எடை கூடிக் கிழப் பருவம் எய்தியது போன்ற
சோர்வுடையவர், சர்க்கரை வியாதியும் உண்டு, சிதறிய குடும்பத்தின்
முற்காலத்து குடும்பத் தலைவர், அறியாத ஒரு கணத்தில் பனை முறிந்தது போல
காரணமற்று உறவு முறிந்த மகளின் நினைவில் வாழ்பவர், தனது இருப்பை மறந்து
நினைவுச் சிதறிய தந்தையை வாரம் ஒரு முறை சந்திப்பவர், அலுவலகத்திலும்
பெயரற்றவர், அலுவலக காரியங்களுக்காக வேண்டி தவம் இருந்து பணத்தைப்
பெறுபவர், வாங்கும் சம்பளம் போதாவிட்டாலும் எஞ்சும் பணத்தில் குடிப்பவர்,
விவாகாரத்தானது மட்டுமல்லாது புது பெண் உறவுகளையும் பேணத் தெரியாதவர் -
இதைப் படிக்கும்போதே நமக்கு கெட்ட ஆவி - அதான் கொட்டாவி வருகிறதே! இப்படி
ஒரு பாத்திரத்தை நாவல் முழுவதும் வைத்திருந்தால் எத்தனை எரிச்சலாக
இருக்கும்? அதுவே ஒரு துப்பறியும் இன்ஸ்பெக்டராக அவர் இருந்தால் புத்தகத்தை
வாங்குவோமா என்ன?
வெல்கம் டு இன்ஸ்பெக்டர் வலாண்டர் சீரிஸ்!
இவர்
பெயர் தாங்கிய புத்தகங்களை ஐரோப்பிய கடைகளில் பார்த்திருக்கிறேனே தவிர
படிக்கும் எண்ணம் சுத்தமாக இருந்ததில்லை. குற்றப் புனைவு நூல்களைப்
படிப்பதில் பெரிய ஒவ்வாமை இருந்தது. கல்லூரி நாட்களில் படித்த அலிஸ்டர்
மேக்லின், மைக்கேல் கிரைடன் போன்றவர்களின் சாகசக் கதைகள் படிக்கும் ஆர்வம்
இருந்தாலும், குற்றப் புனைவு படிப்பதில் ரொம்பவும் தயக்கம் இருந்தது.
ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் பலதைப் படித்திருக்கிறேன். அதில் ஷெர்லாக் ஒரு
புத்திசாலி, குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் அவருக்கு இருக்கும் attention
to detail வேறு யாருக்கும் இல்லை எனும்படியான சாகச நாயகன் பிம்பத்தை ஒரு
எல்லைக்கு மேல் ரசிக்க முடியவில்லை. குற்றங்கள் மிக மெத்தனமாகக்
கையாளப்படுவதை தினசரி செய்திகளில் படிக்கிறோம். மிகக் கைதேர்ந்த
இன்ஸ்பெக்டர்/உளவாளிக்குக் கூட எல்லாமே கை மேல் கிடைத்துவிடுவதில்லை. சாகச
மனநிலையில் படிக்கும்போது இருக்கும் சுவாரஸ்யம், படித்தபின் காணாமல்
போய்விடுகிறது. இதெல்லாவற்றுக்கும் மேலாக, ஜேம்ஸ் பாண்ட் கதைகளில் வருவது
கற்பனையிலும் சாத்தியமாகாத ஒன்று. கணக்கில்லா சாத்தியங்களில் பணமும்,
அதிகாரமும், நாடு விட்டு நாடு செல்லும் அனுமதியும், எக்கணமும் கைக்குக்
கிடைக்கும் ஆயுதங்களும், அணுவைப் பிளந்து ஏழ் கடலைப் புகுத்தி அதில்
காதலியுடன் உல்லாசப் படகில் செல்லும் வசதிகளும் எல்லா
இன்ஸ்பெக்டர்/உளவாளிகளுக்குக் கிடைத்துவிடுவதில்லை.
