கர்நாடக சங்கீதத்தின் ஒரு பொற்காலத்தைப் பற்றிப் பேசுவோரையே, வாழும் ஆவணங்களையே கூட நாம் ஒவ்வொருவராய் இழந்து கொண்டிருக்கிறோம் – இந்த இழப்பை நினைத்து வருந்தக்கூடிய விழிப்பும் நமக்கு இல்லை, இவர்களிடம் பொதிந்திருக்கும் அரிய தகவல்களைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளும் ஊக்கமும் நமக்கு இல்லை. இசையில் நாட்டமுள்ள என் போன்ற இளைஞர்கள் அனைவருக்கும் இந்த இழப்பு பெரும்வலியாக இருக்கிறது, ஆனால் ஒரு சிலராலேயே இந்த இழப்பில் இருந்து சேகரிக்கக் கூடியதைக் காப்பாற்றித் தர முடிகிறது- தங்களுக்கு முந்தைய தலைமுறை செய்திருக்க வேண்டிய வேலையைச் செய்யும் இவர்களில் லலிதா ராம் முக்கியமானவர், தமிழகக் கலை வரலாற்றுப் பின்னணியில் இவரது எழுத்துப் பணியும், இந்த நூலும் அந்த வகையில் ஒரு அவசியத் தேவையை நிறைவு செய்வதாக இருக்கின்றன. (நன்றி - சொல்வனம்)
ஒரு பயோக்ராபி புத்தகம் யாரால், எப்படிப்பட்ட சூழலில் எழுத முடியும்?
1) யாருடைய வாழ்க்கையை எழுதுகிறாரோ அவருடன் நேரடியாகப் பழகி இருக்க வேண்டும்.
(அ)
2) அவர் வாழ்ந்த காலகட்டத்தில் வாழ்ந்திருக்க வேண்டும்.
(அ)
3) ஒருவேளை காலம் கடந்து எழுதப்படும் சரிதம் அது என்றால், அவர் பற்றிய தகவல்கள் தயார் நிலையில் நூலகங்களில், இணையத்தில் கிடைக்க வேண்டும்.
இப்படிப்பட்ட வாய்ப்புகள் ஏதுமில்லாமல் மறைந்த மிருதங்க மாமேதை பழனி சுப்பிரமணியம் பிள்ளை'யின் சரிதத்தை "துருவ நட்சத்திரம்" புத்தகத்தில் எழுதியிருக்கிறார் இந்தக் கால இளைஞரான லலிதா ராம். பழனி சுப்பிரமணியம் பிள்ளை மறைந்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் கடந்தபின் வெளிவந்துள்ளது இந்தப் புத்தகம்.
பழனி இங்கே பிறந்தார், இதைப் படித்தார், இப்படி வளர்ந்தார், இன்னின்ன புகழ்களைப் பெற்றார், கடைசியில் மறைந்தார் என்பதான தகவல்களை லலிதா ராம் எழுதியிருந்தாலே இந்தப் புத்தகம் ஒரு நல்ல வாழ்க்கைச் சரித்திரமாக அமைந்திருக்கும். நாம் மேலே சொன்ன தகவல்களை எல்லாம் எழுதவே செய்திருக்கிறார் ராம். கூடவே அதைச் சுற்றி ஒரு சரித்திரத் தோரணத்தையும் சேர்ந்தே நமக்குச் சொல்கிறார்.
தகவல் திரட்டு ஒரு கடின வேலை என்றால், திரட்டினதைப் படிக்க சுவாரசியமாய்த் தருதல் ஒரு கலை. இயல்பாகவே அது கைவரப் பெற்றவர் சொல்லிப் படிக்கக் கிடைத்தால் அந்த வாசிப்பே சுகமாய் அமைந்து விடுகிறது.
