விருது வாங்கிய புத்தகங்கள் விற்பனையில் அடித்துப்பிடித்து சாதனை படைப்பது வழக்கம் தான். கடந்த புத்தக விழாவில் நாஞ்சில் நாடனின் `சூடிய பூ சூடற்க` சிறுகதை தொகுப்பு (அவருடைய ஆகச்சிறந்தது இல்லையென்றாலும்) விற்பனையில் அப்படிப்பட்ட சாதனையை படைத்தது. மற்ற மொழி புத்தகங்களின் விற்பனையைப் பார்க்கும்போது தமிழ் புனைவு புத்தக விற்பனை என்பதை சாதனை என்றெல்லாம் பெருமையாகப் பேசி விட முடியாது. ஏதோ, பத்து வருடங்களில் ஆயிரம் காப்பி போவதற்கு பதிலாக ஒரு வருடத்தில் மூவாயிரம் விற்றால் சாதனை தான். அப்படி விருது வாங்கிய பிறகு பிரபலமாகும் எழுத்துகளை நசுக்குவதற்கு `விமர்சகர்கள்` தயாராக இருப்பார்கள்.தமிழ் இலக்கிய சூழலுக்குள் வரும் வாசகனுக்கும், சிற்றிதழ் எழுத்தாளர்களுக்கும் கற்றுக்கொடுக்கப்படும் முதல் பாடம் - விருது வாங்கிவிட்டாலே, இலக்கிய தரம் குறைந்தது. ஒன்று எழுத்தாளர் சோடை போயிருக்க வேண்டும், அல்லது விருது வழங்கும் அமைப்பின் பிறப்பும் வளர்ச்சியும் சந்தேகத்துக்கிடமாக்கப்படும்.
எந்த மொழிச் சூழலும் இப்படிப்பட்ட சண்டைக்கு விலக்கல்ல. வெயிலும் மழையும் கூடி வந்த அப்படிப்பட்ட சுபநாளில் இயன் மக்வென் எனக்கு அறிமுகமானார். வாசகர்கள் தங்களுக்குப் பிடித்த எழுத்துகளைப் பற்றி விவாதிக்கும் இடமான குட்ரீட்ஸ் எனக்குப் பிடித்ததொரு இணையத்தளம். புத்தக மதிப்புரை என பெரிய எழுத்தாளரைக் கொண்டு எழுதப்படாமல், நம்மைப் போல சராசரி வாசகர்கள் சொல்லும் கருத்துகளைத் தொகுக்கும் தளம். பொதுவாக இங்கு அளிக்கப்படும் மதிப்பெண்கள் சோடை போவதில்லை.
இயன் மக்வென் ஒரு எழுத்தாளரே அல்ல என்று ஒரு கோஷ்டியும், அவரைப் புரிந்துகொள்ள இன்னும் ஐம்பது வருடங்கள் ஆகும், அவர் ஒரு சித்தர் என மற்றொரு சாராரும் கூச்சல் இட்டுக்கொண்டிருந்தனர். எழுத்தாளரின் பெயரைக் கேள்வியேபடாத நான், இயன் மக்வென் ஒரு தெய்வ மச்சான் என கமெண்டு போட்டுவிட்டு, ஓரமாக அவர் யாரென கூகிளில் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது `அடோன்மெண்ட்` படம் பார்த்திருந்தேன். பூடகமாக இருந்த முதல் பாதி என்னை மிகவும் கவர்ந்திருந்தது. `டொலோரிஸ் க்ளைர்போர்ன்` எனும் படத்தைப் பார்த்ததிலிருந்து இப்படிப்பட்ட தீவிரமான திரைமொழியில் சொல்லப்ப்ட்ட படங்கள் என்னைக் கவர்ந்திருந்தன. இயன் மக்வென் எழுதிய நாவல் தான் அடோன்மெண்ட் படம் எனத் தெரிந்தபின் அவர் தெய்வ மச்சானே தான் என்பதும், யூகித்த நானும் அப்படித்தானோ எனவும் பெருமிதம் பொங்கியது.
