சிறப்புப் பதிவர்: மாதவ சோமன்
”சிறுகதை எழுதுவது எப்படி?” - இந்தத் தலைப்பைப் பார்த்ததும் உங்களில் எத்துணை பேர் “சிறுகதை எழுதுவது எப்படி” என்பதைத் தெரிந்து கொள்ள இங்கே ஏதேனும் கிடைக்கும் என்று இதை வாசித்துக் கொண்டிருக்கிறீர்களோ நானறியேன். அப்படி யாரேனும் தடம்தவறி இதை வாசித்துக் கொண்டிருந்தால் முதலிலேயே அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு விடுகிறேன்.
நானும் ஒரு காலத்தில் யாரேனும் எழுதும் ஏதேனும் குறிப்புகளைக் கொண்டு சிறுகதை எழுதிவிட முடியும் என்று நினைத்திருந்தவன்தான். ஸ்டெய்ட்டா ஹீரோ என்கிற கனவெல்லாம் இல்லை நமக்கு. முதலில் சிறுகதை, பிறகு குறுநாவல், அதற்கு அப்புறம் நாவல், பின்னர் மெகாசீரியலுக்கு வசனம், வாய்ப்பு அமைந்தால் சினிமாவுக்கு வசனம், கூடவே கதையும், அதிஷ்டம் கதைவைத் தட்ட டைரக்ஷன், பிறகு டைரக்டர் கம் ஹீரோ வேடம், அரசியல் நுழைவு, எம்.எல்.ஏ., அமைச்சர், முதலமைச்சர் இப்படிப் படிப்படியாக வளர்ச்சி காணவேண்டும் என்ற கனவில் இருந்தவன் நான். அப்படிப்பட்ட கனவுகாண வல்ல வயதில் நம் கையில் சுஜாதா எழுதிய இந்தப் புத்தகம் அகப்பட்டது.
அடடா! வாத்தியாரே சொல்லித்தரத் தயாரா இருக்கையிலே நமக்கென்ன கவலை என்று இந்தப் புத்தகத்தை அவசர அவசரமாக வாங்கினேன். வீடுவந்ததும் தான் கவனித்தேன். பின்னட்டையில் இப்படிக் குறிப்பிட்டிருந்தது
சிறுகதை எழுதுவது எப்படி என்பதுங்ஙே! என்று விழித்தேன் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? எனினும், அடுத்த ஐந்து வரிகளைப் படித்ததும் மனம் நிம்மதியானது.
ஒரு வழிகாட்டி நூல் அல்ல,
சிறுகதைத் தொகுப்பு.
சிறுகதை எழுதுவதைப் பாடம்
சொல்லித் தர முடியாது என்று
நம்புகிறவர் சுஜாதா.
ஆனால் உதாரணச் சிறுகதைகள் மூலம்
மறைமுகமாகச் சொல்ல முடியும்.
அதைத்தான் செய்திருக்கிறார் சுஜாதா -
விதவிதமான கதைகள் அடங்கிய
இத்தொகுப்பின் மூலம்.
நிஜந்தான். சிறுகதை எழுதுவது எப்படி என்று கைப்பிடித்தெல்லாம் யாரும் அத்தனை எளிமையாகச் சொல்லித் தந்துவிட முடியாது. நிறைய வாசிப்பின் வாயிலாகவும் கூடவே கல்பனாதேவியின் துணையுடனுமேயே இது சாத்தியப்படும்.
சிறுகதை எழுத கல்பனாதேவியின் துணை தேவை என்றால் ஏதோ ஹாரிபாட்டர் அல்லது அம்புலிமாமா கதைபோல எளிமையான நாலுகடல் நாலுமலை தாண்டும் கதையையோ அல்லது சிக்கல்மிகு இன்செப்ஷன் வகையறாக் கதையையோ நெய்தல் அல்ல. நல்ல சிறுகதைக்கு ஒரு சின்ன சம்பவம் கூட போதும். அந்த சம்பவத்தைப் படைப்பவன் பார்க்கும் பார்வையை சுவைபட படிப்பவனுக்குக் கடத்திவிடுதலில் இருக்கிறது சிறுகதை யுக்தி.
மரணப்படுக்கையில் இருக்கும் அப்பாவைப் பார்க்க வருகிறான் நீண்டநெடு வருடங்களாக அந்த வீட்டு வாசல் மிதியாத மகன். அந்த ஒரேயொரு இரவில் அந்த ஒற்றை அறைக்குள் இருந்துகொண்டு ”எல்டொராடோ” கதை வாயிலாக சுஜாதா விவரிக்கும் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான அந்த உலகம் மனதை அப்படிக் கனமாக்குகிறது. இந்தத் தொகுப்பின் சூப்பர் டூப்பர் கதை இதுதான்.
புத்தகத்தின் தலைப்பிலான கதையான “சிறுகதை எழுதுவது எப்படி?”, ஒரு அட்டகாசமான நகைச்சுவைக் கதை. தொண்ணூறு சிறுகதைகளை எழுதி முடித்து அவற்றில் ஒன்றும் இதுவரை எங்கும் பிரசுரமாகாத மிளகாய் வியாபாரி ராஜரத்தினம் “சிறுகதைப் பட்டறைக்கு வாருங்கள்” என்ற விளம்பரம் ஒன்றைப் பார்த்துவிட்டு அதைப் பின்தொடர்ந்து சென்று சந்திக்கும் அமளிதுமளிகளை நம்மைக் குதிக்கக் குதிக்க சிரிக்க வைத்துச் சொல்கிறார் சுஜாதா.
“வந்தவன்” - ஒரு நல்ல மனிதர் மிகவும் அப்பாவியாகவும் அமைந்துவிட்டால்? அவர்தான் கதையின் நாயகர் மணி அய்யர். இந்த நாடக வடிவிலான சிறுகதையை முப்பத்து ஐந்து வயசைக் கடந்த எல்லோரும் எண்பதுகளின் மத்தியில் / இறுதியில் நம் தூர்தர்ஷன் சேனலில் பூர்ணம் விஸ்வநாதன் நடிக்கப் பார்த்திருப்பீர்கள்.
”கால்கள்” மற்றும் “எதிரி” மாதிரியான ”முற்பகல் செய்யின்....” வகையிலான சிறுகதைகள் எல்லோருக்கும் எழுத வசப்படலாம். எனினும் சுஜாதாவின் ஜால எழுத்தில் அதை வாசித்தல் அலாதியானது.
இப்போதெல்லாம் நமக்கு முதலமைச்சர் நாற்காலிக்கு வழிகாணும் நெடிய கனவு வருவதில்லை. “சிறுகதை எழுதுவது எப்படி” போன்றதான நல்ல நகைச்சுவைக் கதை ஒன்றையும், “எல்டொராடோ” மாதிரியான ஒரு கனமான மனசைத் தொடும் கதை ஒன்றையும் இந்த வாழ்க்கை முடிவதற்குள் எழுத வசப்பட்டுவிட்டால் போதும் என்றே தோன்றுகிறது.
சிறுகதை எழுதுவது எப்படி - சுஜாதா
சிறுகதைத் தொகுப்பு
திருமகள் நிலையம்
பக்கங்கள்: 112. விலை ரூ. 50/-
ஆன்லைனில் புத்தகத்தை வாங்க: 600024.காம்
No comments:
Post a Comment