குரு பரம்பரையில் பழனிக்கு இரண்டு பரம்பரைகள் முன்னாலிருந்து தொடங்கிப் பயணிக்கத் துவங்குகிறது இந்த சரிதம். பழனியின் வாழ்க்கை, வளர்ச்சி, சாதனைகள் பற்றிப் பேசிவிட்டு, அவரது அடுத்த தலைமுறை சிஷ்யர்கள் பற்றிய குறிப்புகள் குறித்தும் சொல்லிவிட்டு நிறைகிறது.
மிருதங்க வாசிப்பில் இடது கைப்பழக்கம் கொண்டவர் என்ற ஒரே காரணத்தால் தன் தந்தையாலேயே மிக இளவயதில் மிருதங்கம் பயிற்சி மட்டுமல்லாது, வாசிக்க அனுமதியும் மறுக்கப்பட்டவர் பழனி சுப்பிரமணியம் பிள்ளை. ஆல விதையினை மண்ணில் மறைத்த கதையாய் பழனியின் மறுக்கப்பட்ட திறமை வெளிவரும் சூழல் தானே அமைகிறது.
பின்னர் அவர் இளம் வயதிலேயே மிருதங்க வாசிப்பில் காட்டிய திறமை, அந்த கால கட்டத்தில் இசை மாமேதைகளுடன் அவருக்கு ஏற்பட்ட பரிச்சயம், அதன் வாயிலாக அவருக்கு அமைந்த வாய்ப்புகள், புகழ் என சரிதம் விரிகிறது.
இந்த புத்தகத்தை எழுதுவதற்கான தகவல்களைத் திரட்ட லலிதா ராமுக்கு சுமார் நான்கு வருடங்கள் தேவைப்பட்டிருக்கின்றன. பழனியின் நேரடி சீடரான காளிதாஸ் திரட்டித் தந்த தகவல்கள் இந்தப் புத்தகம் வெளிவர முக்கியக் காரணி.
மேலும் பழனியுடன் நேரடியாகப் பழகியவர்களுடனான சந்திப்புகள், பழைய சஞ்சிகைகளில் கிடைத்த அரிய தகவல்கள் கொண்டு இந்தப் புத்தகத்தை நெய்திருக்கிறார் லலிதா ராம்.
எனக்கு இந்தப் புத்தகத்தில் ஆச்சர்யம் தரும் விஷயம் அரிதிலும் அரிதான தகவல் திரட்டு அல்ல. தகவல் திரட்டினை விட அரிதான விஷயமான மிகப் பழைய கருப்பு-வெள்ளை புகைப்படங்களே. இப்புத்தகத்திற்கு பேரழகைச் சேர்ப்பதோடல்லாமல் நமக்கு ஒரு 'live feeling' தருவன இந்த புகைப்படங்களே.
இசை பற்றி ஏதும் அறியாதோர், அரைகுறையாய் அறிந்தோர், நன்கு அறிந்தோர் என எல்லோருக்கும் ஒரு சுவாரசிய வாழ்க்கைக் கதையையோ, இசை சார்ந்த நல்ல பல தகவல்களையோ, ஓர் நல் வாசிப்பு அனுபவத்தையோ இந்தப் புத்தகம் நிச்சயம் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
முன்னூறு வார்த்தைகளிலோ எண்ணூறு வார்த்தைகளிலோ இந்தப் புத்தகத்தை விமர்சிக்கலாம். அது வாசிப்பு அனுபவம் ஆகிவிடாது. இசையில், வாசிப்பில், வரலாறில் ஆர்வம் உள்ள ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
துருவ நட்சத்திரம் : லலிதா ராம்
சொல்வனம்
224 பக்கங்கள்
ரூ 150/-
ஆன்லைனில் வாங்க : உடுமலை
முடிவில் விளக்கம் அருமை...
ReplyDeleteதொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி ஐயா...
@திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteரொம்ப நன்றிங்க. உங்க தொடர் ஊக்குவிப்பு எங்களைப் போன்றோருக்கு உற்சாக டானிக்