அப்படி ராசியில்லாத ஒரு யதார்த்தமான இன்ஸ்பெக்டர் நம் வலாண்டர்.
சொல்வனம்
இதழில் நம் ஆர்.அஜய் எழுதிய
குற்றப் புனைவு கட்டுரைத் தொடரைப்
படித்தபின்னரே பல ஐரோப்பிய எழுத்தாளர்கள் எனக்கு அறிமுகமானார்கள். அதனால்
மிக ஆர்வத்தோடு அவரது தொடரைப் படித்தேன். அதில் குறிப்பிடப்பட்டுள்ள
எழுத்தாளர்கள் அனைவரின் ஒரு புத்தகத்தையேனும் (முதல் புத்தகம்!) படிக்க
வேண்டும் எனும் ஆசை இந்த வருடம் ஏற்பட்டிருந்தது. அப்படி எதேச்சயாகக்
கிடைத்தது இன்ஸ்பெக்டர் வலாண்டர் அறிமுகமாகும் புத்தகம் `முகமில்லா
கொலையாளிகள்`. ஹென்னிங் மான்கெல் என்பவர் எழுதியது. அவரைப் பற்றி
ஆர்.அஜய்
சொல்வதைப் பாருங்கள்:-
மான்கெல் வெறும் குற்றப் புனைவு எழுத்தாளர் மட்டுமல்ல, அவரின் ஆளுமை
இன்னும் விரிவானது. ஒரு முழுமையான பார்வையைத் தரவேண்டும் என்பதற்காக
அவருடைய நாடகப்பணி, பிற எழுத்துக்கள் பற்றி இத்தனை விரிவாகச் சொல்கிறேன்.
இன்ஸ்பெக்டர் வலாண்டர் தொடரைத் தவிர, தனி நாவல்கள், சிறாருக்கான இரு தொடர்
நாவல்கள், நாடகங்கள், திரைக்கதைகள் என பலவற்றில் மான்கெல் ஈடுபட்டுள்ளார்.
மான்கெலே அடிக்கடி சொல்வது போல் வலாண்டர் நாவல்கள் அவருடைய
எழுத்துப்பணியில், 25 சதவீதம்தான். இருந்தும் இந்தத் தொடர் அவருக்கு
மிகுந்த புகழைத் தந்தது மட்டுமல்லாமல், இன்றுவரை நீடிக்கும் ஸ்காண்டிநேவிய
குற்றப் புனைவு அலையும், தொடர்ந்து அறிமுகமாகும் புதிய எழுத்தாளர்களும்
உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது.
முகமில்லா கொலையாளிகள்
நடப்பது ஸ்வீடன் நாட்டின் லூனார்ப் எனும் பகுதியில். பண்ணை வீட்டில் வாழும்
முதிய தம்பதியினர் மீது தாக்குதல் நடத்தி, முதியவர் கொடூரமான முறையில்
கொல்லப்பட்டிருக்கிறார். மூதாட்டி கழுத்தில் ஒரு சுருக்கு, அடிபட்டு
கிடந்தாலும் உயிர் இருக்கிறது. அவர்களது பக்கத்து வீட்டுக்காரர் சத்தம்
கேட்டு வந்து பார்க்கும்போது நாவல் தொடங்குகிறது. ரவுண்ட்ஸில் இருக்கும்
இன்ஸ்பெக்டர் வலாண்டருக்குச் செய்தி போனதால், அவர் வீட்டுக்கு வந்துப்
பார்க்கிறார். பழிவாங்கும் நாடகம் நடந்தது போல, அறை எங்கும் ரத்தக் களறியாக
இருக்கிறது. மண்டையில் ரெண்டு தட்டியிருந்தால் செத்துப்போயிருக்ககூடிய
வயதானத் தம்பதியினரை ஏன் இப்படி துன்புறுத்தியுள்ளார்கள் என்பது வலாண்டரின்
முதல் சந்தேகமாக இருக்கிறது.
