மதராசபட்டினம் to சென்னை
ஆசிரியர்: பார்த்திபன்
பக்கங்கள்: 224
விலை: ரூ.100
தமிழக அரசியல்வாதிகள் பலரும் செல்ல விரும்பும் இடமான புனித ஜார்ஜ் கோட்டைக்கு ஏகப்பட்ட முறை சென்றிருக்கிறேன். அப்பா அங்கே வேலை பார்த்து வந்தார். கோட்டைக்குள் இருக்கும் ஒரு தேவாலயம், அருங்காட்சியகத்துக்குக் கூட கூட்டிப் போயிருக்கிறார். இதெல்லாம் பழங்கால (ஆங்கிலேய) கட்டிடங்கள்னு அவர் விளக்கிய நினைவுகள் மங்கலாக இருந்தது. அந்த மங்கலெல்லாம் இந்த புத்தகம் படித்தபிறகு செம ‘பளிச்’. சாந்தோம் தேவாலயம் முதல் சேப்பாக்கம், உயர்நீதிமன்ற வளாகம், பின்னர் ராயபுரம் வரை எண்ணற்ற முறைகள் சென்றுவந்தாலும், இந்த இடங்களின் அருமை பெருமைகளை துண்டுதுண்டாய் அங்கங்கே படித்து வந்தாலும், ஒரே தொகுப்பாய் இங்கே படித்ததில் மிக மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும், மெட்ராஸின் வரலாற்றுச் சிறப்புகளை அறிந்து கொண்டதில் ஒரு 'மெட்ராஸ்காரனாக’ சிறிது கர்வமாகக்கூட இருந்தது.
புத்தகம் முழுக்க எக்கச்சக்கமான தகவல்கள். உலகில் முக்கியமான பல நிகழ்வுகள், சரித்திரத்தின் பல சம்பவங்களில் மெட்ராஸ் பெயர் இடம் பெற்றிருக்கிறது. ஆங்கிலேயர்கள், ஆர்மேனியர்கள், போர்த்துகீசியர்கள், பிரெஞ்ச் மக்கள் என பலரும் வந்து மெட்ராஸின் வரலாற்றில் சில பக்கங்கள் எழுதிப் போயிருக்கிறார்கள். அனைவரின் நினைவாகவும் சில இடங்கள் இன்னமும் இருக்கின்றன என்று இந்தப் புத்தகத்திலிருந்து தெரிகிறது. சென்னையின் சரித்திரத்தைத் தேடி தெருத்தெருவாக அலைந்து திரிந்து தகவல்களை சேகரித்துள்ளார் ஆசிரியர். மொத்தம் 50 கட்டுரைகள். தினத்தந்தியில் தொடராக வந்து, பிறகு விகடன் பிரசுரத்தாரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டுரையிலும் அந்த காலத்துப் புகைப்படங்கள். மெரினா கடற்கரை, அப்போதைய பாரீஸ் பகுதி, அண்ணா சாலை இதையெல்லாம் பார்க்கும்போது நாமும் அந்த காலத்திற்கே போய்விடமாட்டோமா என்று ஏங்கும்படியாக அவ்வளவு அழகு.
அனைத்து கட்டுரையுமே முக்கியமானவைதான். இருந்தாலும் சிலவற்றை மட்டும் இங்கே பார்க்கலாம். புத்தகத்தை வாங்கி முழுவதுமாக படித்து மகிழ்ந்து கொள்ளவும்.
முதலாம் உலகப் போரில் இந்தியாவில் குண்டு விழுந்த ஒரே இடம் எது தெரியுமா? - நம் மெட்ராஸ்தான். அதுவும் கடலிலிருந்து குண்டு எறியப்பட்டதாம். உலகின் மிக உயரமான சிகரம் எவரெஸ்ட் என்று கண்டுபிடிக்கக் காரணமான சம்பவம் துவங்கிய இடம் எது தெரியுமா? - சரியான பதிலுக்கு புள்ளிகள் கிடையாது. அதுவும் மெட்ராஸ்தான். அமெரிக்காவில் புகழ் பெற்ற யேல் பல்கலைக்கழகம் துவங்கக் காரணமானவர் யேல். ஆனால், அதற்கான பணம் கிடைத்தது எங்கே? மறுபடி அதே பதில்தான். மெட்ராஸில் வேலை செய்தபோது சம்பாதித்த (+சுருட்டிய) தொகையைக் கொண்டே யேல் அந்த பல்கலைக்கழகத்தை துவக்கினாராம்.
ராபர்ட் க்ளைவ், வாரன் ஹேஸ்டிங்ஸ் போன்ற ஆங்கிலேயர்கள் மெட்ராஸ் மேல் காதல் கொண்டு இங்கேயே இருந்து பல அருமையான விஷயங்களை செய்துவிட்டுப் போயிருக்கின்றனர் என பல ஆதாரங்களோடு ஆசிரியர் சொன்னாலும் ஒரு முக்கியமான சந்தேகம் வந்தது. பல வருடங்கள் இங்கே இருந்தவர்கள் தமிழ் கற்றார்களா இல்லையா? அதைப் பற்றிய தகவல்களே இல்லையே? அப்படியென்றால் அவர்கள் யாரும் தமிழே கற்காமல் போய்விட்டார்களா? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலாக ஒரு பெரிய கட்டுரையே கொடுத்துவிட்டார்.
