சினிமாவோ
புத்தகமோ நம்மை பெரிதும் பாதிக்கும் விஷயங்கள் பெரும்பாலும் துன்பச் சரித்திரங்களாகவே
அமைந்து விடுகின்றன. ஒரு மகிழ்ச்சியாக
முடிவுறும் (Happy Ending) ஒரு நாவலை விட ஒரு துயரத்தின் காவியம்
நம் மனதில் ஏற்படுத்தும் பாதிப்பு நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும். இன்று களைப்பின்போதும், நேரம்போகாத சமயங்களிலும் அமர்ந்து
தேநீர் குடித்துக் கொண்டிருக்கும் நமக்கு வால்பாறைத் தேயிலைத் தோட்டங்கள் உருவான வரலாறோ
அதில் கொல்லப்பட்ட மக்களைப்பற்றியோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மனிதாபிமானத்தின் சுவடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டு வேட்டையாடப்பட்ட ஒரு இனத்தின்
ரத்த சரித்திரம் விரிகிறது கண் முன்னே இந்த புத்தகத்தின் வாயிலாக.
திருநெல்வெலி
மயிலோடை கிராமத்தில் வசித்து வரும் கூலி கருப்பன், அவன் மனைவி வள்ளி. உள்ளூரில் அதிகம் வேலை இல்லாத காரணத்தினால்
வறுமையில் உழன்று கொண்டிருக்கும் கருப்பனையும் வள்ளியையும் தேயிலைத்தோட்ட கங்காணியான
சங்கரபாண்டியன், தேயிலைத் தோட்டங்களில் வசதியாக வாழலாம்,
நிறைய சம்பாதிக்கலாம் விரைவில் வாழ்வில் நல்ல நிலைக்கு வந்து விடலாம்
என்று ஆசை வார்த்தை கூறி நாற்பது ரூபாய் முன்பணமும் கொடுத்து அழைத்துச் செல்கிறான்.
கருப்பன் – வள்ளி போல பலரும் சங்கரபாண்டியை நம்பி
தேயிலைத்தோட்டத்திற்கு வர சம்மதிக்கின்றனர். அவர்கள் அனைவரையும்
சங்கரபாண்டி தன் சொந்தச் செலவில் தோட்டத்திற்கு அழைத்துச் செல்கிறான்.
அங்கு
சென்றதும் இவர்கள் காணும் காட்சி மிக வித்தியாசமானதாக இருக்கிறது. சுகாதாரமற்ற அறைகள். அதுவும்
‘பாடி’ என்று சொல்லப்படும் ஒரு குடிசை இரண்டு குடும்பங்களுக்குப்
பகிர்ந்தளிக்கப் படுகிறது. புதிதாய் சேர்ந்த கருப்பனும் வள்ளியும்
முத்தையா குடும்பத்தினருடன் ஒரே குடிசையில் குடியமர்த்தப் படுகிறார்கள். அதுவரையிலும் இனிமையாய் பேசிய கங்காணிகள் தோட்டத்தில் தங்களைக் கொடுமைப் படுத்துவதைக்
கண்டு அஞ்சுகின்றனர். இவ்வாறு தங்கள் தேயிலைத் தோட்ட வேலையைத்
தொடங்கிய இவர்கள் கரை சேர்ந்தார்களா அங்கு இவர்கள் அனுபவித்த கொடுமைகள் என்ன என்பதுதான்
இந்த நாவல்.
நிறைய
சம்பாதிக்கப் போகிறீர்கள் என்று நம்பிக்கை செலுத்த முன்பணத்தை வாரி வழங்குவதிலாகட்டும், குடுகுடுப்பைக்காரனை ஏற்பாடு செய்து நல்லது நடக்கும்
என்று கூலிகளை நம்ப வைப்பதிலாகட்டும், ஏமாற்றியே கூலிகளை வேலைக்கு
அழைத்துச் செல்கின்றனர் கங்காணிகள். ஒவ்வொரு கூலியும் வேலை செய்வதில்
ஒரு பங்கு கங்காணிக்கு சம்பளமாக கொடுக்கப்படும். அதனால்தான் இத்தனை
ஏமாற்று வேலைகளும். பிறகு வேலை பிடிக்காமல் கூலிகள் திரும்பிச்
செல்ல விரும்பினால் கொடுத்த முன்பணத்தை திரும்பச் செலுத்தவேண்டும். ஒரு வருடம் கணவன் மனைவி இருவரும் வேலை செய்தாலும்கூட அந்தக் கடனை அடைக்கமுடியாது.
