ஆடிஸம் (Autism) குழந்தைகளிடையே
தோன்றும் ஒருவகை மனவளர்ச்சிக் குறைபாடு. இது தீவிர மனநலக் குறைபாடு அல்ல. இந்தவகைக்
குழந்தைகள் தம் வயதையொத்த பிற குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் சற்றே “கற்றல்’ விஷயத்தில்
பின் தங்கியிருப்பார்கள்.
சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆனந்த
விகடனில் ”ஆயிரம் ஜன்னல்கள்” தொடர் எழுதியபோது ‘கடவுளின் குழந்தைகள்: என்றொரு அத்தியாயம்
எழுதினார். அவர் அந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டது தீவிர மனவளர்ச்சிக் குறைவு கொண்ட
குழந்தைகள் குறித்து. ஒருவரை ஒருவரோடு ஒப்பிடுதல் என்பதே ஒரு கிரிமினல் குற்றம் என்பதான
தொனியில் இருந்தது அந்த அத்தியாயம். யாரோ இன்னொருவருடன் ஒப்பிட்டு ஒரு குழந்தையை சிறப்புக்
குழந்தை, கடவுளின் குழந்தை என்று ப்ராண்ட் செய்யும் நீங்கள், உங்களை விட அறிவில் சிறந்தவரோடு
உங்களை ஒப்பிட்டு நீங்களும் மனநலக் குறைபாடு உள்ளவர், ஊனமுற்றவர் என்று ஒப்புக் கொள்வீர்களா
என்பது ஜக்கியின் கேள்வி.
ஜக்கி சொல்வது அப்படியே உண்மைதான் எனினும் டாக்டர் சு
முத்து செல்லக்குமார் எழுதிய ”ஆடிஸம்” புத்தகம் ஆடிஸத்தால் பாதித்த குழந்தைகளை எப்படி
அவர்கள் சின்னஞ்சிறுசாக இருக்கும்போதே கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம் என்பது பற்றிப்
பேசுகிறது.
சிந்தனையில் தோன்றும் போக்கிற்கு
நடந்துகொள்தல், நாம் சொல்வதை எளிதாகப் புரிந்து கொள்ளாமல் போதல், வீம்பு, அடம்பிடித்தல்,
சொல்லிக் கொள்வதைக் கற்றுக் கொள்ளும் திறன் இல்லாமை போன்ற பிரச்னைகள் கொண்ட இந்தக்
குழந்தைகளை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சையளித்தால் அவர்கள் சகஜமான குழந்தைகளாகி
விடுவார்கள் என்கிறார் டாக்டர்.
இந்த நோய்க்கான காரணங்களாக
மரபணுக்களும், சில மருந்துகள், சுற்றுச்சூழல் ஆகியவை இருக்கின்றன.
எது ஆடிஸம் என்று குறிப்பிடுகையில்
அதற்கான அறிகுறிகளாக குழந்தைகளின் செயற்பாடுகளாக ஒரு டஜன் விஷயங்களை டாக்டர் குறிப்பிடுகிறார்.
அவற்றில் சில ”பேசவேண்டிய காலகட்டத்தில் பேசாதுபோதல், ரெஸ்பான்ஸிவாக இல்லாது போதல்”
ஆகியவை.
பதின்பருவத்தில் (டீனேஜ்) ஆடிஸக்
குழந்தைகளை எப்படி கவனித்துக் கொள்ளவேண்டும், ஆடிஸம் மாதிரியான பிற நோய்கள், ஆடிஸத்தைக்
கண்டறிய பரிசோதனைகள் போன்றவை பற்றியும் சுருக்கமாகக் குறிப்பிடுகிறார் டாக்டர்.