இருப்பதிலேயே மிக ஒல்லியான அவரது `ஆம்ஸ்டர்டாம்` எனும் நாவலை நூலகத்திலிருந்து எடுத்த போது என் கரங்கள் நடுங்கின. அநேகமாக அதற்கு முன் கடைசியாக அப்படி நடுங்கியது காம்பஸால் எனது பெஞ்சில் மாலா என செதுக்கியதை பயாலஜி வாத்தியார் பாண்டியன் கண்டுபிடித்த போதுதான். ஆம்ஸ்டர்டாம் படித்து முடிக்கும் வரை அந்த நடுக்கம் இருந்தது. பின்னர் எப்போது இயன் மக்வென் பெயரைப் பார்த்தாலும் நினைவு துரத்தியது.
கருணைக் கொலையைப் பற்றி அற விவாதமாகக் கதை தொடங்குகிறது. மூன்று நண்பர்கள் - வெர்னன், க்ளைவ், மோலி. சித்தபிரமை பீடித்து மோலி இருந்துவிடுகிறாள். அவளைப் போன்ற நிலைமை இருவரில் யாருக்கு வந்தாலும், மற்றவர் விஷம் கொடுத்து கருணைக் கொலை செய்துவிட வேண்டும் என ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள். ஆக, கதை கருணைக் கொலை என்பது சரியா, சட்டப்படி அனுமதிக்க வேண்டுமா எனும் பாதையில் செல்லும் என நினைக்க வேண்டாம்.
தீவிர வியாதியினால் பாதிக்கப்படும்போது கருணைக் கொலையைப் பற்றி நினைக்கும் நமக்கு, அன்றாடம் ஒழுக்க மீறலினால் விளையும் அக வியாதிக்கு என்ன விதமான முடிவு கொடுக்கப்பட வேண்டும் என வாதாடுகிறார்கள். சொல்லப்போனால் இருவரது வாழ்விலும் பல ரகசியங்கள் அடங்கியுள்ளன.
பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சர் பெண்ணைப் போன்று உடைகள் அணியும் விருப்பமுடியவர். அவரது நண்பரான மோலியுடன் அவர் எடுத்த புகைப்படங்கள் வெர்னன் கையில் கிடைக்கின்றன. தான் நடத்தும் பத்திரிக்கையில் மோலி கொடுத்த படங்களை வெளியிட்டு விளம்பரம் தேடிக்கொள்ள விழைகிறார் வெர்னன். நட்பையும் மீறி தனிப்பட்ட வாழ்க்கையை செய்தியாக்க நினைக்கும் வெர்னனை வெறுக்கிறார் க்ளைவ்.
க்ளைவ் ஒரு இசையமைப்பாளர். இரண்டாயிரமாம் ஆண்டு கொண்டாட்டங்களுக்காக ஒரு சிம்பொனி ஒன்றை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். லேக் டிஸ்ட்ரிக்ட் எனும் ஊருக்கு விடுமுறையில் செல்லும் க்ளைவ் ஒரு கற்பழிப்பு சம்பவத்துக்கு சாட்சியாக நேர்கிறது. கற்பழிப்பு நடப்பதை அவர் பார்க்கவில்லை என்றாலும், ஒரு பெண்ணின் கதறலைக் கேட்கிறார். ஆனால், தனது இசை வெளியீட்டுக்கு இடைஞ்சலாக இருந்துவிடுமே என இச்சம்பவத்தை போலிஸிடம் சொல்லவில்லை. இது எப்பேற்பட்ட தர்மம் என வெர்னன் கேள்விகேட்கிறார்.
