தங்களைக் கவர்ந்த புத்தகங்களைப் பற்றி எழுத்தாளர்களை எழுதச் சொல்லி ஒரு தொகுப்பாக வெளியிட வேண்டும் என அ.முத்துலிங்கம் செய்த முயற்சியின் பயன் இத்தொகுப்பு. தமிழின் முக்கியமான எழுத்தாளர்களிடம் அவர்களது பரிந்துரைகளை கேட்டு வாங்கி்யதையே ஒரு சிறுகதையாக எழுதியுள்ளார். எழுத்தாளர்களைக் கவர்ந்த புத்தகம் எனக்கேட்டாதாலோ என்னவோ சமகாலப் படைப்புகளை அதிகம் பரிந்துரைத்துள்ளனர். அவர்களை பாதித்த புத்தகம் எனக் கேட்டிருந்தால் வேறு ஒரு லிஸ்ட் கிடைத்திருக்கலாம்.
அசோகமித்திரன் (சா.கந்தசாமி - மாயவலி), இந்திரா பார்த்தசாரதி (யோஸ் சரகமோ - இரட்டை), இரா.முருகன் ( மாதவன் குட்டி- ஓர்ம்மகளூடெ விருந்து), ஜெயமோகன் (எம்.கோபாலகிருஷ்ணன் - மணல்கடிகை), பொ.கருணாமூர்த்தி (My Days - R.K.Narayanan), மனுஷ்யபுத்திரன் (ஜெயமோகன் - ஏழாம் உலகம்), அ.முத்துலிங்கம் (Teacher Man - Franck McCourt), நாஞ்சில் நாடன் (ஆழி சூழ் உலகு - ஜோ.டி.க்ரூஸ்), பாவண்ணன் (காலபைரவன் - புலிப்பானி ஜோதிடர்), எஸ்.ராமகிருஷ்ணன் (எண்பெருங்குன்றம் - வேதாசலம்), வெங்கட் சாமிநாதன் (கூகை - சோ.தருமன்), வாஸந்தி (Embers - Sandor Marai) எனப் பல எழுத்தாளர்களது கட்டுரைகள் தொகுப்பில் உள்ளன.
என்னை மிகவும் கவர்ந்த கட்டுரைகள் - ஷோபாசக்தி எழுதிய `ஆடு, புலி, புல்லுக்கட்டு` (ஜெனே - Les Bonnes) மற்றும் `படிப்பின் பயணம்` எனும் தலைப்பில் சுஜாதா எழுதிய கட்டுரை, `கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது` ஜெயமோகனின் கட்டுரை.
`நல்ல எழுத்து என்றால் சுவாரஸ்யமாகவும் சொல்லப்பட வேண்டும்` எனும் பெரிய அணுகுண்டை அ.முத்துலிங்கம் முன்வைக்கிறார். இலக்கிய எழுத்தைப் பொருத்தவரை இது மிகவும் சிக்கலான வரி. சுவாரஸ்யமாக இருப்பதாலேயே இலக்கிய அந்தஸ்தை இழக்கும் பல விமர்சனங்கள் நமக்குத் தெரியும். சுவாரஸ்யம் என்பதை அப்படி எதிர்மறையாகப் பார்க்கத் தேவையில்லை என்பதே அ.முவின் வாதம். உலக இலக்கியத்தில் மிகவும் செறிவான படைப்பு கூட மிகவும் சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருக்கும். இது ஒரு சிக்கலான கூற்று. பொதுவாக, ஒருவகை எழுத்துக்குப் பழக்கமான வாசகர்கள் தங்களுக்குப் பழக்கமில்லாத எழுத்தைப் படிக்கும்போது கொட்டாவி வரும். ஆனால் அதே வேறொருவருக்குச் சுவாரஸ்யமான எழுத்தாக இருக்கலாம். அப்படிப் பார்த்தால் எந்தொரு புத்தகமும் ஒரு குறிப்பிட்ட வாசக ரசனையை எதிர்பார்த்து நிற்கிறது. சுத்தியல் எடுப்பவனுக்குப் பார்ப்பதெல்லாம் ஆணியைப் போலிருப்பது போல, படிக்க முடிந்த புத்தகம் அனைத்தும் நம் ரசனைக்கு ஒத்துப் போகும் எனச் சொல்ல முடியாது. ஒரு புத்தகம் நம்மை கவர்வதாகத் தோணும்போது நாம் அந்த எழுத்தாளரின் ரசனையுடன் ஒத்துப்போகிறோம். அவர் சொல்லவருவதைக் கொண்டு நமது எண்ணங்களை சீர்தூக்கிப் பார்க்கத் தொடங்குகிறோம்.
`வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பாதித்தாக ஒரே ஒரு புத்தகத்தைச் சொல்ல முடியவில்லை. வயதிற்கும் அறிவு முதிர்ச்சிக்கும் அனுபவங்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் மனநிறைவுகளைக்கும் ஏற்ப ஒருவரை பாதிக்கும் புத்தகங்கள் மாறிக்கொண்டே வரும். வர வேண்டும். இல்லையேல் ஆசாமி வளரவே இல்லை என்று அர்த்தம்`
- என `படிப்பின் பயணம்` கட்டுரையில் சுஜாதா குறிப்பிடுவது நம் எல்லாருக்கும் பொருந்தும். திசை காட்டியைப் போல், ஒரு எழுத்தாளர் சுட்டிக் காட்டும் மற்றொரு எழுத்தாளரின்உலகை அடைகிறோம். அவரது ரசனைக்கு ஏற்பப் படைப்புகளை பரிந்துரைக்கும்போது சுஜாதா புற உலக பாதிப்பு என்பதன் முழு தாத்பரியம் நமக்குப் புரிகிறது. சிறு வயதில் படித்த புத்தகங்களை தனது அறுபதாவது வயதில் படிக்கத் தொடங்கி, `அய்யே இதுக்குப் போயா அப்போது அத்தனை உருகினோம்` என சுஜாதாவுக்குத் தோன்றியிருக்கிறதாம். அப்படிப் படிப்படியாக நமது கவலைகள் குவித்து ரசனையாக்கி நமது ஆளுமையை உருவாக்கிக்கொள்கிறோம். காமிக்ஸே உலகம் என்றிருக்கும் சிறு வயதை நடுவயதில் அலட்சியத்துடனும், வயதாக ஆக ஒரு வித ஏக்கத்துடன் பார்க்கத் தொடங்குவோம். உலகம் எனும் அனுபவப் பாடம் புரியத் தொடங்கும் போது பொன்னியின் செல்வன் பின்னகர்ந்து சாமர்செட் மாமின் Of Human Bondage நாவலும், காரமஸாவை விட தாஸ்தாவெஸ்கியின் `குற்றமும் தண்டனையும்` ஆகச் சிறந்த நாவல் எனும் எண்ணம் வளர்ந்ததாகச் சொல்கிறார்.
படிப்பின் பயணம் கட்டுரையைப் படிக்கும்போது நம்மில் இருக்கும் படிப்பு ரசனையை மனம் சதா ஒப்பிட்டுக் கொண்டே இருக்கிறது. எனது இருபதாவது வயதில் படித்த குற்றமும் தண்டனையும் நாவலைவிட அலிஸ்டர் மெக்லின் எழுதிய `Where Eagles Dare`நல்ல நாவல் எனும் எண்ணம் இருந்ததும். என்ன இந்த ரஸ்கல்னிகாஃப்?! ஒரு காதலி இல்லை, யுத்தக் களத்தில் தனது நண்பனுக்காக சண்டையிடும் சாகசம் இல்லை. அட, குறைந்தபட்சம் கடைசியில் வரும் உயரமானக் கம்பியில் தொங்கியபடி நடக்கும் சண்டையாவது இருந்ததா? ஒரு கொலையைச் செய்துவிட்டு நானூறு பக்கங்கள் முனகிக் கொண்டிருந்த ரஸ்கல்னிகாஃபை விட யுத்தகளத்தில் வாட்ச் டவரில் ஐம்பது எதிரிகளைப் `போட்ட` ரோஜர் என் மனசில் உயர்ந்திருந்தார். பின்னர், லெள்கீக வாழ்வின் அலையில் ஈவு இரக்கமில்லாத கணங்களைக் கடந்தும் எதிர்நீச்சல் போட பொய்யையும் பகட்டையும் பிரயோகப்படுத்தும்போது ஏற்படும் சிறு குற்ற உணர்வை உணரும் சமயத்தில் ரஸ்கல்னிகாஃப் உயிர்ப்பான சித்திரமாக எனக்குத் தோன்றினார். அப்படியாக இன்றுவரை எனக்குப் பிடிபடாத பல அம்சங்களைக் கொண்ட இலக்கியங்களை என்னவென்று சொல்வது?