இப்படியாக அவர்கள் வேலை செய்யவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
தேயிலைத்
தோட்டங்களில் நிலவிய மனிதாபிமானமற்ற சூழலை, அதன் வலியை வாசகன் உணரும் வகையிலான விவரணைகள் புத்தகம் நெடுக. சுத்தமற்ற குடிநீர், அழுக்கான மற்றும் கடும்குளிரை சமாளிக்க
ஏதுவாக அமைந்திராத குடிசைகள், போதிய மருத்துவ வசதியின்மை,
ஒரு வார்டுபாய் மருத்துவராக மருத்துவம் பார்க்கும் மோசமான நிலை மற்றும்
மலேரியா போன்ற விஷக் காய்ச்சல்களால் உடன் வந்தவர்கள் பாதிப் பேரை பலிகொடுக்கும் மோசமான
மருத்துவ சூழல், உடனிருப்பவருக்கு உடல்நிலை சரியில்லாத போதும்
வேலை செய்ய வேண்டிய கட்டாயம், பெண்களானால் பாலியல் தொந்தரவுகள்,
தப்பியோடினால் காட்டு மிருகங்களால் வேட்டையாடப்படும் நிலை என்று அவர்கள்
அனுபவித்த கொடுமைகளை தொடர்ந்து வாசிக்க இயலாதவாறு பக்கங்கள் புரளும்தோறும் மனம் கனத்துக்
கொண்டெ போகிறது.
இந்தச்
சூழலில் மருத்துவர் ஆப்ரஹாம் அங்கு வந்து சேர்கிறார். பின்னட்டையில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவலின்படி
ஆப்ரஹாமின் பாத்திரத்தின் பேரில் இந்த நாவலின் ஆசிரியர்தான் அங்கு மருத்துவராக வருகிறார்.
மருத்துவ வசதிகளை அதிகப்படுத்தியும் கூடுமானவரையிலும் அங்கிருக்கும்
கூலிகளுக்கு உதவியாக இருக்கிறார்.
இன்று
நம் மன அழுத்தத்தைப் போக்கும் முக்கிய காரணியாக இருக்கும், நாம் பொழுதுபோக்கிற்கு குடிக்கும் தேநீரை சிவப்புத்தேநீர்
என்று சொன்னால் அது மிகையாகாது.
முகம் தெரியாத பலரின் வியர்வையும் ரத்தமும் சிந்தி உருவாக்கப்பட்டதே
இந்தத் தேயிலைக்காடுகள். உண்மையில் இன்று அந்தத் தேயிலைக் காடுகள்
சுமந்து நிற்பதென்னவோ மறைக்கப்பட்ட ஒரு தலைமுறையின் துயரத்தின் வாழ்வியலைத்தான்.
நாமறியாத வரலாற்றினை அறிந்துகொள்ளும் பொருட்டேனும் இப்புத்தகத்தின் வாசிப்பு
இன்றியமையாததாகிறதென இதை உங்களுக்கு சிபாரிசு செய்கிறேன்.
நாவல் | மொழிபெயர்ப்பு | விலை ரூ. 150 | இணையத்தில் வாங்க டிஸ்கவரி
நல்லதொரு விமர்சனம் அர்ஜுன். மகிழ்ச்சியை விட நெகிழ்ச்சிதானே வாசிப்பில் அதிக பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது...
ReplyDeleteஇந்தக் கதைதான பரதேசியாக வரவிருக்கிறது... பாலா பணியைச் செம்மையாக செய்திருப்பாரானாலும் காட்சிப்படுத்துதலில் பிழிந்து தள்ளியிருப்பாரென்றே நினைக்கிறேன்... பார்க்கலாம்.