முதலில் இரண்டு கேள்விகள்:
1) எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய குறையொன்றுமில்லை பாடலை இயற்றியவர் யார்? “ராஜாஜி?” யூ ஆர் ரைட். ஆனால் கேள்வி அது இல்லை. தமிழ் தெரிந்த ஒவ்வொருவரும் நன்றாகவே அறிந்து வைத்திருக்கும் அந்தப் பாடலுக்கு மெட்டு அமைத்தவர் யார்?
2) எம்.எஸ். என்றே பிரபலமாக அழைக்கப்படும் எம்.எஸ். சுப்புலட்சுமியின் பெயரில் இருக்கு “எம்.எஸ்” என்பதன் விரிவாக்கம் என்ன?
பதில்களைக் கடைசியில் பார்க்கலாம்.
எம்.எஸ். என்ற மாபெரும் ஆளுமையின் இசைப் பயணம் ப்ளஸ் அவரது வாழ்க்கைப் பயணம் இரண்டையும் பேசும் ஒரு சுருக்கமான, சுவாரசியமான புத்தகம் வீயெஸ்வி எழுதியுள்ள “எம்.எஸ். வாழ்வே சங்கீதம்”. எம்.எஸ்’சின் அதி தீவிர அபிமானிகளை டார்கெட்டாக வைத்து வெளி வந்திருக்கும் புத்தகம். அழகான கதை நடையில் சம்பவங்கள் கோர்க்கப்பட்டதொரு 141 பக்கப் புத்தகம்.
எம்.எஸ். பற்றி இரண்டு வகையான கருத்து உடைய மக்களை இங்கே நாம் காணலாம். அங்கேயிங்கே படித்தவைகள், ஒன்றிரண்டு பிரபலப் பாடல்களைக் கேட்டதை வைத்து அவரைப் பெரிய ஆதர்சமாகக் கொள்பவர்கள். எங்கேயோ எதையோ வாசித்துவிட்டு அல்லது செவி வழியாகக் கேட்டுவிட்டு தூஷிக்கும் சிலர். இந்த இரண்டு தரப்பினருக்குமே உண்மையான எம்.எஸ். யார் என்று தெரியாது என்பது திண்ணம்.
அடுத்து....
இந்தத் தலைமுறையினருக்கு (என்னையும் சேர்த்து), எம்.எஸ்.’சின் உண்மையான சங்கீத பலம் சரியாகத் தெரியாது என்பது என் அனுமானம். எம்.எஸ். குரலில் பிரபலமான பாடல்களை வரிசைப்படுத்தக் கேட்டால் பஜ கோவிந்தம், வேங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம், குறையொன்றுமில்லை, காற்றினிலே வரும் கீதம், பாவயாமி ரகுராமம் தாண்டி ஏதும் எனக்குத் தெரியாது.
லலிதா ராம் இந்தக் கட்டுரையில் அதைப் பற்றி விரிவாகவே பேசுகிறார். இது தவிர்த்து லலிதாராம் பேசும் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை.
கீர்த்தனைகள் பாடும் பொழுது, ஒரே வரியை பல முறை வேறு வேறு விதமாகப் பாடுவார்கள். இதற்குச் சங்கதிகள் என்று பெயர். இந்த சங்கதிகளை ஒரு நல்ல பேட்ஸ்மேனின் திறமைக்கு ஒப்பிடலாம். ஒரு கிரிக்கெட் மேட்ச் நடக்கிறது, ஒரு திறமையான பேட்ஸ்மேன் ஒரு சுழற்பந்து வீச்சாளரை சந்திக்கிறார். முதல் பந்து 'குட்-லெங்ந்தில்' விழுகிறது, நமது பேட்ஸ்மெனின் கால்கள் பந்தை நோக்கி துரிதமாகச் சென்று மிட்-ஆனுக்கு மேல் பந்தைத் தூக்கி அடிக்கின்றன. விளைவு - 4 ரன்கள். அடுத்த பந்தும் அதே இடத்த்ல் விழுகிறது, ஆனால் இம்முறை லாங்-ஆனில் ஒருவர் இருக்கிறார். நமது ஆட்டக்காரர் சற்று நகர்ர்ந்து காலியாக இருக்கும் 'பாயிண்ட்' திசையில் 'கட் செய்கிறார். விளைவு - 4 ரன்கள். இம்முறை டீப்-பாயிண்ட் இருக்கிறது, பந்து அதே இடத்தில் விழுந்து வருகிறது, பேட்ஸ்மேன் பந்து தன்னை கடக்கும் வரைக் காத்திருந்து, விக்கட்-கீப்பரின் கையுரையில் செல்லும் முன் செல்லமாக தடவிக் கொடுப்பது போல பந்தை லேட்-கட் செய்கிறார். விளைவு - 4 ரன்கள்.
