இன்றே! இங்கே! இப்பொழுதே!
ஆசிரியர்: சிபி.கே.சாலமன்
பக்கங்கள்: 159
விலை: ரூ.60
கிழக்கு பதிப்பகம்
வண்டியில் வேகமா போறோம். திடீர்னு ஒரு போக்குவரத்து சிக்னல். அதில் மஞ்சளைப் பார்த்தவுடன் வேகத்தைக் குறைக்கணும்றது விதி. ஆனா அப்போதான் பலரும் வேகத்தை கூட்டி, வண்டியை முடுக்கி சர்ர்ர்ர்ன்னு சிக்னலை கடந்து போயிடுவாங்க. இப்படி யோசிக்காம போய், அந்தப் பக்கம் இருக்கும் ‘மாமா’விடம் மாட்டியவர்களும் நிறைய உண்டு. ஆனா, வேறு சிலரும் இருக்காங்க. ரொம்ப உஷாரா முதலில் மாமா எங்கேயாவது இருக்காரா? மாட்டிப்போமான்னு பாத்துட்டு, அது மஞ்சளோ, சிகப்போ வண்டியை ஓட்டிக்கிட்டு போயிட்டேயிருப்பாங்க. ஏகப்பட்ட பேரால் எடுக்கப்படும் இந்த முடிவுகள் ஒருசில நொடிகளில் எடுக்கப்பட வேண்டியவை. போக்குவரத்து விதிக்கு மதிப்பு கொடுத்து வண்டியை நிறுத்துறவங்க, பின்னால் வர்றவங்ககிட்டே திட்டு வாங்குவதும் உண்டு.
ஒரு வேலையை செய்யலாம். வேண்டாம். அப்படின்னு இரண்டு தீர்வுகள் இருக்குன்னு வெச்சிக்குங்க. நீங்க எந்த வழியை தேர்ந்தெடுப்பீங்க? ஏன் அப்படி தீர்மானிச்சீங்க? குத்துமதிப்பாவா? அல்லது ஏதேனும் ஒரு வழிமுறையை பின்பற்றினீங்களா? பெரிய பெரிய சாதனையாளர்களெல்லாம் எப்படி இந்த ‘முடிவெடுக்கும்’ பிரச்னையை சமாளிச்சாங்க? இந்த எல்லாக் கேள்விகளுக்குமான பதில்கள்தான் இந்தப் புத்தகத்தில் இருக்கு.
மென்பொருள் துறையில் பயன்படுத்தும் பலவித கருவிகளை (tools) வைத்து முடிவுகளை எடுக்கலாம்னு ஆசிரியர் சொல்லித் தர்றாரு. SWOT Analysis, Pareto Chart, Grid Analysis, Cost Benefit Analysis பற்றியெல்லாம் பேசறாரு. ஒவ்வொரு கருவிக்கும் ஒவ்வொரு கட்டுரை. அந்தக் கட்டுரையில் உதாரணமா பிரச்னையுள்ள, முடிவெடுக்க வேண்டிய, ஒரு குட்டிக் கதை.
என்ன பெரிய முடிவு? நாங்கல்லாம் கல்யாணத்தையே எந்த பயமில்லாமே பண்ணிக்கிட்டோம். அதைவிடவா முடிவெடுக்க வேண்டிய பெரிய பிரச்னை வந்துடப்போகுது? அப்படின்னு கல்யாணம் ஆனவங்க கேட்கலாம். ஆனா, நம்ம ஆசிரியர் ஒவ்வொரு பிரச்னைக்குமான மூன்று வித தீர்வுகளைப் பற்றியும் தனித்தனி கட்டுரைகளா விளக்கி சொல்லியிருக்காரு. எந்தவொரு பிரச்னைக்கும் ரெண்டு வித தீர்வுகள்தானே இருக்கும்? அதெப்படி மூன்று’ன்னு ஏற்கனவே தோணிடுச்சா? அப்படின்னா, நீங்க இந்த பதிவை சரியா படிச்சிட்டு வர்றீங்கன்னு அர்த்தம். நன்றி.. ஹிஹி...
