என்னதான் பொழுதுபோக்கிற்கு புத்தகம் வாசிக்க ஆரம்பித்தாலும் ஒரு கட்டத்தில் வாசிப்பு நம்மை முழுவதுமாக ஆட்கொள்கிறது, அடிமையாக்கி விடுகிறது. வாசிக்கும் பழக்கமுள்ள எல்லோர் வாழ்விலும் அவர்களின் வாழ்வை மாற்றிய, மனதை விட்டகலாத, மனதிற்கு வெகு நெருக்கமாக உணரும் ஒரு புத்தகம் இருக்கும். நம் வாழ்வில் நடந்த சம்பவங்களையொத்த சம்பவங்களைக் கொண்ட நாவல்கள் பெரும்பாலும் இந்த வகையறாவில் வந்து சேர்ந்துவிடும். அப்படி எனக்கொரு அதியற்புத உணர்வைக் கொடுத்த புத்தகம்தான் சிதம்பர நினைவுகள்.
கேரளத்தின் யுவாக்களுக்கு காதலும், கம்யூனிசமும் ரத்தத்திலேயே ஊறிப்போன விஷயம். இப்படியாக கல்லூரி காலத்தில் கவிதைகளும், கொள்கையும் கொண்டு நடந்து வீட்டிலிருந்து வெளியேறி பின்னர் உலகறியும் ஒரு சிறந்த மலையாளக் கவிஞனான பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் வாழ்க்கை தான் இந்த புத்தகம். 21 சம்பவங்களின் தொகுப்பு, கேவி ஷைலஜா மொழி பெயர்ப்பில் மொழிபெயர்ப்பின் சுவடே இல்லாமல் மனதைக் கிளரும் புத்தகம்.
இந்த வைராக்கியம் தான் எத்தனை பொல்லாதது? ஒரு வாழ்க்கைப் போராட்டத்தில் வைராக்கியமும் கூடச் சேரும்போது சென்று சேருமிடம் ஒரு புதிய உலகம்; அடையப்படும் வெற்றி மிகப் பெரியது; எனினும் பாதை சீரானதாக இருப்பதில்லை, நெருஞ்சிமுள் பாதையாகவே அமைந்துவிடுகிறது பெரும்பாலும். வாழ்வில் வென்றவர்கள் புத்தகம் எழுதினால் அவர்கள் எழுத்தில் இருக்கும் உண்மைநிலை/நிர்வாணம் நம்மை அடித்துப் போட்டுவிடுகிறது. சிதம்பரம் கோவிலுக்கு ஈசனைக் காணச் செல்பவர் அங்கு வயது முதிர்ந்த ஒரு தம்பதியினரைக் காண்கிறார். யாசித்து வாழ்பவர்களாக இருப்பார்களென்று உதவப் போய் அவர்களின் கதையைக் கேட்கிறார். பிள்ளைகள் நல்ல நிலையிலிருந்தும் அவர்களை இம்சிக்காது பென்ஷன் பணம் வாங்கி கோவிலில் இறைவனை இறைஞ்சி வாழும் குடும்பம் அவர்கள். முதுமையின் நிலை கண்டு மனதளவில் சித்தார்த்தனாகிப் போன பாலன் பின்னொரு நாளில் யோசித்துப் பார்க்கிறார் இருவரில் யார் முதலில் இறந்திருப்பார்களென்று.
பின்னொரு நாள், தன் பெயரின் அழைப்புக் கேட்டு பெண்ணொருவரை சந்திக்கிறார். அந்தப் பெண்ணின் முகம் பாதி தீயில் வெந்திருக்கிறது. அடையாளம் கண்டுணர முடியாத நிலையில் அந்தப் பெண்ணே தான் இவரின் கல்லூரி ஜூனியர் என்றும், முன்பொருநாள் பாலனை தன் பின்னால் பல நாட்கள், பேச முயன்றும் முடியாமல் அலையவிட்ட சாஹினா தானென்றும், படகைக் கவிழ்த்து விடுவேன் என்று மிரட்டி முத்தம் வாங்கிய சம்பவத்தையும் நினைவூட்டுகிறாள். ஒட்டுமொத்த கல்லூரியும் `சுற்றிக் கறங்கி` பின்னால் நடந்த ஒரு பேரழகியின் முகம் பாலனின் நினைவலைகளில் வந்து செல்கிறது. அவளுடன் வீட்டிற்கு செல்கிறார். அவளின் கதையைக் கேட்கிறார். கணவனால் ஏமாற்றப்பட்டு சிறுவேலைகள் செய்து இரு குழந்தைகளை வளர்த்துக் கொண்டிருக்கும் அவளுக்கு தான் எந்த ஒரு உதவியும் செய்ய இயலாத நிலையில் பாதி வெந்திருக்கும் அந்த கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டுச் செல்கிறார். அதுமட்டும் போதுமாயிருக்கிறது சாஹினாவுக்கு.
