குறிப்பு: சாலிம் அலி என்று இந்த
புத்தகத்தில் போட்டிருக்கிறார்கள். இந்தியப் பறவைகள் புத்தகத்தில் சலீம் அலி என்று
இருக்கிறது. சாலீம் அலி என்று கூட எழுதுகிறார்கள். எது சரி என்று தெரியவில்லை. அதனால்
இந்த புத்தகத்தில் இருப்பது போல் சாலிம் அலி என்றே நானும் எழுதுகிறேன். சரியான உச்சரிப்பு
என்ன என்பது தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும்.
சில வருடங்களுக்கு முன்பு எஸ்.ரா
எழுதிய இந்தக் கட்டுரையைப் படித்தவுடனேயே ‘ஒரு சிட்டுக்குருவின் வீழ்ச்சி’யைத் தேடத்
தொடங்கினேன். திருநெல்வேலியில் எங்குமே கிடைக்கவில்லை. நேஷனல் புக் டிரஸ்ட் தளத்தில்
புத்தகங்கள் கிடைக்குமிடம் என்று ஒரு பெரிய பட்டியல் போட்டிருப்பார்கள். ஆனால், அந்தக்
கடைகளில் டிரஸ்டின் புத்தகம் எதுவும் இருக்காது. நேஷனல் புக் டிரஸ்ட் என்ற ஒன்று இருப்பதே
அவர்களுக்குத் தெரியாது என்று சொல்லிவிடலாம். ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் இப்புத்தகத்தின்
ஆங்கில பதிப்பை வெளியிடுகிறது. ஆனால் ஆங்கிலத்தில் படிப்பதில் ஒரு பிரச்சனை, எல்லாம்
புரிந்துவிட்ட மாதிரி நடிக்க வேண்டியிருக்கும். தமிழில் கிடைத்தபாடில்லை. போன வருடம் பெங்களூரில்
இருக்கும் நேஷனல் புக் டிரஸ்டின் விற்பனை கூடத்திற்கு சென்றேன். நான் வசிக்கும் இடத்திலிருந்து
இரண்டு மணிநேரப் பயணம். பின்னர் ஒரு 30 நிமிட நடை (பஸ்ஸில் போனால் கண்டிப்பாக வழி கண்டுபிடிக்க
முடியாது என்ற பயம்). அந்தக் கடையில் தமிழ்ப் பிரிவில் மேல் ஓரத்தில், ஒரே ஒரு ‘ஒரு சிட்டுக்குருவின்
வீழ்ச்சி’ இருந்தது. Moment of Happiness.
இந்த புத்தகத்தை வாழ்க்கை வரலாறு
என்று சொல்வதைவிட பறவையியல் ஃபார் டம்மீஸ் என்று சொல்லலாம். தன்னுடைய எண்பத்தேழாவது
வயதில் இதை எழுதியிருக்கிறார் சாலிம் அலி. இதற்கு, எட்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாக
சொல்கிறார். வாழ்க்கையை திரும்பிப் பார்க்கையில் அதன் தோல்விகளே நினைவுக்கு வருவதாக
லா.ச.ரா அபிதாவில் சொல்வார். ஆனால், சாலிம் தன்னுடைய வாழ்க்கையை ஒரு பெஞ்ச்மார்க் மாதிரி
கொண்டு வந்திருக்கிறார். இழப்புகள் பற்றியெல்லாம் இப்புத்தகம் பேசவேயில்லை. சுயசரிதை
எழுதும் போது அது சுயபுராணமாக (போற்றி! போற்றி!) மாறிவிடும் அபாயம் எல்லோருக்குமே உண்டு.
லான்ஸ் ஆம்ஸ்டிராங்கின் வாழ்க்கை வரலாற்றை ஐம்பது பக்கங்களைத் தாண்டி படிக்க முடியவில்லை.
ஆனால் எண்பத்தேழு வயது பெரியவர், தன்னுடைய துறையில் இதற்கு மேல் இல்லை என்ற உயரத்தை
அடைந்தவர் எழுதும் போது, ‘தான்’ என்பது இல்லை; ‘தான்’ செய்த சாகசம் என்பதும் இல்லை. தன்னுடைய குடும்பம் பற்றிப் பேசும் முதல் சில பகுதிகளைத் தவிர மற்ற அணைத்தும் பறவையியல் பற்றிப் பேசுபவை. மொழிபெயர்ப்பும் நல்ல முறையில் வந்திருக்கிறது.