சாயங்கால வேளை. ஆபீஸில் இருக்கீங்க. திடீர்னு மேனேஜர் வந்து ஒரு வேலையைக் கொடுத்து, இதை உடனடியா முடிக்கணும்னு சொல்றாரு. மேனேஜர்னாலே அப்படித்தானேன்றீங்க. அது தனிக்கதை. நாம இந்த கதைக்கு வருவோம். எதைப்பற்றியும் யோசிக்காமே ‘ஓகே சார். உடனடியா செய்துடலாம்’னு ஒருத்தர் சொல்றார்னு வைங்க. இதன் விளைவுகள் என்ன? மேனேஜரிடம் நல்ல பேரு. அவரு பலபேர்கிட்டே பேசும்போதும் நம்மைப் பற்றி நல்லபடியா சொல்வாரு. இப்படி பல. ஆனா, வீட்டுலே கோவிச்சிப்பாங்களே? அதை அப்புறம் பாத்துக்கலாம். நமக்கு ஆபீஸ்தான் முக்கியம்.
இதே நிலைமையில் இன்னொருத்தர். ’அதெல்லாம் முடியாது சார். நான் வீட்டுக்குப் போகணும். நாளைக்கு செய்துடறேன்’னு சொல்றார்னு வெச்சிக்குங்க. அவருக்கு என்ன ஆகும்? மேனேஜர் மனசுலே எப்பவுமே அதைப் பற்றியே நினைக்கலாம். வேறு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துலே இதை நினைச்சி, வேறு பிரச்னைகளை உருவாக்கலாம்.
இப்போ அடுத்தவர். ஆமான்னும் சொல்லாமே, முடியாதுன்னும் சொல்லாமே, ‘ஒரு பத்து நிமிஷம் கொடுங்க சார். பாத்துட்டு சொல்றேன்’னு வேலையை வாங்குறாரு. அது என்ன வேலை? செய்யமுடியுமா? அதைப் பற்றிய கேள்விகள் என்னென்னன்னு ஒரு பட்டியல் போட்டு மறுபடி மேனேஜரிடம் போய், ‘சார், இந்த சந்தேகங்களையெல்லாம் தீர்த்து வைங்க. பிறகு செய்துடறேன்’னு சொல்லிட்டு வீட்டுக்குப் போயிடறாரு. இந்த முடிவோட விளைவுகள் என்ன? அ). மேனேஜரிடமும் நல்ல பேரு - ‘அட, இவன் வேலையை நல்லா புரிஞ்சிக்கிட்டு செய்றான்யா’. ஆ). வீட்டுக்கும் நேரத்தில் போயிடலாம். இந்த மாதிரி, கொஞ்சம் நேரம் எடுத்து, பிரச்னைகளுக்கு முடிவெடுத்த ஒரு பிரபலத்தை நமக்கு நல்லா தெரியும். க்ளூ - ’ஆகட்டும், பார்க்கலாம்’.
அப்படின்னா, இந்த மூன்றாவது வழிதான் சரியானதா? இதைத்தான் எல்லாரும் பின்பற்றணுமான்னு கேட்டா, அதுக்கான பதில் ‘இல்லை’. பிரச்னைகளுக்கேற்ப, அதன் தன்மைக்கேற்ப முடிவெடுக்கணும். அதையும் குருட்டாம்போக்கில் எடுக்கத் தேவையில்லை. அதற்கான பல எளிய பயிற்சிகள் இருக்கு. அதைப் பயன்படுத்தினாலே, இந்த முடிவெடுக்கும் திறமையை நாம் வளர்த்துக்கலாம். அதன்மூலம் பல வெற்றிகளைப் பெறலாம். ஆனா, முக்கியமான ஒரு விஷயம் - அந்த முடிவின் விளைவுகள் எதுவாக இருந்தாலும், அவற்றை எதிர்கொள்ளும் திறமை / தைரியம் நமக்கு இருக்கணும்.
இந்த மாதிரி விஷயங்களை நமக்கு புரிய வைக்கவே இந்தப் புத்தகம். பல அருமையான உதாரணங்கள். அங்கங்கே வாய்விட்டு சிரிக்க வைக்கிற துணுக்குகள். மேலே சொன்னமாதிரி பல கருவிகளைப் பற்றியும் தெரிஞ்சிக்கலாம். உடனடியாக முடிவெடுப்பதைப் பற்றி பேசும் இந்தப் புத்தகத்தைப் பற்றிய பதிவு அவ்வளவுதான். இனிமே இந்த புத்தகத்தை வாங்கிப் படிப்பதா வேண்டாமாங்கற முடிவு உங்க கையில்!!.
***
No comments:
Post a Comment