செய்தி அளித்த பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரிக்கிறார்.
இரு குடும்பங்களும் நண்பர்கள் என்றும், இறந்துபோனவருக்கு எதிரிகள் என
யாரும் கிடையாது, அதிகளவு பணமும் கிடையாது, ஏன் இப்படி கொல்லப்பட்டார்கள்
எனத் தெரியாது எனச் சொல்லிவிட்டார். செத்தவர் வீட்டு குதிரை சத்தம்
போட்டதால் தான் அதிகாலையில் முழித்ததாகச் சொல்கிறார்.
கொலை செய்ய வந்தவர்கள் குதிரைக்கு ஏன் தீவினம் கொடுக்க வேண்டும்.
இத்தனை உக்கிரமாகத் தாக்கும் அளவுக்கு வயதானத் தம்பதியினருக்கு யார்
எதிரிகள்? சிறிது நேரத்தில் செத்தவரின் மனைவியும் மருத்துவமனையில் இறந்து
போகிறாள். சாகும்போது `Foreign` என மூணு தடவை சொல்லியிருக்கிறாள்.
இங்கு தான் வழக்கமான துப்பறியும் புலிகளுக்கும், வலாண்டருக்கு
வித்தியாசம் வருகிறது. வலாண்டருக்குக் கிடைக்கும் துப்புகளைக் கொண்டு அவர்
குற்றம் செய்தவர்களை கண்டுபிடிக்க பல திட்டங்கள் போடுகிறார்.
கிடைத்திருக்கும் துப்புகள் அதிகம் இல்லை. இதைக் கொண்டு திட்டவட்டமான
வழிகளில், விஞ்ஞான முறையில் துப்பறிய முடியாது. தொடர்ந்து கிடைக்கும்
துப்புக்களையும், தொடர்புள்ள மக்களையும் பிந்தொடர்ந்து கொண்டேயிருக்க
வேண்டும். கிடைக்கும் எந்த வழியையும் முட்டுச் சந்தில் சென்று முடியும்வரை
தொடர்வதை வலாண்டர் நிறுத்துவதில்லை. அதில் கேசுக்கு எந்த சம்பந்தமும்
இல்லாத வழிகளும் அடங்கும்.
இக்கதையில், இறந்துபோனவரின் மனைவி கழுத்தில் போடப்பட்டிருந்த
சுருக்கு வித்தியாசமாக இருந்ததாக அவருக்குத் தோன்றவில்லை. ஷெர்லாக் ஹோம்ஸ்
போன்ற துப்பறிவு செய்பவர்களுக்கு உடனடியாக இது தெரிந்திருக்கும்.
வலாண்டருக்கு அப்படிப்பட்ட பிற துறை அறிவு மிகவும் குறைவு. அதனால் எதுவும்
குறைந்துபோவதில்லை, என்ன மாதிரியான சுருக்கு என ஆராய, அவரது அலுவலக நண்பர்
கூறும் ஒரு துறைமுக நிபுணரை அணுகுகிறார். குடிபோதையிலும், வயதாலும் பாதி
நினைவிழந்து கிடக்கும் அந்த நிபுணர் சுருக்கு போடப்பட்ட முறையைக் கொண்டு
இது கப்பல்களில் வேலை பார்ப்பவர்களது முறை போலத் தெரிகிறது எனக்
கூறுகிறார். அதுவும் ஸ்வீடன் நாட்டு கப்பலில் இப்படி போட மாட்டார்கள்
என்றும் சொல்கிறார். இதன் மூலம் மூதாட்டி சொன்ன வெளிநாட்டுக் கொலையாளி
என்பதுடன் ஏதோ ஒரு தொடர்பு அவருக்குக் கிடைக்கிறது.
