ஒருமுறைதான் பெண் பார்ப்பதினால்வருகிற வலி அவள் அறிவதில்லை;கனவினிலும் தினம் நினைவினிலும்கரைகிற ஆண்மனம் புரிவதில்லை
அதற்கு முந்தின தினம்தான் ஒரு கல்யாணக் கச்சேரியில் அந்தப் பாடலைப் பாடியிருந்தான் அவன். பாடின மறுநாள் காலையில் இப்படி அவள் வாசலில் வந்து நிற்பாள் என்றோ பார்த்த மாத்திரத்தில் தடாரென அவள் மேல் வீழ்வான் என்றோ கனவிலும் நினைக்கவில்லை அவன்.
கண்டதும் காதலில் அவனுக்குத் தன் இருபத்தி சொச்ச வயதுவரை நம்பிக்கை இருந்ததில்லை. அவளைப் பார்த்த நொடியினில் அந்த நம்பிக்கையின்மை எங்கோ காணாமல் பொடித்துப் போனது.
“உலகத்தில் எத்தனைப் பெண்ணுள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒருமுறை வாழ்ந்திடத் திண்டாடுது
அது உயிர்வரை பாய்ந்து பந்தாடுது”
“ஸாரி, யூ ஹேவ் மிஸ்டேகன்”
நான்கு வார்த்தைகளில் பதில் கிடைத்தது.
“தட்ஸ் ஃபைன். ஐ கென் அண்டர்ஸ்டேண்ட்”, இதுவே அவனது பதிலாகிப் போனது.
எனினும்....
காற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
அந்தத் தழும்புகளைத் துடைத்துக் கொள்ள உடனடியாக அவன் வீட்டில் பார்த்த வேறொரு பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டது தனிக்கதை.
பாடல்கள் சிலவேளைகளில் நம் உள்ளத்தீயை உக்கிரமாக்க வல்ல ஆயுதங்கள். சில நேரங்களில் அதே உள்ளத்தீ சுட்ட காயங்களுக்கு மருந்து, சில வேளைகளில் அந்த மருந்தின் எரிச்சலும் கூட. வேறுசில வேளைகளில் அந்த மருந்திட்ட எரிச்சலின் மீதான மயிலிறகின் வருடல்.
இவை எல்லாமுமாக நா.முத்துக்குமாரின் சில பாடல்கள் எனக்கு இருந்திருக்கின்றன. அவற்றுள் முக்கியமானது “கண் பேசும் வார்த்தைகள் தெரிவதில்லை”.
வாழ்க்கை அனுபவங்களின் வழியாக சொல்லவந்த கருத்தைச் சொல்லுதல் ஒரு நல்ல உத்தி. இந்த உத்தி எனக்குச் சுமாரே சுமாராக வசப்படுவதாக நட்பாஸ் அடிக்கடி குறிப்பிடுவார். இந்த விஷயத்தில் இரண்டு பேரை நான் ஆசானாகச் சொல்வேன். ஒருவர் ஜெயமோகன், இன்னொருவர் நா.முத்துக்குமார்.
சங்கசித்திரங்கள் புத்தகத்தில் சங்க இலக்கியப் பாடல் ஒன்றை எடுத்துக்கொண்டு அதனோடு தொடர்புடைய தனது வாழ்க்கைச் சம்பவம் ஒன்றை சுவைபட சொல்லி அதன் வழியே அந்த சங்கப் பாடலுக்கான விளக்கத்தையும் தந்திருப்பார் ஜெயமோகன்
நா.முத்துக்குமார் தான் இயற்றிய திரைப்பாடல் வரிகள் உருவான கதையை தினமணி நாளிதழின் ஞாயிறு கொண்டாட்டத்தில் தொடராக எழுதியதன் தொகுப்பையே ”கண் பேசும் வார்த்தைகள்” புத்தகமாகத் தந்திருக்கிறார்.