அந்த ஆங்கிலேயர் பெயர் எல்லீசன். 1796ல் இந்தியா வந்த எல்லீசன், 1810ல் மெட்ராஸ் மாகாணத்தின் ஆளுனர் ஆனார். தமிழைக் கேட்ட மாத்திரத்தில் அதன் மேல் பித்துப் பிடித்து, ராமச்சந்திரக் கவிராயரிடம் ட்யூஷன் கற்று, செய்யுள் இயற்றும் அளவுக்குப் புலமை பெற்றாராம். அவருக்கு மிகவும் பிடித்துப் போன நூல் - திருக்குறள். அதை ஆங்கிலத்தில் முதன்முதலில் மொழிபெயர்த்தவர் இவரே. இதைத் தவிர மெட்ராஸ் மக்களுக்கு பல நற்காரியங்களைச் செய்த எல்லீசன், தனது 41வது வயதில் காலரா வந்து இறந்தார். இவரது நினைவாகவே அண்ணா சாலையிலிருந்து திருவல்லிக்கேணி செல்லும் சாலைக்கு ‘எல்லீஸ் சாலை’ என்று பெயரிட்டுள்ளனர்.
அந்த காலகட்டத்தில் செய்த கட்டிட வேலைப்பாடுகள், அவற்றின் சிறப்புகளை விளக்குவதாக சில கட்டுரைகள். புனித ஜார்ஜ் கோட்டை, சேப்பாக்கம் அரண்மனை, விவேகானந்தர் இல்லம், அரசு அருங்காட்சியகம் என தற்போதும் உள்ள பல கட்டிடங்களின் அருமை பெருமைகளை தெரிந்து கொள்கிறோம்.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொன்ன அருள்மிகு வள்ளலார் பிறந்து, 30 வருடங்களுக்கு மேல் வாழ்ந்த இடம் சென்னையில் ‘வள்ளலார் நகர்’தான். தனியார் பொறுப்பில் இருக்கும் அந்த வீட்டினை யாரும் போய் பார்க்கலாம் என்று சொல்கிறார் ஆசிரியர். ஒரு முறை கண்டிப்பாகச் சென்று பார்க்க வேண்டும்.
மெட்ராஸ் தெருக்களில் ஓடிய ட்ராம் வண்டிகளைப் பற்றி ஒரு கட்டுரை. சுமார் ஒரு லட்சம் பேர் பயன்படுத்திய ட்ராம் வண்டிகளில் அந்த காலத்திலேயே சீசன் டிக்கெட்கள், Unlimited Pass ஆகியவை இருந்தனவாம். இந்தியாவில் அறிமுகமாகி பத்து ஆண்டுகளுக்குப் பிறகே அமெரிக்காவில் ட்ராம்கள் ஓடத்துவங்கின என்கிறார்.
பி.ஆர் & சன்ஸ்’ஐ மறக்க முடியுமா? 1843ல் ஸ்காட்லாந்து சகோதரர்கள் Peter Orr மற்றும் Alexander Orr’ஆல் துவங்கப்பட்ட இந்த நிறுவனம், கடிகார விற்பனையில் கொடிகட்டிப் பறந்த காலம் ஒன்று இருந்தது. இந்த நிறுவனத்தின் வரலாறும் சுவையானதே.
இவற்றைத் தவிர, சாந்தோம் தேவாலயம், ஆர்மீனியன் தேவாலயம், லஸ் தேவாலயம் பற்றி அருமையான கட்டுரைகள். மேலும் மெட்ராஸில் முதன்முதலில் பறந்த ஒரு விமானத்தைப் பற்றிய சம்பவம் படு சுவாரசியம். அதே போல் ராயபுரம் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்கள் தோன்றிய விதங்களும்.
மெட்ராஸைப் பற்றி இவ்வளவு பேசிவிட்டு, மெட்ராஸ் பாஷை பற்றி பேசாமல் இருக்கலாமோ? அதற்கும் ஒரு கட்டுரை உள்ளது. ஒரு சில ஆங்கில வார்த்தைகள் எப்படி மருவி மெட்ராஸ் பாஷைக்குள் புகுந்துவிட்டது என்பதை உதாரணத்துடன் கூறிவிட்டு - ‘அடக் படக் டிமிக் அடிக்கிற டோலு மையா டப்ஸா’ - என்ற அர்த்தம் பொதிந்த(?!?) திரைப்படப் பாடல்களில் உள்ள மெட்ராஸ் பாஷையும் குறிப்பிட்டு கட்டுரையை & புத்தகத்தை முடிக்கிறார்.
மெட்ராஸை விரும்புபவர்கள் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.
***
No comments:
Post a Comment