருந்தது ஓர் இனிய ஆச்சர்யம்தான். மேலும் போனஸ்களாக முருகேசபாண்டியன் தரும் அறிமுகமும். கதைகள் முடிந்தபின் கண்ணுக்குப்படும் பின்னிணைப்பாய் ஜெயமோகனின் விரிவான விமர்சனக் கட்டுரை. தமிழ் பதிப்பாளர்களின் பெருந்தன்மையை மெச்சித்தான் ஆகவேண்டும். இந்த விளம்பர யுகத்தில் அறிவிப்பின்றிப் பரிசு கிடைப்பது இங்கே மட்டும்தான் சாத்தியம்.

'புயலிலே ஒரு தோணி' நாவலின் முதல் சொல்லே இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கப்போவதை அறிவிக்கிறது - முதல் பகுதியின் தலைப்பு: ‘நுனை’. முதல் சில அத்தியாயங்கள் இதை உறுதிபடுத்துகின்றன. விறுவிறுவென்ற ஆரம்பம். தமிழுக்கு முற்றிலும் புதிதான ஒரு களம். அன்றைய மெடான் நகரைப் பாண்டியனோடு சேர்ந்து சுற்றிப் பார்க்கிறோம். புதிய இடப்பெயர்கள், புதிய மொழி - இருப்பினும் வெகு விரைவில் கதைக்குள் நுழைந்துவிட முடிகிறது. ‘இடுப்புயர மேசைமீது ரத்தம் சொட்டும் ஐந்து மனிதத் தலைகள் அடுக்கப்பட்டிருந்தன. மேசைக்குப் பின்னால் நின்ற சிப்பாய், ஒவ்வோர் உருப்படியாய், மெதுவாய், அக்கறையுடன் தலைகளின் கிராப் முடியைச் சீப்பினால் வாரிவிட்டுக் கொண்டிருந்தான். சுற்றி நின்ற ஜப்பானியர் சிரித்து விளையாடினர்.’ எந்தவித ஆர்ப்பரிப்பும், அதிர்ச்சி தரும் முனைப்பும் இல்லாமல் இத்தகைய காட்சிகளைக் கடந்து, அழைத்துச் செல்கிறார் சிங்காரம். பாண்டியனும் தங்கையாவும், ‘மாதவர் நோண்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றெனில் இன்றால்', என்று மணிமேகலையைப் போகிற போக்கில் குறிப்பிட்டு உரையாடுகின்றனர்.

உலகப்போர் காட்சிகள், தென்கிழக்கு நாடுகளில் தமிழர்களின் வாழ்வு, அந்த நகரங்களைப் பற்றிய விரிவான வர்ணனை, தமிழ்நாட்டில் அவர்களின் பின்புலம், அது சார்ந்த துல்லியமான சித்தரிப்புகள், இடையிடையே பண்டைத் தமிழ் இலக்கியம் என்று தாவித்தாவிப் பாய்கிறது நாவல். தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது மொழிநடை. ஆனாலும் ஏதோ ஒரு சரடு அனைத்தையும் பிணைக்கிறது; அந்தக் காலகட்டத்தினையும் அந்த மனிதர்களையும் நிகழ்வுகளையும் உயிர்ப்பிக்கிறது.

நாவல் நெடுகிலும் ஓர் எள்ளல், பகடி, அங்கதம். பிறரையும், தம்மையும், தம் நெடும் வரலாற்றையும், பண்பாட்டையும் கேலி செய்து நகைத்தவாறே இருக்கின்றனர் பாண்டியனும் அவன் நண்பர்களும். தமிழ், தமிழ் பண்பாடு, தமிழர் பெருமை என்று தீவிர வெறி கொண்டவர்கள்கூட கோபப்படாமல் படிக்கக்கூடிய எள்ளல் விமர்சனங்களைச் சிங்காரம் சாத்தியமாக்குகிறார். 

'வருபுனல் வையை வார்மணல் அகன்துறைத் திருமருதோங்கிய விரிமலர்காவில் வெள்ளை வட்டமதி பட்டப் பகல்போல் நிலவு வீசத் தமிழ் மருதத் தென்றல் விளையாடுகிறது. அங்கு கூடல் மாநகர மைந்தரிற் சிலர் மகிழ்ந்திருக்கின்றனர். யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல் நிறைந்த தங்கக் கிண்ணங்கள் மின்னிச் சிரிக்கின்றன. பல்லியம் கறங்கப் பாவலர்கள் பாடுகின்றனர்; விறலியர் ஆடுகின்றனர்' - தமிழன் பழம்பெருமையைப் பகடி செய்யும்போது இப்படியான மொழியைப் பயன்படுத்துவதால் சினங்கொள்வது சாத்தியமற்றதாகிறது. சங்கத்தமிழும், சிலப்பதிகாரமும், மணிமேகலையும், வள்ளுவனும், தாயுமானவரும், பட்டினத்தாரும் கதையோட்டத்தைத் தடைபடுத்தாமல் தொடர்ந்து இழையோடி வந்துகொண்டே இருக்கின்றனர்.