ஒரு கட்டத்தில் வெர்னன் புகைப்படங்களை வெளியிடப்போவதாக விளம்பரம் கொடுக்க, பல திசைகளிலிருந்தும் அவருக்கு நெருக்கடி வருகிறது. பத்திரிக்கையை விட்டுப் போனாலும், படங்களை வெளியிட்டே தீர வேண்டும் எனும் தீர்மானத்தோடு இருக்கும் சமயத்தில், க்ளைவுக்கு மன்நலம் பாதிப்படைகிறது. வெர்னனுடன் போட்ட ஒப்பந்தப்படி ஆம்ஸ்டர்டாமில் சந்திக்கிறார்கள். ஏன் ஆம்ஸ்டர்டாம்? அதற்கு ஒரு வருடத்துக்கு முன்னர் ஆம்ஸ்டர்டாமில் கருணைக் கொலை சட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது.
ஆம்ஸ்டர்டாமில் சந்திக்கும் இரு நண்பர்களும் தங்களது அரதப் பழைய கேள்விக்கே திரும்புகிறார்கள். அற மீறலால் வாழ்வைக் கைப்பற்றி வெல்ல நினைப்பது சரியா? இருவரும் வாழ்வில் எடுத்த இரு பெரும் முடிவுகள் எப்பேர்ப்பட்ட ஒழுக்கக் குலைவு. அப்போதே இருவரும் இறந்துவிட்டதாக ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டுகிறார்கள். க்ளைவுக்குத் தெரியாமல் வெர்னனும், வெர்னனுக்குத் தெரியாமல் க்ளைவும் சாம்பெயினில் விஷம் கலந்து குடித்து இறந்து விடுகிறார்கள்.
மிக எளிமையான கதை என்றாலும், இயன் மக்வென்னின் அற்புதமான விவரிப்புகளால் நாவல் ஓரளவு சுவாரஸ்யமான வாசிப்பனுபவமாக இருந்தது. இதை குறுநாவல் என்றுதான் வகைப்படுத்த வேண்டும். பெரிய களனில்லாமல் மிகச் சிறிய சம்பவங்களைக் கொண்டு கதையை நகர்த்தியுள்ளார். பாத்திரப்படைப்பில் பெரிதும் கவனப்படுத்தாதது குறையாகத் தெரிகிறது. நாவலின் முடிவில் நம்மால் பாத்திரங்களோடு உணர்வு ரீதியாக ஒன்ற முடியவில்லை. மிகவும் மேலோட்டமான பாத்திரப்படைப்பினால், கதையில் இருக்கும் சுவாரஸ்யம் மட்டுமே நாவலை நகர்த்துகிறது.
இயன் மக்வென் எப்படிப்பட்ட பெரிய கேள்வியை எடுத்துக்கொண்டுள்ளார் என யோசித்தால் நாவல் எத்தனை வலுவிழந்து இருக்கிறது எனப் புரியும். அன்றாட வாழ்வின் ஒழுக்க மீறலும், நியாயங்களுக்கும் இருக்கும் காலம் காலமாய் தொடரும் பெரிய போராட்டம் என்பதை உணராது எழுதப்பட்ட கதையாகத் தோன்றுகிறது. நீட்சேயின் அப்போலோனியன் மற்றும் டயனிசயன் தரப்புகளை எடுக்கக் கூடிய சாத்தியங்கள் தெரிந்தாலும், ஒழுக்க மீறல் என்பது என்றென்றும் வாழ்வை முழுமையாக அனுபவிக்க ஒரு காரணியாகத் தெரிகிறது. அப்படிப்பட்ட தரப்பாக இருந்தால், தர்மம் என்றும் அறம் எனும் நாம் பேசும் தரப்புகளுள் இருக்கும் வாழ்க்கை அனுபவங்கள் குறைவுபட்டவையா? என வெர்னன்/க்ளைவ் கேட்கும் சாத்தியங்கள் இருக்கின்றன. அப்பாதையில் இயன் மக்வென் பயணிக்கவில்லை. கருணைக் கொலையைப் பற்றியும் முழுமையான வாதத்தை முன்வைக்கவில்லை எனும் போது நாவல் சொல்ல வருவது என்ன எனும் கேள்வி வாசகர்களை கண்டிப்பாக குழப்பும்.
தலைப்பு - Amsterdam
எழுத்தாளர் - Ian McEwan
இணையத்தில் வாங்க - Amsterdam
No comments:
Post a Comment