ஒரு கலைஞன் தன் படைப்பு எதனையும் இல்வெளி எதனினின்றும் உருவி எடுத்துவிடுவதில்லை. பெரும்பாலான படைப்புகள் அதனைப் படைத்தவனின் அனுபவங்கள் சார்ந்தே படைக்கப்படுகின்றன. தான் எழுதிய இருபத்து ஐந்து பாடல்களைத் தேர்ந்தெடுத்து அந்தப் பாடல்கள் உருவாகக் காரணமாக இருந்த தன் வாழ்க்கை சார்ந்த அனுபவங்களை அழகாக எழுதியிருக்கிறார் நா.முத்துக்குமார்.
”தங்கத் தேரானாலும் தகரத்தில்தானே மூடி வைக்க வேண்டியிருக்கிறது”
என்ன ஒரு உதாரணம் பாருங்கள். பருத்தியாடை ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு பெண், இருபதிற்குள் வயது. அசாதாரண அழகியெல்லாம் இல்லை என்றாலும் அவள் சுறுசுறுப்பும், துறுதுறுக்கும் கண்களும் பார்க்கும் யாரையும் அடிமையாக்குபவை. இப்போது மேலே சொன்ன உதாரணத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
சாயம் போன சுடிதாரும், நிறம் தொலைந்த கவரிங் செயின், பிளாஸ்டிக் தோடுகள் அணிந்து வளைய வரும் அவளையே அப்படிக் குறிப்பிடுகிறார்.
தான் கல்லூரிக் காலத்தில் சந்தித்த யாரென்று தெரியாத ஒரு பெண், “செல்லமாய்ச் செல்லம் என்றாயடி”, பாடலின் ஆரம்ப வரிகளுக்கு வித்திட்ட கதையைச் சொல்லும் அத்தியாயம் அது.
நட்புக்கு நா.மு. தரும் மரியாதை அலாதியானது. ஒருவரது குணாதிசயம் ஒன்றை எழுத்தின் போக்கில் சொல்வது ஒரு கலை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் இப்படித் தன் நண்பர் / ஆசான் ஒருவருக்காவது மரியாதை செய்கிறார் நா.மு.
இது ஒரு நல்ல உதாரணம்...
இயக்குனர் வசந்தபாலன் பாடலின் சூழல் சொன்னார். கார்த்திக் ராஜா வழக்கம் போல், “எழுதுங்கள், அதற்கு இசையமைக்கிறேன்” என்றார்.எப்படிப்பட்ட ஒரு இசையமைப்பாளனை நாம் கண்டுகொள்ளாமல் விட்டு வைத்திருக்கிறோம் பாருங்கள்.
”எட்டுக்காலு வாகனம் எல்லோருந்தான் போகணும்” என்ற நாட்டுப்புறக் குறிப்பெடுத்து நா.முத்துக்குமார் எழுதிய மரணம் குறித்த கடைசி அத்தியாயம் நம்மைத் திகைக்க வைக்கிறது. மரணத்தைக் குறித்த தனது பார்வையை அந்த இரண்டு பக்கங்களில் அவர் அடுக்க அடுக்க பிரமிப்புடன் கலந்த ஒரு பயம் நம் மனதைக் கவ்வுகிறது.
ஒருவரது மரணத்தை நாம் ஒப்புக் கொள்ளும்வரை அதன் ஆழமான சுவடுகள் நம் மனதைத் தைப்பதை நிறுத்துவதில்லை. அப்படித் தன் காதலி மரணித்ததை ஜீரணிக்காத ஒரு ஜீவன் பாடும் பாடலாக இவர் எழுதிய ஒரு பாடலின் கடைசி இரண்டு வரிகள் காதலியை இழந்தவனுக்கு மட்டுமல்ல, காதலில் தோற்றுப் போய்த் தாடி வளர்த்து அலையும் ஒரு கோட்டிப்பயலுக்கும் கூட மருந்தாய் இருக்கக் கூடும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்
கண் பேசும் வார்த்தைகள் - நா.முத்துக்குமார்
கட்டுரைத் தொகுப்பு
பட்டாம்பூச்சி பதிப்பகம்
104 பக்கங்கள் - விலை ரூ. 60/-
இணையம் மூலம் வாங்க: கிழக்கு
No comments:
Post a Comment