‘அட்டணைக்கால் போட்டுச் சாய்ந்து, உடல் நிலை கொள்ளாமல் இங்குமங்குமாய் இடம் பெயர்ந்து’ கொண்டிருந்தபோது பாண்டியனின் மனப்பாய்ச்சலின் நனவோடைச் சித்தரிப்பு அற்புதம். ஜாய்ஸின் ‘A Portrait of the Artist as a Young Man’ நாவலில் டெடேலஸ் கடவுள் - சர்ச் பற்றிச் சிந்திக்கும் காட்சிகளுக்கு எவ்வகையிலும் குறைந்ததல்ல. (இந்தப் பகுதியைப் படிக்கும்போது எனக்குள் எழுந்த இதே ஒப்பீட்டை ஜெயமோகனின் கட்டுரையிலும் கண்டேன்).

அதே போல அந்த புயல் காட்சி. இயற்கைச் சீற்றமும், அது எழுப்பும் எண்ணங்களும் ஒன்றோடொன்று பிணைந்து வருவது நம்மை அந்தத் தோணிக்குள் திணித்துவிடுகிறது. ‘தொங்கான் சுழன்று மலைத்துக் குதித்துக் கூத்தாட்ட மருளாட்டப் பேயாட்டம். நொறு நொறு நொறுங்கல் ஒலி. மூழ்கி முக்குளித்து மீன் கொத்தி அழுகித் தடம் தெரியாத சாவு சாகிறோம். சாகப் போகிறோம் சாக மாட்டோம் சாகிறோம்......’.

முடிவில் பாண்டியன் மனதில் கணத்தில் ஓடி மறையும் அவன் வாழ்க்கைக் காட்சிகள், பல நவீனத் திரைப்படங்களின் இறுதிக் காட்சியினை நினைவுபடுத்தும்.

மதுரை, செட்டிநாடு குறித்த விவரணைகளும் அருமை. வெளிநாட்டு அனுபவங்களைக் கூறவந்த நாவலில், ‘பஸ்கள் கார் என்றும், கார்கள் பிளசர் என்றும், கண்டெக்டர்கள் கிளீனர் என்றும் அறிப்பட்ட காலத்தின்’ மதுரையைப் பற்றிய அற்புதமான காட்சிகள் வருவது எதிர்பாராததுதான்.

சிங்காரம் தனக்குப் பிடித்த எழுத்தாளராக ஹெமிங்க்வேயை, பிடித்த நாவலாக ‘A Farewell to Arms’யையும் குறிப்பிடுகிறார். அதைச் சில ஆண்டுகள் முன்பு படித்திருக்கிறேன்; இப்படியொரு உணர்வெழுச்சி நிகழவேயில்லை. புயலிலே ஒரு தோணி நிச்சயமாய் அவரது ஆதர்ச நாவலைவிடப் பன்மடங்கு உயர்ந்ததாகவே தோன்றுகிறது.


கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணியிலிருந்து சற்றே மாறுபட்ட நூல். அவரது முதல் நூல் என்பதால், ஒப்புநோக்க இதில் கூறுமுறையில் அதிகம் சோதனைகள் செய்யவில்லை. ஓரளவு நேர்க்கோட்டிலேயே பயணிக்கிறது கதை. நடையில் அதே விறுவிறுப்பு இருந்தாலும் அந்தத் தாவிப் பாய்தலும், நுட்மான மாற்றங்களும் இல்லை. பகடியும் எள்ளலும் அதைவிடக் குறைவுதான். தமிழ் இலக்கியம் இதிலும் வருகிறது; ஆயினும் ஒப்புநோக்கக் குறைவாகவே உள்ளது.

இதிலும் எள்ளல் இல்லாமலில்லை. சிலப்பதிகாரக் ‘குதர்க்க ஆராய்ச்சி’ புயலிலே ஒரு தோணிக்கு முன்னோட்டமாய் ஒரு துளி.

( “ஓ! சரி, சரி அது கிடக்கட்டும். மாதவியும் கற்பரசி என்பதை மறந்துவிட்டாயே, அவள்...”.
“கற்பரசி! எந்தக் கழுதையும் கற்பரசியாக இருக்க முடியும். காலைக் கட்டிக்கொண்டு சும்மாயிருந்தால் போதும். தட்டுவாணியாவதற்குத்தான் கவர்ச்சியும் முயற்சியும் தேவை...’)

தனித்து மதிப்பிட்டால், கடலுக்கு அப்பால் நாவலும் ஓர் அபாரமான படைப்புதான். இரண்டு நாவல்களும் ஒரே காலகட்டத்தில், கதைக் களனில் அமைக்கப்பட்டவை. இரண்டு கதை நாயகர்களும் செட்டி கடைகளில் பணியாற்றி, பின் இந்திய தேசியப் படையில் சேர்ந்து, போரில் சாகசம் புரிகின்றனர். போரின் முடிவில்தான் இரண்டு கதைகளும் வெவ்வேறு பாதைகளில் பயணிக்கின்றன; வெவ்வேறு சாத்தியங்களை முன்வைக்கின்றன. ஒன்று மீண்டும் புரட்சிப் பாதையில் தொடர்கிறது; மற்றது சராசரி வாழ்க்கைக்குத் திரும்புகிறது. ஆனால், இரண்டும் ஒரே மாதிரியான முடிவை நோக்கிச் செல்கின்றன.