இதுதான் வலாண்டர் துப்பறியும் வழிமுறை. திட்டமிட்ட
வழிமுறையில்லாததால், அலட்சியமாக எதையும் விட்டுவிட முடியாது. கிடைக்கும்
எல்லா ஓட்டைகளையும் சோதனை செய்துவிடுவது அவரது பாணி. இதனால் பல சம்பவங்கள்
நேர விரயம் எனத் தோன்றும். ஆனால், அதில் கிடைக்கும் துப்புகளைக் கொண்டு வேற
வழியில் துப்பறிவார்.
வெளிநாட்டவர் எனத் தெரிந்ததும், ஸ்வீடன் நாட்டின் லூனார்ப்
பகுதியில் இருக்கும் தஞ்சம் புகுந்தோர் பகுதியை சோதனையிட தனது டீமிடம்
கூறுகிறது. இதற்கிடையே கொன்றவர்கள் வெளிநாட்டவர்கள் எனும் செய்தி
பொதுமக்களிடையே பரவிவிடுகிறது. பொதுவாக ஸ்வீடன் போன்ற நாடுகளில்
வெளிநாட்டவர் மறு வாழ்வுக்காகப் புகுவது அரிதானது. மொழி ஒரு சிக்கல்
என்றால், அங்குள்ள குளிர் காலக் கொடுமை மற்றொரு கஷ்டம். அதனால் மற்ற
நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களும், யுத்த காலத்தில் புது
நாட்டுக்குப் பெயர்ப்பவர்கள் மட்டுமே ஸ்வீடனத் தேர்ந்தெடுப்பர். அப்படி
நுழைபவர்களால் இயல்பு வாழ்க்கை கடினமாகிறது என்பது உள்நாட்டோரின் எண்ணம்.
முடிந்தவரை அகதிகளை உள்ளே விடக்கூடாது, விட்டால் நம் நிம்மதியான வாழ்வை
குலைத்துவிடுவார்கள் என எண்ணம் கொண்டவர்கள். அப்படிப்பட்டவர்கள் மத்தியில்
கொலையாளி வெளிநாட்டுக்காரன் எனச் சொன்னால் என்ன நடக்கும்? வலாண்டருக்கு
மிரட்டல் வருகிறது. ரெண்டு நாட்களுக்குள் குற்றம் செய்தவனைக் கண்டுபிடி,
இல்லையென்றால் அகதிகள் முகாமை தீக்கிரையாக்குவோம் என ஒரு உள்நாட்டு கும்பல்
எச்சரிக்கை செய்கிறது.
மேற்கூறிய சமூகப் பார்வையும் குற்றப் புனைவுகளில் மிக அரிதாகக்
காணப்படும் விஷயம். குறிப்பாக, தனது நாட்டின் சீர்கேடு பற்றி உண்மையானப்
பார்வையை புனைவுகளில் தீவிர இலக்கியம் மட்டுமே பதிவு செய்யும் எனும் எண்ணம்
நம்மிடையே உண்டு. குற்றப் புனைவு போன்ற கேளிக்கை எழுத்துகளில் தீவிரமும்,
சமூகக் கோபங்களும் பதிவு செய்யலாகாது என்பது எழுதப்படாத விதி. ஹென்னிங்
மான்கெல் இதிலும் வித்தியாசமாக, தனது சமூகப் பிரச்சனைகளை நேரடியாகக்
கதைக்களனில் புகுத்தியிருக்கிறார். இதுவும் குற்றப்புனைவுகளில் வெளிவராத
பார்வை. ஆனால், அதற்காக ஒரேடியாக சமூக கோபங்களைக் காட்டாமல்,
குற்றப்புனைவுக்கான விறுவிறுப்பையும் தக்கவைத்திருக்கிறார்.
