தலைப்பின் சுவாரஸ்யத்தில் வாங்கிய புத்தகம். கவிஞர் சுகுமாரனின் உரைநடை உலகை நான் அறிமுகப்படுத்திக்கொண்ட முதல் புத்தகம். பூமியை வாசிக்கும் சிறுமி கவிதைத் தொகுப்பிலிருந்து சுகுமாரனின் எழுத்தை ரசித்துப் படித்து வருகிறேன்;வித்தைகாரனின் தொப்பி போல வார்த்தைகளிலிருந்து அடுத்து என்ன எடுத்து வரப்போகிறாரோ எனும் ஆர்வத்தோடு. மொழி சார்ந்த படைப்பாளியின் எழுத்தை படிக்கும்போது-படித்தபின் என வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களில் அவ்வார்த்தையின் வாசனை மறையும் வரை ரசித்துக்கொண்டே இருக்கலாம். புத்தகம் அருகில் இருக்கவேண்டிய அவசியம் கூட இல்லாமல். ஏனென்றால் அது படைப்பின் மூலம் வாழ்வை அணுகவும், வாழ்வு மூலம் படைப்பை உருவாக்கவும் நினைக்கும் கலைஞனின் முயற்சி. சுகுமாரனின் கட்டுரை தொகுப்பு அப்படிப்பட்டது.
எழுத்து, நினைவு, மறுவாசிப்பு, அஞ்சலி, பார்வை என பலத் தலைப்புகளில் கட்டுரைகளைத் தொகுத்திருந்தாலும் என்னைக் கவர்ந்தது நினைவு கட்டுரைகள் தான். குறிப்பாக புத்தகத் தலைப்பில் வரும் சிறுவயது பள்ளிக்கூட நினைவுகள் இழந்த உலகத்தின் மீதத்தை நம்முன் நிறுத்துகிறது. பள்ளிப் பருவத்தைச் சார்ந்த ஏக்கங்கள், இழப்புகள், சிறு இனிமைகள், குறும்புகள் என மிக அழகாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. காற்று வீசும்போது சலசலக்கும் நீரலை, புதுதாக வந்து சேரும் நீர்ப்பெருக்கு, உள்ளுக்குள்ளிருந்து சுரக்கும் ஊற்று என வாசிக்கும் புத்தகங்களை புதுமாதிரியாக வகைப்படுத்துகிறார். ஆசிரியரின் வாசிக்கும் பரிமாண மாற்றங்களை ’வாசிப்பின் நீரோட்டம்’ கட்டுரை மிக அழகாகப் படம்பிடிக்கிறது.
பல நவீனத்துவ எழுத்தாளர்களைப் பாதித்த நகுலன், சுந்தர ராமசாமி, அழகிரிசாமி, கா.நா.சு, நெரூடா, தஸ்தவேஸ்கி வரிசையை மறுவாசிப்பு எனும் பகுதியில் விரிவாக அலசுகிறார். அவர்களது ஆளுமை வழியாகவும், படைப்புகள் வழியாகவும் தன்னை எப்படி பாதித்தனர் என்பதை நினைவு, அஞ்சலி எனும் தலைப்புகளில் விரிவாக எழுதியுள்ளார். எனக்குத் தனிப்பட்ட முறையில் ‘புதுமைப்பித்தன் - பாதிப்பும் அனுபவமும்’ கட்டுரை மிகவும் பிடித்திருந்தது. புதுமைப்பித்தன் பற்றி ப்ரம்மராஷஸ், நவீன தமிழ் இலக்கியத்தின் தொடக்கம் எனப் பலரும் எழுதியுள்ளார்கள். தொன்னூற்றொன்பது கதைகளை எழுதியிருக்கிறார் என்றும் பின்னர் தமிழில் எழுத வந்த அனைவரும் அவரது நூறாவது கதையைத் தான் எழுத முயற்சிக்கிறார்கள் என்றும் அ.முத்துலிங்கம் தனது சிறுகதைத் தொகுப்பு முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். H.P.Lovecraft கதை போல் மிக ஆழமானதொரு படைப்பான காஞ்சனை பற்றி இன்றளவும் விவாதங்கள் தொடர்கின்றன. அவ்வரிசையில் மகா மசானம் கதையைப் பற்றி சுகுமாரன் இக்கட்டுரையில் விரிவாகப் பேசியுள்ளார்.
ஞாபகத்தின் கோடுகள் என நவீன ஓவியர் கே.எம்.ஆதிமூலம் பற்றிய கட்டுரை மிகச் சரியாக அவரை வரைந்திருக்கிறது. அவருக்கும் சிற்றிதழ்களுக்கும் இருந்த தொடர்பை முன்வைத்திருக்கிறார். என்னுடைய பெயிண்டிங்குகளும் அரூப ஓவியங்கள் தான். வண்ணத்தை வரைகிறேன் எனச் சொன்ன அவரது பார்வையை நிஜக் கலைஞனின் தேடலாக சுகுமாரன் முன்வைக்கிறார்.
வாழ்வின் அகண்டாகாரத் தன்மையை பல்வேறு கோணங்களில் சாவித் துவாரத்தின் வழியாகத் தெரியும் நிழல்படம் போல கலை தொகுக்கிறது. நாலு மூலையிலிருந்து பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அறையின் பரிணாமம் மாறுபடும். மொழி வழியாக, நிறங்கள் வழியாக, ஒலி வழியாக தீட்டும்போது சகல பரிமாணங்களில் எட்டாத கோணங்களில் வாழ்வு நம்மோடு பேசுகிறது. ஒவ்வொரு நூலும் ஒரு கதைதான். அது அபுனைவாக இருந்தாலும் அதன் வழி பலரது கதைகளே பேசப்படுகின்றன. சந்தித்த மனிதர்கள், கேள்விபட்ட நிகழ்வுகள், கேட்ட பாடல்கள் என நாம் தொகுக்கும் ஒவ்வொன்றும் நமக்குண்டான கதையே. அதிலிருந்து நாம் என்ன பெற்றோம், எவ்விதமான அச்சுருவ அமைப்புகளை கருதுகோள்களாக உருவாக்கிக்கொள்கிறோம் என்பதே முக்கியம். அவ்வகையில் சுகுமாரனின் கட்டுரைத் தொகுப்பு ஓடுகிற நதி தொட்டுச்செல்லும் படித்துறை போல கிசுகிசுப்பாக கலைஞர்களின் பெருமூச்சுகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறது.
இழந்த பின்னும் இருக்கும் உலகம் - சுகுமாரன்
உள்ளடக்கம்: கட்டுரைகள்
வெளியீடு - உயிர்மை பதிப்பகம்
விலை: ரூ 100/-
இணையத்தில் வாங்க: உடுமலை
வாங்கி வாசிக்க வேண்டும்... நன்றி...
ReplyDelete