`வாழ்வின் பல சோகங்கள் வார்த்தைகளுக்கு அப்பார்ப்பட்டவை`, என மாலன் தனது பரிந்துரைக் கட்டுரையில் தெரிவிக்கிறார். பிறரது அனுபவங்கள் அனைத்தையும் நமதாக்கிக் கொள்ள கலை பெரும் சந்தர்ப்பத்தை அளிக்கிறது. மணற்கடிகார மணல் போல நமது அகத்துடன் உறவாட கலைக்குள் ஒரு வழி உள்ளது. நமது அந்தரங்கத்துடன் உரையாடத் தொடங்கும்போது ஒரு படைப்பு நமதாகிறது என ஜெயமோகன் குறிப்பிடுகிறார். அப்படி நம்முடன் பேசத்துடிக்கும் படைப்புகள் தனித்து நிற்கும்.
ஜெயமோகனின் `கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது` கட்டுரை மணல்கடிகை நாவலைப் பற்றியது. இயல்புவாத நாவல் என வர்ணிக்கிறார் ஜெயமோகன். எதைப் பற்றியும் பற்றில்லாமல் கிட்டத்தட்ட ஒரு டாக்குமெண்டரி போல உள்ளதை உள்ளபடி காட்டும் நாவல்களை இயல்புவாத நாவல்களை என விவரிக்கிறார். சிற்சில கணங்களைத் தவிர வாழ்க்கை பெரும்பலும் சலிப்பின் மூட்டையாகவே உள்ளது. பெரும் கவலைகளுக்குப் பின்னும் நமது வாழ்க்கை சென்றபடியே உள்ளது. நமது நெருங்கிய சொந்தங்கள் பிரிவதாலோ, இறப்பதாலோ நம் வாழ்க்கையை நாம் கைவிடுவதில்லை. அந்தந்த நிமிட உணர்வுகளுக்கு வாழ்வின் மற்றொரு சமயத்தில் பெரிதும் மதிப்பு இருப்பதில்லை. அப்படியிருக்க ஒற்றை உணர்ச்சியை மையமாகக் கொண்டு கட்டப்படும் புனைவுலகங்கள் எப்படி யதார்த்தங்களை பிரதிபலிக்கக் கூடும்? ஆனால், மணற்கடிகை, வெக்கை போன்ற இயல்புவாத நாவல்கள் உணர்ச்சியற்றை நடையை சார்ந்திருப்பதால் சமயங்களில் படிப்பதற்கு எரிச்சலைத் தரக்கூடும். ஒரு வகை கதைகூறலை முன்வைக்கிறது என்பதால் சுவாரஸ்யமில்லாத நாவல்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்ன? ஆம், ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என ஜெயமோகன் கூறுகிறார். வாழ்க்கையே இவ்வளவுதான் எனக் கடலை அள்ளி கையில் காட்டும் கலை ஒரு சுவை. `மீனின் வயிற்றுக்குள் கடல்` எனும் உவமை சாதாரணமாக இருந்தாலும் எத்தனைப் பெரிய உண்மையைச் சுட்டி நிற்கிறது?
ஷோபாசக்தியின் `ஆடு, புலி, புல்லுக்கட்டு` அவரது அரசியலைப் போல, உழைப்பாளர்களையும் அவர்களைச் சுரண்டும் அமைப்புகளையும் கேலி செய்யும் Les Bonnes எனும் நாடகத்தைப் பரிந்துரைக்கிறார். தொகுப்பில் மிகச் சிறப்பானக் கட்டுரைகளில் ஒன்று.
கிறிஸ்துவ அறவியலின் கேலிக்குரிய, இரங்கத்தக்க போலியான முதாலாளிய அறவியல், கொஞ்சங்கூட வெட்கமில்லாமல் உழைப்பாளர்களின் உடல்களின்பால் தன் வெறுப்பத்தனையையும் கொட்டுகிறது. உழைப்பாளர்களை மிகக் குறைந்த தேவைகள் மட்டுமே உடையவர்களாகச் சுருக்கி, அவர்களுடைய உணர்ச்சிகளையும் நாட்டங்களையும் ஒடுக்கி, இயந்திரத்தின் பகுதியாக அவர்களை மாற்றி, உழைப்பு என்பதை எந்த மரியாதையும் அற்ற ஓய்வு ஒழிச்சலற்ற ஒரு சுமையாக மாற்றிவிடுவது என்பதேற் அதன் கனவாக இருக்கிறது.
அ.முத்துலிங்கத்தின் வார்த்தைகளில் - ஓயாது விரியும் காலவெளியின் நீண்ட பகுதியில் ஒரு தருணத்தின் Snap Shot போல, இது ஒரு தொகுப்பு`
தலைப்பு - கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது.
தொகுப்பாசிரியர் - அ.முத்துலிங்கம்
பதிப்பகம் - உயிர்மை
விலை - ரூ 85/-
இணையத்தில் வாங்க -
No comments:
Post a Comment