THE CITADEL
A. J. CRONIN
NOVEL
Photo Courtesy/To Buy: Amazon
க்ரோனின்,
“Two gentlemen of verona” என்ற சிறுகதை மூலம்தான் எனக்கு அறிமுகம் ஆனார்.
இளநிலை வகுப்பில் ஆங்கில துணைப்பாடமாக ஒரு சிறுகதை தொகுப்பு இருந்தது.
அதில் சோமர்செட் மாம் (Somerset Maugham), ஆர்.கே. நாராயண் (Narayan),
மாப்பசான் (Guy de Maupassant) முதலானவர்கள் எழுதிய சிறுகதைகள் அறிமுகம்
செய்யப்பட்டிருந்தன. மேற்சொன்ன இந்த ரொம்ப அழகான சிறுகதையும் அதில்
இருந்தது. இரு பதின்மவயது பாலகர்கள் பற்றியது. அதை படித்து முடிக்கும்போது
ஒருவிதமான துக்கம் நெஞ்சை அடைக்கும். இவர் எழுதிய புத்தகம் ஏதாவது
பிற்காலத்தில் வாசிக்க வேண்டும் என்று அப்போது நினைத்துக் கொண்டேன். இந்த
முறை வாடகை நூலகம் சென்று தேடும்போது, இந்த புத்தகம் கண்ணில் படவே எடுத்து
வந்து விட்டேன்.
இந்த நாவல்
மான்சன் (Manson) என்பவரின் வளர்ச்சி - வீழ்ச்சியைச் சொல்லி, அதில் இருந்து
அவர் எப்படி மீள்கிறார் என்பதை அவர் பார்வையில் சொல்கிறது. அவரது செயல்கள்
முக்கியமாக அவரின் மனைவியை எப்படி பாதிக்கிறது என்பதையும் பேசுகிறது. இந்த
நாவலை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். முதலில் மிக ஏழையாக, ஒரு இரும்புச்
சுரங்கம் தோண்டும் Driffney கிராமத்தில், ஒரு தலைமை மருத்துவரின் உதவி
மருத்துவராக (Assistant) வருகிறார். அரசின்/தனியார் பணத்தொகை மூலம்
மருத்துவர் பட்டம் பெற்றவர். நேர்மையான குறிகோள்களுடன் அந்த கிராமத்தில்
வேலை செய்கிறார். தனது புத்திசாலித்தனம் கொண்டு நிறைய பேரின் உயிரைக்
காப்பாற்றுகிறார், மக்களின் அன்பை பெறுகிறார்.
அதே சமயம்
அந்த ஊரில், சிறுவர் பள்ளியில் வேலை செய்யும் கிறிஸ்டினுடன் முதலில்
வாக்குவாதம் செய்கிறார். பிறகு காதல் கொள்கிறார். டென்னி (denny) என்கிற
மருத்துவருடன் நட்பு ஏற்படுகிறது. மருத்துவரின் தங்கை அவர் மேல் குற்றம்
சாட்ட தனது வேலையை விட்டு விலகுகிறார். இந்த பகுதியை படிக்கும் போதே, அந்த
காலத்தில் (1927), மருத்துவர்களின் கற்கும் திறமை, அவர்கள் மக்களுக்கு
பரிந்துரைக்கும் மருந்துகள், தவறாக ஒரு நோயை பற்றி அறிதல், அதன் மூலம்
மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி அறிய முடிகிறது. இங்கே
குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் க்ரோனின் ஒரு மருத்துவர், அவர் பணியாற்றிய
இடங்கள், நிலக்கரி சுரங்கம், இரும்பு வெட்டி எடுக்கும் சுரங்கம் போன்றவை.
தனது அனுபவத்தை நாவலில் முக்கிய கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்துகிறார்.
இரண்டாவது
பகுதி அபெரலவ் (Aberalaw) என்ற சிறு மலை கிராமத்தில் நடக்கிறது. முதல்
வேலையை விட்டு விலகி வரும் மான்சன், இந்த கிராமத்தில் மருத்துவ பணியாற்ற
நியமிக்கப்படுகிறார். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை, அவருக்கு திருமணம் ஆகி
இருக்க வேண்டும். வேலை கிடைத்தவுடன் கிறிஸ்டினிடம் சென்று தனது காதலை
வெளிப்படுத்துகிறார். கிறிஸ்டினும் முதலில் இருந்தே மான்சனை
விரும்புகிறார். இருவரும் மணம் செய்துகொள்கின்றனர். இங்கே நிலக்கரி
சுரங்கத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மருத்துவம் பார்க்கிறார். அதே
சமயம் நிலக்கரியால் மனித சுவசப்பாதையில் ஏற்படும் அபாயம் குறித்தும் ஆய்வு
செய்கிறார். முதலில் சிறுசிறு பிரச்சனைகள் வந்தாலும், தனது கொள்கையில்
இருந்து விலகாமல் இருக்கிறார். மெதுவாக மக்கள் இவர் மீது நம்பிக்கை வைத்து
இவரிடம் மருத்துவம் செய்துகொள்கிறார்கள்.