புயலிலே ஒரு தோணி நாவலை, கடலுக்கு அப்பால் எழுதும்போதே ப. சிங்காரம் தெளிவாகத் திட்டமிட்டுவிட்டார் என்பதற்கான அறிகுறி தெரிகிறது. பாண்டியன் பாத்திரத்தைப் பற்றிய துல்லியமான விவரிப்பு இதில் வருகிறது. ‘பாண்டியன். ஆஅஅ! மாவீரன். தமிழறிஞன். அவனும் மாணிக்கமும் கிண்டலும் தர்க்கமுமாய் தமிழ் ஆராய்ச்சி நடத்துவதை நாளெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாமே. இந்தோனேசியாவுக்குத் திரும்பியிருக்கிறானே. மீண்டும் அவனைப் பார்க்க முடியுமா? அங்கு வாளா இருப்பானா? மாட்டான். புரட்சிப் படையில் சேர்வது திண்ணம். அவன் ரத்தத்திலேயே புரட்சி கலந்து போயிருக்கிறது’. செல்லையா பாண்டியனைச் சந்திப்பதாக இங்கு கூறும் காட்சிகள், 12 ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட அடுத்த நூலில், விரிவாகத் தொடர்ச்சி அறுபடாமல் கூறப்பட்டிருப்பது, சிங்காரம் தகவல்களின் நுட்பத்தின்மீது எத்தனை அக்கறை செலுத்தியுள்ளார் என்பதற்கான சாட்சி.

கடலுக்கு அப்பால் ஓர் ஆழமான அவதானிப்பை முன்வைக்கிறது. சாதாரணர்கள் எப்படி ஓர் உந்துதலில் புரட்சியாளர்களாய் மாறி வீரச்செயல்களை அநாயாசமாய்ச் செய்கிறார்கள்; புரட்சி முடிந்தபின் சாமான்ய வாழ்க்கையை எதிர்கொள்வதில் எப்படி அவதியுறுகிறார்கள், புரட்சி எப்படி அன்றாட வாழ்வாதாரப் போராட்டங்களில் புதையுண்டு போகிறது என்பதை இந்நாவல் அளவிற்குக் கூர்மையாக அலசிய படைப்புகள் அதிகமில்லை.

பாண்டியனாக இருக்க முடியவில்லையே என்று ஏங்கும் செல்லையா, பாண்டியனாக வாழ்ந்து சலித்து செல்லையாவாக மாற முடிவெடுத்து, முடியாமல் மடியும் பாண்டியன் - இரண்டு பேரும் தமிழுக்கும் உலக இலக்கியத்துக்கும் புதிதான கதாநாயகர்கள். சிங்காரத்தின் தோணி பயணித்திருக்கும் கடல் ஆழமானது; ஆளரவமற்றது.

தமிழ் நவீன இலக்கியப் பரிச்சயம் அதிகம் இல்லாமல் (சிறுவயதில் மணிக்கொடி கொஞ்சம் படித்திருக்கிறார்), பழைய தமிழ் இலக்கியத் தேர்ச்சியும், ஆங்கில நவீன இலக்கிய வாசிப்பும் கொண்டதால்தான், சிங்காரம் ஒரு தனியான பாணியில் எழுத முடிந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

இந்த இரு அபார படைப்புகளையும் படைத்த கலைஞன், ஒவ்வொரு நூலையும் பதிப்பிக்கப் பத்தாண்டுகள் அலைமோதிய படைப்பாளி, தான் இறந்தபின் தனது நூல்கள் மறுபதிப்பு காணும் என்றோ, தன்னுடைய நூல்களுக்கு ஒரு புதிய வாசக உலகம் உருவாகும் என்றோ எண்ணியிருப்பானா என்று தெரியவில்லை. ஒருவகையில், புரட்சிக்குப்பின் வட்டித்தொழிலிலும் காதலிலும் தோல்வியுற்ற செல்லையாவாகத்தான் அவர் வாழ்ந்து முடிந்திருக்கிறார். தமிழின் மிகச்சிறந்த நாவல்களில் இரண்டை எழுதிவிட்டு தினத்தந்தியில் 40 ஆண்டுகள் தொலைந்து போயிருக்கிறார். ஒருவேளை அவர் எழுதிய செய்தித் துணுக்குகளைப் பல லட்சம் தமிழர்கள் படித்திருக்கவும் கூடும். ஆயினும் இந்த சிறிய, புதிய வாசகர் உலகம்தான் சிங்காரமும், பாண்டியனும், செல்லையாவும் உலவ வேண்டிய உலகம்.

ப சிங்காரம் நாவல்கள்
நற்றிணை  பதிப்பகம்
544 பக்கங்கள்
விலை ரூ. 350
இணையத்தில் வாங்க : கிழக்கு


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...