பறவையியல் என்பது பறவைகளைப் பார்த்து,
அவற்றின் நிறம், வடிவம் ஆகியவற்றை குறித்துக் கொண்டு, அவை எப்படி வாழ்கின்றன என்பதை
வேடிக்கை பார்ப்பது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், பறவையியலின் முக்கிய அம்சம் வேட்டையாடுவது. பறவைகளை வேட்டையாடி, அவற்றின் புறத்தோற்றத்தைக் குறித்துக் கொண்ட பின்,
அவற்றை தோலுரித்து பாடம் செய்ய வேண்டும். பின்னர், அவற்றின் இரைப்பையை அறுத்து அதில்
செரிமாணம் ஆகாமலிருக்கும் உணவை குறித்துக் கொள்ள வேண்டும். ஒரு பறவை என்ன தானியம் அல்லது
புல் அல்லது புழுவை இரையாக எடுத்துக் கொள்கிறது என்பதை அறிந்தால், அப்பறவை விவசாயத்தில்
என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிய முடியும். இதுபோக பறவை இறகில் ஒட்டிக்கொண்டிருக்கும்
உன்னிகளையும் சேகரிக்க வேண்டும். வேட்டையாடுவதிலிருந்து குறிப்பெழுதுவது வரை ஒரே ஆள் பலமுறை காட்டுக்குள் உட்காந்து கொண்டு இதைச் செய்திருக்கிறார்.
சாலிம் தன்னுடைய பறவை கணக்கெடுப்பு
பயணங்களைப் பற்றி மிக விரிவாக எழுதுயிருக்கிறார். பெரும்பாலும் நடை தான். ஆறு மணிநேரம்
தொடர்ந்து நடந்த கதையெல்லாம் கூட இருக்கிறது. பறவைகளை அடுத்து சாலிம் பேசுவது மனிதர்களைப்
பற்றித்தான். தன்னுடைய ஆசான்கள், நண்பர்கள் என்று பலரைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார்.
இதில் பெரும்பாலானவர்கள் வெள்ளைக்கார்கள். பலர் இந்தியர்களை வெறுப்பவர்கள். தன்னுடைய
அருமையான நண்பர் என்று சாலிம் சொல்லும், கர்னல் ரிச்சர்ட் செய்னர்ட்சகன் இப்படி எழுதுகிறார்,
“எல்லா இந்தியர்களைப் போலவே இவனும் தான் செய்கிற
எந்தப்பணியிலும் திறமைசாலி அல்ல. ஒரு வேலையைத் தவறாகச் செய்யும் ஒரு வழி இருந்தால்,
அப்படியே செய்வான். மேலே என்ன என்று சிந்திப்பது சுத்தமாக முடியாத காரியம்.” சாலிம்
இவர்களின் எண்ணத்தை தன்னுடைய வேலையினால் மாற்றிக்காட்டியிருக்கிறார். லோக் வான் தோ
என்ற சிங்கப்பூர் நண்பர்பற்றி ஒரு பகுதி முழுக்க எழுதியிருக்கிறார்.
இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும்
பயணங்களைப் பார்க்கும் போது, சாலிம் ஓரிடத்தில் உட்காரவே மாட்டார் என்று தான் தோன்றுகிறது.
கைலாஸ் மானசரோவர் பயணமும், ஐரோப்பாவில் தன்னுடைய
சன்பீம் மோட்டார் சைக்கிளில் செய்த பயணமும் பொறாமைப்பட வைத்தாலும், இந்த மனிதருக்கு
இப்படிப்பட்ட உந்துதல் எங்கிருந்து வந்தது என்று ஆச்சரியப்பட வைக்கிறது. இப்பயணங்கள்,
சொகுசான சுற்றுலா பயணங்கள் இல்லை; பறவையியல் அவரை உலகம் முழுவதும் சுற்றவைத்திருக்கிறது.
