எழுத்துக் கூட்டிப் படிக்கத் துவங்கிய நாள்முதலாய் குமுதத்தில் வாசித்திருந்தாலும் ரா.கி.ரங்கராஜன்’தான் “லைட்ஸ் ஆன்” எழுதிய வினோத் என நான் அறிந்தது அவர் லைட்ஸ் ஆன் எழுதியதை நிறுத்தி ”ஸைட்ஸ் ஆன்” என விகடனில் அதைத் தொடர்ந்து அதுவும் நின்றுபோய் ஒரு மாமாங்க காலம் நிறைந்த பின்னர்தான்.
லைட்ஸ் ஆன் / ஸைட்ஸ் ஆன் தவிர்த்து ரா.கி.ர. எழுதிய எதையும் நான் வாசித்ததில்லை அல்லது அவர் வேறு பெயர்களில் எழுதியவைகளை அவர் எழுதியதாய் அடையாளம் கண்டதில்லை.
சுமார் ஒன்றரை தசாப்த காலமுன் ரா.கி.ரங்கராஜனின் “சிறுகதை எழுதுவது எப்படி” என்னும் புத்தகப் பெருமைகளை ’கற்றதும் பெற்றதும்’ தொடரில் சுஜாதா குறிப்பிட்டிருந்தார். அன்றுமுதல் அந்தப் புத்தகத்தை அவ்வப்போது தேடி அலைகிறேன். கிடைத்தபாடில்லை.
மற்றபடி ரா.கி.ர. எழுத்தில் நான் வாசித்தது என்றால் “காதல் படிக்கட்டுகள்’ என்று ஜூனியர் விகடனில் வந்த தொடரில் அவர் எழுதிய இந்த ”அதன் அர்த்தம் இது” என்ற ஒற்றை அத்தியாயத்தைத்தான்.
பாரதிராஜா, பிகேபி, பார்த்திபன், அப்துல் ரகுமான், ரகுவரன், அறிவுமதி, கலாப்ரியா, மருது என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு பார்வையில் தத்தம் வாழ்வில் கடந்துபோன காதலைப் பகிர்ந்து கொண்ட தொடர் அது. இளமை கொப்புளிக்க ஒரு ஐம்பது வாரங்கள் வந்த ரொமாண்டிக் தொடர் அது.
அவற்றுள் ரா.கி.ரங்கராஜன் எழுதியது “சுத்தக் கிழட்டுத்தனமான கட்டுரை”, எனினும் அந்த ஐம்பது அத்தியாயங்களிலும் அந்த அத்தியாயம் இன்றுவரைக்கும் என்னால் மறக்க முடியாத ஒன்று.
தன் இளம் வயது மனதில் ஜிலுஜிலுத்த தென்றலும், மனசுக்குள் மத்தாப்பும் ஏதோ மசமசவெனதான் ரா.கி.ரங்கராஜனுக்கு நினைவில் உள்ளது.
அக்காவின் மகளுடனான காதல். இவர்தம் காதலுக்குப் பச்சைக் கொடி காட்டாமல் பிடி கொடுக்காமல் பேசும் அக்கா, அக்கா மகளிடம் எழுதித் தரச் சொல்லிக் கேட்ட “காதல் கடிதம்”(!!), பின்னொரு சுபயோக சுபதினத்தில் மறைமுகமான வார்த்தைகளில், உனக்கு என் மகளைக் கட்டித் தருகிறேன் என்று சொன்ன அக்கா. அதற்கு இவர் கொண்ட குதூகலம் என்றெல்லாம் கட்டுரையின் எண்பது சதத்தை நிரப்பினாலும், காதலுக்கு அர்த்தமாய் முத்தாய்ப்பாய் இவர் சொல்லும் காரணம் அசாதாரணமானது....
இதோ அவர் எழுத்துகளிலேயே பாருங்கள்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு, நான் ஆஸ்பத்திரியில் கடுமையான, ஆஸ்துமாவில் மூன்று நாள் படுத்திருந்தபோது, அவள் இரவும் பகலும் அருகில் இருந்து பணிவிடை செய்து என்னைக் காப்பாற்றினாள். அதற்கு முன்பும் எவ்வளவோ முறை அது போல எனக்காக எமனுடன் போராடியிருக்கிறாள். இருந்தாலும், அந்தத் தடவை ரொம்பக் கடுமை.
வீடு திரும்பியதும், “இந்தத் தடவையும் என்னைக் காப்பாற்றிவிட்டாய்..” என்றேன்.
அதற்கு அவள், “இதோ பாருங்கள். அத்தைப் பாட்டிகள் சொல்கிற மாதிரி பூவும் பொட்டுமாய், மஞ்சள் குங்குமத்தோடு போக வேண்டுமென்கிற ஆசையெல்லாம் எனக்குக் கிடையாது. உடம்பு சரியில்லாத உங்களை யார் காலிலும் நிற்கும்படி விட்டுவிட்டுப் போகமாட்டேன். கடைசி வரை நானே கவனித்துக் கொண்டிருந்துவிட்டு, உங்களை அனுப்பிய பிறகுதான் நான் போவேன்..” என்றாள்.
‘காதல்’ என்ற சொல்லுக்குப் பச்சையான கொச்சையான அர்த்தங்கள் எவ்வளவோ இருக்க, அதையெல்லாம் தாண்டி, உண்மையான வேறோர் அர்த்தம் இருப்பதை அன்றைக்கு என் அறுபத்தெட்டாவது வயதில் தெரிந்து கொண்டேன்
காதலின் அர்த்தத்தை இதைவிட ”நச்” என்று யாரும் சொல்லிவிட முடியுமா என்ன?
ரா.கி.ரங்கராஜன் மறைவுக்கு நம் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ரா.கி.ரங்கராஜன் மறைவுக்கு நம் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம்.
காதல் படிக்கட்டுகள்
விகடன் பிரசுரம்
விலை ரூ. 100/-
இணையத்தில் வாங்க: உடுமலை
'நச்' என்று தான் இருந்தது..
ReplyDeleteபகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா...
Super...
ReplyDelete