குற்றவாளி வெளிநாட்டவர் எனத் தெரிந்த அதே நேரத்தில், செத்துப்போன
வயதானவளின் அண்ணன் திடுக் தகவல்களைத் தெரிவிக்கிறான். செத்துப்போனவருக்கு
மற்றொரு குடும்பம் இருந்தது என்றும், தவறான வழியில் அவர் சேர்த்த பல லட்சம்
க்ரோனர்களை அவ்வப்போது அக்குடும்பத்துக்குக் கொடுத்து வந்தார் என்றும்
கூறினார். மேலும், அவரது ரெட்டை வாழ்க்கை யாருக்குமே தெரியாது என்றும்,
அவரைக் கொன்றவன் தர்மத்தை நிலை நாட்டியிருந்தாலும், அப்பாவியான தன்
தங்கையைக் கொன்றதால் நரகம் தான் அவனுக்குக் கிடைக்கும் எனப் புது தகவலைத்
தெரிவிக்கிறார். கேசில் புது வாசல் திறக்கிறது. வலாண்டர் இக்கதையைத்
தொடர்ந்து செத்தவரின் புது குடும்பத்தை ஒரு பக்கமும், வங்கியில்
இருந்தவர்களை ஒரு பக்கமும் விசாரிக்கிறார். இதிலிருந்து அவருக்குப் பல
வழிகள் கிடைக்கின்றன. இவ்வழிகளை அவர் தனியாக ஆராய்வதில்லை. தனது குழுவினருக்குப் பகிர்ந்து கொடுத்து பல திசைகளிலிருந்து செய்திகளைச் சேகரிக்கிறார். பல சமயங்களில் அவரது குழுவினர் கொடுக்கும் வழிகள் மிகவும் உபயோகமாக இருக்கின்றன. அதனால ஒன் மேன் ஷோ எனும் மாயை தகர்க்கப்படுகிறது.
கொலைகளைத் துப்பறியும் அதே நேரத்தில், பல சாகச ஹீரோக்கள்
போலில்லாமல், குடும்ப பாரமும் வலாண்டரை அழுத்துகிறது. விவாகரத்து வாங்கிச்
சென்ற மனைவியை அவரால் மறக்க முடியவில்லை. ஒரு தடவையேனும் சந்திக்க வேண்டும்
எனக் கெஞ்சிக்கூத்தாடி ஹோட்டலில் சந்திக்கிறார். மனைவியின் கையைப்
பிடித்து மீண்டும் இணைந்துவிடலாம் என அழுகிறார். அவருடன் சண்டை போட்டுப்
பிரிந்த பெண்ணை எப்படியேனும் திரும்ப அழைத்துவர வேண்டும் என
ஆசைப்படுகிறார். ஆனால் அவரது பெண்ணோ ஒரு கென்யனுடன் ஸ்டாக்ஹோம் நகருக்குச்
சென்றுவிடுகிறாள். வயதானதால் அவரது அப்பாவுக்கு அவ்வப்போது நினைவு
தவறுகிறது. ஆனால், அதைச் சொன்னால் அவர் மிகவும் கோபப்படுகிறார். தன்னை
சந்திக்க ஏன் தினமும் வருவதில்லை, இன்னும் சிறிது நாட்களில் ஜப்பானுக்குச்
சென்றுவிடப்போவதாகச் சொல்கிறார். அவரது தந்தையையும் சரியாக கவனித்துக்கொள்ள
முடியவில்லை, பெண்ணும் தன்னை புரிந்துகொள்ளவில்லை, மனைவிக்கும் நல்ல
வாழ்வைத் தர முடியவில்லை என்பதால் பெரும் குற்ற உணர்வும் சோகமும் அவரது
வாழ்வை பீடிக்கிறது. ஒரு வகையில் இக்கவலைகளிலிருந்து அவரை இன்ஸ்பெக்டர்
வேலை காக்கிறது என்றே சொல்லலாம்.