சாலிம் கடவுள் மறுப்பாளரா என்று
தெரியவில்லை. ஆனால் அவர் சாமியார்களையும் மறுபிறப்பைப் பற்றியும் தன்னுடைய நிலையை தெளிவாக
விளக்குகிறார். புத்தமடாலத்தியில் சாமியார், தன் கைக்கெட்டும் தூரத்தில் திண்பண்டங்களை
வைத்திருப்பதையும், அந்த மடாலயமே குப்பையைப் போல இருப்பதையும் கடிந்து கொள்கிறார்.
“மதத்தின் பெயரால் இப்படி எத்தனை விந்தை. மூடவழிபாடுகளும்
மரணத்திற்குப் பின் முக்தியளிக்கும் என்று நாம் (ஏனோ?) கற்பித்துக்கொள்கிற விஷயங்களில்
மனித இனம் ஏற்படுத்திக்கொள்கிற குருட்டு நம்பிக்கையும் எனக்கு அயர்வையே ஏற்படுத்தின.”
மேலும் வேறொரு கேள்விக்கு பதிலளிக்கையில், “அவனது
[மனிதன்] மூளை அதிக வளர்ச்சி பெற்றுள்ளது. அதைக் கொண்டு அவன் செயலையும் சிந்தனையையும்
பகுத்தறிவுக்கேற்ப அமைத்துக் கொள்ள முடிகிறது. அதேசமயம் தேவன் விதித்த விதி என்று கூறி
பிற உயிர்களிலிருந்து தான் உயர்ந்தவன் என்ற பொய்யான ஒரு முடிவை தானே கற்பித்துக் கொள்கிறான்”.
மறுபிறப்பு, தியானம் செய்வது போன்ற விஷயங்களைப் பற்றி, “இன்றைய வாழ்வு ஒன்றுதான் எல்லாம். நம் கையில் உள்ள இயக்கும் சக்தியை, நமது
சொந்தச் செயல்களைக் கட்டுப்படுத்தவும் திசை நிறுத்தவும் உள்ள சுயவலிமையை, பனிமூட்டம்
போன்ற கருத்துக்களைப் பற்றி சிந்திப்பதில் செலவிடுவது, அந்த சக்தியை மிகமிகத் தவறாகப்
பயன்படுத்துவதாகு என்று நம்புகிறேன்.”
வாழ்க்கை என்பது குறைந்தபட்சம்
இப்படியாவது இருக்க வேண்டும்.
ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி
| சாலிம் அலி | தமிழில்: நாக.வேணுகோபாலன் | நேஷனல் புக் டிரஸ்ட் | 316 பக்கங்கள் |
ரூ. 85 | ஆங்கிலப் பதிப்பு வாங்க
பிரமாதம் பாஸ்.
ReplyDelete//பறவையியல் என்பது பறவைகளைப் பார்த்து, அவற்றின் நிறம், வடிவம் ஆகியவற்றை குறித்துக் கொண்டு, அவை எப்படி வாழ்கின்றன என்பதை வேடிக்கை பார்ப்பது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். //
நானும் இப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். கேம்ப்ரிட்ஜ் அருங்காட்சியகத்தில் சார்லஸ் டார்வினின் original collections எல்லாம் நீங்கள் இங்கு குறிப்பிட்டது போலத்தான் சேகரித்திருக்கிறார்கள்...
இந்தப் புத்தகத்தைப் பற்றி முன்னரே கேள்விபட்டிருந்தாலும் இந்த அறிமுகத்திற்கு நன்றி
நன்றி சிவா! :-)
Deleteஅருமையான புத்தகம் .. சாலிம் அவர்களின் முயற்சி வியக்க வைக்கிறது .. தொடர்ந்து இது போன்ற புத்தகங்கள் அறிமுக படுத்துங்கள். ஷரண்
ReplyDeleteஅருமை!!
ReplyDeleteஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி தமிழ் பதிப்பு எங்கே கிடைக்கிறது??? ஆன்லைனில் வாங்க முடியுமா????
நன்றி ராஜ்குமார்.
Deleteஇந்தப் புத்தகம் ஆன்லைனில் கிடைக்காது. எங்காவது கடைகளில் கிடைக்கலாம். முடிந்தால் வரவிருக்கும் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு போய் நேஷனல் புக் டிரஸ்ட் ஸ்டாலில் விசாரித்துப் பாருங்கள்.