பெரும்பாலும் ஆடிஸத்திற்கான
சிகிச்சையில் மருந்தின் பங்கு குறைவே. மருந்து என்பது ஆடிஸத்தின் சில அறிகுறிகளைப்
போக்க மட்டுமே பயன்படுகிறது. மற்றபடி ABA என்றழைக்கப்படும் Applied
Behaviar Analysis வாயிலாக சில முறையான பயிற்சிமுறைகளின் வழியே இவர்களை சகஜநிலைக்குக்
கொண்டுவர முடிகிறது.
என் நண்பர் ஒருவரின் குழந்தை
சிலநேரங்களில் சொன்னதைச் சொன்னபடி செய்யமாட்டாள். எப்போதும் எங்கோ ஏதோ கவனத்தில் இருப்பாள்.
’உப்பு கொண்டு வா”, என்றால் சமையலறைக்குச் சென்றுவிட்டு சிறிதுநேரம் சென்றபின் வெறும்கையுடன்
திரும்பி வருவாள். “உப்பு எங்க?”, என்று இவர்கள் அதட்ட மறுபடி சமையலறை சென்று உப்பு
கொண்டு வருவாள். இந்த செயல்பாடு தவிர்த்துப் பார்த்தால் அவள் ஒரு ”சகஜமான குழந்தை”.
அவளது பெற்றோர் இதனைச் சுட்டிக்காட்டி அவளுக்கு ஆடிஸம் என்று அவர்களே முடிவெடுத்தார்கள்.
இரண்டு வெவ்வேறு மருத்துவர்களிடம் இரண்டு மூன்றுவகையான
பரிசோதனைகளை செய்தபின் அவளுக்கு ஆடிஸ பாதிப்பு இல்லை என்று மருத்துவர்களே அறிவித்த
பின்னர்தான் நண்பர் வீட்டில் சமாதானம் ஆனார்கள்.
நாமாக குழந்தைகளை இப்படி ப்ராண்ட்
செய்வதும், மருத்துவ ஆலோசனை இன்றி மருந்துகள் தருவதும் தவறு என்பதையும் டாக்டர். முத்து
செல்லக்குமார் குறிப்பிடுகிறார்.
ஆடிஸம் பாதித்த உலகப் பிரபலங்கள்
சிலர் பெயரைக் குறிப்பிடுகிறார் டாக்டர். அவர்களில் எவருமே சாதாரண பிரபலங்கள் அல்லர்
என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆடிஸக் குழந்தைகளுக்கு உதவும்
நிறுவனங்கள் / அமைப்புகளின் பெயர்களையும் புத்தகத்தில் குறிப்பிடுகிறார் டாக்டர். அந்த
அமைப்புகள் எவையும் தமிழகத்தில் சென்னையைத் தாண்டி வேறெங்கும் இல்லை. சென்னையைத் தாண்டி
இருக்கும் மக்களுக்கும் உதவ அமைப்புகள் உள்ளனவா என்றும் டாக்டர் குறிப்பிட்டிருக்கலாம்.
ரொம்பவும் மருத்துவத் துறை
சார்ந்த வார்த்தைகளைக் கொண்டு குழப்பாமல் எளிமையாக பெற்றோருக்கு எது தேவையோ அந்தத்
தகவலை நச்’சென்று சுருக்கமாக தந்திருக்கிறார் டாக்டர்.சு.முத்து செல்லக்குமார் என்பதே
புத்தகத்தின் சிறப்பு.
ஆடிஸம் – சிறப்புக் குழந்தைகள்
– டாக்டர்.சு.முத்து செல்லக்குமார்
கிழக்கு பதிப்பகம் (மினிமேக்ஸ்
வெளியீடு)
80 பக்கங்கள் / விலை ரூ.30/-
இணையம் மூலம் வாங்க: கிழக்கு பதிப்பகம்
Very good Giri. Thanks for introducing these kind of books. We should not compare kids. Each one is a gem. I will share this in my FB
ReplyDeleteநன்றி பாஸ்கர் லஷ்மன்
ReplyDeleteநன்றி சார்...தங்கள் தொடர்ந்த ஆதரவைக் கோருகிறோம்.
ReplyDeleteநன்றி.