கடந்த மூன்றாண்டுகளாக இரண்டு மாதத்திற்கு ஒரு புத்தகம் என்ற அளவிலாவது வாங்கிக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், வீட்டிலிருக்கும் மற்றவர்கள் அவற்றைத் தொடுவது என்பது நான் எங்காவது வைத்துவிட்டுப் போகும்போது, திட்டிக்கொண்டே அவற்றை பத்திரப்படுத்துவது என்ற அளவில்தான். அதிர்ஷ்டவசமான விதிவிலக்குகளும் உண்டு; சில புத்தகங்களை வீட்டில் அனைவரும் படித்துவிடுவார்கள். இந்தப் புத்தகத்தையும் அப்படித்தான் படித்தார்கள். ஒரு புத்தகத்தை வீட்டில் எல்லோரும் படிக்கும்போது நமக்கு ஒரு சந்தோஷம். திட்டு வாங்குவது வேறு குறையும்.
கல்யாண சமையல் சாதம் ஒரு முழு சுயசரிதை இல்லை. நடராஜன் தன்னுடைய வாழ்வானுபவங்களில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறார். ஏழு வயதில் தந்தையுடன் வேலைக்குச் சென்றது முதல், தான் மேலேறி வந்த அனுபவங்களை ஒரு தொண்ணூறு வயது தாத்தா சொல்லக் கேட்பது ஒரு டானிக் மாதிரியிருக்கிறது.
என்னுடைய ஏழுவயதில் நான் பள்ளிக்குப் போக மாட்டேன் என்று அழுது கொண்டிருந்ததாக நினைவு. நடராஜன், அந்த வயதில் மாட்டைக் குளிப்பாட்டுவது, மற்ற வீடுகளுக்குச் சென்று கற்சட்டியைத் தேய்த்துக் கொடுப்பது, தந்தையுடன் சமையல் வேலைக்குச் செல்வது என்றிருந்திருக்கிறார். (1950க்கு முந்தைய வாழ்க்கைகளைப் படிக்கையில், ஒரே வீட்டில் நிறைய குழந்தைகள், குறைவான வருமானம் போன்றவை ரொம்பச் சாதாரணம் என்று தெரிகிறது. மேலும் குழந்தைகள் இறப்பு என்பதும் சர்வசாதாரணமாக இருந்திருக்கிறது. இன்றைக்கு நிலைமை எவ்வளவோ மேல்).
கல்யாண வீடுகளில் சமையற்காரர்கள் நடத்தப்படும் விதமே தன்னை வைராக்கியத்தோடு உயரத்தை அடைய உந்துசக்தியாக இருந்ததாகச் சொல்கிறார் அவர்:
“விகடனில் என்னைத் தொடர் எழுதச்சொல்லிக் கேட்டபோது, எனக்கு ஏற்பட்ட முதல் உணர்வை இதுவரையில் உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ளவில்லை. இப்போது சொல்கிறேன். ரொம்ப வெளிப்படையாகச் சொல்வதானால் குழப்பம்தான் உண்டானது. இடுப்பில் ஈரத்துண்டுடன், புகைமண்டலத்தின் நடுவே கரிபிடித்த பாத்திரங்களுடன் போராடிக் கொண்டிருக்கிற சாதாரண ஒரு சமையல்காரனுக்குப் பல லட்சக்கணக்கான வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதற்குப் பெரிசாக என்ன இருக்கிறது என்பது தான் அந்தக் குழப்ப உணர்வு.
"பிறகு கொஞ்சம் நிதானமாகச் சிந்தித்தபோது, கண்ணெதிரில் ஆள் உயர பாத்திரத்தில் சோறு பொங்கிக் கொண்டிருந்தாலும், சொந்தக் குடும்பத்துக்கு அரைவயிறு சோறுபோட முடியாமல் தவித்த எனது முதல் பாதி வாழ்க்கை பற்றிப் பகிர்ந்துகொண்டால்தான் என்ன என்று தோன்றியது. கூடவே, ‘சமையல்காரந்தானே’ என்று பரவலாக இருக்கிற உதாசீனத்தைப் பற்றியும் வாசகர்களிடம் ஒரு பாட்டம் சொல்லி அழுதால், பொதுவான அந்த அலட்சிய மனோநிலை மாறக்கூடும் என்றும் தோன்றியது. எனக்கு மனசும் கொஞ்சம் லேசாகும் போல் இருந்தது”
என்று சொன்னாலும், புத்தகம் முழுக்க முழுக்க சென்டிமென்ட்டைப் போட்டு நிறைத்து விடவில்லை. புத்தகத்தில் பாதி கல்யாண கலாட்டாக்கள்தான். மேலும், தன்னைத் தூக்கிவிட்டவர்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு வாய்ப்பாகவே இதை எடுத்துக்கொண்டிருக்கிறார் நடராஜன். கீதா கஃபே ஜெயராமன், திருப்பதியில் உதவி செய்த ரெட்டியார், தாசபிரகாஷ் ஹோட்டல்காரர்கள் என்று பலரும் தனக்கு உதவியதை மறக்காமல் குறிப்பிட்டிருக்கிறார்.
இதன் கூடவே முப்பது பக்கங்களுக்கு அறுசுவை அரசு வழங்கும் சமையற்குறிப்புகளும் இருக்கின்றன.
கல்யாண சமையல் சாதம் | ‘அறுசுவை அரசு’ நடராஜன் | விகடன் பிரசுரம் |
128 பக்கங்கள் | விலை ரூ.60 | இங்கே வாங்கலாம்
நல்ல பதிவு சார்! நன்றாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் இடுகைக்கும் நன்றி ஸார்.
Deleteதொடர்ந்து தங்கள் நல்லாதரவை எதிர்பார்க்கிறோம்.
கனம் நிர்வாகி அவர்களே!
ReplyDeleteபுத்தக அறிமுகங்கள்/விமரிசனங்கள் சுவாரசியமாகவும் ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருக்கின்றன. வாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சிவா.
ReplyDeleteExcellent website. I got the link from Badhrishesahri web site. Good work , please write more.. All the very best!!
ReplyDelete@Unknown
Deleteதங்கள் வருகை, கருத்து, ஊக்கம் அனைத்திற்கும் மிக்க நன்றி