இப்படி அங்குலம் அங்குலமாகக் குற்றவாளியை வலாண்டன்
நெருங்குகிறார். பல சமயங்களில் கேஸ் அவ்வளவுதான் என முட்டுச் சுவரில்
முடிந்துவிடுகிறது. சில சமயம் கிடைக்கும் துப்பு தப்பான திசைகளில்
அலைக்கழிக்கிறது. இப்படி பெரும் ஊசலாட்டமாக அவரது துப்பறியும் பாணி
இருந்தாலும், நமக்கு மிகவும் தத்ரூபமான நிகழ்வு போலத் தோன்றுவது ஹென்னிங்
மென்கல்லின் சாமர்த்தியம். உடம்பைக் குறைக்க வேண்டும் எனும் ஆசை
இருந்தாலும் வேலையின் அயர்ச்சி அவரை கண்ட நேரத்துக்கு சாப்பிட வைக்கிறது.
அவரையே பலி கேட்கிறது.
மிக ஆச்சர்யமான விஷயம் - ஒடு அரசு இயந்திரம் எப்படி இயங்குகிறது
எனக் காட்டுவதில் ஹென்னிங் மான்கெல் எடுத்துக்கொண்டிருக்கும் தீவிரம்.
ஒவ்வொரு இன்ஸ்பெக்டரும் பல திசைகளுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.
சாதாரணமாக சாகசக் கதைகளில் அவர்கள் அதிவேக வண்டி இருக்கும், பேனாவில்
கேமிரா, புல்லட்டின் சிகப்பு பொத்தானை அழுத்தினால் தண்ணீரில் நீச்சல்
அடிக்கும், லைட்டரில் நாட்டை அழிக்கும் அணு ஆயுதம் கூட இருக்கும். இங்கு
நமது வலாண்டியரும், அவரது சகாக்களும் வண்டிகளுக்குப் பெட்ரோல் போடுவதற்காக
செலவுக் கணக்கை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். சில நேரங்களில் போன மாதக்
கணக்கை பைசல் செய்யவில்லை, அதை செய்யுங்கள், அவனை விசாரிக்க பக்கத்து
ஊருக்குப் போகவேண்டும் என்றெல்லாம் சொல்கிறார்கள். படிக்கும்போது மிக
யதார்த்தமாக இருந்தது.
ஹென்னிங் மென்கல் எனும் புது எழுத்தாளரின் வெற்றி அவரது புது
அணுகுமுறையில் இருக்கிறது. குற்றப் புனைவுகளின் வழக்கமான பாணியில்
கையாளாமல், நிஜத்தோடு நெருக்கமாக அமைய வேண்டும் என அவர் மிகவும்
விரும்பியிருக்க வேண்டும். அதே சமயத்தில், தனது நாட்டை சீர்குலைக்கும்
சிக்கல்களையும் அவர் கையாண்டிருக்கிறது. எழுத்தாளருக்கு சமுதாயப் பொறுப்பு
வேண்டும், அதை சரிசெய்ய தார்மீகக் கடமை அவனுக்கு இல்லை என்றாலும், சமூக
அவலங்களை பதிவு செய்ய ஊடகம் ஒரு பொருட்டே இல்லை என நிரூபித்துள்ளார்.
தீவிரமான விஷயங்களை குற்றப் புனைவில் புகுத்தியதிலிருந்து, இன்ஸ்பெக்டர்
வலாண்டர் போல ஒரு புதிய பாதை அமைத்துள்ளார். அவரது புத்தகங்களைத் தொடர்ந்து
படிக்க வேண்டும் என்ற எண்ணம் முகமில்லா கொலையாளிகள் முடிக்கும்போது
தோன்றியது. அப்படி ஒரு விறுவிறுப்பான குற்றப் புனைவு!
தலைப்பு - Faceless Killers
ஆசிரியர் - ஹென்னிங் மான்கெல்
பதிப்பாசிரியர் - விண்டேஜ் புக்ஸ்
No comments:
Post a Comment