ஜெயமோகன் குறுநாவல்கள்
முழுத்தொகுப்பு
ஜெயமோகன் எழுதியவற்றில்,
இவர்தான் ஜெயமோகன் என்று தெரியாதபோது, அதாவது நான் பள்ளி செல்லும் வயதில்,
“பனி மனிதன்” நாவலை மட்டும் அது சிறுவர் மணி - தினமணியில் தொடர்கதையாக
வந்தபோது வாசித்திருக்கிறேன். அதற்கு அப்புறம் பெரிதாக, ஜெயமோகன் எழுதியதை
நான் வாசித்ததில்லை, ஒரு சில ஆண்டுகளுக்கு முன், “விசும்பு” என்ற அறிவியல்
புனைவு கதை தொகுதியை, நண்பர் :-) ஒருவர் பரிந்துரையின் பேரில் வாசித்தேன்.
அதில் சில கதைகளுடன் என்னால் உடன்பட முடியவில்லை, அதைப் பற்றி இங்கு
பேசப்போவது இல்லை. இந்த வாரம், ஜெயமோகன் எழுதிய குறுநாவல்கள் பற்றி.பதினொரு குறுநாவல்கள் கொண்ட இந்தத் தொகுப்பை
வாசிக்கும்போதும், வாசித்து முடித்த பின்னும் எனக்கு ஏற்பட்ட எண்ணங்களை
இங்கு பதிவு செய்கிறேன்.
முதலில் வாசித்தது
”கிளிக்காலம்”. இந்தக் கதை படிக்கும் போது தோன்றிய முதல் எண்ணம்,
கதாபாத்திரங்கள் இருவர் எப்படி தூய தமிழில் பேசிக்கொள்ள முடியும்? உரையாடல்
கொச்சை தமிழில்தானே இருக்கும்? இல்லை, இதுவும் ஒரு கதை சொல்லல் முறையோ?
தெரியவில்லை. இந்தக் கதை இப்படிதான் முடியும் என்று எண்ணியது போலவே
முடிந்தது - கொஞ்சம் ஒ. ஹென்றிதனமான முடிவு. கதை முடிவதற்கு இரண்டு
பத்திகள் முன்பு எழுதப்பட்ட அந்த குறிப்பிட்ட இரு வரிகளைப் படிக்கும்போது
முகத்தில் புன்னகை தோன்றியது. கதையின் கரு: பதினைந்து வயது பையனுக்கும்,
திருமணம் ஆன மாமிக்கும் (அதாவது, பெண்) ஏற்படும் உடலுறவு. நோ நோ ப்ளீஸ்
வெயிட், அந்தப் பையன், மாமியை எதுவும் செய்வதில்லை, நான் படித்ததில் முதல்
தமிழிலக்கிய சாஃப்ட் பார்ன். இன்னொரு விஷயம் அந்தப் பையன் பெயர் ஜெயன்.
“பூமியின் முத்திரைகள்” இந்த குறுநாவலை படித்து
முடித்தவுடன் தோன்றிய எண்ணம் இது - ஜெயமோகன், தனது நண்பனின் இறப்பைப் பதிவு
செய்திருக்கிறார் போலிருக்கிறது. நாவல் முழுவதும் பல இடங்களில்
சோகத்தையும், இயற்கையையையும் இணைத்து, நாம் சோகத்தில் இருக்கும்போது
இயற்கையை நாம் பார்க்கும் பார்வையையும் விவரித்திருக்கிறார். ஆனால் ஒரு
அளவுக்கு மேல் அது போகும்போது பொறுமையை சொதிப்பதாய் இருக்கிறது.