இப்படியாக இவர் வாழ்வில் கடந்துவந்த சம்பவங்கள், வறுமை, வைராக்கியம், லட்சியம், காதல்,காமம் இவைகளின் கோர்வை. ஆறுமாதங்கள் விடுதிப் பணம் கட்டாததால் வெளியேற்றப்படுகிறார். அந்த சமயத்தில் சந்திக்கும் நண்பனொருவனும் அவருடன் இருக்குமொரு புண்ணிய ஆத்மாவும் இவர் சோகத்தை கரைக்க மது ஊற்றுகிறார்கள். ஆல்கஹால் உள்ளிருக்கும் இயலாமையைத் தூண்டிவிட அந்த கணமே அழுதுவிடுகிறார் பாலன். இதை கண்டு அதிர்ந்து உடனிருக்கும் அந்த நபர் பாலனுக்கான ஒரு வருட விடுதித் தொகையை முழுவதுமாக கட்டி விடுகிறார். பின்னொரு நாளில் அவரின் சடலம் கண்டபோது அவர் சொன்ன வாக்கியமொன்று நினைவுக்கு வருகிறது பாலனுக்கு.
இதையெல்லாம் விட என்னை உருக்கிய நிகழ்வொன்று இதில் பதியப் பட்டிருக்கிறது. ஓணத்திருநாள். கேரளதேசமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. ஓணம் காரணமாக விடுதி பூட்டப்பட்டு நண்பர்கள் யாரும் உடனில்லாத் தனிமை பீடிக்க கையில் நயாபைசா இல்லாமல் வெளியேறுகிறார். பசி காதை அடைக்கிறது, வீராப்பு வீட்டிற்கு செல்லும் பாதையை மறைக்கிறது. ஒருநாள் முழுவதும் தண்ணீரை மட்டுமே குடித்து சமாளித்தவர் கால் போன போக்கில் போக ஒரு வீட்டின் வாசற்கதவில் சாய்ந்து நிற்கிறார். குழந்தைகள் பிச்சைக்காரனென சொல்லிவிட திருவோணத்தன்று அந்த வீட்டின் வாசலில் அமர்ந்து யாசித்து உண்கிறார். அந்த சமயத்தில் அங்கே வரும் ஒரு யுவதி இவரை அவளின் கல்லூரியில் கவிதை வாசிக்க வந்திருந்த கவிஞர் என அடையாளம் காண்கிறாள். எழுந்தோடி விடலாமென்று தோன்றியும் பசி தடுக்க உணவருந்தி நன்றி சொல்லி பயணப் படுகிறார். அப்போது நான் பாலனாக மாறியிருந்தேன் ஒரு துளிக் கண்ணீரோடு.
இதேபோல புத்தகத்திலிருக்கும் சம்பவங்கள் அத்துணையையும் எழுதிவிடத் தோன்றுகிறது. அவ்விதம் என்னுள் கலந்த ஒரு புத்தகமிது. எத்தனையோ நாட்களாகியும் இன்னும் இதன் தாக்கம் மனதை விட்டகலவில்லை. நிச்சயம் இந்த புத்தகம் உங்களுக்கு ஒரு நல்ல வாசிப்பனுபவம் தரும் என நம்புகிறேன்.
மொழிபெயர்ப்பு / கே.வி ஷைலஜா / வாழ்வியல்சார் கட்டுரைகள் / வம்சி / விலை ரூ. 100 / இணையம் மூலம் வாங்க: உடுமலை
ஆர்வத்தை தூண்டிவிட்டு விட்டீர்கள். நன்றி. தேடிப்படித்துவிடவேண்டியதுதான்
ReplyDelete