எப்படி ஒரே பந்தை வெவ்வேறு விதமாக பவுண்டரிக்கு அனுப்பி, தன் திறமையின் பரிமாணங்களை பேட்ஸ்மேன் வெளிப்படுத்தினாரோ, அதே போல, ஒரு ராகத்தின் பல பரிமாணங்களை வெளிக்கொணர்வதே சங்கதிகளின் வேலை. காம்போஜி ராகக் கிருதியான 'ஓ ரங்க சாயி' என்ற பாடலின் பல்லவியை எம்.எஸ் பாடும் விதத்தைக் கேட்டால், நான் கூறிய 'cricket analogy' புரியும். 'ஓ ரங்கசாயி' என்ற வரியில் 'ஓ' என்ற சொல் (எழுத்து) மட்டும் இரண்டு களை ஆதி தாளத்தின் 3 இடங்களுக்கு வரும். அந்த ஒரு எழுத்தை முதலில் காம்போஜியின் சில ஸ்வரங்களில் மட்டும் பாவவிட்டுப் பாடுவார். அடுத்த சங்கதியில் முன்னல் பாடிய ஸ்வரங்கள் எல்லாம் ஒன்றை ஒன்று அன்புடன் அணைத்துக் கொள்ளும். அடுத்த சங்கதியில் வேறு சில ஸ்வரங்கள் சேர்ந்து கொள்ளும். அடுத்த சங்கதியில் காம்போஜியின் மொத்த உருவம் லேசாக பவனி வர ஆரம்பிக்கும், இப்படி படிப்படியாய் வளர்ந்து வளர்ந்து, 'ஓ ரங்க சாயி' என்ற வரி சில மின்னல் வேக ப்ருகாக்களுடன் காம்போஜி ராகத்தை ரோலர் கோஸ்டரில் இட்டுச் செல்லும். பேட்ஸ்மெனின் ஒவ்வொரு அடியும் எப்படி பவுண்டரியில் முடிந்ததோ அதே போல எம்.எஸ்-இன் சங்கதிகள் எத்தனை எத்தனை இருப்பினும் அவற்றின் விளைவு, கேட்பவர் மனத்தில் மகிழ்ச்சிதான்.....
.....அனைத்திந்திய அளவில் புகழ் பெற்றிருந்த எம்.எஸ்-இன் படாந்தரத்துக்கு ஈடு இணையாக வேறொருவரைக் காண்பது துர்லபம். இன்றைய நிலையில் அருணாசலக் கவி, முத்துத் தாண்டவர் போன்றோர்க்ளின் பல கீர்த்தனைகளை இழந்து நிற்கும் நமக்கு, எம்.எஸ்-இன் கச்சேரிகளின் திரட்டு ஒரு சிறந்த கருவூலத்தை உருவாக்கும். தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய அனைத்து மொழிகளிலும் 70 வருடங்கள் பாடி எம்.எஸ் வைத்துச் சென்றிருக்கும் செல்வம், அவர் கச்சேரிகள் செய்து பணமாய் கொடுத்த தானங்களை எல்லாம் மிஞ்சு செல்வமாகும். அதைப் பாதுகாத்தல் நமது கடமை.