“மடம்” என்ற குறுநாவலில் வயது முதிர்ந்த குரு ஒருவர்
இறக்கிறார். அவரின் இறப்பைத் தொடர்ந்து யார் அடுத்த தலைமை குருவாக பதவி
ஏற்க வேண்டும் என்ற சண்டை. அந்த குரு நியமித்த பண்டாரத்தை தலைமை பதவி
ஏற்கவிடாமல் தடுக்க கனபாடிகள் முயற்சி செய்கிறார். இதற்கு நடுவில், நடப்பு
அரசியல்வாதிகள், திராவிட கட்சி பிரதிநிதிகள் சாமியாரை பொய் என நிரூபிக்க
முயற்சி செய்கிறார்கள், சாமியாரை ஆதரித்த மக்கள் கனபாடிகளை ஆதரிக்கின்றனர்,
இவர்களுக்கிடையே கருத்து மோதல் ஏற்படுகிறது. இந்தக் கதை எழுதபட்ட
காலத்தில் இறந்த சாமியார் ஒருவரை மனதில் வைத்துக் கொண்டு எழுதியது போல்
உள்ளது. நாவல் முடியும்போது ஒரு சின்ன முடிச்சு.
“பரிணாமம்” கொஞ்சம் அறிவியல் புனைவு போன்றது. இந்த
குறுநாவலில் காட்டுவாசிகள் முதுகு வளைந்த தன்மையுடன் இருப்பதை அறிந்து
அதைப் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்கிறார். கடைசியில் அரசாங்கம் அவர்களை ஒரு
ஆராய்ச்சி விலங்காக பார்ப்பதாக அறியும்போது மனவேதனை அடைவதுடன் கதை
முடிகிறது. ஜெயமோகனின் பலம், கதாபாத்திரத்தின் உள்ளே சென்று அவர்களின்
உணர்ச்சிகளை வேளிகொணர்கிறார் என்பதுதான். ஆனால் அது ஒரு அளவுக்கு மேல்
போகும்போது வாசகனைக் கதையிலிருந்து விலக செய்வதாக ஆகிவிடுகிறது. எப்போதும்
போல அந்த காட்டுவாசிகளின் இன்றைய நிலைக்குக் காரணம், புவி வெப்பமயமாதல்தான்
என்னும் கருத்து பதிவு செய்யப்படுகிறது. அதாவது, அந்த இரண்டு மலைகளுக்கு
நடுவில் வீசும் வெப்பக் காற்று, அவர்களை இப்படி பரிணாம வளர்ச்சி
செய்துவிட்டதாக கதையிலிருந்து அறிய முடிகிறது. மனிதன் காட்டை
அழிக்கும்போது, அவர்களது பரிணாம வளர்ச்சி நின்று விடுகிறது. அவ்ளோதான் கதை.
ஐந்தாவது கதை “லங்கா தகனம்” சிம்ப்பிளா சொல்லணும்ன்னா,
ஒரு மனிதன் தான் உண்மையாய் செய்யும் தொழிலை, இன்னும் இன்னும் பற்றோடு
செய்யும்போது, அவன் அதுவாகவே மாறிவிடுகிறான். அதாவது ஒன்னெஸ் அடைகிறான்.
சிறு வயது முதலே கதகளி வேஷம் கட்டும் அனந்தன், அவரை இகழும் மக்கள், கதகளி
வேடம் போட்டு போட்டு போட்டுஅவனது , நடை உடை பாவனைகளில் ஏற்பட்ட மாற்றங்கள்.
அவர் விரும்பி கட்டும் ஹனுமார் வேடத்தினால் அவர் முகம் குரங்கு போல்
இருக்கிறது எனப் பேசும் மக்கள். கடைசியில் அவர் எப்படிப்பட்ட சூழ்நிலையில்
கிட்டத்தட்ட “லங்கா தகனம்” கதகளி நாட்டிய குரங்காவே மாறி விடுகிறார்
என்பதுதானா கதை. இந்த கதை கொஞ்சம் பரவாயில்லை, கதை கரு எனக்குப்
பிடித்திருக்கிறது.
இந்தத் தொகுப்பில் உள்ள சில நாவல்களில், கதைமாந்தரின்
உள் எண்ணங்களைப் பதிவு செய்யும்போது, அதுவரை பேச்சுத் தமிழில் இருக்கும்
கதை, திடீரென தூய தமிழுக்கு தவ்வுகிறது. இதை என்னால் புரிந்து கொள்ளவே
முடியவில்லை. முன் சொன்னதுபோல், இது மாதிரி சமயங்களில் நான் நாவலிலிருந்து
கொஞ்சம் விலகி விடுகிறேன்.
