தமிழ்நாட்டில் உயிரோட்டமான சுற்றுச்சூழல் இயக்கம் உருவாக என்ன செய்ய
வேண்டும்? எனும் கேள்வியுடன் தொடங்குகிறது தியடோர் பாஸ்கர் எழுதிய தாமரை
பூத்த தடாகம் கட்டுரை தொகுப்பு. சூழியல் சார்ந்த புத்தகங்கள் எப்போதும்
எனக்கு உவப்பானவை. எப்படி சிறு குழந்தைகளுக்கு நார்னியாவின் உலகமும், ஹாரி
பாட்டர் சூழலும் கனவுச் சித்திரத்தை அளிக்கின்றதோ, அதைப் போல நமது சூழலைப்
பற்றிய உயிர்ப்பான உலகத்தை சூழியல் புத்தகங்கள் அளிக்கின்றன. முன்னர்
பறவையியல் பற்றி மா.கிருஷ்ணனின் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்ததைப் போல,
சாதாரணத் தகவல்களைக் கூட ஊடகங்களில் காண்பதற்கில்லை. ஆந்தை போல முழிக்காதே,
கழுகுப் பார்வை, நாய் வேஷம் போட்டா குலைக்கனும் என அன்றாடம் நாம் பேசும்
விஷயங்கள் கூட உண்மை நிலவரங்களையும், சூழியல் சார்ந்த கவலைகளையும்
தொகுப்பதில்லை. அதனாலேயே எத்தனை படித்திருந்தாலும், சூழியலைப் பொருத்தவரை
நாம் அடிமுட்டாளாக இருக்கின்றோம்.
ஜெயமோகன் எழுதிய `யானை டாக்டர்` கதை தமிழில் சூழியல் சார்ந்து வெளியான ஒரு அற்புதமான புனைவுக் கதை. தொடர்ந்து கவனப்படுத்தல் மூலம் யானைகள் பற்றிய விழிப்புணர்வை அளிக்கும் கட்டுரைகளை அவரது தளத்தில் காணலாம். இயற்கைச் சூழலும், மிருகங்களும் நமக்கு எவ்வளவு தூரம் அன்னியப்பட்டுவிட்டன என்பதை யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அக்கதையில் மீண்டும் மீண்டும் கூறுகிறார். மிருகங்களிடமிருந்தும், வனத்திடமிருந்தும் நாம் எத்தனை நுண்மையான விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறோம்? ஆனாலும், அவற்றின் பாதுகாப்பு குறித்த கேள்வி வரும்போது, கடனைத் திருப்பிக் கேட்க வருவது போல பதிலளிக்க கவனமாகத் தவறுகிறோம்.
ஜெயமோகன் எழுதிய `யானை டாக்டர்` கதை தமிழில் சூழியல் சார்ந்து வெளியான ஒரு அற்புதமான புனைவுக் கதை. தொடர்ந்து கவனப்படுத்தல் மூலம் யானைகள் பற்றிய விழிப்புணர்வை அளிக்கும் கட்டுரைகளை அவரது தளத்தில் காணலாம். இயற்கைச் சூழலும், மிருகங்களும் நமக்கு எவ்வளவு தூரம் அன்னியப்பட்டுவிட்டன என்பதை யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அக்கதையில் மீண்டும் மீண்டும் கூறுகிறார். மிருகங்களிடமிருந்தும், வனத்திடமிருந்தும் நாம் எத்தனை நுண்மையான விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறோம்? ஆனாலும், அவற்றின் பாதுகாப்பு குறித்த கேள்வி வரும்போது, கடனைத் திருப்பிக் கேட்க வருவது போல பதிலளிக்க கவனமாகத் தவறுகிறோம்.
வந்தபின் போராடுவோம் எனும் நிலைமையிலிருந்து வருமுன் காப்போம் எனும் கட்டத்துக்குத் திட்டம் தீட்டுவது சூழியலுக்குச் செய்யும் நன்மை மட்டுமல்ல, நம் எதிர்காலத்துக்கான முதலீடும் கூட. விஷயம் முற்றிப்போனப் பிறகு போராட்டங்கள் நடத்துவதில் அர்த்தமில்லை. தியடோர் பாஸ்கர் குறிப்பிடுவது போல, ஆம்பூர் - வாணியம்பாடி பகுதியில் தோல் பதனிடும் ஆலைகளில் கழிவுநீர்ப்பிரச்சனை, திருப்பூர் சாயப்பட்டறை கழிவால் மாசுபட்ட உரத்துபாளையம் அணை நீர் போல தாமதிக்கும் செயல்திட்டம் மறுக்கப்பட்ட உரிமையாக மாறும் அபாயம் உள்ளது.