அறுவை சிகிச்சை செய்யும் போதே
பாதியில், மண்டியிட்டு ஆண்டவனை வணங்கும் மருத்துவர், வயலின்கள்
மற்றும் சீனாவில் இருந்து வரும் பாத்திரங்களை சேகரிக்கும் மருத்துவர்
போன்றவர்களை அறிமுகம் செய்கிறார். மிகக் கடுமையாக முயற்சி செய்து தனது
மருத்துவக் கல்வியில் மேல்நிலை பட்டம் பெறுகிறார். அவர் மனைவி கர்ப்பத்தில்
குழந்தையை இழக்கிறார். சில காலம் கழித்து தனது எம்.டி பட்டத்தை,
நிலக்கரிச் சுரங்க தொழிலாளர்கள் மத்தியில், நிலக்கரியை சுவாசிப்பதால்
ஏற்படும் பாதிப்பு குறித்த தலைப்பில் செய்த ஆய்வுக்காகப் பெறுகிறார். தனது
ஆராய்ச்சிக்கு அவர் guinea pigகளை உபயோகப் படுத்துவதை எதிர்த்து சிலர் அவர்
மேல் வழக்கு பதிவு செய்ய, அதை முறியடித்து அவர்கள் நம்பிக்கையையும்
பெறுகிறார். தனது வேலையை உதறி வேறொரு வேலையைத் தேடுகிறார்.
இந்த நாவல்
வெளிவந்த சமயத்தில் இது ஒரு முன்னுதாரணமாகக் கொள்ளப்பட்டது. அமெரிக்கா
மற்றும் இங்கிலாந்தில் பல பரிசுகளை வென்றது. இந்த நாவலில்
சொல்லப்படுவதுபோல் சுரங்க தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதும், மருத்துவர்
கவனமின்மையையும் அரசாங்கத்தால் கவனிக்கப்பட்டு அதற்கான ஆணையம் ஒன்றும்
அமைக்கப்பட்டது. இந்த நாவல் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில்
திரைப்படமாகவும் வெளிவந்திருக்கிறது. இந்த நாவலை படிக்கும் போதே இந்தக்
கதையின் திரைப்பட சாத்தியங்கள் புரிகின்றன. நிறைய இடங்களில் ஹீரோ
கதாபாத்திரம் நிறைய கஷ்டப்பட்டு வெற்றி பெறுகிறார். தனது காதலியை
மனைவியாக்கி கொள்கிறார். அதே சமயம் மக்களுக்காகப் பாடுபடுகிறார். இதுக்கு
மேல சொல்லணுமா, இதை அப்படியே பிழிய பிழிய அழ வைக்கிற மாதிரி படம்
ஆக்கியிருப்பாங்க நம்ம மக்கள்.
மூன்றாவது
பகுதி லண்டனில் நடைபெறுகிறது. மான்சனின் எம்.டி பட்டம், அவருக்கு அரசு
வேலையை பெற்றுத் தருகிறது. அரசாங்க நடைமுறைகள் மான்சனுக்கு மிகுந்த
அவநம்பிக்கை ஏற்படுத்துகிறது. அதனால் தனியாக மருத்துவ பயிற்சி செய்ய முடிவு
செய்கிறார்; வீடு வாங்குகிறார்; தன்னுடன் மருத்துவம் பயின்ற நண்பன்
ஹாம்சன் உடன் சேர்ந்து, தனது கொள்கைகளை மறக்கிறார்; பணத்தின்பால் வெறியாக
இருக்கிறார். இந்த பகுதியில் மனிதன் மனதின் ஆழ் மன ஆசைகளின் காரணமாக தான்
நம்பும் கொள்கைகளை மறந்து, தவறான செயல்கள் செய்கிறான் என்பதை
விவரித்திருக்கிறார் க்ரோனின். தனது மனைவியின் அன்பை இழக்கிறார். தனது
கவனக்குறைவால் ஒரு நோயாளி உயிரிழக்கும்போதுதான் அவருக்கு தன் தவறு
புரிகிறது. மீண்டும் பழைய கொள்கைகளை மீட்டு எடுக்கிறார். மனைவியை விபத்தில்
இழந்து, கிட்டத்தட்ட தவறான மருத்துவ பயிற்சி செய்ததற்கு குற்றம்
சாட்டப்பட்ட, அதில் இருந்து வெளி வருவதுடன் முடிகிறது.
என்னைக்
கேட்டால், “ஜஸ்ட் அனதர் டைம் பாஸ்”.
No comments:
Post a Comment