இந்த தொகுப்பில் வாசித்து முடித்தவுடன் சிறப்பான
குறுநாவல் என்று தோன்றியது “டார்த்தீனீயம்”. விறுவிறுப்பான நடை, ஜெயமோகன்
சொல்ல வருவது, சின்ன விஷயம்தான். “டார்த்தீனீயம்’ என்பதற்கு பதிலாக
“பார்த்தீனீயம்” என்று போட்டுக்கொள்ளுங்கள். பார்த்தீனீயம் , ஒரு விஷ செடி,
இது மிக வேகமாக வளரக்கூடியது, இதை அப்படியே உல்டா பண்ணி (வித் ரெஸ்பெக்ட்)
“டார்த்தீனீயம்” என்று எழுதியிருக்கிறார். “டார்த்தீனீயம்” என்ற செடியை
வளர்க்கும் தந்தை, அதனால் அந்தக் குடும்பம் சிதைந்து போகிறது.
”பார்த்தீனீயத்தை விட இது மிக மிக வேகமாக வளரக்கூடியது, அவ்ளோதான் விஷயம்.
நல்ல அறிவியல் புனைவு முயற்சி. இதை “பார்ப்பனீயம்” என்று படித்து விட்டு
என் மண்டையை உருட்ட வேண்டாம்.
“அம்மன் மரம்” மற்றும் “நிழலாட்டம்” குறுநாவல்களில்
பேய் பிடித்து ஆடும் பெண்கள் வருகிறார்கள், இது எவ்வளவு தூரம் உண்மையாக
நடக்கக்கூடியது என்று என்னால் நம்ப முடியவில்லை. நிழலாட்டம் ,கதையில், ஒரு
பெண்ணுக்கு பேய் பிடித்துவிடுகிறது, அதைப் போக்க பூசாரியைக் கொண்டு பேய்
விரட்டுகிறார்கள், கடைசியில் பார்த்தால், அவள் காதல் செய்யும் ஆண் இறந்து
போயிருப்பான். இந்தக் கதையை தமிழ் சினிமாவிற்கு தந்தால், நல்ல படமாக
எடுப்பார்கள்.
”மண்” குறுநாவலில் இடம் விட்டு இடம் பெயரும், ஒரு
கம்யுனிட்டி. பஞ்சத்தில், மிக சிலரே வாழும்படி ஆகிறது, அவர்களும்
ஒவ்வொருவராக இறக்கின்றனர், கதை அதிலுள்ள ஒரு தனி மனிதனின் பார்வையில்
சொல்லப்படுகிறது.. ஆங்கில படங்களில் எல்லாம் வருமே, ஒரே ஒரு மனிதன், அவனைக்
கொல்ல வரும் விலங்கு என்று, அதே போல் இங்கு, ஒரு யானை கூட்டத்தை கொன்ற
கம்யுனிடியை, அந்த யானைகள் எப்படி பழி வாங்குகின்றன என்பதும், இதற்கு நடுவே
அந்த பஞ்சத்தை பற்றியும், அவர்கள் வரலாற்றையும் உருக்கமாக பதிவு
செய்திருக்கிறார். இந்த குறுநாவல் முழுவதும் ஒரு விதமான வசனகவிதை மாதிரி
இருந்தது, எதுகை-மோனையுடன் முடியும் தொடர்கள், ஒரு விதமாக என்னை நாவலில்
இருந்து அன்னியப்படுத்திக் கொண்டே இருந்தது
“பத்மவியூகம்” மற்றும் “இறுதி விஷம்” கதைகளில்
மகாபாரத்திலிருந்து கடன் வாங்கி, அதில் வரும் சின்ன நிகழ்ச்சியை ,தன்னுடைய
பார்வை மற்றும் ,எண்ணங்களைப் போட்டு நிரப்பியிருக்கிறார்.. பத்மவியூகம்,
எப்படி இருப்பினும் விதியை வெல்ல முடியாத அபிமன்யு இறந்தபின் அவன் தாய்