சூழியல் பிரச்சனைகளைப் பொருத்தவரை பல ஆண்டுகளாக பற்பல வழிகளில் கவன ஈர்ப்பு கொண்டு செல்வது மிக அவசியமானது. ஊடகங்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும், குழந்தைகளும் சுற்றுச் சூழல் சீரழிவின் குறியீடுகளைத் தெரிந்துகொள்ளுதல் மிக அவசியம் என்கிறார் தியடோர் பாஸ்கர். அவற்றை முன்வைக்கும் முகமாக உயிர்மை இதழில் வெளியான இக்கட்டுரைகள் உள்ளன.
தமிழ்நாட்டிலுள்ள மலைத்தொடர்களை பல வருடங்களாக கவனிக்கும் தியடோர் பாஸ்கர், அவற்றின் சீரழிவு பற்றி மிக விரிவாகப் பேசுகிறார்.
காடுகள் சூழ்ந்திருந்த பள்ளத்தாக்குகள் சீரழிக்கப்பட்டு விட்டன. மலைச் சரிவுகளை போர்த்தியிருந்த மழைக்காடுகள் சரைக்கப்பட்டு அவ்விடத்தில் தேயிலைத் தோட்டங்கள் உருவாகியிருக்கின்றன. பல காட்டுப்பகுதிகள் இன்று பொட்டல்வெளி போலிருக்கின்றன. அருவிகள் வறண்டு பாறைகளில் நீர்வழிந்தோடிய தடம் மட்டும் தென்படுகிறது. வனவளம் செழிந்திருந்த காலத்தில் தாவர உண்ணிகளான காட்டெருது, மான், பன்றி, இவற்றை அடித்து இரையாகக் கொண்ட புலி, சிறுத்தை, செந்நாய், போன்ற இரைகொல்லிகள், இவை நிறைந்திருந்த இக்காடுகளில் இன்று உயிரினங்களின் தடயங்களை காண்பதுகூட அரிதாகி விட்டது. காடுகளை அழித்தது, நமது மாடியிலுள்ள தண்ணீர் டாங்கை உடைப்பதற்கு ஒப்பாகும். அதைத்தான் நாம் செய்துவிட்டோம்
என மிகவும் வருத்ததோடு எழுதுகிறார்.
கட்டுரைகளை ஐந்து பகுப்புகளாகப் பிரித்துள்ளார் - கருத்துகள், காட்டுயிர், உறைவிடங்கள், வளர்ப்புப் பிராணிகள், ஆளுமைகள். ஒவ்வொரு பகுப்பிலும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
கருத்துகள் எனும் பகுப்பில், சமூகத்துக்கும் சூழலியலுக்கும் உள்ள இயங்கு விதிகளைக் குறிப்பிடுகிறார். குறிப்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு கலாச்சார் அரசியலால் ஏற்படும் பிரச்சனைகளையும், சூடாகும் உலகைக் கண்காணித்து கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும் விளக்குகிறார். சுற்றுச் சூழல் சீர்கேட்டுக்கு எதிரானது எனப் பொய்யாகப் பிரச்சாரம் செய்தால் உலக சுற்றுச்சூழல் அமைப்பிலிருந்து நிதி கிடைத்துவிடும் எனும் நம்பிக்கையில், பல பிராஜக்டுகள் செயல்படுவதாகவும் எச்சரிக்கிறார். திருடப்பட்ட தலைமுறை எனும் தலைப்பில் ஆஸ்த்ரேலிய பழங்குடியினர் பற்றி எழுதப்பட்ட கட்டுரை நிஜமாகவே நம்மை பயமுறுத்துகிறது. அபாரிஜின்ஸ் எனப்படும் குழுவினர் சூழியல் சார்ந்து பலியாக்கப்படுவதை தியடோர் கூறுகிறார்.
பக்கிப்பறவை, தேவாங்குகள், கிரெளஞ்சப் பறவை என நம்மைச் சுற்றி அழிந்துகொண்டிருக்கும் உயிரினங்களைப் பற்றி காட்டுயிர் தலைப்பில் எழுதியுள்ளார். உயிரனங்களின் நடவடிக்கைகள், அவற்றின் சூழலைப் பேணுவதில் அவை கொண்டிருக்கும் அக்கறை, சுற்றுச் சூழல் சீர்கெடாதவாறு உணவுப் பழக்கங்களை கொண்டிருக்கும் தேவாங்குகள் என நம்மிடையே நிலவாத பழக்கங்களைக் கொண்டிருக்கும் உயிரினங்கள் பற்றி அற்றுப்போகும் உயிரினங்கள் எனும் தலைப்பில் மிக அழகான கட்டுரை எழுதியுள்ளார்.