முதல் இரண்டு பத்திகளை நான் இங்கே தந்திருக்கும் காரணம் ”ஒரே வரியைத் திரும்பத் திரும்பப் பாடுதல்” எதற்காக என்று புரியாமல் விழிபிதுங்கும் என்னைப் போன்ற சராசரி இசை ரசிகர்களுக்காக.
மேலே மூன்றாம் பத்தியில் லலிதாராம் குறிப்பிடும் “அவர் கச்சேரிகள் செய்து பணமாய்க் கொடுத்த தானங்கள்”.... ஏதோ இடிக்கிறதா? ”கச்சேரிகள் செய்து சம்பாதித்த” என்றுதானே சொல்லியிருக்க வேண்டும்? லலிதாராம் சொன்னது சரிதான் என்று வீயெஸ்வி எழுதிய இந்தப் புத்தகத்தைப் படித்தால் புரிந்து கொள்வீர்கள்.
இன்னதிற்கு என்று அல்லாமல் எந்த நல்ல காரியம் என்றாலும் “கொஞ்சம் நிதி திரட்ட நீங்கதான் ஒரு ப்ரோக்ராம் பண்ணித் தரவேணும்” என்று வந்த வேண்டுதல்கள் பலவற்றை நிறைவேற்றித் தந்திருக்கிறார் எம்.எஸ். குறைந்தது அரைடஜன் உதாரணங்கள் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.
வீணை இசைக் கலைஞரான சண்முகவடிவு மகளான எம்.எஸ்., தன் அம்மா பங்கேற்ற மேடையில் முதலில் பாடியதில் துவங்கி, படிப்படியாக அவர் இசைத்துறையில் வளர்ந்தது பற்றி ஒவ்வொரு அத்தியாயமாக சுவாரசியமாக சொல்கிறார் வீயெஸ்வி.
எம்.எஸ்.’சின் வெற்றிக்கதையில் அவரது கணவர் ‘கல்கி” சதாசிவத்தின் பங்கு மிகவும் முக்கியமானது என்பது உலகறிந்த விஷயம். அதையும் புத்தகம் நெடூக பலப்பல சம்பவங்கள் வாயிலாக மறவாமல் குறிப்பிடுகிறார் வீயெஸ்வி.
“நான் மதுரை தொகுதியில போட்டியிடறேன். நீங்க ஒரு தடவை மதுரைல நடக்கற தேர்தல் கூட்டத்துல கலந்துண்டு என்னைப் பத்தி நாலு நல்ல வார்த்தை சொன்னா நல்லா இருக்கும்”, என்று சுப்ரமணியசுவாமி கேட்டுக் கொண்டதும், அதை எம்.எஸ். நாசூக்காக மறுத்திருக்கிறார். இதுபோன்ற வெளியுலகம் அறியாத சில தகவல்களும் புத்தகத்தில் உண்டு.
புத்தகத்தின் இருபது அத்தியாயங்கள் ஒவ்வொன்றிலும் இணைக்கப்பட்டிருக்கும் அரிதிலும் அரிதான புகைப்படங்களும் கூட புத்தகத்தை நாம் வாங்க ஒரு முக்கியக் காரணியாகிறது.
கேள்விகளுக்கான பதில்கள்:
1) கடையநல்லூர் வெங்கட்ராமன்
2) ”மதுரை சண்முகவடிவு” - மதுரையைச் சேர்ந்தவர் எம்.எஸ்., அவரது தாயாரின் பெயர் சண்முகவடிவு.
எம்.எஸ். - வாழ்வே சங்கீதம்: வீயெஸ்வி
வாழ்க்கை வரலாறு
141 பக்கங்கள் / விலை ரூ. 60/-
இணையம் மூலம் புத்தகத்தை வாங்க: நூலுலகம்
இந்தப் புத்தகம் ஆடியோ புக் வடிவிலும் இங்கே கிடைக்கிறது. (விலை.ரூ. 103/-)
No comments:
Post a Comment