சுபத்திரையின் எண்ண ஓட்டங்களைப் பதிவு செய்கிறது. இந்தக் கதையை சுபத்திரை
வாயிலாக சொல்லும்போதே, அர்ஜுனன் - சுபத்திரை கில்மா சீன் எல்லாம்
வருகிறது. ஆனால் எனக்கு அது கதையோடு ஒட்டவே இல்லை. கடைசியில் விதியே
வெல்லும் என்பதை நமக்கு கதைக் கரு மூலம் உணர்த்துகிறார். அதே மாதிரி இறுதி
விஷம் கதையில் ஜனமேஜயன் ராஜா, யாகம் வளர்த்து, அனைத்து பாம்புகளையும்
கொல்ல முயற்சி செய்கிறார், அதை ஒரு ரிஷிகுமாரர் தடுத்து நிறுத்தி எப்படி
அமுது - விஷம், நல்லது - கெட்டது, ,உண்மை - பொய் எல்லாம் இருக்க வேண்டும்
என்பதை நிலை நிறுத்திச் செல்கிறார். ஆவ்வ்வ்வ் (சாரி, கெட்ட ஆவி –கொட்டாவி
–மன்னிக்கவும்).
இந்த தொகுப்பில் ஓரிரு கதைகளில் நிறைய நிறைய மலையாள
மொழி நடை கையாளப்பட்டு இருக்கிறது, நிறைய இடங்களில் என்ன சொல்ல வருகிறார்
என்பதே புரியவில்லை. நிறைய குறுநாவல்கள் (வேறு எழுத்தாளர்கள் எழுதியவை)
படிக்கும்போது புரியாமல் இருந்திருக்கிறது. ஆனால் இந்த தொகுப்பில்
ஒன்றிரண்டுதான் புரியாமல் இருந்தது. கதைக் கருவை தவிர, பெரிதாக என்னை எதுவும் கவரவில்லை.
P.S: முதல் பத்தியில் போட்ட ஸ்மைலி வி.நட்டுக்கு சமர்ப்பணம். 1.Oneness
தூயதமிழில் பேச்சு வரும்போது அது மலையாளத்திலிருந்ததை தமிழ் படுத்தப்பட்டுள்ளது என பாலாஜிக்கு புரியாமல் போனது ஏன்?
ReplyDeleteபின்னூட்டத்துக்கு நன்றி திரு. கே. ஜே. அசோக் குமார்.
ReplyDeleteமுதலாவதாக இது வாசகர்களின் அனுபவ பகிர்வுக்கான தளம்தான். விமரிசன தளமாக முன்வைத்துக் கொள்வதில்லை.
இதில் உள்ள கருத்துகளில் உங்களுக்கு உடன்பாடு இல்லாதிருக்கும் பட்சத்தில், நீங்கள் இந்த நூலைப் பற்றி ஒரு விமரிசன பதிவு எழுதிக் கொடுங்க, எந்த மறுப்பும் இல்லாமல் போஸ்ட் செய்கிறோம்.
புத்தகங்கள் பற்றி மேலும் மேலும் பேசப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். அது பல தளங்களில் நடக்க வேண்டும். அதற்கான ஒரு சிறு துவக்கம்தான் இது.
திரு ஜெயமோகன் அவர்களின் குறுநாவல்கள் பற்றி இன்னும் பல விமரிசனங்கள் கிடைத்தால் மகிழ்ச்சியுடன் போஸ்ட் செய்கிறோம்.
நன்றி.
எழுத்தை ஒருத்தர் குத்தம் சொல்லலாம். அதை இன்னொருவர் தவறோ குறையோ சொல்லக்கூடாதுங்கிறீங்க ;)
Deleteநேர்மையான பதிவு பாலாஜி! இதெ போல் தொடர்ந்து எழுதவும்.
ReplyDeleteThanks vnattu for your valuable comments, I will try ;-)
ReplyDelete