உயிரினங்களுக்கு உணவு எந்தளவு முக்கியமோ அதைவிட உறைவிடங்கள் அத்தியாவசியமான ஒன்று. நம் உலகை கவிழ்த்துப் பார்த்தால் நம் முன்விழும் காட்டுயிர்களில் 99% நாம் அறியாதவையே என்கிறார். எத்தனை விலங்குகள் நம்முன் திரிகின்றனவோ அதை விட அதிகமான உயிர்கள் நம் கண்ணுக்குத் தெரியாத மறைவிடங்களில் வாழ்கின்றனவாம். டேவிட் அட்டன்பர்ரோவின் `நீல உலகம்` காணொளியில், பார்வை இல்லாத ஆழ் கடல் மீன்களைப் பற்றி கூறியிருப்பார். வெளிச்சம் புகாத ஆழ்கடலில், கண்ணுக்குத் தேவையில்லாததால், ஜெல்லி மீன் வகை பார்வை இல்லாமலே வாழுமாம், அதைத் தவிர பல ஆழ்கடல் வாழ் உயிரினங்கள் வெளிச்சம் கொடுக்கும் உடலமைப்பை கொண்டனவாம். அதே போல், காளான்கள், புள்ளினங்கள் என ஒவ்வோர் உயிரினமும் தங்களுக்குத் தேவையான உறைவிடங்களை தேர்ந்தெடுத்து வாழ்கின்றன. மனிதன் மட்டுமே மற்றவர்களை துரத்திவிட்டு உறைவிடங்களை கைப்பற்றுகிறான் , திருடப்பட்ட தலைமுறை போல எனக் குறிப்பிடுகிறார்.
வளர்ப்புப் பிராணிகள் என்றும் நமக்குப் பிரியமானவை. அவற்றைக் கண்டு நாம் பயப்படுவதில்லை. நமது சூழலுக்கு ஏற்ப உணவுப் பழக்கங்களும், உறைவிடங்களும் அமைந்துவிடுவதால் பொதுவாகத் தொந்தரவு இல்லை. ஆனாலும், வெறிநாய்கள், கடுங்கால் ஒட்டகம் போன்றவற்றைப் பேணுவதில் சுற்றுச் சூழல் தொடர்பான சிக்கல்களை இக்கட்டுரைகள் ஆய்கின்றன.
எனக்கு மிகவும் பிடித்தப் பகுதியாக ஆளுமைகள் அமைந்துவிட்டது. விலங்களுகள், இயற்கை பாதுகாப்பு போன்ற எளிதில் பொருளீட்ட இயலாத துறைகளை பலர் தேர்ந்தெடுக்கத்தான் செய்கிறார்கள். காட்டுயிர் இலாக்காவில் வேலைக்குச் சேரும் அனைவரும் அன்பின் மிகுதியில் சேருவதில்லை. மனிதனுக்கும் இயற்கைக்கும் உண்டாகும் விசேஷ பிணைப்பை நாம் பல இடங்களில் பார்த்து வருகிறோம். முதலைகள் மீது மிகுந்த பாசம் வைத்த ஸ்டீவ் எர்வின், மண்ணுக்கும் ஒரு இதயம் உண்டு - அதைப் பாதுகாப்பது எப்படி என வாழ்க்கையை ஒரு தவமாக நடத்திய மசனாபு ஃபுகொக்கா என பல ஆளுமைகளை அறிமுகப்படுத்துகிறார் தியடோர். மிருகங்கள் மீதும், இயற்கை மீது மிகுந்த ஆதூரத்துடன் இயைந்த வாழ்வை வாழ்ந்தவர்கள் நம் மண்ணில் உதித்த மகான்கள். சாதாரணத் தளத்தில் எஞ்சும் வாழ்வின் அர்த்தத்தைத் தாண்டி விசேஷமான உறவை அவர்களால் பேணிப் பாதுகாக்க முடிந்திருக்கிறது. எம் மக்கள், என் உயிர் என கடவுளர் நம்மைப் பாதுகாப்பது போலில்லாமல், இயற்கையோடு இணைந்த வாழ்வு இவர்களுக்கு வாய்த்திருக்கிறது. நம்மால் அவை பாதுகாக்கப்பட்டன எனும் உணர்வல்லாது, நாமும் அவற்றோடு வாழும் ஒரு உயிர் எனும் நுண்ணுணர்வு அவர்களை வழிநடத்தியிருக்கிறது. இப்படிப்பட்ட உன்னத உணர்வு கைவரப்பட்டால், அன்பு பூத்த தடாகமாக இவ்வுலகை நாம் பாதுகாக்க முடியும்
தலைப்பு - தாமரை பூத்த தடாகம்
எழுத்தாளர் - தியடோர் பாஸ்கர்
பதிப்பகம் - உயிர்மை
இணையத்தில் வாங்க - தாமரை பூத்த தடாகம்
நல்ல விமர்சனம்..திருடப்பட்ட தலைமுறை குறித்து அவர் கூறிய the rabbit proof fence படத்தை பாருங்கள்...அந்தக் குழந்தைகள் வீடு போய் சேருவார்களா என்ற பதைபதைப்பு நம்மை விடாது துரத்தும் அந்த வேலி வழியே.......
ReplyDeleteரகுநாதன்