நாம் அன்றாடம்
பயன்படுத்தும், அதிகம் கண்டுகொள்ளாத ஒவ்வொரு பொருளையும் எடுத்து அதைப் பற்றியும்,
அதன் வரலாறு என்னவாக இருக்கும், அப்பொருள் எப்படி உருவாகியிருக்கும் என்றெல்லாம்
யோசிப்போமேயானால், பத்து நிமிடத்தில் மூளை குழம்பி அதைத் தூக்கி மூலையில் எறிந்து
விட்டு நிச்சயம் வேறு வேலை செய்யப் போயிருப்போம். ஆனால் தனக்கு அப்படி கைக்குக் கிடைத்த ஒரு
தீப்பெட்டியின் மீதிருக்கும் படத்தை ஆராய்ந்ததின் பலனாய், ஏறத்தாழ ஒரு
நூற்றாண்டின் வரலாற்றை புனைவின் வழி நாவலாய் வடித்திருக்கிறார் தமிழ் மகன்.
தீப்பெட்டியின்
மீதிருக்கும் ஒரு படம். ஒரு சிறுத்தையை ஒருவர் வெட்டுவதாக கையை ஓங்கிக்
கொண்டிருக்கும் ஒரு சித்திரம். அந்தப் படத்தின் வரலாறைத் தேடிச்சென்று, அதன் வழி
தமிழகத்தின் எழுபது வருட மாற்றங்களைக் கண்முன் திரையோடச் செய்கிறது வெட்டுப்புலி.
ஆயிரத்தி
தொள்ளாயிரத்தி நாற்பதுகளில் நாவல் தொடங்குகிறது, அந்தப் படத்திலிருப்பவர் வாழ்ந்த
இடத்திற்குச் சென்று விசாரிப்பதாய் ஆரம்பிக்கும் கதை நினைவுச் சுருளாய்
முப்பதுகளில் மெல்லப் பின்சென்று சிறுத்தையை வெட்டியவர் சின்னா ரெட்டி என்றும், மூலிகை
மருத்துவர் போன்றொருவர் என்றும் அவரைப் பற்றியும் முப்பதுகளின் சூழல் பற்றியும்
பேசுகிறது நாவல்.
களம் மீண்டும்
நாற்பதுகளுக்குத் திரும்பி, வெட்டுப்புலியை விட்டு வெளியே வர தமிழக வரலாறு நகர
ஆரம்பிக்கிறது. சாதி பிரிவினைகளின் தாக்கம் பற்றி கூறியிருக்கிறார். மேலும்,
சுதந்தரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு பற்றியும் சில குறிப்புகள் உள்ளன. ஐம்பதுகளில்
தமிழகத்தில் சினிமாத்துறையில் ஏற்பட்ட வளர்ச்சியும், திராவிடக் கட்சிகளின் வளர்ச்சி பற்றியும் எழுதியிருக்கிறார். சினிமா மோகமும், சினிமா நடிக்க, எடுக்க மக்களின்
ஆர்வமும், சினிமா எடுக்கிறேன் பேர்வழி என்று சுகமாய் குடி கூத்து என அழிந்தவர்கள்
பற்றியும் சொல்லியிருக்கிறார்.
காமராஜர், பெரியார் அண்ணாதுரை என்று அரசியலையும், பேன்ட் அணிதல், சிகை திருத்திக் கொள்ளுதல் என நாகரிக மாற்றங்களைம், பார்ப்பனீய எதிர்ப்பையும் பேசுகிறது அறுபதுகள் பகுதி. மீதி முப்பதாண்டுகால நூற்றாண்டு இறுதிப் பகுதி பெரும்பாலும் சினிமா, அரசியல் மற்றும் இரண்டும் சேர்ந்து தமிழகத்தை ஆண்ட பாங்கைப் பற்றியும் சொல்கிறது.
காமராஜர், பெரியார் அண்ணாதுரை என்று அரசியலையும், பேன்ட் அணிதல், சிகை திருத்திக் கொள்ளுதல் என நாகரிக மாற்றங்களைம், பார்ப்பனீய எதிர்ப்பையும் பேசுகிறது அறுபதுகள் பகுதி. மீதி முப்பதாண்டுகால நூற்றாண்டு இறுதிப் பகுதி பெரும்பாலும் சினிமா, அரசியல் மற்றும் இரண்டும் சேர்ந்து தமிழகத்தை ஆண்ட பாங்கைப் பற்றியும் சொல்கிறது.
நாவலின் ஒரு
மிகப்பெரிய நிறை, ஒரு நூறாண்டு வரலாறை விக்கிப்பீடியாத்தனமாக சொல்லாமல், படிப்பவர்க்கு அயர்ச்சி ஏற்படுத்தாது புனைவின் வழி சுவாரஸ்யமாகச் சொன்னதே. ஒரு தீப்பெட்டிப் படம், அதன்
கதையாக இருக்குமென ஆரம்பித்து நாம் எதிர்பார்த்திரா வண்ணம் வரலாறை வியப்பூட்டும்
வகையில் சொல்லி நம்மைக் கட்டிப்போடுகிறது புத்தகம். நிச்சயம் படிப்பவர் உணரக் கூடியதான
வகையில் வரலாறைச் சொல்கிறது.
முப்பதுகளும்,
நாற்பதுகளும் ஒரு டாக்குமென்ட்ரி போல மெதுவாகவும் சற்றே அலுப்பூட்டும் வகையிலும்
இருந்து, நூற்றாண்டின் பிற்பாதியைக் குறும்படத்தைப் போல அவசர அவசரமாக
முடித்திருப்பதே நாவலின் ஒரே குறை. இருந்தாலும், அந்த நீட்டலும் சுருக்கலும் நாம் அவசியம் அறிய வேண்டிய அந்த எழுபதாண்டு கால மாற்றங்கள்,
நிகழ்வுகள் பலவற்றை இந்தப் புத்தகம் தொட்டுச் செல்ல ஒரு தடையாய் இல்லை.
சன் டிவியின் திரை விமர்சனக் குழு பாணியில் சொல்ல வேண்டுமெனில், முற்பாதி ஜல்லி, பிற்பாதி கில்லி!
தமிழ்மகன் |
நாவல் | உயிர்மை | ரூ. 240 | பக்கங்கள் 375
375 பக்கங்கள். இதுதான் பயமா இருக்கு.
ReplyDelete